தன் குடும்ப சமையல் எண்ணெய் ப்ராண்டை உலகமெங்கும் கொண்டு சென்ற 23 வயது இளைஞர்!

1948-ம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட `அசோக் ஆயில் & ஃபுட் பிராடக்ஸ்’ நிறுவனம் ஏற்றுமதியில் கவனம் செலுத்திய நிலையில் தற்போது இந்திய நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய Ace Gold என்கிற பெயரில் தரமான எண்ணெய் வகைகளை விற்பனை செய்து வருகிறது.
1 CLAP
0

இந்தியாவில் பெரும்பாலும் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2019ம் ஆண்டில் 7,300 கோடி ரூபாய் மதிப்புடைய 15 மில்லியன் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சமயத்தில் இறக்குமதி செய்யப்படாமலேயே தேவைகள் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்திய எண்ணெய் வர்த்தக அமைப்பான The Solvent Extractor’s Association of India உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதிக்கு தடை விதித்தது.

கரண் மேத்தாவிற்கு 23 வயதாகிறது. இவரது குடும்பத்தினர் 1948-ம் ஆண்டு முதல் சமையல் எண்ணெய் துறையில் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இவர்களது நிறுவனம் Ace என்கிற பிராண்டின்கீழ் டி2சி மாதிரியில் விற்பனை செய்து வருகிறது.

சமையல் எண்ணெய் சந்தை

கரணின் தாத்தா ராம்நிக்லால் மேத்தா 1948-ம் ஆண்டு மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் பகுதியில் 'அசோக் ஆயில் & ஃபுட் பிராடக்ஸ்’ தொடங்கினார். இந்நிறுவனம் இந்தியாவில் குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகளை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்துகிறது.

”இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருந்தாலும் நாங்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்வதில்லை. இதற்குக் காரணம் 70-80 சதவீத சமையல் எண்ணெய் தேவைகள் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகின்றன. சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா எண்ணெய் போன்ற ரீஃபைன்ட் ஆயில்கள் இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன,” என்கிறார் கரண்.

குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகளுடன் ஒப்பிடுகையில் ரீஃபைண்ட் ஆயில் உடலுக்கு ஆரோக்கியமற்றது. அதுமட்டுமின்றி சமையல் எண்ணெய் சந்தையில் முறைகேடுகள் அதிகம். பெரிய நிறுவனங்கள் மார்க்கெட்டிங் செய்வதற்கு அதிக நிதி ஒதுக்கி பிராண்டைத் தக்க வைத்துக்கொள்கின்றன.

சந்தையில் எத்தனையோ பெரிய பிராண்டுகள் செயல்பட்டாலும்கூட ஓராண்டிற்கு முன்பாக வணிகத்தில் இணைந்துகொண்ட கரண் உயர்தரமான, ஆரோக்கியமான எண்ணெய் வகைகளை மக்களுக்குக் கொடுப்பதற்காக டி2சி பிராண்ட் ஒன்றை உருவாக்க விரும்பினார். இந்திய சந்தையில் சிறப்பு கவனம் செலுத்தும் விதத்தில் இந்த பிராண்டை உருவாக்க விரும்பினார்.

”இந்திய சந்தையில் தற்போது மாற்றத்தை பார்க்க முடிகிறது. விலை சற்றே அதிகமாக இருந்தாலும் உயர்தர எண்ணெயாக இருந்தால், வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவதில்லை,” என்கிறார்.

RAW பிராண்ட் பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ் வழங்குவதை சுட்டிக்காட்டி அதேபோல் சமையல் எண்ணெய் பிரிவிலும் பிரத்யேகமாக செயல்படமுடியும் என்கிற நம்பிக்கை இருப்பதாக கரண் குறிப்பிடுகிறார்.

படிப்படியாக வளர்ச்சி

இந்நிறுவனம் ஆரம்பத்தில் மும்பை உள்ளூர் சந்தையில் Ace என்கிற பிராண்டின்கீழ் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்களுக்கு நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யது.

