ஒரே ஆண்டில் 4.3 கோடி வருவாய் – ஹேன்ட் சானிடைசர் விற்பனையில் களமிறங்கி வெற்றி கண்ட பொறியாளர்!

சருமப் பராமரிப்பு மற்றும் வெல்னெஸ் தயாரிப்புகளை வழங்க விரும்பி 2018-ம் ஆண்டு திவாகர் வசிஷ்டா தொடங்கிய Zreyasa பெருந்தொற்று சூழல் காரணமாக சானிடைசர் தயாரிப்பிற்கு மாறி வெற்றி கண்டுள்ளது.
1 CLAP
0

திவாகர் வசிஷ்டா கனடாவில் மார்கெட்டிங் மற்றும் பிராஜெக்ட் மேலாண்மை பிரிவில் முதுகலைப் படிப்பு முடித்தார். இவரது குடும்பத்தினர் மூன்றாம் தரப்பினராக மருந்துத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். கனடாவிலிருந்து திரும்பிய திவாகர், இந்த வணிகத்தில் இணையக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

இவரது மாமா அருண், சகோதரர் சித்தார்த் இருவருக்கும் மருந்துத் துறையில் அனுபவம் இருந்தது. Vasistha Pharmaceuticals நிறுவனத்தை குருகிராமில் நடத்தவேண்டும் என்பதே இவர்களது விருப்பம். ஆனால், பொறியாளரான திவாகருக்கு கெமிக்கல் மற்றும் மருந்துத் துறையில் பி2பி பிரிவில் செயல்படுவதில் விருப்பமில்லை.

திவாகர் வசிஷ்டா

எனவே தன் குடும்பத்தினர் ஏற்கெனவே உருவாக்கியிருந்த கட்டமைப்பையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி 2018ம் ஆண்டு டெல்லியில் Zreyasa நிறுவினார். பி2சி ஸ்கின்கேர், வெல்னெஸ் மற்றும் சுகாதார பிராண்டாக அறிமுகப்படுத்துவதே இவரது திட்டம். திவாகரின் மாமாவும் சகோதரரும் இணை நிறுவனர்களாக இணைந்துகொண்டனர்.

“சோப், லோஷன் போன்ற தனிநபர் பராமரிப்புப் பொருட்களையும் சருமப் பராமரிப்புப் பொருட்களையும் அறிமுகப்படுத்துவதே ஆரம்பகட்ட திட்டமாக இருந்தது. ஆனால், பெருந்தொற்று பரவத் தொடங்கியதால் அந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டேன். கொரோனா சம்பந்தப்பட்ட சுகாதாரப் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கவே ஹேன்ட் சானிடைசர் அறிமுகம் செய்தேன்,” என்கிறார் திவாகர்.

சில கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் சானிடைசர் விற்பனை செய்யத் தொடங்கினார். சில்லறை வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள், ஆன்லைன் சந்தைப்பகுதிகள் போன்றவை மட்டுமின்றி சொந்த வலைதளம் மூலமாகவும் விற்பனை செய்தார்.

2020-2021 நிதியாண்டில் Zreyasa 4.3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக திவாகர் தெரிவிக்கிறார்.

“தயாரிப்புப் பணிகளை அவுட்சோர்ஸ் செய்ததால் விற்பனை, விளம்பரம், பிராண்டிங் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடிந்தது. தரத்தையும் உறுதி செய்யமுடிந்தது,” என்கிறார்.

தயாரிப்பு சார்ந்த சவால்கள்

பெருந்தொற்று சூழலில் ஹேன்ட் சானிடைசர்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்தபோதும் தயாரிப்பு மற்றும் விற்பனை சார்ந்த சவால்கள் இருந்ததாக திவாகர் குறிப்பிடுகிறார்.

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சானிடைசர்களுக்கான தேவை உச்சத்தை எட்டிய நிலையில் 200 மி.லி சானிடைசர் பாட்டில் ஒன்றை அதிகபட்சமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என டெல்லி அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது.

”ஹேன்ட் சானிடைசர் வணிகத்தைப் பொருத்தவரை குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி குறைந்த விலையில் விற்பனை செய்வதும் கடினம். மின்வணிக சந்தைகளில் விற்பனை செய்வதற்கும் கமிஷன் தொகையை செலுத்தியாகவேண்டும். செலவுகளைக் குறைத்துக்கொண்டு இந்த சவால்களை அனைத்தையும் எதிர்கொண்டோம்,” என்கிறார் திவாகர்.

இதுபற்றி அவர் விவரிக்கும்போது,

“தயாரிப்புப் பணிகளை அவுட்சோர்ஸ் செய்ததால் இயந்திரங்களுக்காக முதலீடு செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஹேன்ட் சானிடைசர் போன்ற ஆல்கஹால் சார்ந்த பொருட்களைத் தயாரிக்க எங்கள் குடும்பத்தினரின் தொழிற்சாலைக்கு ஏற்கெனவே உரிமம் இருந்தது. மூலப்பொருட்களை மொத்தமாக வாங்கி செலவுகளைக் குறைத்தோம்,” என்கிறார்.

பெருந்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் Zreyasa மட்டுமின்றி மூன்றாம் தரப்பு தயாரிப்பாளர்களும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக கடும் சிரமங்களை சந்தித்தனர். ஏனெனில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர் திரும்பிவிட்டனர்.

“பெருந்தொற்றின் இரண்டு அலைகளின்போதும் பல தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர். எஞ்சிய ஒரு சில தொழிலாளர்களுக்கும் வேலைக்கு வந்து செல்லும்போது தொற்று ஏற்பட்டுவிடுமோ என்கிற பயம் இருந்தது. இதற்கு தீர்வளிக்கும் வகையில் தொழிற்சாலைக்கு அருகிலேயே அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தோம். உணவும் வழங்கினோம். ஆரம்பத்தில் 30-40 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே வந்தனர். இதற்கிடையில் புதிதாக தொழிலாளர்களை நியமித்து பயிற்சியும் அளித்தோம்,” என்கிறார்.

வளர்ந்து வரும் சந்தை - வருங்காலத் திட்டங்கள்

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் ஹேன்ட் சானிடைசர் சந்தை 123.5 மில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ளது. 2021-2026 ஆண்டுகளிடையே 13 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITC (Savlon), Reckitt Benckiser (Dettol), Dabur, Hindustan Unilever, The Himalayan Drug Company உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பிரிவில் செயல்படுகின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்னரே தயாரிப்புத் தொழிற்சாலைக்கானக் கட்டமைப்புகளில் முதலீடு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருப்பதால் இதுபோன்ற பிரபல பிராண்டுகளுடன் சிறப்பாகப் போட்டியிடமுடியும் என்கிறார் திவாகர்.

”எல்லோருக்கும் ஒரே நறுமணம் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. ஒவ்வொருவரின் விருப்பமும் மாறுபடும். இதனால் வெவ்வேறு ஹேன்ட் சானிடைசர் மற்றும் சுகாதாரப் பொருட்களை விரும்பி வாங்குவார்கள். அதேபோல் வெவ்வேறு அல்கஹால் அளவு கொண்ட தயாரிப்புகளையே ஒவ்வொருவரும் விரும்புவார்கள்,” என்கிறார்.

அவர் மேலும் விவரிக்கும்போது, “எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு சந்தையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் தொடர்ந்து எங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி, சுகாதாரப் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கி சந்தையில் எங்களுக்கான இடத்தை நாங்கள் நிலைநிறுத்திக்கொள்வோம்,” என்று குறிப்பிட்டார்.

Zreyasa என்95 மாஸ்க், ஆண்டிசெப்டிக் லோஷன், மல்டிபர்பஸ் டிஸ்இன்ஃபெக்டண்ட் ஸ்பிரே, காய்கறி மற்றும் பழங்களை சுத்தப்படுத்துவதற்கான வாஷ் என பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

பெருந்தொற்று பரவல் குறைந்தாலும் இதுபோன்ற தயாரிப்புகளுக்கான தேவை சந்தையில் இருக்கும் என திவாகர் நம்பிக்கை தெரிவிக்கிறார். வரும் நாட்களில் ஏற்கெனவே திட்டமிட்டபடி சரும பராமரிப்புப் பொருட்களையும் வெல்னெஸ் தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா