8 கதைகளும் ஹிட்டு ரகசியங்களும்: கால்நடைத் தீவனம் முதல் அழகுப் பொருட்கள் வரை!

வெவ்வேறு தொழில்களில் வெவ்வேறு தளங்களில் வெற்றிக்கொடி நாட்டியவர்களின் அசாத்திய பின்னணியுடன், அவர்களின் வெற்றி ரகசியங்களை அடுக்கும் தொகுப்பு இது...

16th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

தொழிலில் வெற்றி என்பது ஓர் இரவில் சாத்தியமில்லைதான். ஆனால், அந்த ஓர் இரவில் உதிக்கும் யோசனையில் வெற்றிக்கு வித்திடப்படலாம்.


வெற்றியாளர்களின் வித்தைகளின் இஸ்பையர் ஆகி, நமது வெற்றிக்கும் வலுசேர்க்க முடியும். அந்த அடிப்படையில், வெவ்வேறு தொழில்களில் வெவ்வேறு தளங்களில் வெற்றிக்கொடி நாட்டியவர்களின் அசாத்திய பின்னணியுடன், அவர்களின் வெற்றி ரகசியங்களை அடுக்கும் தொகுப்பு இது...

main

எங்கும் எதிலும் அப்டேட்!

"எங்கள் போட்டியாளர்களை சமாளிப்பதற்காக நாங்கள் எப்பொழுதும் அவர்களின் வியாபார வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அதற்கு மாறாக, தனிச்சிறப்பும் தனித்தன்மையும் வாய்ந்த தயாரிப்புகளை வழங்கி வெற்றி கண்டு வருகிறோம்," - தொழிலதிபர் ராமமூர்த்தி கூறும் வெற்றி ஃபார்முலா இது.
1

தாத்தா சிறிய அளவில் தொடங்கிய கால்நடைத் தீவன ஆலையை இன்று தனது அப்பாவோடு இணைந்து மிகப்பெறிய ஆலையாக வளர்த்து, ஆண்டுக்கு ரூ.90 கோடி விற்று முதல் காண்கின்றார் ஈரோடு ராமமூர்த்தி.


மெத்தப் படித்துவிட்டு, வெளிநாட்டுக்காரனுக்குக் கீழ் பணிபுரிந்து லட்சங்களில் சம்பாதிக்க ஆசைப்படும் பலர் மத்தியில், மேனேஜ்மெண்ட் படிப்பை படித்துவிட்டு கால்நடைத் தொழிலில் தன்னை இணைத்துக்கொண்டு, இன்று நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறையிலிருக்கும் இவர், அந்த நிறுவனத்தை உச்சாணிக்கொம்பில் கொண்டு நிறுத்தி இருக்கிறார் என்றால் அவரின் உழைப்பை பாராட்டாமல் இருக்கமுடியுமா?


ஈரோட்டைச் சேர்ந்த கணபதி செட்டியார் 1979ல் தமிழ்நாட்டில் முதன்முதலில் சிறிய ஆலையாகத் தொடங்கியதே 'R.G.Sundar & Co'. இந்நிறுவனம் 'காமதேனு' என்ற ப்ராண்ட் பெயரில் மாட்டுத்தீவனம் தயாரித்து வந்தது. அவரின் மகன் சுந்தர் அதை செவ்வனே எடுத்து நடத்த, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ராமமூர்த்தியும் தனது குடும்பத் தொழிலில் சேர்ந்த பின், இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் மாட்டுத்தீவன விற்பனையில் முன்னணி ப்ராண்டாக விளங்குகிறார்கள்.


முழுமையான வெற்றிக் கதை இங்கே: படித்தது எம்.பி.ஏ., செய்வது மாட்டுத் தீவனம் தயாரிப்பு...

வியத்தகு வியாபார உத்தி!

"ஒரு பிசினஸை லாபகரமாக நடத்துவதுதான் வெற்றி. நல்ல மதிப்பீடுகளை மட்டுமே குறிவைப்பது வெற்றி ஆகாது. பிசினஸ் லாபகரமாக நடக்கும்போது நல்ல மதிப்பீடு தானாக வந்துசேரும்," -'வொர்க்கஃபெல்லா' நிறுவனர் குர்பிந்தர் ராட்டா பின்பற்றும் வெற்றி மந்திரம் இது.
2

30 வருடத்திற்கும் மேலாக ராட்டா குழுமத்தில், உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, விருந்தோம்பல், கோ-வர்கிங், ஆரோக்கியம் ஆகிய துறைகளில் அனுபவம் பெற்றவர் குர்பிந்தர். தற்போது அந்த அனுபவம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் பற்றிய தனது புரிதல் ஆகியவற்றை கொண்டு 'Workafella'-வை லாபகரமான ஒரு வியாபாரமாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்படுகிறார்.


2016-ல் குர்பிந்தர் ராட்டா துவங்கிய 'Workafella' நிறுவனம் மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் கோ-வர்கிங் பணியிடங்களை வழங்கி வருவதோடு, தனது விரிவாக்கத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.


24/7 இயங்கக்கூடிய கூட்டு பணி இடங்களை வாடகைக்குத் தரும் இந்த நிறுவனம் பெரும்பாலும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. மூன்றே வருடத்தில், 9000த்திற்கும் மேலான கூட்டு பணிஇடங்களை உருவாக்கி, தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ளது இந்த சென்னை நிறுவனத்தின் வெற்றிக் கதை வியக்கத்தக்கது.


முழுமையான வெற்றிக் கதை இங்கே: 3 வருடத்தில், 9000 கூட்டுப் பணிஇடங்களை உருவாக்கி, முத்திரை பதித்துள்ள சென்னை நிறுவனம்!

அசரவைத்த யோசனை!

"நான் பிசினஸ் செய்யத் தொடங்கியபோது எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், நான் தைரியமாகத் தொடங்கினேன். கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்." - தைரியமும் கடின உழைப்பும்தான் ராக்கியின் முதன்மையான மூலதனம்.
3

2018-2019ல் மட்டுமே இவரின் வருமானம் ரூ.3.4 கோடியை தொட்டுவிட்டது. வரும் நிதி ஆண்டு 4.5 கோடி ரூபாயை பதிவு செய்யமுடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் ராக்கி.


வால்மார்டின் கீழ் இயங்கும் ஃப்ளிப்கார்ட், ஜபாங் மற்றும் மிந்த்ராவிற்கு ராக்கி கேரா கர்ப்பகால உடைகள் மற்றும் மேற்கத்திய உடைகளின் முக்கியமான சப்ளையர். வால்மார்டின் பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் (WEDP) மூலம் 2019ல் ரூ.3.4 கோடி வருமானம் சம்பாதித்துள்ளார்.


43 வயது ஆகும் ராக்கி கேரா, மத்திய பிரதேசத்தில் உள்ள அசோக் நகர் என்கிற ஒரு சிறிய நகரில் வளர்ந்தவர். சிறு வயது முதலே நவநாகரிக ஆடைகள் வடிவமைக்க வேண்டும் என்கிற ஆசைக் கொண்டவர். வழக்கத்திற்கு மாறான ஒரு வாழ்க்கையாக அது இருந்ததால் அவரின் குடும்பம் அதை மறுத்தது. அதனால் அவர் வர்த்தகம் படித்தார்.


2013ஆம் ஆண்டு வரை தனது இரண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு ராக்கி இல்லத்தரசியாக மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் ஆடை வடிவமைக்கும் ஆசை விடாமல் மறுபடியும் தலைத் தூக்க அவரது கணவரின் ஆதரவுடன் பிரசவகால ஆடைகள் வடிவமைக்க ஆரம்பித்தார். அசாத்திய முயற்சியால் அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்தினார்.


முழுமையான வெற்றிக் கதை இங்கே: பிரசவக் காலத்தில் பிரசவித்த யோசனை- கோடிகளைக் குவிக்கும் இல்லத்தரசி!

வழக்கத்திற்கு மாறான தனி வழி!

"வெற்றிக்கான வழிகள் பல உண்டு. அதில், வழக்கமான விஷயங்களை வழக்கத்திற்கு மாறாக செய்து வெல்வதும் ஒன்று." - 'மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்' நிறுவனத்தை வளர்த்தெடுத்த அஹமத் தேர்வு செய்த வெற்றிப் பாதை இது.


4

அந்நாட்களில் நகைகள் என்றால், எந்தவித கட்டுப்பாடும் இல்லை, எந்த வித தணிக்கை முறையும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சந்தையை தெளிவாக ஆய்வு செய்து, அதன் நுணுக்கங்கள் என்ன என்று அறிந்த பிறகு, தனது சொந்த ஊரான மலபாரை முன்னிறுத்தி தங்க ஆபரணத் துறையில் தொழில் துவங்க முடிவெடுத்தார் அஹமத். ஆனால், முதல் சவாலாக தொழில் துவங்கத் தேவையான முதலீடு வந்து நின்றது.


1993 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் 400 சதுரஅடியில் துவங்கியது இந்நிறுவனம். முதலில் தங்கக்கட்டிகளை வாங்கி, அதைத் தங்கள் ஆசாரியிடம் கொடுத்து நகைகளை செய்யச் சொன்னார். அந்த நகையின் வடிவம் மக்களுக்கு பிடித்துப்போனது. இதனால் மிகவிரைவிலேயே மலபார் கோல்ட்ஸ் & டைமண்ட்ஸ் கேரளாவில் மேலும் இரு ஊர்களில் தங்கள் கடைகளைத் திறந்தது.


1995ல் வணிகம் சரியான வேகத்தில் செல்வதைப் பார்த்த எம்பி அஹமத், 400 சதுர அடி கடையை மூடிவிட்டு 4000 சதுர அடியில் புதிய கடை ஒன்றை திறந்தார்... இப்படியாக, நறுமணப் பொருட்கள் விற்று வந்த எம்பி அஹமத், 27000 கோடி ரூபாய் மதிப்புள்ள மலபார் கோல்ட் நிறுவனத்தை நிறுவிய கதை மலைக்கத்தக்கது.


முழுமையான வெற்றிக் கதை இங்கே: தெரிந்த நிறுவனம் தெரியாத கதை: 'மலபார் கோல்ட்ஸ் & டைமண்ட்ஸ்'

மெய்ப்படும் கனவுகள்!

"தரமான பொருள்களை குறைந்த விலையில் விற்பதன் மூலம் தன்னுடன் போட்டியிடும் மற்ற நிறுவனங்களிடம் இருந்து தனித்து இருக்க முடியும்," - தொழில் மணக்க, கான்திலால் பர்மர் கூறும் வெற்றி மந்திரம் இது.
5

'சாமுண்டி அகர்பத்திகள்' 2010ல் 1200 சதுர அடியில் துவங்கப்பட்டு, இன்று 20 கோடி வருவாயில், பல வெளிநாடுகளுக்கு ஊதுவத்திகள் ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.


2009ல் சொந்த சேமிப்பை முதலீட்டாக போட்டு, தங்கள் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி, கான்திலால் 1200 சதுர அடியில் 15 லட்சத்தில் ஊதுவத்தி தயாரிக்கும் நிறுவனத்தை 15 ஊழியர்கள் கொண்டு முதலில் சிறிய அளவில் துவங்கினர். சாமுண்டி அகர்பத்தி நிறுவனத்தை கான்திலால் எம்.எஸ்.எம்.ஈ. திட்டத்தின் கீழ் 2012ல் பதிவு செய்தார். முன்றாவது ஆண்டில் ஊதுவத்தி தயாரிப்புகளில் முதல் இடம் பிடித்த சாமுண்டி அகர்பத்திகள் இன்று ஆண்டுக்கு 20 கோடி வருவாய் பதிவு செய்கிறது.


கான்திலால் தொடர்ந்து பெரிய கனவுகள் காண்கிறார். அந்தக் கனவுகளை நிச்சயம் சாத்தியமாக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது அவர் கடந்து வந்த பாதை.


முழுமையான வெற்றிக் கதை இங்கே: ஜலோர் கிராமத்தில் தொடங்கி, இன்று 20 கோடி ரூபாய் வருவாய் காணும் ஊதுவத்தி நிறுவனத்தின் கதை!

மீண்டெழுதல் எளிதல்ல!

"ஒரு வியாபாரத்தை நடத்த பொது அறிவு முக்கியமானதாகும். உங்கள் மூலதனத்தை, பணத்தை புத்திசாலித்தனமாக லாபம், வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்கு எரிபொருளாகப் பயன்படுத்தவேண்டும்," - மனீஷ் கூறும் இன்றைய தலைமுறை வெற்றி மந்திரம் இது.
6

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அரவிந்த் சொக்கே, அஸ்வின் சொக்கே, மனிஷ் சவுத்ரி மற்றும் கரண் சவுத்ரி ஆகியோர் மிகக் குறைந்த முதலீட்டில் தோல் பராமரிப்பு குறித்த துறையில் பெரிய அளவில் வளரவேண்டும் என்ற கனவுடன் தொழில் தொடங்கினர்.


பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து 2019ல் அவர்களின் ‘வாவ் பிராண்ட்’ உலகளவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இவர்களின் 'ஃபிட் அண்ட் க்ளோ' 'Fit and Glow' நிறுவனம் ரூ.350 கோடிக்கு வணிகம் புரிந்து தொழில் துறையில் புதிய தடம் பதித்துள்ளது.


ஒரு சிறிய ஆஃப்லைன் இருப்பைக் கொண்டு இணையவழி மூலமாகவே ஓர் உலகளாவிய வணிகத்தை உருவாக்க முடிந்துள்ளதே இந்நிறுவனத்தின் மிகப் பெரிய சாதனையாகும். மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், விற்கப்படாத சரக்கு மற்றும் இணையவழி வணிகங்களில் தள்ளுபடிகள் அதிகரித்ததன் காரணமாக 1 மில்லியன் டாலர் இழப்பைக் கண்டது. கிட்டத்தட்ட திவாலாகிவிட்ட நிலையிலேயே நிறுவனம் செயல்பட்டது. ஆனால், விரைந்து மீண்டெழுந்தது.


முழுமையான வெற்றிக் கதை இங்கே: அழகுப் பொருட்கள் விற்பனையில் ரூ.350 கோடி வருவாய் ஈட்டும் 'வாவ்' பிராண்ட்

கூட்டு உழைப்புக்கு மதிப்பு!

"தொழிலில் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும். தொழிலில் கூட்டு உழைப்பிற்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்," - நித்தேஷின் தொழில் முனைவு வெற்றி ரகசியம் இது.
7

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நித்தேஷ், குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார். தனது 19 வயதில் சிக்கன்காரி என்ற எம்பிராய்ட்ரி தொழிலை எடுத்து செய்ய ஆரம்பித்தார். முறையான முதலீடுகள் இன்றி, 2005ம் ஆண்டு இந்தத் தொழிலை தொடங்கிய இவர், முதலில் உள்ளூர் வியாபாரிகளிடம் கடனுக்கு சிக்கன்காரி வேலைப்பாடுடன் கூடிய உடைகளை வாங்கி, அதனை மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார். அதன் மூலம் தனக்குக் கிடைத்த அனுபவம் மற்றும் முதலீட்டைக் கொண்டு 'திரிவேணி சிக்கன்காரி ஆர்ட்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.


அப்போது அவரது சிக்கன்காரி எம்பிராய்டரி ஆடைகளுக்கு சிங்கப்பூரில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது, அங்கிருந்து நிறைய பேர் இவருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு சிக்கன்காரி உடைகளைக் கேட்க ஆரம்பித்தனர். இதனை ஏன் ஏற்றுமதி தொழிலாக மாற்றிக் கொள்ளக் கூடாது என முடிவு செய்தார் நித்தேஷ்.


13 ஆயிரம் முதலீட்டில் தொடங்கப்பட்ட தனது நிறுவனம் தற்போது ஆண்டிற்கு 3 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாக பெருமிதத்துடன் கூறுகிறார் நித்தேஷ். மேலும் தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரைச் சேர்ந்து, தற்போது இந்த நிறுவனத்தில் 15 பேர் பணிபுரிவதாகவும், 200 பெண்கள் உட்பட பலர் இதன் மூலம் மறைமுக வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்.


முழுமையான வெற்றிக் கதை இங்கே: பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட இவர், இன்று ரூ.3 கோடி ஈட்டும் வெற்றி தொழில் முனைவர் ஆன ரகசியம்!

காத்திருக்காதீர்... செயல்படுவீர்!

"நீங்கள் வெற்றி நோக்கிச் செல்ல காத்திருக்க வேண்டாம். எல்லா நேரமும் நல்ல நேரமே, உங்கள் கனவைத் தொடர மட்டும் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்கவேண்டும்," - சினு தனது வெற்றிப் பயணம் குறித்த விவரித்தது இது.
8

குடும்பப் பிரச்னையால் மும்பையில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சினு கலாவுக்கு அப்போது 15 வயது. ஏதோ ஓர் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்ட அந்த சிறுமிக்கு எதிரே ஒரு இருண்ட, நிச்சயமற்ற எதிர்காலம் நின்று கொண்டிருந்தது. ஆனால் அவள் அதைக் கண்டு அச்சமடைந்து விடவில்லை. வீடுவீடாகச் சென்று கத்திகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினார் சினு.


அன்று தொடங்கிய அவரின் வியாபாரப் போராட்டம், இன்று வரை தொடர்ந்து அவரை ஓர் வெற்றியாளராக மாற்றியுள்ளது. ஆம் அன்று நாளொன்றுக்கு ரூ.20 சம்பாதிக்கப் போராடிய அவரின் இன்றைய ஆண்டு வருமானம் ரூ.7.5 கோடி ஆகும்.


முழுமையான வெற்றிக் கதை இங்கே: ஒரு நாளைக்கு ரூ.20 சம்பாதித்த இளம் பெண்ணின் இன்றைய ஆண்டு வருமானம் 7.5 கோடி...


தொகுப்பு: ப்ரியன்

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close