அன்று டிவி ரிப்பேர் செய்தவர்; இன்று ரூ.135 கோடி மதிப்பு நிறுவனத்தை கட்டமைத்தது எப்படி?

ரமண் பாட்டியா 1991-ம் ஆண்டு தொழில்முனைவு பயணத்தை தொடங்கி முப்பதாண்டுகளில் 135 கோடி டர்ன்ஓவருடன் NSE பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை கட்டமைத்திருக்கிறார்.
1 CLAP
0

Servotech Power Systems Pvt Ltd நிறுவனர் ரமண் பாட்டியா. 45 வயதாகும் இவர், 1991-ம் ஆண்டு தொழில்முனைவு உலகிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். குடும்பத்தினர் ஏற்கெனவே தொழில் செய்து வந்தபோதும் அதில் இணைந்துகொள்ள இவர் விரும்பவில்லை.

15 வயதிலேயே கிடைத்த சின்ன சின்ன வேலைகளை செய்ய ஆரம்பித்தார். இப்படி கடினமான பாதையைத் தேர்வு செய்து அனுபவம் பெற்று மிகப்பெரிய நிறுவனத்தை வலுவாக கட்டமைத்திருக்கிறார்.

ரமண் வணிக முயற்சியைத் தொடங்கி முப்பதாண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இன்று இவரது நிறுவனம் நவீன சோலார் பிராடக்ட்ஸ், மருத்துவ சாதனங்கள், ஆற்றல் சேமிக்க உதவும் விளக்குகள் என பல்வேறு பொருட்களின் தயாரிப்பு, கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது.

ராமன் பாட்டியா - நிறுவனர், Servotech Power Systems

இந்நிறுவனம் சமீபத்தில் ஹை-டெக் மின் வாகன சார்ஜிங் உபகரணத்தை சந்தையில் அறிமுகப்படுத்தி மின் வாகனங்களில் பிரிவிலும் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியிருக்கிறது.

Servotech பின்னணி குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள் பற்றியும் எஸ்எம்பி ஸ்டோரி நேர்காணலில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ராமன்.

சுயம்பு மனிதர்

ரமணின் குடும்பத்தினர் சைக்கிள் தயாரிப்பு வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் ரமண் ஏற்கெனவே வளர்ச்சியடைந்து நல்ல நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த வணிகத்தில் இணைந்து கொள்ளவில்லை. மாறாக தனக்கான பாதையை தானே வகுத்துக்கொள்ள முடிவு செய்தார்.

எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்கும் கடையில் வேலை செய்தார். நியூஸ்பேப்பர் விற்பனை செய்தார். ரிக்‌ஷாகூட ஓட்டியிருக்கிறார்.

பட்டப்படிப்பை முடித்த ரமண், 90-களில் எலக்ட்ரானிக்ஸ் துறையைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள விரும்பினார். Videocon நிறுவனத்தில் வேலையில் சேர விண்ணப்பித்தார்.

அங்கு நேர்காணலுக்காக காத்திருந்தபோது சம்பளம் பற்றிய விவரம் அவருக்குத் தெரியவந்தது. மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கிறார்.

“என்னை நேர்காணலுக்கு கூப்பிட அவகாசம் இருந்தது. அதற்காக காத்திருந்தேன். அப்போது ரிசப்ஷனிஸ்டிடம் சம்பளம் பற்றி பேச்சுக் கொடுத்தேன். நிறுவனத்தில் அதிகபட்ச சம்பளம் எவ்வளவு கொடுக்கப்படுகிறது என விசாரித்தேன். அதற்கு அவர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை சுட்டிக்காட்டினார். அவருக்குதான் அதிகபட்சமாக 8,200 ரூபாய் மாத சம்பளம் கொடுப்பதாகக் கூறினார். அப்படியானால் அதிகபட்சமாக என்னால் 8,200 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியாதா என்று யோசித்தேன். உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்,” என்று அந்த நாட்களை நினைவுகூர்ந்தார் ராமன்.

ரமணுக்கு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் அதிக ஆர்வம் இருந்தது. பழுது பார்க்கும் வேலை செய்து அனுபவமும் பெற்றார். டிவி பழுது பார்க்கும் வேலை செய்யத் தீர்மானித்தார். 1991ம் ஆண்டு அப்பாவின் கடையில் ஒரு சிறு இடத்தை ஒதுக்கித் தருமாறு ரமண் கேட்க அவரும் ஒப்புக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து ரமண் ஸ்டெபிலைசர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் இன்வெர்டர்களின் விலை அதிகம். சில்லறை வர்த்தக உரிமையாளர்கள்கூட அவற்றை வாங்க தயக்கம் காட்டினார்கள். ரமண் தனது நண்பர்களின் உதவியுடன் ஒரு இன்வெர்ட்ரை தயாரித்தார். இதன் மூலம் வணிக வாய்ப்புகள் விரிவடையத் தொடங்கின.

“எங்கள் கடைக்கு வருபவர்கள் எல்லோரும் அந்த சின்ன இன்வெர்டர் பாக்ஸைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். என் நண்பர்கள் அவர்களது கடைகளுக்கு தேவைப்படும் என்று எடுத்துச் சென்றார்கள். நான் இன்னொரு இன்வெர்டர் தயாரித்தேன். இதையே வணிகமாக்கலாம் என யோசித்து ஒரு இன்வெர்டர் 8,000 ரூபாய் என்று விலை நிர்ணயித்தேன்,” என்கிறார்.

1994ம் ஆண்டு 30 லட்ச ரூபாய் ஈட்டியிருக்கிறார். இது அவருக்கு மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது.

“வேலையில் சேராமல் போனதும் நன்மைக்கே என்று தோன்றியது,” என்கிறார் புன்னகையுடன்.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் வணிக விரிவாக்கம்

ரமண் தயாரித்த இன்வெர்டர்கள் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டன. புதுடெல்லியின் சுல்தான்புரி பகுதியில் Bhatia Electronics என்கிற பெயரில் சொந்தமாக கடை திறந்தார். ஆனால், அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கவில்லை. ஓராண்டிற்கு முன்னால் அவர் விற்பனை செய்த இன்வெர்ட்கள் வேலை செய்யாமல் போனது.

இருப்பினும் ரமண் சோர்ந்துவிடவில்லை. கொச்சியில் இருக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்பத்தைப் பெற்று சிறந்த இன்வெர்டர்களைத் தயாரித்தார். Servotech என்கிற பிராண்டின்கீழ் புதிய இன்வெர்டர் வகைகளை சந்தையில் அறிமுகப்படுத்தினார்.

90-களின் மத்தியில் ரமண் வணிகத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். 1996-ம் ஆண்டு அப்பாவின் வணிகத்தைக் காட்டிலும் அதிக வருவாய் ஈட்டினார். 2003-ம் ஆண்டு Servotech Power Systems Pvt Ltd என்கிற பெயரில் நிறுவனத்தை நிறுவி கார்ப்பரேட் பிரிவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

2004-2006 ஆண்டுகளிடையே ராமன் BigBazaar, Spencers, Croma, More போன்ற நிறுவனங்களுடனும் Kotak, HDFC போன்ற வங்கி சேவை வழங்கும் நிறுவனங்களுடனும் கைகோர்த்து சில்லறை வணிகப் பிரிவில் செயல்படத் தொடங்கினார். இதற்கிடையில் இன்வெர்டர், ஸ்டெபிலைசர், யூபிஎஸ் போன்ற தயாரிப்புகளையும் இணைத்துக் கொண்டிருந்தார்.

”வணிகம் சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால், 2008-ம் ஆண்டு மந்தநிலை ஏற்பட்டது. எல்லோரும் பணத்தை சேமிப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். செலவு செய்வது குறித்த எண்ணமே மக்களிடம் இல்லை. இதையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி நிறுவனங்கள் மின்சாரத்தை சேமிக்க உதவி செய்யலாம் என முடிவு செய்தேன். LED, VFD பிரிவில் கவனம் செலுத்தினேன்,” என்கிறார்.

2014-ம் ஆண்டு பள்ளிகளில் UPS நிறுவும் பணிகளுக்காக Servotech அரசாங்கத்துடன் கைகோர்த்தது. மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவ தெலுங்கானா, அசாம், இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற அரசாங்கங்களுடன் ரமண் இணைந்துகொண்டார்.

“என் வணிகம் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளில் ஆழமாக ஆய்வு செய்தேன். அடுத்து என்ன என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அப்போதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி யோசித்தேன். க்ரீன் எனர்ஜி வணிகத்தில் விரிவடைய திட்டமிட்டேன். இந்த கிரகத்தை பசுமையாக்கவேண்டும் என இலக்கு நிர்ணயித்தேன். 2014-ம் ஆண்டிலேயே சோலார் பிரிவில் செயல்படத் தொடங்கிவிட்டேன்,” என்கிறார்.

நாட்டின் முதல் போர்டபிள் சோலார் ரூஃப்டாப் சிஸ்டத்தை Servotech நிறுவியுள்ளது. குஜராத்தின் காந்திநகரில் உள்ள ஸ்வாமிநாராயன் அக்‌ஷர்தம் கோவிலில் ஏப்ரல் மாதம் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. புதுடெல்லியின் அக்‌ஷர்தம் கோவிலிலும் இந்த பிராஜெக்ட் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரமண் தெரிவிக்கிறார்.

இந்த விளக்குகள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பொது இடங்களில் நிறுவப்பட்டு வருவதாக அவர் தெரிவிக்கிறார். இந்தியாவில் அம்ரிஸ்டர் கோல்டன் டெம்பிள், அயோத்தியா ராமர் கோவில் போன்ற இடங்களில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

2022-ம் ஆண்டு Servotech மின்வாகன சார்ஜர்கள் பிரிவில் செயல்படுவதற்காக யூகே-வைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பெட்ரோலியம் பம்ப்களில் இந்நிறுவனத்தின் சார்ஜர்கள் வைக்கப்பட்டிருப்பதாக ராமன் தெரிவிக்கிறார்.

உயிர் காக்கும் ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர்கள்

பெருந்தொற்றின் இரண்டாம் அலையின்போது ரமணின் நண்பர்களில் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்பட்டது. அதற்காக தேடி அலைந்திருக்கிறார். கடைசியாக ஒரே ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைத்தது. ஆனால் அதுவும் தரமானதாக இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

”ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர் என்பது நோயாளியின் உயிரைக் காப்பாற்றுகிறது. ஆனால் அதன் தரம் மோசமானதாக இருந்தது. ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஒருபுறம் இருக்க கிடைக்கும் சிலிண்டர்களும் தரமானதாக இல்லை. எனக்கு தெரிந்தவர்களிடம் பேசி இதற்கு தீர்வுகாண்பது பற்றி யோசித்தேன்,” என்கிறார் ரமண்.

2021-ம் ஆண்டிலேயே தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்காக ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர் தயாரிக்க ஐஐடி ஜம்மு, DRDO ஆகிய நிறுவனங்களைத் தொடர்பு கொண்டார். 5 லிட்டர் ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர் 5 LPM ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் கொண்டது. 24 மணி நேரமும் தொடர்ந்து ஆக்சிஜன் சப்ளை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

2020 பெருந்தொற்று சமயத்தில் விரைவாகவும் திறம்படவும் சானிடைஸ் செய்யும் வகையில் UV-C கிருமிநாசினி விளக்கு உருவாக்கும் பணியிலும் ராமன் ஈடுபட்டார்.

பசுமையான வாழ்க்கையை சாத்தியப்படுத்த பசுமை ஆற்றல் பிரிவில் தொடர்ந்து செயல்பட விரும்புவதாக ரமண் தெரிவிக்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா