அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற செயலி உருவாக்கிய ஆசிரியர்!
கிராமப்புற மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியத்துடன் அணுகவும், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும் உதவும் வகையில் செயலி ஒன்றை அரசுப் பள்ளி ஆசிரியர் தானே உருவாக்கியுள்ளார்.
கிராமப்புற மாணவர்கள் சரியாக படிப்பதில்லை இதனால் தேர்ச்சி விழுக்காடு சதவீதம் குறைகிறது என்பதே தமிழகத்தில் உள்ள பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
ஒன்றிரண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் படிப்பில் ஆர்வமில்லாமல் இருப்பதாலேயே அரசுப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைந்து தனியார் பள்ளிகள் ஜெயித்து விடுகின்றன. படிப்பின் மீது மாணவர்களுக்கு ஏன் ஆர்வம் இல்லை என்பதை எந்த ஆசிரியருமே நினைப்பதில்லை என்பது ஆசிரியர் மதன்மோகன் முன் வைக்கும் குற்றச்சாட்டு. மாணவர்கள் எந்த இடத்தில் சோர்ந்து போகிறார்கள் என்பதை ஆராய்ந்ததன் விளைவாக மதன்மோகன் உருவாக்கியது செயலி ஒன்றை.
வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலையடிவாரத்தில் ஜமுனாபுதூர் பூங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார் மதன்மோகன். மலையடிவாரத்தில் இருக்கும் இந்தப் பள்ளியில் சுற்றுப்புற குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து செல்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்திலேயே பல மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிடும் மோசமான மனநிலையில் தான் மாணவர்கள் இருந்தனர். மாணவர்களை எண்ணி ஆசிரியர்களுக்கும் மிகவும் கவலையுடன் இருந்தனர்.
அந்த சமயத்தில் தான் மாணவர்களிடம் என்ன குறை இருக்கிறது என்பதை தேடத் தொடங்கினார் ஆசிரியர் மதன்மோகன்.
“மாணவர்கள் ஏன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எண்ணி பயப்படுகிறார்கள், எளிதில் மதிப்பெண் பெற்றுவிடலாம் என்பது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை என்று எனக்குள் கேள்வி எழுந்தது. எனவே மாணவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள களத்தில் இறங்கி செயல்படத் தொடங்கினேன்,” என்கிறார் மதன்மோகன்.
பள்ளி முடிந்த ஓய்வு நேரத்தில் என்ன செய்வார்கள் என்று மாணவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், பெரும்பாலான நேரங்களில் ஸ்மார்ட் போன்களில் விளையாடுவதாகக் கூறினர். தங்கள் வீட்டில் போன் வைத்திருக்கும் யாரிடமாவதோ அல்லது பக்கத்து வீட்டு நண்பர்களிடமோ வாங்கி செல்போனில் விளையாடுவதாக தெரிவித்தனர். கிராமத்து மாணவர்களுக்கும் டெம்பிள் ரன், கேன்டி கிரஷ், சப்வே சர்பர்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் தெரிகிறதே என்பது எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவிற்கு மாணவர்கள் செல்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பதை அறிந்தேன். எனவே படிப்பையும் ஏன் விளையாட்டு வழியாக மாணவர்கள் மனதில் புகுத்தக் கூடாது என்ற யோசனையின் விளைவாகத் தோன்றியதே 10th Quiz செயலி என்கிறார் மதன்மோகன்.
பொதுத்தேர்வில் சுமாரான மாணவர்கள் தேர்ச்சி பெறவும், நன்கு படிக்கும் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெறவும் உதவுவது மதிப்பெண் வினாக்கள். எனவே ஒரு மதிப்பெண் வினாக்களை கொண்டு ஒரு செயலியை உருவாக்க திட்டமிட்டேன். மாணவர்களை படி படி என்று வற்புறுத்துவதால் அவர்களுக்கு வெறுப்பு தான் உண்டாகும். இந்தச் செயலியில் முதலில் கணிதப் பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை உருவாக்கினேன்.
ஒவ்வொரு லெவல் என வைத்து கேள்விகளை தயார் செய்தேன். ஒவ்வொரு கேள்விக்கு கீழேயும் 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் தேர்ந்தெடுக்கும் பதிலைப் பொருத்து மதிப்பெண் கிடைக்கும். மாணவர்கள் மனப்பாடம் செய்து வைத்து இதிலும் மதிப்பெண் பெற்றுவிடுவார்கள் என்பதை நினைவில் வைத்து ஒவ்வொரு முறையும் கேள்விக்கான விடைகளின் வரிசையை மாற்றும் விதமாகவும் உருவாக்கியதாகக் கூறுகிறார் மதன்மோகன். மேலும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் என பாயின்ட்டுகளும் கொடுக்கும் வகையில் செயலியை உருவாக்கியதாகக் கூறுகிறார் மதன்மோகன்.
செயலி உருவாக்கும் எண்ணம் எனக்கு தோன்றியதும் கூகுள் ப்ளே ஸ்டோரில் தேடிப்பார்த்த போது ஒரு மதிப்பெண் வினாவிற்கென தனியாக ஒரு செயலி இல்லை என்பதை அறிந்து கொண்டேன். இதனையடுத்து தொழில்நுட்பம் அறிந்தவர்களின் உதவியோடு 6 மாதத்தில் செயலி வடிவமைத்தேன் என்கிறார் மதன்மோகன்.
மதன் மோகன் ஆசிரியராக இருந்தாலும், பி.இ படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு ஆசிரியர் பணிக்கு வந்தவர் என்பதால் அவரே யூடியூப் மற்றும் இணையதளங்களில் தகவல்களைத் திரட்டி செயலியை உருவாக்கியுள்ளார்.
6 மாதத்தில் செயலியை உருவாக்கி விட்டாலும், செயலி சரிபார்த்து வெளியிட மேலும் 2 மாதங்கள் ஆகிவிட்டது. இந்தச் செயலியை மாவட்ட கல்வி அதிகாரியே வெளியிட்டு பாராட்டுகளை தெரிவித்தது மறக்க முடியாத தருணமாக இருக்கிறது மதன்மோகன் வாழ்க்கையில்.
இணையதள வசதி கிராமப்புறங்களில் அவ்வளவு துல்லியமாக கிடைப்பதில்லை எனவே இந்த செயலி இணையதள வசதி இல்லாமல் செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு போன்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் 10th Quiz செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும் மடிக்கணிணியில் இந்த செயலியை பயன்படுத்த நினைப்பவர்கள் ப்ளூஸ்டேக் என்ற மென்பொருள் மூலம் உபயோகப்படுத்தலாம்.
நான் கணிதப் பாடம் எடுப்பதால் முதலில் கணிதப் புத்தகத்தை வைத்து மட்டுமே ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழியிலும் ஒரு மதிப்பெண் வினாக்களை செயலியில் வடிவமைத்தேன். மாணவர்களின் ஆர்வத்தை பார்த்து பிற பாட ஆசிரியர்களும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இதே போன்ற வசதியை செயலியில் ஏற்படுத்தக் கேட்டுக் கொண்டதால் ஆங்கிலம், அறிவியல், சமூகஅறிவியல், தமிழ் என அனைத்து பாடங்களின் ஒரு மதிப்பெண் வினாக்களையும் செயலியில் சேர்த்துள்ளதாகக் கூறுகிறார் மதன் மோகன்.
எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் இந்த 10th Quiz செயலியை பயன்படுத்துவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏறத்தாழ 75 ஆயிரம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர், மாணவர்கள் ஓய்வு நேரத்தில் விளையாட்டாக இதை பயன்படுத்துவதன் மூலம் பாடங்கள் பற்றியும் மதிப்பெண் பற்றியுமான பயம் அவர்களுக்கு போய்விடுகிறது என்று கூறுகிறார் மதன் மோகன்.
அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பாடப்புத்தகம் மாற்றம் செய்யப்பட உள்ளதால் அதற்கு ஏற்ப செயலி புதிய வடிவம் பெறும் என்று கூறும் மதன் மோகன், மாறி வரும் காலத்திற்கேற்ப ஆசிரியர்களும் மாற்றங்களை மாணவர்களுக்கு படிக்கும் முறையில் கொண்டு வந்தால் படிப்பில் பின்தங்கிய மாணவன் கூட தோல்வியை துரத்தியடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார் மதன்மோகன்.
செயலி பதிவிறக்கம் செய்ய: 10th Quiz