4 மகன்களுடன் போப்பை சந்தித்த Elon Musk: மஸ்க்கின் குடும்பம் எவ்வளவு பெரிசு தெரியுமா?
233 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை சினிமாவை மிஞ்சிவிடும் காதல் கதைகளைக் கொண்டது. 2 மனைவிகள், 3 காதலிகள், அவர்கள் மூலம் பிறந்த 7 குழந்தைகள் என மிகப்பெரிய குடும்பத்தை உடையவர் எலான் மஸ்க்.
Elon Musk - இவரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுமார் 233 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் என்ற அடையாளங்களைத் தாண்டி, அடிக்கடி தன் பேச்சு மற்றும் செயலால் சர்ச்சைகளில் சிக்குபவர் எலான் மஸ்க்.
உலகை புரட்டிப்போடும் பல தொழில்நுட்பத்தையும், நிறுவனத்தையும் உருவாக்கியவர் என பொதுவாழ்க்கையில் பலரால் பாராட்டப்படுபவராக திகழும் எலான் மஸ்க்கின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையும், பொதுவாழ்க்கை மாதிரியே ஏற்ற, இறக்கங்கங்கள் கொண்டது.
முறைப்படி மூன்று திருமணங்கள், காதலியுடன் லிவிங் டூகெதர், 51 வயதில் 27 வயது காதலி, இவர்களுக்குப் பிறந்த ஏழு குழந்தைகள் என எலான் மஸ்க்கின் குடும்பம் ரொம்பவே பெரியது. காதல் மன்னனாக வலம் வரும் எலான் மஸ்க்கிற்கு, எதிர்காலத்தில் மேலும் பல குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் ஐடியாவில் இருப்பதாக அவரே பல பேட்டிகளில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
உலக மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறப்பட்டாலும், எலான் மஸ்க் இதை ஏற்கவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் மேற்கத்திய மக்கள்தொகை விகிதங்கள் குறைந்து வருவதாக அடிக்கடி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தரவுகளை மேற்கோள் காட்டி பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதனாலேயே அதிக குழந்தைகளைப் பெற்று, நாட்டின் மக்கள்தொகையைப் பெருக்க விரும்புவதாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தனது மனைவிகளைப் பிரிவதற்கு அவர் பல்வேறு காரணங்களைக் கூறினாலும், குழந்தைகள் வளர்ப்பில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார் எலான் மஸ்க்.
இதோ அவரது குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்...
முதல் மனைவி
1971ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி பிறந்தவரான எலான் மஸ்க், தனது 29வது வயதில், அதாவது 2000ம் ஆண்டு தொழில்நுட்ப வல்லுநரும், எழுத்தாளருமான ஜெனிஃபர் ஜஸ்டின் வில்சன் என்பவரைத் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு 2002ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது.
’நிவாடா’ எனப் பெயரிப்பட்ட அக்குழந்தை, பிறந்து பத்து வாரங்களே ஆன நிலையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஐவிஎப் முறையில் மீண்டும் ஜஸ்டின் வில்சன் கர்ப்பமானார். அப்போது அவருக்கு இரட்டைக் குழந்தைகளும், அதற்கு அடுத்த கர்ப்பத்தில் 2006ம் ஆண்டு மூன்று குழந்தைகளும் பிறந்தனர். அவர்களுக்கு சேவியர் அலெக்சாண்டர், கிரிஃபின், காய், சாக்சன் மற்றும் டாமியன் என எலான் மஸ்க் பெயரிட்டார்.
இவர்களில் அலெக்சாண்டர் ஆண் குழந்தையாக பிறந்திருந்தாலும் , தன்னை ஒரு பெண்ணாகவே அடையாளப்படுத்த விரும்பினார். சமீபத்தில் தனது 18 வயதை அடைந்த இவர், தனது பாலினத்தையும், பெயரையும் மாற்றிக் கொண்டார். தனது கோடீஸ்வர தந்தையின் அடையாளமே தன் பெயரிலும்கூட இருக்கக்கூடாது எனக் கூறி, விவியன் ஜென்னா வில்சன் எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டார் இவர்.
8 ஆண்டுகள் ஜஸ்டின் வில்சனோடு சேர்ந்து வாழ்ந்த எலான் மஸ்க், 2008ம் ஆண்டு அவரைப் பிரிந்தார். அதன்பின், ஜஸ்டின் அவருடைய முதல் கணவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டார்.
பிரிட்டிஷ் நடிகை
ஜஸ்டினைப் பிரிந்த ஒரு வருடத்திலேயே பிரிட்டிஷ் நடிகை தாலுலா ரிலேயுடன் காதல் வசப்பட்டார் எலான் மஸ்க். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து ஆறு வாரங்கள் கழித்து தான் தன்னுடைய முதல் மனைவி ஜஸ்டினை பிரிய முடிவு செய்து விவாகத்துக்கு அப்ளை செய்தார் எலான் மஸ்க்.
2010-ல் தாலுலாவை திருமணம் செய்து கொண்ட எலான் மஸ்க், நான்கு ஆண்டுகள் கழித்து ரிலேவையும் விவாகரத்து செய்தார். ஆனால் வேடிக்கை என்னவென்றால், விவாகரத்து செய்து சில மாதங்களிலேயே மீண்டும் இந்த ஜோடி காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டு, இணைந்து வாழ ஆரம்பித்தது. மறுபடியும் ஒரு ஆண்டில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட, இரண்டாவது முறையாக விவாகரத்தும் செய்து கொண்டனர்.
மீண்டும் காதல்
மூன்று திருமணம், மூன்று விவாகரத்திற்குப் பின், “அக்வாமேன்” பட நாயகி ஆம்பர் ஹெர்ட்டுடன் காதலில் விழுந்தார் எலான் மஸ்க். அவுட்டிங், டேட்டிங் என ஜாலியாக இருந்த இந்த ஜோடி, ஓராண்டிற்குப் பிறகு பிரிந்தது.
“ஆம்பரை பிரிந்தது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஏனெனில் அவர் என்னை உண்மையாகவே மிக அதிகமாக நேசித்தார். இன்னும் காதலித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இருவரின் எதிர்காலத் திட்டங்களை மனதில் கொண்டு தான் நாங்கள் பிரிய முடிவெடுத்தோம்,” என இந்தப் பிரிவு குறித்து அப்போது அளித்த பேட்டியொன்றில் உருக்கமாகக் கூறியிருந்தார் எலான் மஸ்க்.
பாடகி கிரிம்ஸ்
அடுத்ததாக, தன்னை விட 17 வயது இளையவரான பிரபல பாடகி கிரிம்ஸுடன் காதல் வயப்பட்டார் மஸ்க். 2018ம் ஆண்டு இருவரும் மெட் காலா நிகழ்ச்சியில் சிவப்புக் கம்பள வரவேற்பில் இணைந்து பங்கேற்றனர். முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு, அடுத்த ஒரு மாதத்தில் இருவரும் டேட்டிங் செல்ல ஆரம்பித்தனர். டிவிட்டரிலேயே வெளிப்படையாகக் காதல் புரிந்தனர் இருவரும்.
2018ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழத் தொடங்கிய அவர்களுக்கு, 2020ல் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வித்தியாசமாக
X Æ A-12 என்று பெயர் வைத்து இணையத்தை அதிர வைத்தார் எலான். இதென்ன பெயர்? எப்படிக் கூப்பிடுவார்கள் அந்தக் குழந்தையை என இணையமே குழம்பிக் கொண்டிருக்க, அதற்கு அழகான விளக்கம் தந்தார் மிஸஸ்.கிரிம்ஸ் மஸ்க்.
என்னதான் விளக்கம் கூறினாலும், இந்தப் பெயரை எலான் மஸ்க் வாழும் கலிபோர்னியாவில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, மகனுக்கு X AE A-XII எனப் பெயரை மாற்றினார் எலான் மஸ்க்.
முதல் குழந்தையைப் பிரசவித்தபோது ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால், எலான் மஸ்க்கின் இரண்டாவது குழந்தையை, கடந்தாண்டு டிசம்பரில் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தார் கிரிம்ஸ். இந்தக் குழந்தைக்கும், மூத்த மகனைப் போலவே வித்தியாசமான பெயரைச் சூட்டியது எலான் மஸ்க் -கிரிம்ஸ் ஜோடி.
எக்ஸா டார்க் சைட்ரேல் மஸ்க் (Exa Dark Sideræl Musk) எனப் பெயரிட்ட தங்கள் மகளை, ஒய் (Y) என்று அழைப்பதாக அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இந்தப் பெயருக்கும் கிரிம்ஸ் விளக்கம் கூற மறக்கவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி, கடந்த மார்ச்சில் பிரிந்தது. தங்களது பிரிவை அதிகாரப்பூர்வமாக டிவிட்டர் மூலம் இருவரும் அறிவித்தனர். காதல் மொழி பேசி, உலகிற்கே தங்களது காதலை வெளிப்படுத்திய டிவிட்டர் தளத்திலேயே ஒருவரையொருவர் அன் ஃபாலோ செய்து, தங்களது பிரிவையும் வெளிப்படுத்தினர்.
இந்தப் பிரிவிற்குப் பிறகு, எலான் மஸ்க்கின் பெயர் 27 வயது ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பாசெட்வுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களாக இருவரும் டேட்டிங் செய்தாகவும், ஒன்றாக அதிக நேரத்தை செலவிடுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக நடாஷாவை மூன்றாவது மனைவியாக எலான் மஸ்க் திருமணம் செய்து கொள்வாரா அல்லது கிரிம்ஸ் மாதிரியே லிவிங் டுகெதர் முறையில் வாழ்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பொறுப்பான தந்தை
என்னதான் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டாலும், மனைவிகள் மாறினாலும், குழந்தைகள் விசயத்தில் தனக்கென தனி பொறுப்புகளைக் கொண்டு, சிறந்த அப்பாவாகவே இருந்து வருகிறார் எலான் மஸ்க். தன் குழந்தைகள் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி, எதைச் சாப்பிட வேண்டும் என்பது வரையில் அக்கறையான அப்பாகவே எலான் மஸ்க் காணப்படுகிறார்.
தனது பேட்டிகளில் மறக்காமல் தன் பிள்ளைகள் பற்றிக் கூறும் எலான் மஸ்க், அவ்வப்போது தன் டிவிட்டர் பக்கத்திலும் அவர்களது புகைப்படங்களைப் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் தனது மகன்கள் மற்றும் மூத்த மனைவியுடன் போப் ஆண்டவரைச் சந்தித்த புகைப்படத்தையும் அவர் டிவிட்டரில் பகிர மறக்கவில்லை.
இந்தப் புகைப்படத்தைப் பகிர்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, தனது இரண்டாவது மனைவி தாலுலாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ‘எனது 40வது பிறந்தநாளுக்காக தலுலா தானே வடிவமைத்த ஆடை இது’ என தன் பழைய இனிமையான நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதன்மூலம், விவாகரத்து செய்து பிரிந்தபோதும், தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீது பாசம் கொண்டவராகவே எலான் மஸ்க் அறியப்படுகிறார்.