பதிப்புகளில்

உங்கள் சார்பில் பதில் அளிக்க ஒரு அரட்டை மென்பொருள் ரெடி...

cyber simman
26th Feb 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, 'மோல்லி' 'Molly' எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார். கேள்வி பதில் அளிக்கும் சேவையான இந்த செயலி பயனாளிகளுக்கான தனிப்பட்ட அரட்டை மென்பொருளாக விளங்கக் கூடியது என்பது தான் சுவாரஸ்யமானது. நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார்.

image


மெஸினா ஸ்டார்ட் அப் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். டிவிட்டர் சேவையின் ஆரம்பகால பயனாளிகளில் ஒருவரான மெஸினா, இணைய உலகில் குறிப்பிட்ட பதிவுகளை அடையாளம் காண்பதற்கான அடையாள குறியாக பயன்படும் ஹாஷ்டேக் கருத்தாக்கத்தை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார்.

உபெர் உள்ளிட்ட நிறுவனங்களில் மென்பொருளாலர்கள் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ள மெஸினா பாட்கள் எனப்படும் அரட்டை மென்பொருள்களிலும் தனி ஆர்வம் கொண்டவர். பரவலாக அறியப்பட்ட இ-காமர்ஸ் போல, அரட்டை மென்பொருள்கள் சார்ந்த உரையாளல் வணிகம் வருங்காலத்தில் பிரபலமாகும் என வாதிட்டு வருபவர். பாட்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் மெஸினா, பாட்கள் எல்லாம் வல்லவை என்கிறார். அது மட்டும் அல்ல, அவர் தனது சார்பில் பதில் அளிப்பதற்கான பிரத்யேக அரட்டை மென்பொருளையும் உருவாக்கியிருக்கிறார்.

ஃபேஸ்புக் மெசஞ்சர் சேவை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள மெஸினா பாட் எனும் அந்த அரட்டை மென்பொருள், அவர் சார்பில் கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடியதோடு, அவருடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்து தரக்கூடியது. சுருக்கமாகச்சொன்னால் அவருக்கான தனிப்பட்ட டிஜிட்டல் உதவியாளராக செயல்படக்கூடியது.

மெஸினா அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை, இதே போன்ற தனிப்பட்ட டிஜிட்டல் உதவியாளர்களை எல்லோருக்கும் வழங்க கூடியதாக இருக்கிறது. இது தான் நோக்கம் என்றாலும், முதல் கட்டமாக மோல்லி செயலி, கேள்விக்கு பதில் அளிக்கக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் எல்லோரும் தனிப்பட்ட தகவல்கள் உள்பட பலவிதமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம் அல்லவா?, அந்த தகவல்களைக் கொண்டு பயனாளிகள் சார்பில் பதில் அளிக்கக் கூடியதாக மோல்லி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக பகிர்வுகள் வாயிலாக இந்த செயலி ஒருவரைப்பற்றி பொதுவெளியில் இருக்கும் தகவல்களை எல்லாம் திரட்ட அவை தொடர்பான கேள்விகளாக புரிந்து வைத்துக்கொள்கிறது. பின்னர் யாரேனும் அந்த கேள்விகளை கேட்கும் போது அதற்கான பதிலை அளிக்கிறது. இப்போதைக்கு ஒருவரது உணவுப்பழக்கம், ரசனை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.

பதில் தெரியாத கேள்விகள் கேட்கப்படும் போது இந்த செயலி, அதன் உரிமையாளருக்கு அந்த கேள்வியை அனுப்பி வைக்கிறது. அதன் பிறகு அவர் விரும்பினால் நேரடியாக பதில் அளிக்கலாம். முதல் கட்டமாக, அழைப்பின் பேரில் உறுப்பினரான பிரபலங்கள் பலரது அறிமுக சித்திரங்கள் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன. இவர்களிடம் பயனாளிகள் கேள்விகளை கேட்கலாம். சிலிக்கான் பள்ளத்தாக்கின் பிரபலங்கள் பலர் இதில் இடம்பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

சமூக ஊடக பரப்பில் இருந்து தகவல்களை திரட்டுவதோடு, இந்த செயலியும் உறுப்பினர்களிடம் சில கேள்விகளை கேட்டு அதற்கேற்ப விவரங்களை சேகரித்துக்கொள்கிறது. பெரும்பாலும் இந்த கேள்விகள் டிஜிட்டல் உதவியாளர் சேவையான அமேசான் அலெக்ஸாவை பயன்படுத்துகிறீர்களா என்பது போல அமைந்துள்ளது.

வரும் காலங்களில் அமேசான் அலெக்ஸா, கூகுள் ஹோம் போன்ற டிஜிட்டல் உதவியாளர்கள் சேவையை அதிகம் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றில் நாம் பகிர்ந்து கொள்ளும் கட்டளைகள் நம்மைப்பற்றி அதிக தகவல்களை அளிக்கக் கூடியதாக இருக்கும். இவற்றை எல்லாம் மோல்லி செயலி ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

image


சமூக ஊடக பரப்பை வெறும் தகவல் பகிர்விற்காக மட்டும் பயன்படுத்தாமல் அவற்றில் பகிரப்படும் விவரங்களை நமக்காக செயல்பட வைப்பதே இந்த செயலியின் நோக்கம் என்கிறார் மெஸினா.

ஆனால் இந்த செயலி இப்போது அறிமுக நிலையில் மட்டுமே இருக்கிறது. இப்போதைக்கு பிரபலங்கள் மட்டும் இதில் உறுப்பினராக அடையாளம் காட்டப்படுகின்றனர். பல்வேறு பிரிவுகளில் உறுப்பினர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் பயனாளிகள் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கிக் கொள்ள கோரிக்கை விடுக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக பகிர்வுகளை கொண்டே நம் சார்பில் பதில் அளிக்கக் கூடிய ஒரு அரட்டை மென்பொருளை உருவாக்கி கொள்ளலாம் என்பதே இந்த செயலி முன்வைக்கும் கருத்தாக்கமாக இருக்கிறது. இது தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்கும் அபாயமும் இருக்கிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் மனிதர்களின் உரையாடலை புரிந்து கொண்டு அவர்களுடன் உரையாடக்கூடிய மென்பொருள் சார்ந்த சேவைகளை பல நிறுவனங்களும் உருவாக்கி வருகின்றன.

இந்த போக்கின் முக்கிய புள்ளியாக மெஸினாவின் செயலி அமைகிறது. மெஸினா எதிர்பார்க்கும் அளவுக்கு இந்த செயலி வெற்றி பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் வருங்காலத்தில் அரட்டை மென்பொருள்கள் சார்ந்த சேவைகள் கோலோச்சப்போகின்றன என்பதற்கு அடையாளமாக இது திகழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு: https://molly.com/

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags