பதிப்புகளில்

'சீக்கிரம் அடிவாங்கி, சீக்கிரம் கத்துக்கோங்க'- கோவை ‘நூத்துக்கு முட்டை’ நிறுவனர்களின் சுவாரசிய கதை!

பொறியியல் பட்டதாரிகள் இருவர் இணைந்து நிர்வகிக்கும் ‘நூத்துக்கு முட்டை’ உணவகம்!

sneha belcin
27th Apr 2018
Add to
Shares
632
Comments
Share This
Add to
Shares
632
Comments
Share
“வீட்ல யாரும் ஃபோர்ஸ் பண்ணல, ஆனா எங்களுக்கு கொடுத்த ஆப்ஷன் எஞ்சினியரிங் தான்,” என பேசத் தொடங்குகிறார் ‘நூத்துக்கு முட்டை’ உணவகத்தின் இணை நிறுவனர் ஹரிஹரன் சோனைமுத்து.

கோவையில், எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்த நண்பர்கள் சிலரோடு இரண்டாம் ஆண்டு படிப்பின் போது, சேர்ந்து ஹாஸ்டலில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள் ஹரிஹரனும், குமரேஷும். தனியாக ரூம் எடுத்து தங்கியிருந்து, தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய பற்பல வேலைகள் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

“ஈவண்ட் மேனேஜ்மெண்ட் , கேட்டரிங் சர்வீஸ், ஹோர்டிங் ப்ரிண்ட் பண்றதுன்னு சின்ன சின்ன காண்டிராக்டுகள் எடுத்து பண்ணிட்டு இருந்தோம். நான் ஃபோட்டோகிராபி கத்துக்கிட்டு ஈவண்ட்ஸ், கல்யாணம்னு வொர்க் பண்ணேன்,” என்கிறார் ஹரிஹரன். வேலை என்று சொல்லும் போது அவை முழுநேர வேலைகளாகவோ, நிரந்தர வேலைகளாகவோ இருந்திருக்கவில்லை. மாறாக, பணத்தேவை உண்டாகும் சமயத்தில் மட்டுமே வேலை என்று இருந்துள்ளனர்.

எதாவது புதுசா பண்ணணுமேன்னு யோசிச்சிட்டு இருந்தோம். அப்போ ஒரு நாள் நைட்டு இரண்டு மணிக்கு வந்த ஐடியா தான் ‘முட்டை’. 

“பத்துல எட்டு பேரு முட்டை சாப்பிடுவாங்க. வெஜிடேரியனா இருந்துட்டு முட்டை மட்டுமே சாப்டுறவங்களும் இருக்காங்க. இந்த ஐடியாவை வச்சிட்டு வீட்ல இருந்து முட்டை வகை சமையல் ட்ரையல்ஸ் எல்லாம் பண்ணி பார்த்தோம். குமரேஷ் நல்லா சமைப்பான். அதனால், அவன் முட்டை ரெசிபி எல்லாம் பண்ண ஆரம்பிச்சான். நான் தினமும் ஒரு வகையான ஜூஸ் போடுவேன். அப்படி தான் தொடங்குனோம்...”
குமரேஷ் மற்றும் ஹரிஹரன்

குமரேஷ் மற்றும் ஹரிஹரன்


நண்பர்கள் முப்பது பேர் தனியா மூன்று ரூம்கள் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் பேச்சிலர்ஸ். இறுதியாண்டு படிப்பின் போது பொங்கல் கொண்டாட முடிவு செய்து, ’பேச்சிலர்ஸ் பொங்கல்’ என்றொரு நிகழ்வை நடத்தியுள்ளனர்.

கோவை குனியாமுத்தூரில் இருக்கும் ஒரு பார்க்கில் உள்ளூர் மக்களை வரவேற்று ‘பேச்சிலர்ஸ் பொங்கல்’ கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்வில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் ‘முட்டை மேஷ் அப்’ (mashup) என்றொரு பதார்த்தத்தையும், ‘ராக்கெட் ஃபூயல் ஸ்மூத்தி’ என்று ஒரு புதுவகையான மில்க் ஷேக்கையும் இலவச இணைப்பாக கொடுத்திருக்கிறார்கள். இதிலிருந்து கிடைத்த ரெஸ்பான்ஸ் தான் தாங்கள் மேலும் வளர ஊக்குவித்தது என்கிறார் ஹரிஷரன்.

முதலில் சின்னச் சின்ன ஸ்டால்கள் அமைத்து தங்களுடைய ஸ்டார்ட்-அப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள். ரோட்டராக்ட் க்ளப்பினால் கிடைத்த தொடர்புகளின் வழியே கல்லூரிகளில் நடக்கும் ஈவண்டுகளில் எல்லாம் ஸ்டால்கள் அமைத்து தங்களின் ப்ராண்டை பிரபலப்படுத்தியுள்ளனர்.

“தொடக்கத்தில் ஸ்டால்கள் போட எங்களோட வீட்டு வாடகையை தான் யூஸ் பண்ணோம். ஒரு ரூம்ல பத்து பேர் இருப்போம். ரெண்டு ரூமோட வாடகையை வச்சு தான் ஸ்டால் போட தேவையான பொருட்கள் எல்லாம் வாங்குனோம்,”

என்றவரிடம் வீட்டு ஓனர் வாடகை கேட்கவில்லையா? என்றதற்கு “அவர்கிட்ட நாங்க எல்லாரும் மும்பைக்கு இண்டர்ன்ஷிப்புக்காக போறோம்னு பொய் சொல்லிட்டு ஒரு இரண்டு மாசம் இப்படி பண்ணோம். அதுக்கப்புறம் ஸ்டால்ல இருந்து வந்த காசை எடுத்து வாடகை கொடுத்திட்டோம்,” என பதில் சொல்கிறார்.

சி.ஐ.டி, பி.எஸ்.ஜி போன்ற காலேஜ்களில் ஸ்டால் போட்டிருந்தனர். இவர்களுக்கு காலேஜ் ரெண்டு நாள் லீவ் அல்லது வேறெதாவது டைம் கெடச்சா, அந்த கேப்புல ஸ்டால் போட்டு விடுவார்கள். ஒரு பத்து ஸ்டால் போட்ட பிறகு அமிர்தா யூனிவர்சிட்டி கேம்ப்ல கலந்துக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொழில்முனைவோருக்கான பயிற்சியளிக்கும் அந்த நிகழ்வின் வழியே பல தொழில் முனைவோரின் தொடர்பு கிடைத்ததாக சொல்கிறார். யதார்த்தத்தில் ஒரு ஸ்டார்ட்-அப் தொடங்கும் போது என்ன மாதிரியான சிக்கல்கள் வரும் என அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை மிகவும் பயனளித்ததாக சொல்கிறார்.

“அந்த புரோக்ராம்ல இருக்கப்போ தான் முதல் ஷாப் தொடங்குறதுக்காக ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ்ல ட்ரை பண்ணோம்,” என்பவர் தொடர்ந்து அங்கு நடந்த வேடிக்கைகளையும் பகிர்கிறார். 

“எங்களை மொதல்ல உள்ளயே விடல்ல. அட்மிஷன்னு பொய் சொல்லி உள்ள போனோம். அப்புறம் ஒரு தடவை நாங்க முட்டை சப்ளை பண்ண வந்தோம்னு நினைச்சுட்டு ‘முட்டை எதாவது வேணும்னா சொல்லி அனுப்புறோம்’னு நிக்க வெச்சுட்டாங்க...” என்கிறார்.

இப்படி போய் கொண்டிருக்கும் போது, ஒரு நிலையில் பொறுமையிழந்து கல்லூரியின் அறங்காவலருக்கு வாட்ஸப்பில் ஒரு மெசேஜை அனுப்பியிருக்கிறார்கள். அந்த மெசேஜ் அவரை சென்றடைந்து, அவர் ஒரு அப்பாயின்மெண்ட் வாங்கி தருவாதாக சொன்ன அதே சமயத்தில் கல்லூரி நிர்வாகமே இவர்களை அழைத்து ஷாப் அமைப்பதற்கு கல்லூரியில் எந்த இடம் தோதானதாக இருக்கும் என முடிவு செய்து விட்டு வர வேண்டி கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்குக் கிடைத்த பெரிய பச்சை சிக்னலாக அது இருந்திருக்கிறது.

இப்படித் தான் ‘நூத்துக்கு முட்டை’ பிறந்திருக்கிறது. இப்படி ஒரு சுவாரசியமான பெயரை வைத்ததற்கு காரணம் கேட்ட போது, 

“நான் ஒரு பிலோ-ஆவரேஜ் ஸ்டூடண்ட். அதனால் நிறைய வாய்ப்புகளை நான் இழந்திருக்கேன். நூத்துக்கு முட்டைன்னு பேர் வைக்க இதுவும் ஒரு காரணம் தான். இது நம்ம வாங்குற மார்க் தானே? இதையே பெருமையா சொல்லிக்கணும். மார்க் ஒரு மேட்டரே இல்ல. முட்டை வாங்குனாலும் நம்ம வாழ்க்கை நம்ம செய்யுற வேலைய பொறுத்து தான் இருக்குனு சொல்றதுக்காக அப்படி வச்சோம். லோகோ பார்த்தாலே தெரியும், டீச்சர் அப்படியே நூத்துக்கு முட்டை போடுற மாதிரி இருக்கும்...” என விளையாட்டாய் சொல்கிறார்.
image


இவர்கள் சமைக்கும் ரெசிபிக்கள் பெரும்பாலானவை சொந்த படைப்பாக இருந்தாலும், சில உணவுகள் பாரம்பரிய முறையிலேயே செய்யப்படுகிறது. நூத்துக்கு முட்டை கடைகளில் ‘எக் ரோல்களும்’, ‘சிக்கன் ஆம்லெட்டும்’, ‘பாடி பில்டர் ஆம்லெட்டும்’ பிரபலமானவையாக இருக்கிறது. கூடவே, நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட ‘நட்பு ஆம்லெட்’ என்றொரு ஸ்பெஷல் ரெசிபியும் இருக்கிறது. 

“சிக்கன் ஆம்லெட்டை எல்லாம் யாருமே முப்பது ரூபாய்க்கு இங்க விக்கறது இல்லனு தான் நெனைக்குறேன்,” என்கிறார்.

மில்க் ஷேக்குகளில் முப்பது வகைகள் அளிக்கிறார்கள். மில்க் ஷேக்கிற்கென தனி பிராண்ட் உருவாக்குவது தொடர்பாக முதலில் பெரிதாக யோசித்திருக்கவில்லை என்றாலும், ஒருவேளை பிற்காலத்தில் மில்க்‌ஷேக்குகள் மட்டுமே வேண்டும் எனும் தேவையோடு யாராவது அணுகினால் அதை ஒரு தனி பிராண்ட் ஆக்க வேண்டும் என ‘ஷேக் ஸ்டுடியோ’ தொடங்கப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணா காலேஜில் கடை அமைக்க வீட்டிலிருந்து தலா ஒரு லட்ச ரூபாய் வாங்கி இருக்கிறார்கள் ஹரிஹரனும் குமரேசும். ஆனால், ‘நூத்துக்கு முட்டை’யின் முதல் கடையை தொடங்க ஐந்து லட்ச ரூபாய் செலவாகியிருக்கிறது. 

“ஸ்டால்கள் போட்டதனால கிடைத்த காண்டாக்டுகளை வைத்து, ஷெட் போடுறது மாதிரியான வேலைகள் எல்லாத்தையும் கடனுக்கு கேட்டு செஞ்சு முடிச்சிட்டோம். அப்புறம் வர்ற காசில இருந்து கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்தோம்,” என்கிறார்.

2016 ஆகஸ்டில் தொடங்கப்பட்ட ‘நூத்துக்கு முட்டை’யின் முதல் கடை வளர்ச்சிப் பாதையில் செல்லவே, அடுத்த எட்டு மாதத்தில் மேலும் இரண்டு கிளைகள் அதே கேம்பஸில் தொடங்கப் பட்டிருக்கின்றன. ஹரிஹரனும், குமரேஷும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நூத்துக்கு முட்டை கடையில் வேலை செய்பவர்கள் யாருமே அனுபவஸ்தர்கள் இல்லை; வேலையில் சேர்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பும் நிறுவனர்களுக்கு தான் இருக்கிறது.

“கடை தொடங்குன போது எங்களுக்கு சப்போர்ட்டா இருந்தது காலேஜ் ஃபிரெண்ட்ஸ் தான். அவங்களோட வேலைக்குக் கூட போகாம, நாங்க வேலைக்கு ஆள் வைக்குற வரை எங்க கூடவே இருந்து எல்லா வேலையும் பார்த்துக்கிட்டாங்க. எல்லாமே சின்ன சின்னதா டெவலப் பண்ண விஷயங்கள் தான். ஸ்டால்ஸ் போடுறப்போ எல்லாம் எங்களுக்கு பெரிசா எதுவும் தெரியாது. ஆனா, ரெண்டு விஷயம் உறுதியா தெரியும் - 

”நல்ல ஃபுட் கொடுத்தா ஸ்டூடன்ஸ் வாங்குவாங்க. இந்த விலைல கொடுத்தா வாங்குவாங்க. இப்படி ஒரு வேவ்லெங்க்த்ல நல்லா போயிட்டு இருக்கு. தினமும் காலேஜ் போற மாதிரியே கிளம்பி போயிட்டு வந்துட்டு இருக்கோம்”. 
image


‘நூத்துக்கு முட்டை’ சந்திக்கும் பெரிய சவால் என்னவென்று கேட்ட போது?

“தரம் மாறாமல் உணவை கொடுப்பது தான் சவாலான விஷயம். நாங்க ஷாப்ல இருந்தோம்னா எங்களால ஒரு ரெசிபிய 100% கொடுக்க முடியும். அதே போல எப்பவும் 100% கொடுக்குறது தான் பெரிய சவால்,” என்கிறார்.

இளம் தொழில் முனைவோருக்கு ‘நூத்துக்கு முட்டை’ குழுவினர் சொல்லும் அறிவுரையாக இருப்பது, 

“சீக்கிரமே ஸ்டார்ட் பண்ணிட்டா நல்லது. ஏன்னா சீக்கிரமே அடிவாங்கி சீக்கிரமே கத்துக்கலாம். படிச்சு முடிச்சு எங்கயாவது போயி யாருக்காவது வேலை செய்றதை விட, உங்களுக்கே வேலை செய்யத் தொடங்குனா கொஞ்ச நாள்ல உங்களுக்கு கீழ வேலை செய்ய ஆட்கள் இருப்பாங்க,” என்கிறார்.

சமீபத்தில், மேலும் இரண்டு கிளைகள் தொடங்க எண்பது சதவிகிதம் வேலைகள் நடந்து முடிந்த நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், வரும் காலங்களில் நிச்சயமாக தங்களுடைய ஸ்டார்ட்-அப் கிளைப்பரப்பும் எனும் நம்பிக்கை ‘நூத்துக்கு முட்டை’ குழுவினரிடம் நூறு சதவீதம் காணப்பட்டது.

Add to
Shares
632
Comments
Share This
Add to
Shares
632
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக