மூன்றே நாட்களில் வீட்டுச்சுவை உணவு நிறுவனத்தை நண்பர்களுடன் தொடங்கிய இளைஞர்!

0 CLAPS
0

உணவுக்கு சென்னையில் பஞ்சமில்லை. திரும்பிய இடமெங்கும் சூடான சுவையான, உங்கள் மனதிற்கு ஏற்ப, இன்னும் சொல்லப்போனால், உங்கள் மணிபர்சின் கனத்திற்கு ஏற்ப என பல உணவங்கங்கள் வந்து விட்டன. விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு மட்டுமே என்ற பழமொழி மறைந்து, வேலைநாட்களில் கடை சாப்பாடு மட்டுமே என மாறியுள்ளது. 

தமிழகத்தில், அதிகமான வெளியூர் ஆட்கள் தங்கி பணிபுரியும் நகரங்களில் முதலிடம் சென்னைக்கு. எனவே பலருக்கும் இங்கு வீட்டுச்சாப்பாடு என்பது எட்டாக்கனி. அந்நிலையை மாற்ற விரும்புகிறது ’அதிதி கானா’ Athithi Khana.


மனிஷ் - மோஹித்- ஆஷிஷ்

விதை விழுந்தது கல்லூரியில் :

’அதிதி கானா’ பற்றி எழுத விரும்பிய போது, அலைபேசியில் அதன் நிறுவனர் ஆஷிஷ் நாஹாரை தொடர்பு கொண்டோம். 35 வயது மதிக்கத்தக்க குரல் பதில் அளித்தது. குரலில் இருந்த கம்பீரமும் தொனியும் எப்படியும் 40 வயதிருக்கும் அவருக்கு என தோன்றவைத்தது. அதிதி கானாவின் மந்தவெளி சமையலறைக்கு வருமாறு கூறினார். சென்ற பார்த்தபோது அதிர்ச்சி தான் மிஞ்சியது எனக்கு. 

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவன் போல காட்சியளித்தார் ஆஷிஷ். மேலும் அங்கு கிடைத்த தெனிந்திய உணவின் சுவை நமக்கு உணர்த்தியது, அதிதி கானாவிற்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை ஏன் கூடுகிறது என.

கெளதம் வாசுதேவ் மேனன் படங்களின் நாயகன் போன்று சென்னையில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம். பள்ளியில் படிப்பில் முதலிடம் ஆனால் கல்லூரியில் கடைசி பெஞ்ச் ராஜா. படித்து முடித்த உடன் ஒரு வேலை வேண்டும் என்பதற்காக கிடைத்த ஒரு கல்வி தொடர்பான வேலையில் ஆறு மாதம் நிலைத்துள்ளார். படிக்கும் போதும் படித்து முடித்து அடுத்து அடுத்து இரண்டு நிறுவனங்களில் வேலை பார்த்த போதும், தொழில் முனைய வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.

ஆனால் அவருக்கே தெரியாமல் உணவு தொடர்பான விஷயங்களை அவருள் விதையாக விதைத்தது அவரது நண்பன் மோஹித். இவர்கள் இருவரும் சேர்ந்து, டி.நகர் நடேசன் பூங்கா அருகில் உள்ள கையேந்தி பவன் துவங்கி, தேவி திரையரங்கம் அருகில் உள்ள பாம்பே லஸ்ஸி, மாமீஸ் கிட்சன், கர்ப்பகாம்பாள் மெஸ் மயிலாப்பூர், கார்த்திக் டிபன் சென்டர் அண்ணா நகர், அசோக் பில்லர் மாடாஸ் என சுற்றாத இடமில்லை. 

உணவு பிரியர்களாக இருவரும் பல்வேறு இடங்களை தேடித் தேடி சென்று சுவைகண்டுள்ளனர். அந்த காலத்தில் குறைந்த விலையில், கிடைத்த நிறைந்த சுவை கொடுத்த வியப்பு தான் பிற்காலத்தில் தன்னுடைய எதிர்காலமாக மாறும் என்பதை ஆஷிஷ் அறியவில்லை. 

ட்வெண்டி19 தந்த அனுபவம் :

கல்லூரி முடித்து கிடைத்த முதல் வேலையை உதறிவிட்டு, ’ட்வெண்டி19’ என்ற தொழில்முனைவில் இணைந்தார் ஆஷிஷ். 

`படிப்பது வேறு, கற்பது வேறு என்பதை கண்கூடாக கண்டு உணர்ந்த இடம் இங்குதான். வெறும் 10 நபர்கள் கொண்ட நிறுவனம் அது. இந்த தளம் செய்வது ஒரு மாணவனை வழிநடத்துவது. 

