'உண்மை தான்; வீட்டை விற்றுவிட்டேன்... எலன் மஸ்க் பகிர்ந்த ரகசியம்!

கனவுக்காக எளிமையான வாழ்க்கை வாழத் தொடங்கிய மஸ்க்!
1 CLAP
0

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலன் மஸ்க். இவர் ஆரம்பித்த டெஸ்லா நிறுவனம் பல ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்த நிலையில் இப்போது தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக லாபத்தை ஈட்டி வருகிறது. பெருந்தொற்று காலத்திலும், டெஸ்லாவின் கார் விற்பனை சிறப்பாகவே இருந்து வருகிறது. இதன்காரணமாக விறுவிறுவென உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக ஆனார்.

டெஸ்லா நிறுவனத்தை தவிர, SpaceX நிறுவனத்தையும் மஸ்க் நடத்தி வருகிறார். SpaceX நிறுவனத்தின் இலக்கு செவ்வாய் கிரகத்தில் மக்களைக் குடியேற்றம் செய்வது. 2010ல் தொடங்கிய இந்த நிறுவனம் இதுவரை 82 ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தியிருக்கிறார்கள். ராக்கெட்களைத் திரும்பி வரச்செய்து, மறுபடி செலுத்தும் ஒரே நிறுவனம் SpaceX தான்.

இதற்கிடையே, டுவிட்டர் பயனர் ஒருவர் எலன் மஸ்கை குறிப்பிட்டு,"செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக செலவுகளை செய்வதற்காக, உங்களுடைய வீடுகளை எல்லாம் விற்றுவிட்டு, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறீர்கள் எனக் கேள்விப்பட்டேன்," என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் கொடுத்த, எலான் மஸ்க்,

“அமெரிக்காவின் பே பகுதியில் இருக்கும் எனது ஒரு வீட்டை மட்டும் விற்கவில்லை. நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற வீடுகளை எல்லாம் விற்றுவிட்டேன்," என பதில் கொடுத்துள்ளார்.

நேற்றுதான் மஸ்க் 2018 ஆம் ஆண்டு முதல் வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறப்பட்டு வந்தநிலையில், தற்போது அவர் வீடுகளை விற்றிருக்கும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

எலன் மஸ்க் 2002-ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதன் முதலில் உருவாக்கி விண்ணுக்கு அனுப்பிய விண்கலம் 'டிராகன்’. இந்த விண்கலம் புளோரிடா மாகாணத்தின் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன்-9 ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இதன் மூலம் நாசாவின் அங்கீகாரத்துடன் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்கிற பெருமை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world