பிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்...

  23rd Apr 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  நாம் எல்லோருமே பரவலாக பிளாஸ்டிக் பிரச்சனை குறித்து அறிந்திருக்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் இதன் தீவிரத்தை போதிய அளவு உணர்ந்திருக்கிறோமா? பிளாஸ்டிக் பாதிப்பை குறைக்க நம்மால் இயன்றதை செய்திருக்கிறோமா? இது போன்ற கேள்விகளை எழுப்பும் வகையில் புதுமையான இணையதளத்தை அமைத்திருக்கிறார் டேனியல் வெப் எனும் கலைஞர்.

  image


  எவ்ரிடேபிளாஸ்டிக்.ஆர்க் (https://www.everydayplastic.org/). இது தான் அவர் அமைத்துள்ள இணையதளம். டேனியல் வெப் ஓராண்டு காலத்தில் தான் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பட்டியலிட்டு அந்த அனுபவத்தை ஆவணப்படுத்துவதற்காக இந்த இணையதளத்தை அமைத்திருக்கிறார். பிளாஸ்டிக் பயன்பாடு பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தளத்தை தொடர்ந்து பராமரிக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறார்.

  ஒவ்வொரு நாளும் நாம் எத்தனை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறோம். இதை குறைப்பது எப்படி? எனும் கேள்விகளை எழுப்பும் வகையில் டேனியல் வெப்பின் திட்டம் அமைந்துள்ளது. தனிப்பட்ட முறையில் தன்னிடமே இந்த கேள்விகளை எழுப்பிக்கொண்டு தான் இந்த திட்டத்தையே அவர் செயல்படுத்தியிருக்கிறார்.

  டேனியல் வெப், இங்கிலாந்தின் மார்கரெட் எனும் கடலோர நகரில் வசிப்பவர். மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றும் வெப், கலை ஆர்வம் மிக்கவராகவும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது ஊரில் கடலோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, கரை ஒதுக்கியிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை வெப் காண நேர்ந்தது. முந்தைய தினம் அடித்த புயல் காற்றில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் கடல் தாவரங்களோடு பின்னி பினைந்து கிடந்தன.

  இந்த காட்சி தான் அவருக்குள் திகைப்பை ஏற்படுத்தி யோசிக்க வைத்தது. கடலுக்குள் இவ்வளவு பிளாஸ்டிக் குப்பைகள் இருக்கின்றன என்றால், இதில் என் பங்கு எவ்வளவு என அவர் யோசித்தார். நான் போதுமான அளவு பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்கிறேனா என்றும் யோசித்தவர், ஒரு தனி மனிதர் எந்த அளவு பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்கிகிறார் என்றும் கேட்டுக்கொண்டார்.

  கடலோர சிந்தனையாக இவற்றை மறந்துவிடாமல், இந்த கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியில் ஈடுபட தீர்மானித்தார். அதன் படி, ஓராண்டில் தான் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைன் அளவை கண்டறிய முடிவு செய்தார். இதற்கான முயற்சியை 2017 ம் ஆண்டு முதல் தேதியன்று துவக்கினார். அன்று முதல் தினந்தோறும் தான் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறியாமல் கவனமாக சேகரித்து வரத்துவங்கினார். பிளாஸ்டிக் பைகள், பற்பசை குமிழ்கள் இன்னும் பிற பொருட்கள் என எல்லா வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் சேகரித்தார்.

  வீட்டிலும் சரி வெளியேவும் சரி, அவர் பயன்படுத்திய எந்த பிளாஸ்டிக் பொருளையும் விட்டு வைக்காமல் சேகரித்தார். ஓராண்டின் முடிவில் பார்த்தால் அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துகிடந்ததன. இவற்றை ரகம் பிரித்து வரிசையாக அடுக்கி வைத்தார்.

  இதுவரை இந்தத் திட்டம் அவரது தனிப்பட்ட அனுபவமாகவே இருந்தது. இந்த கட்டத்தில் தான் அவர் தனது அனுபவத்தை உலகுடன் பகிர்ந்து கொள்ள தீர்மானித்தார். ஓராண்டில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் வகைப்படுத்திய போது மொத்தம் 4490 பொருட்கள் இருப்பதை தெரிந்து கொண்டார். 

  இவற்றில் 60 சதவீதம் உணவு பொருட்கள் சார்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் என்பதையும் கவனித்தார். இந்த பொருட்களிலும் 93 சதவீதம் பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தகூடியவையாக இருந்தன.
  image


  வகைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வண்ணமயமாக காட்சி அளித்தாலும் அவை அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக்கின் ஆதிக்கத்தை உணர்த்துவதாக அவர் உணர்ந்தார். இந்த செய்தியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் வகையில் தனது ஊரில் கடலோரப்பகுதியில், ஒராண்டில் தான் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விளம்பர பலகையை தயார் செய்து அதை காட்சிக்கு வைத்தார். அதோடு தனது நண்பரான புகைப்படக் கலைஞர் உதவியோடு புகைப்பட பதிவாகவும் மாற்றினார்.

  கடலோரத்தில் அமைந்துள்ள அந்த விளம்பர பலகையில் இடம்பெற்றுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருவதோடு விழிப்புணர்வையும் உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனிடையே இந்த புதுமையான முயற்சி குறித்து நாளிதழ்களிலும் செய்தி வெளியாகி கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது.

  இதனையடுத்து டேனியல் வெப், இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இதற்காக என்றே எவ்ரிடேபிளாஸ்டிக் இணையதளத்தை அமைத்து அதில் இந்த அனுபவத்தை பதிவு செய்து வருகிறார். பிளாஸ்டிக் பொருட்களின் குவியல் புகைப்படம் முகப்பு பக்கத்தில் வரவேற்கும் இந்த இணையதளத்தில் தனது திட்டத்தின் நோக்கம் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளதோடு, பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பான புள்ளி விவரங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

  மொத்தம் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் 56 பொருட்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டது எனும் கவலை அளிக்கும் தகவலையும் இந்த புள்ளிவிவரங்கள் கொண்டுள்ளது. மறுசுழற்சி எத்தனை அவசியம் என்பதை இது புரிய வைப்பதாக டேனியல் வெப் கூறுகிறார்.

  சூப்பர் மார்க்கெட்களின் செயல்பாடு, உள்ளூரில் பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கும் முயற்சியின் போதாமைகள் பற்றி எல்லாம் இந்த திட்டத்தின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளதாக கூறும் வெப், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களுக்கு இந்த விளம்பர பலகை திட்டத்தை கொண்டு செல்ல இருப்பதாக கூறுகிறார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவான அறிக்கையாக தயாரித்து இணையதளத்தில் வெளியிட இருப்பதாகவும் கூறுகிறார்.

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close
  Report an issue
  Authors

  Related Tags

  Latest

  Updates from around the world

  Our Partner Events

  Hustle across India