என்ன படித்தால், என்ன திறமை கிடைக்கும்? என்ன திறமை வைத்து எந்த நிறுவனத்தை அணுகலாம்? மாணவர்கள் தான் இவர்களது வாடிக்கையாளர்கள். அங்கு கிடைத்த அனுபவம் மூலம் ஆஷிஷ் கூறுவது ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பது இன்னமும் இந்தியாவில் வளரவில்லை என்று. ஒரு தொழில் முனைவில் வேலைபார்த்து வந்தாலும் ஒரு நாள் தன்னுடைய நிறுவனமும் வளர வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் முளைத்து வந்துள்ளது.


ஒன்றரை வருடங்கள் நிறுவனத்தின் உள்ளேயே, பல துறைகளில் வேலைபார்த்து பல விஷயங்களை கற்ற பின்பு, போதும் என வேலையை விட்டுவிட்டு வெளியில் வந்துள்ளார். வந்த உடன் தந்தையின் அலுவலகத்தில் 3 மாதம் வேலை செய்து பார்த்து அதுவும் ஒத்துபோகாது அங்கிருந்தும் வெளியில் வந்துள்ளார். அடுத்ததாக அவரது நேரத்தை முடிதிருத்தும் துறையில் சில புதுமைகளை புகுத்தும் முயற்சிக்கு செலவழித்து அதுவும் தனக்கு ஏற்றது அல்ல என்பதை உணர்ந்து கைவிட்டுள்ளார். ஆனால் 2015-ல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பல முடிதிருத்தும் நிலையங்களை சென்று பார்த்ததில் பலரின் அறிமுகமும், தினம் தினம் பலர் சந்திக்கும் சிக்கல்களும் புலப்படத்துவங்கியது. உணவு தொடர்பான யோசனைகளும் கல்லூரியில் சுற்றித்திரிந்த அனுபவமும் மனதில் வேறு சில விஷயங்களை விதைத்திருந்தன.

எது தனது பாதை என்பதை முடிவுசெய்வதற்கு முன்பு, தனக்கு எது வராது என்பதை உணர்ந்து அதனை விடுத்து அடுத்த கட்டத்திற்கு நகரும் தெளிவு அவரிடம் இருந்தது. எனவே நீண்ட விவாதங்களுக்கு பிறகு உணவுதான் தனது துறை என முடிவெடுத்துள்ளார்.

இவற்றுக்கு இடையில் ஆஷிஷ் செய்த மற்றொரு விஷயம், மக்கள் பலரை முக்கியமாக தொழில்முனைவோர் பலரை சந்தித்தது.

“என்ன பேசப்போறேன்னு தெரியாது, அவுங்க எப்பிடி பதில் சொல்லுவாங்கன்னு தெரியாது. ஆனா, மெயில் மூலமா அவுங்க கிட்ட சந்திக்க நேரம் வாங்கிட்டு போய் பார்ப்பேன். என்னோட மனசுல இருக்கற யோசனைகள பகிர்ந்துப்பேன். அவுங்களோட கருத்தையும் கேட்டுப்பேன்,” என்கிறார் ஆஷிஷ்.

இவ்வாறு தற்போது உணவுத் துறையில் பிரபலமாக உள்ள பல தொழில் முனைவோரை சந்தித்துள்ளார். 40 டேபிள்ஸ்- கார்த்திக், கொலபசி- சந்தோஷ், மஸ்க்கலந்தர் நிறுவனர்கள், பிரம் எ ஹோம்.காம் – வினோத் சுப்பிரமணியம் என பலரைக் கூறலாம். தன்னிடம் உணவு தொடர்பாக இருந்த சில யோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

துவக்கம் :

உணவுத்துறையில் ஜாம்பவான்களாக இருந்த பல தொழில்முனைவோரை சந்தித்து அவர்களிடத்தில் தனது யோசனைகளை கூறிய போது அவர்கள் கொடுத்த பதில் வேண்டாம் என்பது தான். அடுத்ததாக இவரது ஆர்வத்தைக் கண்டு, ஏன் நீங்கள் எங்களோடு இணைந்து பணியாற்றக் கூடாது என கொலபசி நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அங்கும் 15 நாட்கள் குழந்தைகளுக்கு கொலபசி நிறுவனத்தை எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்று செய்துள்ளார். ஆனால் மீண்டும், ஏன் நாம் நமது நிறுவனத்தை துவக்கி பணியாற்றக் கூடாது என்ற எண்ணம் மனதில் வந்துள்ளது. அதற்குக் காரணமாக தனது குடும்பச் சூழலை குறிப்பிடுகிறார் ஆஷிஷ். சிறுவயதில் இருந்து சொந்தமாக தொழில் செய்து வரும் பலரை பார்த்து வளர்ந்தவர் எவ்வாறு தனித்து தொழில் செய்யாது இருக்கமுடியும்?

