ஒற்றை வார்த்தையால் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான ‘ஆதி குணசேகரன்’ மாரிமுத்து மறைவு!
எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகப் பெரியளவில் பிரபலமான, இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து(56) திடீர் மாரடைப்பில் மரணமடைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கிய ‘எதிர்நீச்சல்’ சீரியல் புகழ் மாரிமுத்து, திடீர் மாரடைப்பால் இன்று மரணமடைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் செய்து கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
ஒற்றை வார்த்தையில் ஒருவர் மிகப் பெரிய அளவில் பிரபலமாக முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் நடிகர் மாரிமுத்து. சன் டிவியில் டிஆர்பியில் அதகளம் செய்து வரும் எதிர்நீச்சல் சீரியலில் அவர் அடிக்கடி உபயோகிக்கும், ‘ஏய் இந்தாம்மா...’ என்ற வார்த்தை மாரிமுத்துவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது என்றுதான் கூற வேண்டும்.
ஒரு நடிகனின் மிகப்பெரிய வெற்றியே, மக்கள் அவரின் சொந்த கேரக்டரை விட்டு விட்டு, அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே பாவிப்பதுதான். அப்படித்தான் தான் ஏற்றிருந்த ’குணசேகரன்’ என்ற கதாபாத்திரமாகவே மக்கள் மனதில் வாழ்ந்து வந்தவர் மாரிமுத்து.

துரத்திய சினிமா ஆசை
தேனி மாவட்டத்தின் பசுமலை என்ற கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 1967ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்தவர். அடிப்படையில் கட்டிட பொறியியல் படித்த மாரிமுத்து தமிழ் மீதும், கலை மீதும் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக, எப்படியும் சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்ற தாக்கத்தோடு 1990ம் ஆண்டு தன் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்துள்ளார்.
துவக்கத்தில் உணவகங்களில் பணியாளராக வேலை செய்தவர், இலக்கியம் வழியாக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிமுகமானார். அதன் தொடர்ச்சியாக வைரமுத்துவிடம் மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்துள்ளார்.
பின்னர், ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இணைந்து அவரது படங்களான அரண்மனைக்கிளி (1993), எல்லாமே என் ராசாதான் (1995) படங்களில் பணிபுரிந்தார்.
இயக்குநர் வசந்த்திடம் ஆசை, ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட படத்திலும் உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறார் மாரிமுத்து.

இயக்குநராக கிடைத்த விமர்சனம்
உதவி இயக்குநராக இருந்த மாரிமுத்து ஒருகட்டத்தில் இயக்குநராக மாறினார். 2008ம் ஆண்டு கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் என தன் பன்முகத் திறமைகளைக் கொட்டி அவர் எடுத்த முதல்படம், ‘கண்ணும், கண்ணும்’ ஆகும். பிரசன்னா, உதயதாரா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் வசூல்ரீதியாக போதிய வரவேற்பைப் பெறாத போதும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் வடிவேலுவின் காமெடி எவர்க்ரீனாக அமைந்தது.
முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், சில ஆண்டுகள் இயக்கத்திற்கு இடைவெளி விட்ட மாரிமுத்து, மீண்டும் 2014ம் ஆண்டு ’புலிவால்’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
நடிகராக ஈர்த்த மாரிமுத்து
இதற்கிடையே, மிஷ்கினின் ’யுத்தம் செய்’ படம் மூலம் 2011ம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆனார் மாரிமுத்து. ஊழல் நிறைந்த அதிகாரியாக அவரது கதாபாத்திரம் அப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது. முதல் படத்திலேயே மாரிமுத்துவின் நடிப்பு அனைவரையும் ஈர்க்க, தொடர்ந்து அவருக்கு நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன. முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் மாரிமுத்து.
முதல் படத்தின் தாக்கத்தால் பெரும்பாலும் காவல் அதிகாரி கதாபாத்திரங்களே மாரிமுத்துவைத் தேடி வந்தன. ஆனாலும், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்தி, தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதனால், ஆரோகனம், நிமிர்ந்து நில், கொம்பன், மருது, கத்தி சண்டை, பரியேறும் பெருமாள், மெஹந்தி சர்க்கஸ், ஜெயிலர் என அடுத்தடுத்து இவர் நடித்த படங்களில் எல்லாமே அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் மாரிமுத்துவின் யதார்த்தமான நடிப்பு மக்களிடம் பெரும் பாராட்டுகளைக் குவித்தது. சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில்கூட, வில்லனின் வலது கையாக செயல்படும் முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார் மாரிமுத்து.

மறக்க முடியாத ஆதி குணசேகரன்
வெள்ளித்திரையில் பிஸியான நடிகராக வலம் வந்த சூழலிலும், சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார் மாரிமுத்து. சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் விதமாக அமைந்திருந்தது மாரிமுத்துவின் நடிப்பு.
இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று மாரிமுத்துவின் கதாபாத்திரம் என்பது மறுக்க முடியாத உண்மை.
‘ஏய் இந்தாம்மா..’ என்ற ஒற்றை வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதத்தை ரசிப்பதற்கென்றே அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
உடனுக்குடன் மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது போன்றும், தான் தான் எப்போதும் தலைவன் என்ற மிடுக்கோடும் வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கதாபாத்திரத்திற்கு மேலும் மிடுக்கு சேர்த்தவர் மாரிமுத்து.
அவர் கூறும், ‘ஏய் இந்தாம்மா..’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் மீம் மெட்டீரியலாகவே மாறியது. இதனால் 2கே கிட்ஸ்ஸின் பேவரைட் ட்ரெண்டிங் ஸ்டாராக மாறினார் மாரிமுத்து.

அறுவடை செய்கிறேன்
“சினிமாவுக்குள் வந்து நான் நிறையவே அடி வாங்கியிருக்கிறேன். வறுமை என்னை ரொம்பவே வாட்டி இருக்கிறது. திருச்செல்வம் என்னிடம் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் குறித்து சொல்லி மூன்று மணி நேரம் கதை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்ததால் இந்த சீரியலில் நடிக்க ஒத்துக்கொண்டேன்,” என்று பேட்டி ஒன்றில் கூரியுள்ளார்.
ஒரு செடியை நாம் நட்டு வைத்தவுடன், அதில் துளிர்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், நம்பிக்கையுடன் அதற்கு நீர் பாய்ச்சிக் கொண்டே இருக்க வேண்டும். நமது நம்பிக்கை வீண் போகாமல் ஒருநாள் அச்செடி துளிர்க்கும். சினிமாவில் எனது பயணமும் அப்படிப்பட்டதுதான். நான் பாய்ச்சிய நீருக்கெல்லாம் சேர்த்து வைத்து அறுவடை செய்வதாக இந்த எதிர்நீச்சல் சீரியல் அமைந்திருக்கிறது. அந்தளவிற்கு நடுத்தர வயதினர் மட்டுமின்றி இளம் வயதினர் மத்தியிலும் என் கதாபாத்திரம் சென்று சேர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி.
”எதிலும் நான் எளிதாக திருப்தி அடையமாட்டேன். இதை இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என சொல்லிக்கொண்டிருப்பேன். இந்த நாடகத்திலும் அப்படித்தான் என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய யோசித்து என் வேலையை செய்வேன்,” என நடிப்பில் தனது அர்ப்பணிப்பு குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் மாரிமுத்து.

நடிப்பிற்காகப் பாராட்டுகளைப் பெற்றது போலவே, இடையில் பல சர்ச்சைகளிலும் சிக்கினார் மாரிமுத்து. இதனாலேயே அடிக்கடி அவரது பெயர் ஊடகங்களில் அடிபட்டது, சமூகவலைதளங்களிலும் இவர் பேசியது விவாதங்களுக்கு ஆளானது. ஆனால், அவை குறித்து ஒருபோதும் கவலைப்படாதவராக, நிஜ வாழ்க்கையிலும் திரையில் தோன்றுவது போலவே கம்பீரமாக வாழ்ந்து வந்தார்.
திடீர் மாரடைப்பு
இந்நிலையில், இன்று காலையிலேயே 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு டப்பிங் பேச டப்பிங் தியேட்டருக்கு வந்திருக்கிறார் மாரிமுத்து. அவருடன் நடிகர் கமலேஷ் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே, திடீரென நெஞ்சு வலிப்பதாகச் சொல்லியுள்ளார் மாரிமுத்து. இதனால் அதிர்ச்சி அடைந்த கமலேஷ் உள்ளிட்டோர், உடனடியாக அவரை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரிமுத்துவின் உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
மாரிமுத்துவின் இந்த திடீர் மரணச் செய்தி அவருடன் பணி புரிந்தவர்களை மட்டுமின்றி, ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் ஆளாக்கியுள்ளது. நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் அவரது மறைவுக்கு மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் சீரியலில் வந்த காட்சிகளிலும் குணசேகரன் நெஞ்சுவலியால் அவதிப்படுவது போல் இருந்தது. தற்போது அந்த சீரியல் காட்சிகள் நிஜமாகி விட்டதே என அவரது ரசிகர்கள் தங்களது இரங்கல்களில் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாரிமுத்துவிற்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நிஜ வாழ்க்கையிலும் பல ‘எதிர்நீச்சல்’களைக் கடந்து, தன் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்து கொண்டிருந்த நேரத்தில், மாரிமுத்து இப்படி திடீரென மாரடைப்பில் மரணமடைந்திருப்பது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.