”1965-ம் ஆண்டு வரை நாங்களே விதைகளை பிராசஸ் செய்து பேக் செய்து வந்தோம். அதன் பிறகு சிவாஜி பார்க் பகுதியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் குஜராத்தில் தொழிற்சாலை அமைத்தோம். நாங்களே விதைகளை வாங்கி எண்ணெய் தயாரித்து மும்பைக்கு டெலிவர் செய்தோம்,” என்கிறார்.

1990-களின் தொடக்கத்தில் இந்நிறுவனம் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

2006-ம் ஆண்டில் ஒட்டுமொத்த பிராசசிங் மற்றும் பேக்கேஜிங் பணிகள் தானே பகுதியின் பிவாண்டிக்கு மாற்றப்பட்டது. இந்நிறுவனம் அதன் தயாரிப்புகளுக்கு USFDA அனுமதி பெற்றதும் யூகே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியது.

கரண், கரணின் அப்பா தினேஷ் மேத்தா, சகோதரர்களான ஹர்திக் மற்றும் ஹிரண் என நான்கு பார்ட்னர்களும் இணைந்து நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். தற்போது பல்வேறு தயாரிப்பு வகைகளுடன் விரிவடைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 85 மெட்ரிக் டன் எண்ணெய் பிராசஸ் செய்யப்படுகிறது. இதில் 70 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமிருப்பவை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

நான்கு பார்ட்னர்களில் கரணின் அப்பா தினேஷ் மேத்தா ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகித்து வருகிறார். ஹிரண் மேத்தா ஏற்றுமதி பிரிவை கவனித்துக்கொள்கிறார். ஹர்திக் மேத்தா நிதி மற்றும் கொள்முதல் பணிகளுக்குப் பொறுப்பேற்றுள்ளார். புதிய பிராண்ட் உருவாக்கும் பணிகளை கரண் கவனித்துக் கொள்கிறார்.

தூய்மைக்கு உத்தரவாதம்

Ace என்கிற பிராண்டின்கீழ் இந்நிறுவனம் வட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யூகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு சேவையளிக்கிறது. ரீஃபைண்ட் ஆயில்களைத் தவிர்க்கவேண்டும் என்கிற கொள்கையுடன் தற்போது Ace Gold என்கிற புதிய பிராண்டை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது உள்நாட்டு சந்தையில் டி2சி பிராண்டாக கிடைக்கும்.

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற மின்வணிக தளங்களிலும் நிறுவனத்தின் வலைதளத்திலும் இந்த பிராண்ட் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிராண்ட் ஒரு மாதத்திலேயே அதிக விளம்பரங்கள் ஏதுமின்றி 1 லட்ச ரூபாய் மதிப்பில் விற்பனையை எட்டியுள்ளது.

மற்ற தளங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஆஃப்லைன் மூலமாகவும் கிடைக்கும் என்றும் கரண் குறிப்பிடுகிறார். முதலில் மும்பை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக முதல் நிலை நகரங்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கிறார்.

எண்ணெயின் உண்மையான நிறம் வாடிக்கையாளர்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக கிளாஸ் மற்றும் மறுசுழற்சிக்கு உகந்த பெட் பாட்டில்களில் பேக் செய்யப்படுகிறது.

”சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான எண்ணெய் வகைகள் HDPE மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டு பேக் செய்யப்பட்டவை. இதற்குள் இருக்கும் எண்ணெய் வெளியில் தெரியாது. ஆனால் நாங்கள் எங்கள் தயாரிப்பு தூய்மையாக இருப்பதையும் தரமாக இருப்பதையும் வாடிக்கையாளர்கள் வெளிப்படையாகப் பார்க்கும் வகையில் பேக் செய்கிறோம்,” என்கிறார் கரண்.

குறைந்த லாபத்துடன் விற்பனை செய்வது, விற்பனை அளவை அதிகப்படுத்துவது, பிராண்டை பிரபலப்படுத்துவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக கரண் தெரிவிக்கிறார்.

”டிஜிட்டல் ரீதியாக செயலபட விரும்புகிறோம். இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்றவற்றில் உள்ளடக்கம் உருவாக்குபவர்களுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் கரண்.

ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி டி | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world