2015-ல் பெங்களுருவில் ’ப்ரேக்கி’ என்ற நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டுள்ளார், நமது யுவர்ஸ்டோரியிலும் அவர்களை பற்றி படித்துள்ளார். அவர்கள் சத்தான ஆரோக்கியமான காலை உணவை மக்களுக்கு அளித்து வந்துள்ளனர். ஆனால் பெங்களுருவில் உள்ள மக்கள் காலை உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சென்னை மக்கள் கொடுப்பது இல்லை என்பது மனதில் நின்றுள்ளது.

“அவசரத்துக்கு ரெண்டு இட்லி சாப்டுட்டு போய்டே இருப்பாங்க. அவுங்க கிட்ட நாம பல விஷயங்கள எதிர்ப்பாக்க முடியாதுன்னு புரிஞ்சுது. அதனால மதிய உணவுன்னு முடிவு செஞ்சேன்”சொல்கிறார் ஆஷிஷ்.

நாம் செய்வது முற்றிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும். இதே துறையில் ஸ்விக்கி, ஃபூட்பாண்டா போன்றவர்கள் பல லட்சங்களை குவித்து செய்யும் விஷயங்களுக்கு போட்டியாக இல்லாமல், நமக்கான தனித்தன்மையை இழக்காது, நமது நோக்கத்தையும் நிறைவேற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அந்நேரத்தில் தனக்கு உணவளிப்பவர்களை (கேட்டரர்) பற்றி சிந்திக்கத் துவங்கியுள்ளார்.

திருமண நிகழ்ச்சிக்கு சமைப்பவர்கள், மற்றவகையான நிகழ்சிகளுக்கு சமைப்பவர்கள், பார்டிகளுக்கு சமைப்பவர்கள் என வேறு வேறு வகை இருப்பதை அறிந்துள்ளார். ஆனால், மிக அற்புதமாக சமைப்பவர்கள், பலரும் விரும்பி உண்ணும் அளவுக்கு சமைப்பவர்கள், முக்கியமாக பீ 2சீ (நேரடியாக வாடிக்கையாளரை அணுகுபவர்) என்னும் கோட்பாடுக்கு உட்பட்டு சமைப்பவர்கள் நமது ஆட்கள் என முடிவெடுத்துள்ளார் ஆஷிஷ். கல்லூரி நாட்களில் அவருக்கு இருந்த வியப்பினை, தொழிலாக மாற்றும் நேரம் வந்தது. இந்த சமையல் கலைஞர் இவ்வாறு அற்புதமாக சமைக்கின்றார் என்பதை பலரும் அறிவதில்லை. அவர்களை ’வீட்டுச் சமையல்’ எதிர்பார்க்கும் நபர்களிடம் சேர்ப்போம் என முடிவுசெய்துள்ளார்.

பொதுவாக ஒரு தொழில் துவங்க ஒரு மாதமாவது சிந்திப்பார்கள். என்ன பெயர், என்ன நிறம் இருக்க வேண்டும் நமது பதாகைகள், எவ்வாறு பிரபலபடுத்துவது இப்படி பல கேள்விகள் இருக்கும். ஆனால் கிட்டத்தட்ட 3 வருடங்கள் பல யோசனைகள் யோசனைகளாகவே முடிந்து போனதால், தனக்கு மிகவும் பிடித்த உணவுத்துறையில் செய்து பார்த்துவிடலாம் என்ற துணிவோடு மூன்று நாட்களில் இந்நிறுவனத்தை துவங்கியுள்ளார் ஆஷிஷ். உலகின் தலைச்சிறந்த சொல் செயல் அல்லவா. எனவே செயல் படத் துவங்கினார்.

ஒரு வெள்ளியன்று சிந்தித்து, சனியன்று பட்டியல் தயாரித்து, தனது எல்லைகளை முடிவு செய்து, ஞாயிறு அன்று முகநூலில் தனது நிறுவனத்தில் உள்ள உணவுபொருட்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

திங்களன்று அவருக்கு முதன் முதலாக 4 சாப்பாடுகள் வேண்டும் என வேண்டுகோள் வந்துள்ளது. அந்த நான்கினையும் இவரே எடுத்துச் சென்று கொடுக்கவும் செய்துள்ளளார். தற்போது எந்த ஒரு நாளாக இருந்தாலும் சராசரியாக 300 நபர்கள், அதிதி கானாவில் உணவு உண்கின்றனர். 


பெயர் காரணம் :

அடுத்து, ஏன் இந்த பெயர், யார் அந்த அதிதி என்று கேட்ட போது, பேரு சொன்னா என்ன நிறுவனம்னு புரியணும். கானான்னு சொன்னா உணவுன்னு எல்லார்த்துக்கும் தெரியும். அதிதினா ஹிந்தில விருந்தினர்னு அர்த்தம். எனவே இரண்டையும் இணைத்து வெறும் 3 மணி நேரத்தில் பெயர் சூட்டி, நிறுவனத்திற்கு வண்ணமயமான பட்டியல் வரை தயாரித்து முடித்து விட்டார் ஆஷிஷ்.

தகர்த்து எறிந்த தடைகள் :

* முதன் முதலாக சரியான சுவையில், விலையில், தினமும் உண்ணும் அளவில் சமைத்து கொடுக்கக் கூடிய ஒரு சமையல் கலைஞரை, கண்டுபிடிப்பது ...

* எந்த எந்த பகுதிகளில் உணவை எடுத்து சென்று கொடுப்பது?

* எந்த விலையில் கொடுப்பது?

* வளர்ந்து வந்த/ வந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களை சமாளித்தல்.

* உணவு கொண்டு சென்று கொடுப்பவர்களை சமாளித்தல்.

* உணவு வழங்குபவர்

தனக்குத் தேவையான உணவை சமைத்து வழங்குபவரை கண்டுபிடிப்பது சிரமமாக இல்லாது இருந்தாலும், அவர்களிடம் தன்னுடைய யோசனையை கூறி சம்மதம் பெறுவது சற்று சிரமாக இருந்துள்ளது. ஆனால் முடிவில் நம்பிக்கை என்னும் ஆயுதம் கொண்டு அவர்களையும் வென்றுள்ளார் ஆஷிஷ்.

மந்தவெளியில் தென்இந்திய உணவுகள் வழங்கும் ஒரு சமையலறையும் (கேட்டரர்) அடையாரில் வடஇந்திய உணவுகள் வழங்கும் ஒரு சமையலறையும் இவரோடு முதலில் இணைந்து செயல்பட சம்மதித்தனர். தற்போது திருவல்லில்கேணி பகுதிக்கும் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

எல்லைகள் :

அடுத்து தொழில்முனைவின் ஆரம்பக்கட்டம் என்பதால், உணவு சமைக்கப்படும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு என்று தனது எல்லையை நிர்ணயித்துகொண்டார்.

விலை

விலையை நிர்ணயிக்கும் போது, மீண்டும் அவர் நம்மிடம் உணவு உண்ணவேண்டும், நமது வாடிக்கையாளராக அவர் மாற வேண்டும் என்பதற்காக ’டெலிவரி சார்ஜ்’ அறவே தவிர்த்தார். எனவே இவரது விலைபட்டியல் உணவு உண்ணுபவரின் பர்ஸை பதம் பார்ப்பதில்லை.

போட்டியாளர்கள்:

பல லட்சங்கள் முதலீடு கொண்டு உணவுத்துறையில் களமிறங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் நிலைத்து நிற்கவேண்டிய கட்டாயம் இருந்ததால், முடிந்த அளவு வாடிக்கையாளர்களை தக்கவைக்க வேண்டி இருந்தது.

எளிமையான வழிமுறை, நியாயமான விலை, சரியான சுவை கொண்டு அதனை எதிர்கொள்கின்றனர். மேலும் “டெலிவரி சார்ஜ்” என்பது இல்லாமல் இருப்பதால், வாடிக்கையாளர்கள் விட்டுச் செல்வதில்லை. மேலும், தினமும் உண்ணக்கூடிய வீட்டுச் சாப்பாடு என்பதால் அவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறது அதிதி கானா.

’டெலிவரி பாய்ஸ்’

ஆரம்பித்த அன்று முதல் இன்று வரை சமாளிக்க சற்று சிரமப்படும் விஷயம் உணவை சமைக்கும் இடத்தில் இருந்து வாடிக்கையாளர் இல்லத்திற்கு கொண்டு செல்லும் நபர்களை நிர்வகிப்பது. எல்லா நாட்களும் ஒன்றாக இருப்பதில்லை. ஒரு மாதம் வேலை செய்து சம்பளம் வாங்கிவிட்டு உடனடியாக நின்றுவிடுவது இன்று வரை சிக்கலாகவே தொடர்கிறது. ஆனால் இந்த சிக்கலை எதிர்கொண்டதன் காரணமாக, நிலைத்து நிற்பவர்கள் யார் என்பதை எளிதில் அறியும் திறமை வளர்ந்துள்ளது என்கிறார் ஆஷிஷ்.


ஆர்டர் பெறுவது :

முகநூலில் அல்லது உங்களது நண்பர்கள் வட்டம் மூலமாக அல்லது அலுவலகம் மூலமாக அதிதி கானா பற்றி அறிந்து கொண்டால், அவர்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு அல்லது அவர்கள் முகநூல் இணைப்பிற்கு அல்லது அவர்கள் எண்ணிற்கு நீங்கள் ஒரு செய்தி அனுப்ப வேண்டும். அவர்கள் அதன் பிறகு உங்களுக்கு அவர்களது உணவு பட்டியலை அனுப்பி வைப்பார்கள். 

ஒவ்வொரு நாள் காலையும் உங்களை இந்த பட்டியல் அலைபேசியில் தேடி வரும். என்ன வேண்டும் என அதில் நீங்கள் பதில் சொல்லிவிட்டால் அன்று அந்த உணவு உங்களை தேடி வரும். சுவையான உணவு சரியான விலையில் தினமும் கிடைப்பதால் வேறு இடத்திற்கு செல்லவும் வாடிக்கையாளர்கள் எண்ணுவதில்லை.

உணவை கொண்டு செல்வது :

காலை 11.30 மணியோடு அன்றைய தினத்திற்கான மதிய உணவு ஆர்டர்கள் முடிக்கப்படுகின்றன. எனவே எந்த பகுதியில் எத்தனை ஆர்டர் என்ற தெளிவு கிடைப்பதால், சரியாக ஒரு வழியை தீர்மானம் செய்து ஒரு டெலிவரி பாய் முடிந்த அளவு உணவுகளை கொண்டு சேர்க்கின்றார். 

இந்த ’ஃப்ரீ-ஆர்டர்’ முறை காரணமாக நேரம் மிச்சமாவது மட்டுமல்ல, சரியாக திட்டமிடவும் முடிகிறது என்கிறார் ஆஷிஷ்.

முதலீடு:

என்ன செய்ய வேண்டும் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய ஆஷிஷ் எடுத்துக்கொண்ட நேரமும் முயற்சியும் தான் அவரது முதலீடாக இது வரை இருந்து வந்துள்ளது. மற்றபடி இந்த தொழில் துவங்கி அதில் கிடைக்கும் வருமானத்தை அதிலேயே முதலீடி செய்துள்ளார. வாடிக்கையாளர் அதிகமாக அதிகமாக சிறிது சிறிதாக லாபமும் வரத் துவங்கியுள்ளது. மேலும் இதன் பிறகு முதலீடு தேவை என ஒரு நிலை பெரும் அளவில் விரிவாக்கம் அடையும் பொழுது உருவாகலாம். ஆனால் அப்போதும் அந்த முதலீட்டை, தினசரி செலவுகளுக்காக இல்லாது, சரியான முறையில் நிறுவனத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வழிகளில் செலவிடுவோம் என்கிறார்.

இவரிடம் நாம் கற்க கூடியவை :

1. நமது பாதையை தெளிவாக அறிந்து அதில் மாறாது பயணிப்பது.

2. வாடிக்கையாளரை மனதில் கொண்டு ஒவ்வொரு செயலையும் திட்டமிடுதல்.

3. முதல் அடி மிகச் சிரிதாக இருப்பினும், அதனை எடுத்து வைத்தல்.

4. துறையில் உள்ள முன்னோரை சந்தித்து ஆலோசனைகள் பெறுதல்.

“சென்னை பொருத்த அளவுக்கு ஸ்டார்ட் அப்க்கான சரியான தளமாக இருக்கு. எனக்கு ஒரு விஷயம் தெரியல சொல்லி குடுக்க முடியுமான்னு சரியான ஆட்கள் கிட்ட கேட்டா இல்லைன்னு சொல்லாம சொல்லி குடுக்கறாங்க. இல்ல யாரு சொல்லித்தருவாங்களோ அவுங்கள கைகாட்டி விடறாங்க. இது ரொம்ப நல்ல பண்பா இருக்கு,” என்று முடித்தார் ஆஷிஷ்.

கட்டுரையாளர்: கவுதம் தவமணி

Latest

Updates from around the world