யுவர்ஸ்டோரி அடையாளம் கண்ட தோல்வியை தகர்த்த தொழில் முனைவர்கள்!
யுவர்ஸ்டோரி தமிழின் 4 ஆண்டு வெற்றிப் பயணத்தில் நாங்கள் அடையாளம் கண்ட தொழில்முனைவு ரத்தினங்கள்.
தொழில்முனைவு என்ற கரடுமுரடான பாதையில் தோல்விகளாய் இருந்த படிகட்டுகளை துவைத்து தொங்க போட்டுள்ளனர் பல தொழில்முனைவர்கள். வெற்றி எனும் உச்சானிக் கொம்பில் அமர்ந்திருப்பவர்களில் சிலரை கடந்த 4 ஆண்டுகளில் யுவர்ஸ்டோரி தமிழ் அடையாளம் கண்டது. அவர்கள் யார்? அவர்களின் தொழில்முனைவு அனுபவங்கள் என்ன? இதோ உங்களுக்காக ஒரு ரீகேப்.
‘Suxus’ நிறுவனத்தின் வெற்றி
நிறுவனத்தின் பெயரில் இருக்கும் suxus ஐ தொழிலில் கொண்டு வர வேண்டும் என்று தீயாக வேலை செய்த மதுரை இளைஞர் ஃபைசல் அகமது இன்று வெற்றியை அறுவடை செய்து கொண்டிருக்கிறார். 2006ம் ஆண்டு ரூ.5 லட்சம் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கப்பட்ட நிறுவனம், 2011ம் ஆண்டுவாக்கில் தீர்க்க முடியா கடனாகி, ஒரு கோடி ரூபாயை இழந்து திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
தந்தையின் மேற்பார்வையில் இருந்த தொழில் நஷ்டம் கழுத்தை இறுக்க களத்தில் இறங்கிய 30 வயது இளைஞர் ஃபைசல் அகமது ஆடை விற்பனையில் காம்போ ஆஃபர்களை அறிவிக்க வீழ்ச்சி கண்ட வியாபாரம் புத்துயிர் பெற்றது. 7 சட்டைகள் ரூ.1000இ 5 பேண்ட்கள் ரூ. 1000, 4 ஜூன்ஸ்கள் ரூ.1000 என 2013ம் ஆண்டு சக்சஸ் முயற்சி செய்து பார்த்த காம்போ ஆஃபர் எனும் அதன் சக்சஸ் பார்மூலாவால் ஆண்டு வருவாய் ரூ 1.35 கோடியாக உயர்ந்து தற்போது, 50கோடி ரூபாயாக உயர்ந்jது.
“முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை” என்பதற்கு ஃபைசலின் தொழில்முனைவுப் பாதை ஒரு சிறந்த உதாரணம்.
என்ஜினியரிங் டூ விளம்பரத்துறை
விளையாட்டாகச் செய்யும் விஷயம் சில நேரங்களில் நமக்கே தெரியாமல் நம் வாழ்க்கையை மாற்றிப் போட்டு விடும். அப்படித் தான் சென்னையைச் சேர்ந்த சந்தோஷ் பலவேஷ் நண்பர்களுடனான நிமிடங்களை போனில் படம்பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவிற்கு ஆடியோ சேர்ப்பதில் தொடங்கி அவருடைய நண்பர்களுடன் இணைந்து குறும்படம் இயக்க ஊக்கம் தந்திருக்கிறது.
2009ம் ஆண்டு ஐஐடி சாரங்கில் நடைபெற்ற குறும்பட விழாவிலும் இவர்கள் பங்கேற்க அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் சந்தோஷின் குறும்படத்தில் இருக்கும் தொழில்நுட்ப அம்சங்களை பார்த்து அவரின் கவனத்தை திரைத்துறையில் இருந்து கார்ப்பரேட் பக்கம் திருப்ப ஆலோசனை கூறி இருக்கிறார். இந்த ஆலோசனையின் பேரில் சந்தோஷ் யுஎம்எம் ஸ்டுடியோஸை தொடங்கி நிறுவனங்களுக்கு ப்ரோஷர் வடிவமைத்தல், வலைத் தளங்களை வடிவமைத்தல், வலைதளங்களுக்கான தொழில்நுட்பப் பிரிவை உருவாக்குதல் என ஒன்றில் இருந்து மற்றொன்றாக, பல கிளைகளாக பிரிந்து வடிவமைப்பு, வலைத்தள தொழில்நுட்பம், வலைத்தள வடிவமைப்பு என வேறு வேறு பிரிவுகளில் திறமையானவராக ஜொலித்து வருகிறார்.
“துணிந்தவனால் தான் வெற்றியை சாத்தியமாக்க முடியும்” என்பதை நிரூபித்த இளைஞன் சந்தோஷ் பலவேஷ்.
திருச்சி இளைஞர்களின் வெற்றி சரித்திரம்
ஜாப் செக்யூரிட்டி என்று ஒரு நிறுவனத்தின் பிடியில் பணியாற்ற வேண்டாம் என்று முடிவெடுத்த இளைஞர்களின் தொழில்முனைவுக் கதை இது. திருச்சி இளைஞர்களான ஜார்ஜ் கிறிஸ்டோபர் மற்றும் சுரேஷ்குமார் 2012ல் இவர்கள் சென்னையில் தொடங்கிய "மாக் ஆப் ஸ்டுடியோ" (MacAppStudio) என்ற ஆப் (APP) டெவலாப்மென்ட் நிறுவனம், iOS, Android, windows, Mac OSX என்று பவ்வேறு துறைகளுக்காக இதுவரை 120 ஆப்ஸை உருவாக்கியுள்ளது.
2 ஆண்டுகளில் மாக் ஆப் ஸ்டுடியோ, 141 சதவித வருடாந்திர வளர்ச்சியோடு, நான்கு கோடி வருமானத்தை எட்டியது. “நெஞ்சமுண்டு நேரமுண்டு ஓடு ராஜா”
'கொலபசி'ன் விறு விறு வளர்ச்சி
முன்னணி நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு தரமான உணவை டெலிவரி செய்யும் ‘கொலபசி‘ நிறுவிய நண்பர்கள். உணவு டெலிவரி சந்தையில் முதன்முதலில் தடம் பதித்த ஆதித்யா, பத்மநாபன், சந்தோஷின் முயற்சி சில காலங்களிலேயே வெற்றியை தேடித் தந்தது. இவர்கள் உணவு விநியோகிக்கும் முறை வாடிக்கையாளர்களைக் கவர்ந்து அவர்களின் நம்பிக்கையை பெற்றது. இதனால் ஒரே ஒரு இடத்தில் தொடங்கப்பட்ட கொலபசி சென்னையில் 25 இடங்களிலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் விரிவாக்கம் செய்யும் அளவு வளர்ச்சி பெற்றது. “நம்பிக்கை தானே வெற்றிக்கான அச்சாரம்”
மொழி கற்பித்தலில் ஒரு ஸ்டார்ட் அப்
லட்சியத்துடன் வருவாய் ஈட்டுவதற்கான வழி என்ற தேடலில் ஆங்கில மொழி பயிற்றுவித்தலில் தொடங்கி ஸ்டார்ட் அப் திண்டுக்கள் இளைஞர் சந்தோஷை உச்சத்திற்கு செல்ல வைத்தது. திண்டுக்கல்லில் சாதாரண குடும்பத்தின் மகனான இவர் ஆங்கில நாளிதழ் படித்து மொழியறிவை வளர்த்துக் கொண்டு தனது 27வது வயதில் 'மேராஇங்கிலீஷ்' வலைதளம் மூலம் ஒரு தொழில்முறை பயிற்சியாளராகவும், தொழில்முனைவராகவும் உருவெடுத்தார்.
கூகுள் பணிக்கு குட்பை சொல்லிவிட்டு தன்னம்பிக்கையுடன் தொழில்முனைவுப் பாதையை தேர்ந்தெடுத்தவர் இன்று சென்னையில் அலுவலகம் வைத்து சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு போட்டித் தேர்வர்கள், மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்து வருகிறார். “துணிந்து செல் வெற்றியை வெல்.”