பதிப்புகளில்

நான் கதைகளை உருவாக்குகிறேன்; அதை வாழும் தைரியம் என்னிடம் இல்லை: கல்கி கொச்சிலின்

18th Nov 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

கல்கி கொச்லினின் நீண்ட கால கனவு பாலிவுட், அவரும் இந்தத் துறையில் தீவிரமாக செயலாற்றுபவராக மாறுவார் என்று நினைக்கவே இல்லை. கல்கி ஹிந்திப்படமான தேவ் டி படத்தின் மூலம் தன்னுடைய பணியைத் தொடங்கினார், தன்னுடைய முதல் படத்திற்கே ஃபிலிம்பேர் விருதையும் அவர் பெற்றார்.

நாடகங்கள் மற்றும் கதை கூறல் மீதான ஆர்வம் மற்றும் தன் வாழ்க்கையில் செய்த தவறுகள் பற்றி கல்கி யுவர் ஸ்டோரியுடன் கலந்துரையாடினார்.

image


யுவர் ஸ்டோரி: நாடகங்கள் மற்றும் படங்கள் மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

கல்கி: என் பெற்றோருக்கு நடிப்பு, நாடகம், திரைப்படம் என்ற எந்த பின்னணியும் கிடையாது. என் தந்தை ஒரு பொறியாளர்; அவர் மைக்ரோலைட் ஏர்பிளேன்களை உருவாக்குவார், என்னுடைய தாயார் பாண்டிச்சேரியில் உள்ள ஆசியாவிலேயே பழமையான பிரெஞ்ச் பள்ளியான லிச் பிரான்காய்சில் பிரெஞ்ச் பயிற்றுவிக்கிறார். நான் பல்வேறு கலைநயமிக்க சினிமாக்களை பார்த்து வளர்ந்தவள். உலக அளவில் பிரபல படங்களைத் தந்த ஷேகர் கபூர், குருதத் மற்றும் சத்யஜித் ரே படங்களை சிறு வயதிலிருந்தே பார்த்து வந்துள்ளேன்.

நாங்கள் குடும்பத்தோடு சென்று நிறைய நாடங்களைப் பார்த்துள்ளோம், அநகேமாக அது தான் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன். நான் பள்ளியில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்த பிறகு, என்னுடைய முதல் செயல்திறனை நான் ஆறு வயதில் வெளிப்படுத்தினேன்.

யுவர் ஸ்டோரி: நாடகத்தை உங்கள் முழு நேரப் பணியாக எடுத்துச் செல்லலாம் என்று நீங்கள் எப்போது முடிவு செய்தீர்கள்?

கல்கி: என் பெற்றோர் நான் மேற்படிப்புக்காக பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தனர். நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு சிறு திட்டம் இருந்தது. என்னுடைய ஆங்கல ஆசிரியர் என்னை நாடகப் பள்ளிக்கு விண்ணப்பிக்கச் சொன்னார் ஏனெனில் அதில் எனக்கு ஆர்வம் இருப்பதை அவர் உணர்ந்தார். எனக்கு கதை, நாடகங்கள் எழுத மிகவும் பிடிக்கும், அவர் எனக்கு ஊக்கமளித்தார். கடைசியாக நான் லண்டன் சென்று மூன்று ஆண்டு நாடகப் படிப்பான பிஏ(BA)வில் சேர்ந்தேன். நான் என்னுடைய வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கிய போது, மக்கள் எப்படி ஈடுபாட்டுடன் நாடகங்களில் பணிபுரிகின்றனர் என்பதை உணர்ந்தேன், அது எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் உயிர்ப்புடன் இருப்பதற்காக நான் ஒரு நாடக நிறுவனத்தில் சேர்ந்தேன். என் பட்டப்படிப்பை முடித்ததும் நான் இந்தியா திUம்பி என்னுடைய நாடகப் பணியைத் தொடர்ந்தேன். நான் கதைகள் மற்றும் படங்களுக்கு ஸ்கிரிப்ட்டுகளும் எழுதியுள்ளேன்.

யுவர் ஸ்டோரி: உங்கள் தந்தை ஒரு பொறியாளர் என்று சொன்னீர்கள். அப்படி இருக்கையில் நீங்கள் இது போன்ற ஒரு உறுதியில்லாத பணியைத்தேர்வு செய்ய உங்கள் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

கல்கி: நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என் பெற்றோர் என்னை வர்புறுத்தவில்லை. என் தந்தை என்னுடைய உண்மையான ஆர்வத்தை புரிந்து கொண்டதாக நான் நினைக்கிறேன், அவர் எனக்கு ஒரு போதும் அழுத்தம் தந்ததாக நான் நினைக்கவே இல்லை. என்னுடைய பெற்றோர் அது போன்ற சூழலில் வளரவில்லை, ஏனெனில் அவர்கள் பிரான்சில் இருந்து இளம் வயதிலேயே இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தவர்கள். குடும்பத்தை விட்டு விலகி நிற்பது வாழ்க்கையில் எடுத்து வைக்கும் மிகப்பெரிய அடி. அவர்கள் தங்களது கனவின் வழியே பயணிக்கின்றார்கள் அதனால் என்னுடைய விருப்பத்திற்கு அவர்கள் தடைவிதிக்கவில்லை. நான் நடிகையாவது குறித்து அவர்களுக்கு கவலை இருந்தது. நான் எப்படி பணம் சம்பாதிப்பேன் என்று அவர்கள் நினைத்தார்கள். அவை அனைத்தும் நடைமுறையில் இருக்கும் பிரச்னைகளே, ஆனால் நான் என்னவாக விரும்புகிறேன் என்பதில் அவர்கள் எனக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை. ‘உனக்கு நீயே உத்தரவாதம் என்பதில் நீ உறுதியாக இரு என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள், அதே போன்று உன்னுடைய செலவுளுக்கு எங்களைச் சார்ந்து இருக்காதே அதனால் நீ போதுமான நம்பிக்கை அளிக்கும் ஒரு பணியை தேடிக்கொள்’ என்றார்கள். எனக்கு நான் தான் பொறுப்பு என்று அவர்கள் எனக்குப் புரிய வைத்தார்கள்.

யுவர் ஸ்டோரி: நாடகத்தில் தொடக்க காலத்தில் இருந்த போது நீங்கள் எப்படி வருமானத்தை ஈடு செய்தீர்கள்?

கல்கி: லண்டனில் இருந்த போது நான் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்பித்தேன். நான் சில காலம் உணவு பரிமாறுபவராகவும் வேலை செய்துள்ளேன். இந்தியாவில் நான் மாடலிங், கட்டுரை எழுதுவது என என்னிடம் இருந்த அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தினேன். என்னுடைய செலவுகளுக்கான பணம் வரும் திசை தெரியாமல் செலவாகிவிடும். ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை விரும்பினால் உண்மையில் அதை செயல்படுத்துவதற்கான வழிகள் கிடைக்கும்.

யுவர் ஸ்டோரி: கலை மற்றும் கலாச்சாரத்தை போற்றுவதில் இந்தியாவிற்கும் லண்டனுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

கல்கி: நான் லண்டனுக்கு சென்ற போது எனக்கு வயது 18. நான் நம்பவே முடியாத பல வகையான நாடகங்களை பார்த்துள்ளேன் அது என்னை ஒரு மனிதன் போல உணர வைத்தது. லண்டன் நாடகங்களின் மையம்; உலக அளவில் அனைத்து தரப்பு மக்களும் கற்று கொள்வதற்காகவும் செயல்படுத்தவும் அங்கு வருகின்றனர். அதே போல நான் அங்கு சில இந்திய தயாரிப்பு நாடகங்களையும் பார்த்துள்ளேன், அவற்றை இந்தியாவில் நான் கண்டதே இல்லை. அவர்களுக்கு இந்தியாவை விட லண்டனில் மிகுந்த பாராட்டு கிடைக்கிறது. ஏன் இது போன்ற திறமைகள் நம்முடைய கதைகள் மற்றும் இந்திய நாடகங்களில் இல்லை என்று நான் உண்மையில் வெறுப்படைந்துவிட்டேன். நான் ஏன் இந்தியா திரும்ப வேண்டும் என்று நினைத்தேன் என்றால், நான் இந்தியாவிலேயே வளர்ந்ததால் என்னுடைய கதைகளும் இந்தியாவை சார்ந்தே இருந்தது. இந்த உணர்வு என்னை இந்தியா திரும்ப வைத்ததோடு அதை வெளிப்படுத்தவும் வைத்தது.

யுவர் ஸ்டோரி: இந்தியாவில் கதை சொல்லும் கலை மற்றும் நாடகங்களின் நிலை பற்றிய உங்களது கருத்து என்ன?

கல்கி: துரதிர்டவசமாக நாடகங்களுக்கு ஒரு நல்ல கலை வடிவம் கொடுக்கப்படவில்லை; எங்களுக்குத் தேவையான பணம் கிடைப்பதில்லை. எனக்கு தெரிந்த பல மக்கள் வேறு சில பணிகளையும் செய்து வந்தனர். நாடகக்கலையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துவது மிகவும் கடினமாக இருந்தது. நானும் நாடகங்களில் மட்டுமே நடிக்காமல், திரைப்படங்களிலும் நடிக்கிறேன். நம் நாட்டில் சொல்லப்பட வேண்டிய கதைகள் ஏராளமாக உள்ளன அவற்றில் பல சொல்லப்படுவதில்லை. பிரபலமான படங்கள் அல்லது நாடகங்களை எடுத்துக் கொண்டால் அவை அனைத்தும் ஒரே மாதிரியான கதை வடிவம் அல்லது சொல்லிய கதைகளையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு முறையில் சொல்வனவாக மட்டுமே உள்ளன. புதிய மற்றும் உண்மையான எண்ணங்கள் இருப்பது மிகவும் அரிது. இன்னும் பல புதிய கதைகளை வெளிப்படுத்த காத்திருக்கிறோம். புதிய கதைகளை சொல்லும் போது அதில் நீங்களும் ஒரு அங்கம் என்று நான் நினைக்கிறேன். 

யுவர் ஸ்டோரி: நாடகங்களைத் தவிர்த்து நீங்கள் எழுத்தாளராகவும் திகழ்கிறீர்கள், அது பற்றி கூறுங்கள்?

கல்கி: நான் சிறு வயது முதலே எழுதி வருகிறேன். எழுத்து எனக்கு ஒரு தெரபி என்று நான் நினைக்கிறேன். நான் மிகவும் வெட்கப்படுபவள், அதனால் மக்களிடம் நான் சொல்ல நினைப்பதை எழுதியே காட்டுவேன். நிறைய எழுத்தாளர்கள் என்னைப் போன்று தான் என நான் நினைக்கிறேன். என்னுடைய கனவுகளை வெளிப்படுத்த நாடகம் சிறந்தது என்று நான் நினைக்கிறேன், ஆனால் எழுத்து நான் சிறு வயது முதலே எழுதத் தொடங்கியது நான் அதை என் வாழ்நாள் முழுதும் தொடரவே விரும்புகிறேன். ஆனால் என்னுடைய முதல் நீண்ட கால வேலையில்லா திண்டாட்டத்தின் போது எழுத்தில் முழுவீச்சில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினேன். அநேகமாக உங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்துவதில் எழுத்து முக்கிய அங்கம் வகிப்பதாக நான் கருதுகிறேன்.

யுவர் ஸ்டோரி: நாடகத்திலிருந்து பாலிவுட்டிற்கு சென்றது எதேச்சையானதா அல்லது வாய்ப்பா?

கல்கி: இது எதேச்சையாக நடந்தது. ஏனெனில் நான் பாலிவுட்டில் இருப்பேன் என்று நினைக்கவே இல்லை. சொல்லப்போனால் நான் பாலிவுட்டுக்கு முயற்சி செய்யவில்லை, ஏனெனில் முதலில் என்னுடைய ஹிந்தி மொழி அவ்வளவாக நன்றாக இருக்காது, அதனால் நான் அதன் ஒரு அங்கமாக இல்லை, அதோடு எனக்கு நடனமும் தெரியாது. ஆனால் அதே சமயம் எனக்கு பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை இருந்தது. நான் விளம்பரப்படங்களில் நடித்தேன் அதோடு ஆடிஷன்களிலும் பங்கேற்றேன். ஆக தேவ் டி(‘Dev D’) படத்தின் ஆடிஷனின் போது மற்ற நடிகர்களோடு நானும் என்னடைய அதிர்ஷ்டத்தை எண்ணி காத்திருந்தேன். எனக்கும் அதில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, நான் என்னால் முடிந்த அளவு கடினஉழைப்பை போட்டதோடு இரண்டு மாதங்கள் ஹிந்தி டியூஷனுக்கும் சென்றேன்.

யுவர் ஸ்டோரி: ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கும் போது நீங்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் என்ன?

கல்கி: அநேகமாக அனைவரும் ஒவ்வொரு விதமான சவால்களை சந்திப்பார்கள் என நான் நினைக்கிறேன், அவர்கள் பார்க்க எப்படி இருக்கிறார்கள், எப்படி உரையாடுகிறார்கள், எங்கிருந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அவை உள்ளன. நான் பார்க்க வெளிநாட்டவர் போல இருக்கிறேன், தொடக்கத்தில் என்னுடைய ஹிந்தி சற்று பலவீனமாக இருந்தது. இந்த உண்மையை நான் உணர்ந்த போது, நான் என்னையே மெருகேற்றிக் கொண்டு சிறப்பாக செயல்பட முயன்றேன். நான் அனைவரிடம் இருந்து தனித்து நிற்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் நம்மிடம் ஏற்கனவே வித்தியாசம் உள்ளது, அப்படி இல்லாவிட்டால் நாம் அனைவரும் ஒரே மாதிரி இயங்கும் ரோபோவாகி விடுவோம் என்றும் கருதினேன். நாம் நமது வித்தியாசங்களை மகிழ்ச்சியோடு ஏற்க வேண்டும்.

யுவர் ஸ்டோரி: உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் என்ன?

கல்கி: நான் எப்போதுமே ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று சொல்வேன், ஆனால் எப்போதுமே அதிகமாக திட்டமிடக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன் ஏனெனில் வாழ்க்கை உங்களை நோக்கி எதை வீசும் என்று தெரியாது. ஆனால் நிச்சயம் ஒரு நாள் புத்தகம் எழுதத் தேவையான அனுபவம் எனக்குக் கிடைக்கும் என நான் நம்புகிறேன். நான் உலகிலேயே ஒரு மோசமான திட்டமிடுபவர், நாளையை தாண்டி என்னால் திட்டமிட முடியவில்லை. இந்த நிமிஷத்தை அனுபவித்து வாழ்வதோடு, இப்போது செய்து வரும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதே முக்கியம் என நான் கருதுகிறேன்

யுவர் ஸ்டோரி: இளம் தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன, அவர்கள் தவிர்க்க வேண்டிய தவறு என்ன?

கல்கி: தவறுகளை தவிர்க்க வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன், தயவு செய்து தவறு செய்யுங்கள். அப்போது தான் வாழ்க்கையை பற்றி நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் முடிவு உங்கள் சொந்த முடிவாக இருக்க வேண்டும். சமயம், குரு, புத்தகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் என நாம் எப்போதுமே மற்றவர்களிடம் இருந்து அறிவுரை கேட்கிறோம் – நாம் எப்போதுமே வெளியில் இருந்து அறிவுரையை பெற நினைக்கிறோம். ஆனால் முடிவில் உங்களைப் பற்றி உங்களை விட வேறு யாரும் நன்கு புரிந்து வைத்திருக்க முடியாது என்பதை உணர்வீர்கள். எனவே உங்களுக்கு உண்மையாக இருங்கள், எதையும் துணிவோடு எதிர்கொள்ளுங்கள், நீங்கள் செய்ய விரும்புவதை செய்யுங்கள்.

ஆங்கில கட்டுரையாளர்: Aditya Bhushan Dwivedi

தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்: Gajalakshmi Mahalingam

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags