ஏழைகளின் வாழ்வில் 'ஒளி' ஏற்றிய ‘சங்கர நேத்ராலயா’ பத்ரிநாத் காலமானார்!

இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் சென்னையில் இன்று காலமானார்.

ஏழைகளின் வாழ்வில் 'ஒளி' ஏற்றிய ‘சங்கர நேத்ராலயா’ பத்ரிநாத் காலமானார்!

Tuesday November 21, 2023,

3 min Read

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கும் தரமான கண் மருத்துவ சிகிச்சையை இலவசமாக வழங்கி வரும் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தனது 83வது வயதில் வயோதிகம் காரணமாக சென்னையில் காலமானார்.

இவரது மறைவுக்கு முதல்வர், கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

SS Badrinath

தாமதமாகத் தொடங்கிய கல்வி

லட்சக்கணக்கானோர் வாழ்வில் ‘ஒளி’ கிடைத்த காரணமாக இருந்தவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத். சென்னை திருவல்லிக்கேணியில் 1940ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்த, இவரது முழுப்பெயர் செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் ஆகும். சிறுவயதில் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினையின் காரணமாக தாமதமாக, தனது 7 வயதில்தான் தன் பள்ளிக் கல்வியை பத்ரிநாத் தொடங்கினார்.

மயிலாப்பூரில் உள்ள பி.எசு. உயர்நிலைப் பள்ளியிலும், சென்னை சிறீ இராமகிருஷ்ணா மடம் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். இவர் 1955 மற்றும் 1957க்கு இடையில் லயோலா கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். இதற்கிடையே, அவரது பெற்றோர் இருவருமே மறைந்து விட்டதால், ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பத்ரிநாத், காப்பீட்டுத் தொகை உதவியுடன் 1963ம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பை முடித்தார்.

அதன் தொடர்ச்சியாக நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது உள்ளக பயிற்சி மற்றும் ஒரு வருட உள் மருத்துவப் படிப்பை முடித்த பத்ரிநாத், நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் கண் மருத்துவத்தில் அடிப்படை அறிவியலைப் படித்தார். தொடர்ந்து கண் மருத்துவத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், நியூயார்க்கின் புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் படிப்பினைத் தொடர்ந்தார்.

சங்கர நேத்ராலயா உருவான கதை

மேலும், பாஸ்டன், மாசசூசெட்ஸ் கண் மற்றும் காது மருத்துவமனையின் விழித்திரை சேவையில் சார்லஸ் ஸ்கெபன்ஸுடன் இணைந்து ஆய்வு நிதி பெற்றார். 1969-ல் கனடாவின் அரச அறுவையிலாளர் கல்லூரியின் சகாவாகவும், 1970-ல் அமெரிக்கக் கண் மருத்துவ வாரியத்தின் பிரிவுத் தலைவராகவும் பணிபுரிந்த பத்ரிநாத், தான் கற்றக் கல்வியின் பயன் தன் சொந்த நாட்டு மக்களுக்குச் சேர வேண்டும் என முடிவு செய்து, 1970-ல் இந்தியாவுக்குத் திரும்பினார்.

SS Badrinath

ஆறு ஆண்டுகள், சென்னை தன்னார்வ சுகாதார சேவைகளில் ஆலோசகராகப் பணியாற்றிய பத்ரிநாத், எச்.எம். மருத்துவமனை (1970 முதல் 1972 வரை) மற்றும் சென்னை விஜயா மருத்துவமனை (1973 முதல் 1978 வரை) ஆகியவற்றில் கண் மருத்துவம் மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சையில் தனியாகப் பயிற்சியைத் தொடங்கினார். தனது பயிற்சியின் ஊடாக, 60க்கும் மேற்பட்ட சக மதிப்பாய்வு கட்டுரைகளை அவர் வெளியிட்டார்.

தனது கல்வி மற்றும் பயிற்சி அனுபவங்களின் மூலம் மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை அளிக்க முடிவு செய்தார் பத்ரிநாத். அதன் தொடர்ச்சியாக, 1978ம் ஆண்டு, தனது குழுவுடன் சேர்ந்து, சென்னையில் ’சங்கர நேத்ராலயா’ எனும் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார்.

இலாப நோக்கமற்ற கண் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவாக இதனை அவர் உருவாக்கினார். பின்னர், இந்த நிறுவனம் மருத்துவ சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கானோர் பயன்

அப்போது தொடங்கி இப்போது வரை தினமும் சராசரியாக, 1200 நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

கண் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு பெற்றவர்களுக்கு விழியக-விழித்திரை அறுவை சிகிச்சை, கருவிழிப்படலம், ஓக்குலோபிளாஸ்டி, கண்விழி விறைப்பு, குழற்படலம் மற்றும் பொதுவான கண் மருத்துவம் ஆகியவற்றில் நிதியுதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது.

விருதுகளின் நாயகன்

இந்த நாற்பது ஆண்டு கண் சேவையில், சங்கர நேத்ராலயா மூலம் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயனடைந்துள்ளனர். பலரது வாழ்க்கையில் ‘ஒளி’ ஏற்றியதற்காக, 1996ம் ஆண்டு பத்ம பூசண் விருதும், 1983ம் ஆண்டு பத்மசிறீ விருதும் கொடுத்து பத்ரிநாத்தை இந்திய அரசு கௌரவித்தது.

SS Badrinath

இது தவிர, 1991ம் ஆண்டு மருத்துவர். பி. சி. ராய் ராய் தேசிய விருது, 1992ம் ஆண்டு பால் ஹாரிஸ் சகா விருது, 2009ம் ஆண்டு வி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புக்கான விருது, 2009ம் ஆண்டு மதராசு நகரக் கண் மருத்துவ சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் 2014ம் ஆண்டு இந்திய விழியக விழித்திரை சமூகத்தின் ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ உள்ளிட்ட பல விருதுகளை பத்ரிநாத் பெற்றுள்ளார்.

சங்கர நேத்ராலயா மூலம், ஏழை மக்களுக்கு பத்ரிநாத் செய்து வரும் மருத்துவ சேவையைப் பற்றி, அறிந்த பலரும், தங்களால் இயன்ற நிதியுதவியை அத்தொண்டு நிறுவனத்திற்கு அளித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா. ஆரம்பத்தில் பெரும் நிதியுதவியை சங்கர நேத்ராலயாவுக்கு அளித்த அவர், பின்னர் தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு சம்பவமே பத்ரிநாத்தின் சேவை மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு ஒரு சான்று.

இரங்கல்

இந்நிலையில், 83 வயதில் வயோதிகம் காரணமாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த பத்ரிநாத், சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட, கட்சித் தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் அவர்களது மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு’ எனத் தெரிவித்துள்ளார்.