சிறிய பிளாட்டில் 4 பேருடன் தொடங்கி, இன்று 1,106 கோடி மதிப்பு ஐடி சேவை நிறுவனம் உருவாக்கிய பொறியாளர்!

மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்க விரும்பி சிறியளவில் வணிகம் தொடங்கிய அருண் நாதனி இன்று 1,106 கோடி ரூபாய் மதிப்புடைய ஐடி சேவை நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
6 CLAPS
0

அருண் நாதனி சிக்காகோவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஐந்தாண்டுகள் வரை டிசைன் இன்ஜினியராக வேலை செய்தார். அதன் பிறகு இந்தியா திரும்பத் தீர்மானித்தார்.

அருண் முதுகலைப் படிப்பு முடிப்பதற்காக 1987ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். படிப்பை முடித்த அருண், அங்கேயே வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டார். விர்ஜினியா பாலிடெக்னிக் இன்ஸ்டிட்யூட் அண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பட்டம் முடித்து சிக்காகோவில் வேலையில் சேர்ந்தார்.

”வெளிநாட்டில் வேலை கிடைத்து செட்டில் ஆனபோதும் இந்தியா திரும்பவேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் இருந்து வந்தது. இங்குள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் யோசனையாக இருந்தது,” என்கிறார் அருண்.

மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கவேண்டும் என்று அருண் விரும்பினார். அவரது விருப்பம் கைகூடியது. கடின உழைப்பிற்குப் பலன் கிடைத்தது. இன்று அருண் புனேவைச் சேர்ந்த Cybage Software நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ.

அருண் நாதனி

Cybage Software ஒரு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம். இந்நிறுவனம் அவுட்சோர்ஸ் செய்யும் பிராடக்ட் இன்ஜினியரிங் சேவைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. தனிப்பட்ட முறையில் மென்பொருள் வடிவமைத்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு (ஐ.எஸ்.வி) Cybage Software தொழில்நுட்ப ஆலோசனையும் ப்ரொஃபஷனல் சேவையும் வழங்குகிறது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பசபிக் நாடுகள் போன்ற இடங்களில் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள 150-க்கும் அதிகமான பகுதிகளுக்கு இந்நிறுவனம் சேவையளித்து வருகிறது.

ஆரம்ப நாட்கள்

இந்தியாவில் பங்குச் சந்தை/முதலீட்டுப் பிரிவில் பணியாற்றிய அருண் இணையம் பிரபலமானதால் அது தொடர்பாக செயல்படத் தீர்மானித்தார்.

”பிரவுசிங் பிரபலமடைந்த காலகட்டத்தில் எனக்கு தொழில்முனைவில் ஈடுபடவேண்டும் என்கிற உந்துதல் பிறந்தது. 1995-ம் ஆண்டு இண்டர்னெட் பிரவுசர் உருவாக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவெடுத்தேன்,” என்கிறார் அருண்.

1995-ம் ஆண்டு பார்ட்னர் ஒருவருடன் இணைந்து தனிப்பட்ட சேமிப்பைக் கொண்டு Cyberage தொடங்கினார். 2000-ம் ஆண்டில் இது Cybage என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புனேவில் 3 படுக்கை அறை வசதி கொண்ட ஒரு வீட்டில் இருந்து செயல்பட நான்கு ஊழியர்களை பணியமர்த்தினார்.

பயனர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் வெப் பிரவுசர் உருவாக்கி வளர்ச்சியைடைய திட்டமிட்ட அருணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“என் பார்ட்னரை அழைத்தேன். நான்கு ஊழியர்களும் குறித்தபடி சரியான நேரத்திற்கு பணிக்கு வந்துட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டேன். ஆனால் என் பார்ட்னர் வணிகத்தில் விருப்பம் இல்லை எனத் தெரிவித்து பின்வாங்கிவிட்டார்,” என்றார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இலவச பிரவுசர் அறிமுகப்படுத்த இருப்பதால் இவர்கள் திட்டமிட்ட வணிக முயற்சி பலனளிக்காது என்று அந்த பார்ட்னர் காரணம் கூறியுள்ளார்.

வெப் பிரவுசர்

ஆரம்பகட்ட செலவுகளுக்குப் பின்னரும் அருணிடம் ஓரளவிற்கு சேமிப்புத் தொகை மிச்சமிருந்தது. அருண் மனம் தளர்ந்து முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. 3 படுக்கை அறை வசதி கொண்ட இருப்பிடத்தில் இருந்து நான்கு ஊழியர்களுடன் தனது முயற்சியைத் தொடர்ந்தார். தனது சகோதரர் தீபக் நாதனியை இணைத்துக்கொண்டு பிரவுசர் உருவாக்கும் பணியைத் தொடங்கினார்.

விண்டோஸ் 95 பீடா வெர்ஷனில் 32 பிட் பிரவுசர் உருவாக்கிய பணியை அருண் நினைவுகூர்ந்தார்.

”இந்தியாவில் இணைய இணைப்பு மிகவும் மோசமாக இருந்தது. மோசமான பேன்ட்வித் கொண்டு பிரவுசர் உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. உலகின் முன்னணி ஐடி புரொஃபஷனல்களைக் கொண்ட பில்லியன் டாலர் மதிப்புடைய Netscape நிறுவனத்துடன் நான்கு ஊழியர்களை மட்டுமே கொண்டு செயல்படும் நாங்கள் போட்டியிட்டோம்,” என்று குறிப்பிட்டார்.

ஆறு மாத கடின உழைப்பிற்குப் பிறகு அருணின் வெப் பிரவுசர் தயாரானது. ஆனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இண்டர்னெட் எக்ஸ்பிளோரர், நெட்ஸ்கேப் பிரவுசர் போன்றவற்றுடன் போட்டியிட்டு தனது தயாரிப்பை விற்பனை செய்வது மிகவும் கடினமாக இருந்தது என்கிறார் அருண்.

”இணைய பயன்பாடு அதிகரித்து ஆஃப்ஷோர் டெவலப்மெண்ட், தொழில்நுட்ப சேவைகள் போன்றவை அதிக முக்கியத்துவம் பெற்றதால் எங்கள் பிராடக்டை பிராண்டிங் டூலாகப் பயன்படுத்தி தொழில்நுட்ப சேவைகளாக வழங்கத் தொடங்கினோம்,” என்கிறார் அருண்.

ஐடி கன்சல்டிங் மற்றும் சேவைகள்

அருணின் நிறுவனம் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ப்ரொஃபஷனல் ஆஃப்ஷோர் டெவலப்மெண்ட் சேவைகள் வழங்கத் தொடங்கியது பலனளித்தது. 1996-2002 காலகட்டத்தில் Cyberage அபார வளர்ச்சியடைந்தது.

Cyberage என்கிற டொமெயின் ஏற்கெனவே ஒருவரிடம் இருந்ததால் அதிக கட்டணம் செலுத்தி அவரிடமிருந்து வாங்கமுடியாமல் போனது. எனவே இந்த காலகட்டத்தில்தான் Cybage என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

”எங்களால் மார்க்கெட்டிங் தொடர்பாக அதிகம் செலவிட முடியவில்லை. எங்கள் நிபுணத்துவத்தை மட்டுமே நம்பி களமிறங்கினோம். திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் எங்கள் சேவையைப் பெற வருவார்கள் என நம்பினோம். இவையே எங்கள் வெற்றிக்கான ரகசியம்,” என்கிறார்.

வணிக சூழல்

“நாங்கள் உருவாக்கும் தீர்வுகள் நவீன தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகின்றன. வாடிக்கையாளர்கள் செலவிடும் பணத்திற்கு சிறந்த மதிப்பு கிடைப்பதை உறுதி செய்கிறோம். உலகின் மிகச்சிறந்த நிறுவனங்களாக அறியப்படும் ஃபார்சூன் 500 நிறுவனங்களில் சிலவற்றிற்கு நாங்கள் சேவையளித்துள்ளோம்,” என்கிறார் அருண்.

தொலைதொடர்பு, பயணம் மற்றும் விருந்தோம்பல், சில்லறை வணிகம், மின்வணிகம், ஹெல்த்கேர், மீடியா மற்றும் விளம்பரம் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த வணிகங்களுக்கு சேவையளிப்பதில் Cybage தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வட அமெரிக்காவில் இருப்பதாகவும் அதைத் தொடர்ந்து ஐரோப்பா மற்றும் ஆசிய பசபிக் நாடுகள் பங்களிப்பதாகவும் அருண் குறிப்பிடுகிறார்.

“தற்சமயம் எங்கள் வணிகத்தில் வெறும் 2 சதவீதம் மட்டுமே இந்தியா பங்களிக்கிறது. இது அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்,” என்கிறார்.

இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து டிஜிட்டல் ரீதியாக செயல்படத் தொடங்கியுள்ளதால் கொரோனா பெருந்தொற்று ஐடி துறையில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

”எங்கள் வாடிக்கையாளர்களில் 95 சதவீதம் பேர் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பதால் கொரோனா பெருந்தொற்றால் நாங்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை. சிறியளவில் வீழ்ச்சி இருந்தாலும் அது தற்காலிகானது மட்டுமே,” என்கிறார்

உலகளவிலான சந்தை முழுவீச்சில் செயல்படத் தொடங்கியதும் பார்ட்னர்ஷ்ப் மூலம் செயல்படவும் மேலும் பல புதுமையான தீர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அருண் தெரிவிக்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா