பதிப்புகளில்

டியர் நெட்டிசன்ஸ், தரவுகளை காப்பது நம் கையிலும் இருக்கிறது...

25th Mar 2018
Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share

ஃபேஸ்புக் அன்லடிகா விவகாரத்தில் எல்லாத்தரப்பினரும் மார்க் ஜக்கர்பர்கை வறுத்தெடுக்கத் துவங்கி இருக்கின்றனர். நிச்சயமாக ஃபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்கிற்கு இது சோதனையான காலம் தான். பயனாளிகள் எண்ணிக்கை படி பார்த்தால், உலகின் மிகப்பெரிய நாடாக கருதக்கூடிய ஃபேஸ்புக், இணைய உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பயனாளிகள் தரவுகளை தவறாக பயன்படுத்த அனுமதித்த விவகாரத்தில் வசமாக சிக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

ஒரு பக்கம் வழக்கு, விசாரணை அச்சுறுத்தல் என்றால் இன்னொரு பக்கம் பிரைவசி வல்லுனர்கள் முதல் இணைய சாமானியர்கள் வரை, பயனாளிகள் தகவல்களை ஃபேஸ்புக் கையாளும் விதம் தொடர்பான கேள்விக்களை அள்ளிவீசி வருகின்றனர்.

image


சட்டப்படியும், தார்மீக நோக்கிலும் ஃபேஸ்புக் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தவறுகளை திருத்திக்கொண்டாக வேண்டும். ஏனெனில் ஃபேஸ்புக் சாம்ராஜ்யம், பயனாளிகளின் தரவுகள் அறுவையில் வளர்ந்திருக்கிறது. பயனாளிகள் வெளியிடும் நிலைத்தகவல்களையும், விருப்பங்களையும் இன்னும் பிற தகவல்களையும் திரட்டி, அவர்களுக்கான தனிப்பட்ட சித்திரத்தை வைத்துக்கொண்டு அவற்றுக்கு பொருத்தமான விளம்பரங்களை வெளியிட்டு வருவாயை ஃபேஸ்புக் அள்ளிக்குவித்து வருகிறது.

முகநூலின் இந்த தகவல் அறுவடை பற்றி பிரைவசி காவலர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர் என்றாலும், லைக்குகளிலும், ஷேர்களிலும் மட்டுமே மூழ்கியிருந்த நெட்டிசன்கள் இப்போது ஃபேஸ்புக் தங்களைப்பற்றி இந்த அளவு தகவல்களை திரட்டுகிறதா என திகைத்துப்போயிருக்கின்றனர். ஒருவிதத்தில், இந்த விழிப்புணர்வுக்காக ஃபேஸ்புக் அனல்டிகா விவகாரத்திற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

இந்த விவகாரத்திலேயே அலசி ஆராய்வதற்கும், கேள்வி கேட்பதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்றாலும், நெட்டிசன்களைப்பொருத்தவரை, இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. முதல் விஷயம், தரவுகள் அறுவடை என்பது ஏதோ ஃபேஸ்புக் மட்டும் செய்வதல்ல. அநேகமாக எல்லா இணைய நிறுவனங்களும் இதை செய்கின்றன. பேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்கள் அதிகமாக செய்கின்றன. அது மட்டும் அல்ல, ஃபேஸ்புக் பரவலாக பயன்படுத்தப்படும் இணைய மேடையாக இருப்பதால் அதன் மூலம் தவறான காய்களை நகர்த்தி தேர்தல் மற்றும் வாக்கெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பது தான் திடுக்கிட வைக்கும் விஷயம்.

ஃபேஸ்புக் போலவே குறும்பதிவு சேவையான டிவிட்டரும் பயனாளிகள் தகவல்களை சேகரிக்கிறது. நம்பர் ஒன் தேடியந்திரமான கூகுள் நீண்ட காலமாகவே இதை செய்து வருகிறது. இன்னும் பல நிறுவனங்கள் இதை செய்கின்றன. புதிது புதிதாக அறிமுகமாகி கொண்டிருக்கும் செயலிகள் இருப்பிடம் சார் தகவல் உள்ளிட்ட பலவிதமான தகவல்களை சேகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த தகவல்கள் பெரும்பாலும் விளம்பர நோக்கில் பயன்படுத்தப்படலாம். சேகரிக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப வில்லங்கமாகவும் பயன்படுத்தப்படலாம்.

விஷயம் என்னவெனில் இணையத்தில் அடியெடுத்து வைத்துவிட்டால் போதும், நமக்கு பிரைவசி என்று சொல்லப்படும் தனியுரிமை என்று எதுவும் கிடையாது. பல முனைகளில் இருந்து தகவல்கள் திரட்டி சேகரிக்கப்படுகின்றன. இ-காமர்ஸ் தளங்களில் ஷாப்பிங் செய்யும் போது நமது விருப்பத்தேர்வுகள் குறித்து வைக்கப்பட்டு அதற்கேற்ப அடுத்த முறை தள்ளுபடி அறிவிப்புகள் அளிக்கப்படுகின்றன. கூகுளில் ஒரு குறிப்பிட்ட சொல்லை தேடி விட்டு, பத்து நிமிடம் கழித்து ஃபேஸ்புக் பக்கம் சென்றால், அந்த சொல் தொடர்பான விளம்பரம் எட்டிப்பார்க்கிறது.

இணையத்தில் நாம் தொடர்ந்து டிராக் செய்யப்படுகிறோம். கண்ணுக்குத்தெரியாத நிழலாக அல்கோரிதம்கள் நம்மை கண்காணித்து குறிப்பெடுத்துக்கொண்டே இருக்கின்றன. நம்மைப்பற்றி நமக்கே தெரியாத பலவிஷயங்களை இணைய நிறுவனங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன. குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட தேர்வுகளை முன்வைப்பதற்காக இந்த தகவல்கள் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும், அதைவிட விளம்பர வருவாய் தான் இன்னும் முக்கியமான காரணம்.

இப்படி ஒவ்வொரு அடியும் டிராக் செய்யப்படுவது பிரைவசிக்கு வேட்டு வைத்திருப்பது இன்றைய தேதியில் இணையத்தின் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.

இந்த பிரச்சனைக்கு இணைய நிறுவனங்களை மட்டும் குற்றம் சொல்வதற்கில்லை. இணையவாசிகள் மீதும் தவறு இருக்கிறது. பெரும்பாலான நெட்டிசன்கள் தங்கள் தரவுகளின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஏன், எதற்கு என யோசிக்காமல், பகிர்வதிலேயே இன்பம் காண்கின்றனர். ஆனால், தாங்கள் பதிவு செய்யும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பலவிதமாக பயன்படுத்தப்படுவதை அறியாமல் இருக்கின்றன. அல்லது அறிந்தும் அலட்சியமாக இருக்கின்றனர்.

ஒரு காலத்தில் இணைய நிறுவனங்கள் இணையவாசிகளின் தகவல்களை திரட்ட படாதபாடு பட்டுக்கொண்டிருந்தன. பிரவுசரில் குக்கி மென்பொருள்கள் போன்றவற்றை எல்லாம் வைத்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இப்போதும் இந்த வழி தொடர்கிறது என்றாலும், நெட்டிசன்கள் மிகை பகிர்வு மூலம் இதை மிகவும் எளிதாக்கிவிட்டனர். ஃபேஸ்புக் விருப்பங்களை வைத்தே ஒருவரின் அரசியல் சார்பை எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். எந்த வகையான தளங்களுக்கு செல்கின்றனர் என்பதை வைத்தே அதிகம் பயணம் செய்யும் ரகத்தைச்சேர்தவர் என்பதி யூகித்து விடலாம். இவற்றை தான் இணைய நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

image


அது மட்டுமல்ல, கூகுள் மெயில் அல்லது ஃபேஸ்புக் நுழைவு வசதியை இன்னும் பல சேவைகளுக்கான நுழைவு வசதியாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் நம்முடைய இணைய தடங்களை இன்னும் பரவலாக பதிய வைத்து விடுகிறோம். இவ்வளவு ஏன் ஃபேஸ்புக், தனது உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பற்றிய தகவல்களை கூட சேகரிக்கும் ஆற்றல் பெற்றிப்பதாக கூறப்படுவது பற்றி உங்களுக்குத்தெரியுமா? ஆம், ஏதேனும் பக்கத்தில் ஃபேஸ்புக் வசதி மூலம் லைக் செய்தால் போதும், அந்நிறுவனம் அதன் பிறகு அவரது இணைய தடத்தை பின் தொடரத்துவங்கி விடுகிறது.

இப்படி எல்லாம் நடக்கும் போது நெட்டிசன்கள் எத்தனை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி இருக்கிறோமா என கேட்டுக்கொள்ள வேண்டும். நம்மில் எத்தனை பேர் புதிய சேவையை பயன்படுத்துவதற்கு முன், இணைய நிறுவனங்களின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை பொறுமையாக படித்துப்பார்த்திருக்கிறோம் சொல்லுங்கள். நிபந்தனைகள் என பார்த்ததுமே கடைசி கட்டத்திற்கு வந்து, ஏற்றுக்கொள்கிறேன் எனும் பட்டனை கிளிக் செய்து விடுகிறோம். விதிகள் மற்றும் நிபந்தனைகளை நம்மால் மாற்ற முடியாது என்றாலும், அதை படித்துப்பார்த்தால், நம்முடைய தகவல்கள் எந்த வகையில் எல்லாம் பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும் அல்லவா?

அதே போலவே, ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷனாக எட்டிப்பார்க்கும் புதிய செயலி அல்லது வைரலாகி கவனத்தை ஈருக்கும் செயலியை உடனே பயன்படுத்த துடிக்கிறோம். அந்த செயலியின் சேவைக்கு எந்த அவசியம் இல்லாவிட்டாலும் கூட, இருப்பிடம் சார்ந்த தகவல் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை அணுகுவதற்கு அனுமதி தேவை எனும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு உள்ளே நுழைகிறோம். அதன் பிறகு அந்த செயலி நமது இணைய நடவடிக்கைகள் சுதந்திரமாக வேவு பார்த்து தகவல்களை திரட்டிக்கொள்கிறது.

இணையத்தில் உலாவும் போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்களில் குக்கி மென்பொருள்களை செயலிழக்கச்செய்யும் வசதி இருக்கிறது என்பதை கூட அறியாதவர்களாக தான் இருக்கிறோம். கூகுள் போல பயனாளிகளின் தேடல் சுவடுகளை கண்காணித்து தகவல்களை சேமிக்கும் வழக்கம் இல்லாத டக்டக்கோ போன்ற மாற்று தேடியந்திரங்கள் பற்றி அதிகம் அறியாமல் இருக்கிறோம்.

நாம் நம் தகவல்களை பாதுகாப்பதில் அதிக அக்கரை இல்லாதவர்களாக இருக்கிறோம் என்பதே உண்மை. இந்த அறியாமையும், அலட்சியமுமே இணைய நிறுவங்களின் தகவல் அறுவடையை இன்னும் சுலபமாக்கி கொண்டிருக்கின்றன. இலவச சேவை வழங்குவதால் இணைய நிறுவனங்கள் பயனாளிகளை ஒரு பொருளாகவே கருதி செயல்படுகின்றன. ஆக, இணைய நிறுவனங்களை அதிலும் குறிப்பாக ஃபேஸ்புக் போன்ற மெகா நிறுவனங்களை பொறுப்புடன் நடந்து கொள்ள நிர்பந்திக்க வேண்டும் என்றால் நெட்டிசன்களாகிய நாம் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் இருப்பது அவசியம். 

நிறுவனங்களுக்கு நம் தரவுகளின் அருமை தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவற்றை தங்கமாக கருதி அறுவடை செய்கின்றன. நம் தகவல்களின் உரிமையை நாம் உணர்ந்து கொண்டால் அதை பாதுகாப்பதற்கான அவசியத்தையும் உணர்வோம். அந்த தேவையை ஃபேஸ்புக் அனல்டிகா ஏற்படுத்தி இருக்கிறது.

Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share
Report an issue
Authors

Related Tags