’டாய் ஸ்டோரி’ - இந்தியாவில் பொம்மை உற்பத்தி தொடங்கி வெற்றிநடை போடும் இரு பொறியாளர்கள்!

பொம்மைகள் தயாரிப்பு நிறுவனமான மிராடா 2018ல் ஆதேஷ் ரோஹில்லா, ரோகித் சர்மாவால் துவக்கப்பட்டது. நொய்டாவைச்சேர்ந்த இந்நிறுவனம், பொம்மைகள், புதிர்கள், மென் பொம்மைகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கிறது.
0 CLAPS
0

இன்வெஸ்ட் இந்தியா தகவல்படி, இந்திய பொம்மைகள் சந்தை தற்போது 1.5 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டுள்ளது, 2024ல் 2 முதல் 3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும், சர்வதேச சந்தையில் இந்திய சந்தையின் பங்கு 0.5 சதவீதம் மட்டுமே என்பதால் வளர்ச்சிக்கான வாய்ப்பும் அபிரிமிதமாக உள்ளது.

இந்த பின்னணியில், ஆதேஷ் ரோகில்லா மற்றும் ரோகித் சர்மா ஆகிய நண்பர்கள் இந்த சந்தையில் நுழைய தீர்மானித்தனர். ஒய்.எம்.சி.ஏ பொறியியல் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்கள் துவங்கி நண்பர்களான இருவரும், பின்னர் வேறு பாதையில் பயணித்தாலும், 2010ல் தொழில்முனைவு எண்ணத்துடன் மீண்டும் சந்தித்துக்கொண்டனர்.

“நாங்கள் இருவருமே சொந்தமாக ஏதேனும் செய்ய விரும்பினோம்.”

டென்மார்க் நிறுவனம் கோஷ் காஸ்மடிக்சில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, பொம்மைகள் பிரிவிலும் செயல்பட்ட விநியோகிஸ்தர்களை சந்தித்தாக ஆதேஷ் கூறுகிறார். இவர்களிடம் பொம்மைகள் சந்தை பற்றி பேசிய போது, பெரிய அளவில் வாய்ப்பு இருப்பதை தெரிந்து கொண்டார்.

“சந்தையில் அமைப்புசாரா நிறுவனங்களே அதிகம் இருந்தாலும், புதிய யுக நிறுவனங்களின் தேவை அதிகம் இருந்தாலும் பெரும் இடைவெளி இருந்தது,” என்கிறார் ஆதேஷ்.

2010ல் வேலையை விட்டு விலகிய ஆதேஷ், ஸ்டிரிங்ஸ் மார்க்கெட்டிங் லிமிட்டட் எனும் பெயரில் பொம்மை நிறுவனங்களுக்கான விநியோகிஸ்தராக தீர்மானித்தார். அதே ஆண்டு ரோகித்தும் இணைந்து கொண்டார். அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் டாய்ஸ் நிறுவனத்துடன் முதலில் இணைந்து செயல்பட்டனர்.

2014க்கு பிறகு, பெலிசாம், டவுக், பஸ் பீ போன்ற முக்கிய நிறுவனங்களுடனும் செயல்படத்துவங்கினர். வர்த்தகம் செழித்தாலும் அரசு இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை கடினமாக்கியது.

அதன் பிறகு, அதிக சுங்க வரி, மலிவு விலை இறக்குமதி பொம்மைகளை வடிகட்டுவதற்காக சரக்குகளை மாதிரிக்கு சோதனையிடுவது போன்ற நடவடிக்கைகள் இறக்குமதியை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் பாதிப்பை உணர்ந்த ஆதேஷ் மற்றும் ரோகித் தங்கள் சொந்த உற்பத்தி நிறுவனம் ’Mirada Toys' 2018ல் துவக்கினர். இந்த வர்த்தகத்திற்காக இருவரும் தலா ரூ.50 லட்சம் முதலீடு செய்தனர்.

துவக்கம்

உற்பத்தியை துவக்கும் முன், பொம்மை துறையில் அனுபவம் கொண்டிருந்தத்து பெரிய சாதகமாக அமைந்ததாக ஆதேஷ் கூறுகிறார்.

“வாடிக்கையாளர் எண்ணம், சந்தையின் விலை புள்ளிகள், இடைவெளி ஆகியவற்றை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது,” என்பவர், அலெக்ஸ் டாய்ஸ், மெலிசா அண்ட் டவுக் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்ட சர்வதேச பார்வையை அளித்ததாகக் கூறுகிறார்.

மிராடா பொம்மை நிறுவனம் நொய்டா ஆலையில் சிறுமிகளுக்கான பொம்மை தயாரிப்புடன் துவங்கி, சிறுவர்கள், ஸ்டேஷனரி, மென் பொம்மை, புதிர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் விரிவாக்கம் செய்தது.

அழகு மற்றும் கலை பொம்மைகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனும் ஆதேஷ், பயனாளிகளே செய்து பார்க்கக் கூடிய மேக்கப், நகக் கலை உள்ளிட்ட பொருட்களும் அதிக விற்பனை ஆகின்றன, என்கிறார்.

மென் பொம்மைகள் பிரிவில், யூனிகார்ன் பொம்மைகள் பெரிய சந்தையை பெற்றிருந்தாலும், டெட்டி பியர் போன்ற பாரம்பரிய பொம்மைகள் ரொக்கத்தை கொண்டு வரவில்லை என்கிறார்.

“சந்தையில் டெட்டி பியர் பொம்மைகள் கொட்டிக்கிடப்பதால் இதில் வளர்ச்சி காண முடியவில்லை என அறிந்தோம். சந்தையில் தனித்து தெரிவதற்காக டெட்டி பியர் பொம்மைகள் கண்களை பளபளப்பாக மாற்றியதாகவும்,” கூறுகிறார்.

“இருளில் ஒளிரும் பொம்மைகள் நல்ல விற்பனை ஆவதாக பதில் கருத்து மூலம் தெரிந்து கொண்டோம்,” என்கிறார்.

இன்று நிறுவனம், ஸ்பேஸ்ப், ஜங்கிள், யூனிகார்ன், புதிர்கள், ஆகியவற்றை அளிக்கிறது. இருளில் ஒளிரும் பிரிவில் மேலும் அறிமுகங்களை நிகழ்த்த உள்ளது.

மிராடா மூன்று ஆண்டுகள் ஆன புதிய நிறுவனம் என்றாலும் துறையில் தனக்கான இடத்தை பிடித்துள்ளது. இரண்டு இணை நிறுவனர்களுடன் துவங்கிய நிறுவனத்தில் இன்று 300 ஊழியர்கள், 50 விநியோகிஸ்தர்களுடன், 2500 மையங்களில் இருப்பை கொண்டுள்ளது.

மகராஷ்டிரா, தில்லி ஆகியவை பெரிய சந்தைகளாக உள்ளன. சென்னை, பெங்களூரு மற்றும் கவுகாத்தி, லக்னோ உள்ளிட்ட நகரங்களிலும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

மேலும், 9 இந்திய மற்றும் சர்வதேச பிராண்ட்களுக்கு மூல பொம்மைகளை தயாரித்து தருகிறது. இப்போது நிறுவனம் ஆப்லைன் விற்பனையை சார்ந்திருந்தாலும் விரைவில் இணையதளம் துவக்க திட்டமிட்டுள்ளது, அமேசானிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், 2020ம் நிதியாண்டில் ரூ.4.27 கோடி வருவாய் ஈட்டியதாகவும், இந்த நிதியாண்டில் (டிசம்பர் வரை) ரூ.12.8 கோடி ஈட்டியுள்ளதாகவும் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தொற்று பாதிப்பு

கொரோனா பெருந்தொற்று எல்லா துறைகளிலும் குறிப்பாக உற்பத்தித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மிராடா உற்பத்தி 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை முற்றிலும் நிறுத்தப்பட்டதாக ஆதேஷ் கூறுகிறார். இது தவிர, புதிய ஊழியர்களை பணிக்கு நியமிப்பதில் சிக்கலாக அமைந்தது என்கிறார்.

“பெருந்தொற்றால் நிச்சயமற்றத்தன்மை அதிகம் இருந்தது. பலரும் ஏற்கனவே இருந்த வேலையிலேயே இருக்க விரும்பினர்,” என்கிறார்.

எனினும், தானாக செய்யக்கூடிய பொருட்கள் பிரிவு கைகொடுத்தது என்கிறார். பெரும்பாலான சிறார்கள் வீட்டில் இருந்ததால் அவர்கள் பொழுதை கழிக்க இத்தகைய பொருட்களை விரும்பி வாங்கினர்.

பெருந்தொற்று பொம்மைகள் இறக்குமதியை மேலும் குறைத்ததால், நிறுவனம் இந்த துறையில் மேலும் ஆழமாக செல்லத் தீர்மானித்தது. இன்று பொம்மைகள் மீதான சுங்க வரி 60 சதவீதமாக இருக்கிறது. இறக்குமதி கணிசமாக குறைந்துவிட்டதால், நாங்கள் உற்பத்தி செய்பவை எல்லாம் நல்ல வரவேற்பு பெறுகின்றன என்கிறார்.

இது மிராடாவுக்கு மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள மற்ற சிறு தொழில்களுக்கும் பொருந்தும்.

2020 ஆகஸ்ட்டில் பொதுமக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா பொம்மை உற்பத்தியில் உலக மையமாக விளங்க முடியும் என்பதால் உள்ளூர் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். ஏற்றுமதி வாய்ப்புகளை பெறுவதில் புதுமையாக்கத்தின் பங்கையும் வலியுறுத்தினார்.

ஆன்கிட் டாய்ஸ், டூன்ஸ், ஜெபர் உள்ளிட்ட பொம்மை பிராண்ட்களை இந்தியா கொண்டிருந்தாலும், இந்தத் துறையில் அமைப்பு சார்ந்த தன்மை மற்றும் உலகலாவிய தன்மையை கொண்டு வர புதிய நிறுவனங்கள் தேவை என்கிறார் ஆதேஷ். மிராடா சர்வதேச சந்தையில் நுழையவும் திட்டமிட்டு மத்திய கிழக்கை நோக்கியுள்ளது.

குறுகிய கால நோக்கில் உற்பத்தியை மூன்று மடங்கு உயர்த்த இருப்பதாக ஆதேஷ் கூறுகிறார். கிரேட்டர் நொய்டாவில் ஒரு உற்பத்தி ஆலை தயாராகி வருகிறது. நீண்ட கால நோக்கில், இந்திய மற்றும் சர்வதேச அளவில் நன்கறியப்பட்ட பொம்மை பிராண்டாக விளங்க வேண்டும் எனும் இலக்கு கொண்டுள்ளது இந்த பொம்மை நிறுவனம்.

ஆங்கிலத்தில்: பவ்யா கவுஷல் | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world