Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

அசுத்தத் தண்ணீரை சுத்தப்படுத்தும் சுலப தொழில்நுட்பம் கண்டுபிடித்த மரைன் இஞ்சினியர்!

உள்ளங்கை அளவிலேயே இருக்கும் டரால்டெக் டிஸ்இன்ஃபெக்‌ஷன் ரியாக்டரை போர்வெல் கை பம்புடன் பொருத்திவிடலாம். இது தண்ணீரில் இருக்கும் நுண்ணுயிரிகளை அழித்து தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கிறது.

அசுத்தத் தண்ணீரை சுத்தப்படுத்தும் சுலப தொழில்நுட்பம் கண்டுபிடித்த மரைன் இஞ்சினியர்!

Monday December 17, 2018 , 4 min Read

நம் வாழ்வில் தண்ணீர் இன்றியமையாதது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேசமயம் தண்ணீர் உயிரைக் குடிக்கும் அளவிற்கு அபாயகரமானது என்பதை அறிவீர்களா? 

ஆம், அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகிறது. சமீபத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையால் 600 மில்லியன் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000 பேர் உயிரிழப்பதாகவும் 2018-ம் ஆண்டு ஜூன் மாத நிதி ஆயோக் ஆய்வு தெரிவிக்கிறது. போதிய வசதிகள் இல்லாத 6,50,000 கிராமங்கள் தங்களது 85 சதவீத தண்ணீர் தேவைக்கு நிலத்தடி நீரையே சார்ந்துள்ளனர். இந்த நிலத்தடி நீரானது வழக்கமாக மாசு மற்றும் நுண்ணுயிரிகளால் அசுத்தமாகி நோய் உண்டாக்குகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக கடல்துறையின் முன்னாள் தலைமை பொறியாளரான 59 வயது அஞ்சன் முகர்ஜி அசுத்தமான தண்ணீரை பாதுகாப்பாக மாற்றும் ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளார். இயந்திரங்களைக் கொண்டு விளையாடுவதில் ஈடுபாடு கொண்டவரும் அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவருமான அஞ்சன், உலகில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து ஒரு நிறுவனமாக மாற்றினார். தனது மனைவி பியூல் முகர்ஜியுடன் இணைந்து 2017-ம் ஆண்டு மும்பையில் டரால்டெக் சொல்யூஷன்ஸ் (Taraltec Solutions) துவங்கினார்.

டரால்டெல் டிஸ்இன்ஃபெக்‌ஷன் ரியாக்டரை பொருத்திவிட்டால் அதை மறந்துவிடலாம். அத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்படுகிறது. உள்ளங்கை அளவிலேயே இருக்கும் இந்த ரியாக்டர் போர்வெல் கை பம்பு தண்ணீரிலும் மோட்டார் பொருத்தப்பட்ட தண்ணீர் லைன்களிலும் இருக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கிறது. அத்துடன் வயிற்றுப்போக்கு, காலரா, டைஃபாயிட் போன்ற தண்ணீரால் ஏற்படும் நோய்களையும் தடுக்கிறது. இது வடிகட்டி இல்லை என்றும் இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் என்றும் அஞ்சன் விவரிக்கிறார்.
image


7,500 ரூபாய்க்கும் குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ரியாக்டருக்கு மின்சாரம், எரிபொருள், ஸ்மார்ட்ஃபோன், மோட்டார், வடிகட்டி, பராபரிப்பு, செயல்பாட்டு செலவு, தொழில்நுட்ப நிபுணர் தலையீடு எதுவும் தேவைப்படாது. இருப்பினும் தண்ணீரை பாதுகாப்பாக மாற்றக்கூடியதாகும்.

அஞ்சனின் டரால்டெக் நிறுவனத்தின் புதுமையான கண்டுபிடிப்புகளில் ஒன்றிற்கு ஒப்புதலுடன்கூடிய காப்புரிமை கிடைத்துள்ளது. மேலும் நான்கு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் நிலுவையில் உள்ளன. இதில் டரால்டெக் டிஸ்இன்ஃபெக்‌ஷன் ரியாக்டரும் அடங்கும்.

டரால்டெக் ரியாக்டர் எவ்வாறு செயல்படுகிறது?

பொதுவாக தண்ணீரில் இருக்கும் நுண்ணியிரிகள் அதிக அழுத்தம் இருக்கும்போது அழிந்துவிடும். இதை அடிப்படையாகக் கொண்டே இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அஞ்சன். மேலும்

“நாங்கள் டரால்டெக் சாதனத்தில் கூடுதல் இயற்பியல் நுணுக்கங்களைச் சேர்த்துள்ளோம்,” என்று இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் குறித்து அஞ்சன் விவரித்தார்.

இயற்கையை கவனித்து அதன் நுட்பங்களை செயல்படுத்தும் முறையான பயோமிமிக்ரியின் உந்துதலால் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் அஞ்சன். டரால்டெக் சாதனம் திரவத்தின் இயங்காற்றலை, இலக்காகக் கொண்டுள்ள மில்லியன்கணக்கான நுண் குமிழ்களாக மாற்றுகிறது. இந்த நுண் குமிழ்கள் ஒவ்வொருன்றும் ரியாக்டராக செயல்படுகிறது. இது தீவிர வெப்பம், அழுத்தம் மற்றும் கொந்தளிப்பால் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த கொந்தளிப்பானது நீர்குமிழ் தகர்ந்து போகும் நிலையில் தீவிர எனெர்ஜி பாக்கெட்டுகளை விடுவிக்கும். இதன் மூலம் கிடைக்கும் அதிர்வலைகள் நுண்ணுயிரிகளை அழித்து கிட்டத்தட்ட 99% பாதுகாப்பான தண்ணீரை அளிக்கிறது என்றார் அஞ்சன்.

DIY சாதனம்

இந்த சாதனம் குறித்து பியூல் முகர்ஜி மேலும் விவரிக்கையில்,

“இந்த ரியாக்டரை யார் வேண்டுமானாலும் எளிதாக 30 நிமிடங்களில் பொருத்திவிடலாம். எந்தவித தொழில்நுட்பத் திறனும் தேவையில்லை. கை பம்ப்பை பயன்படுத்தும் நபர் தண்ணீர் எடுக்க கைகளால் பம்ப்பை அடிக்கும்போது இந்த சாதனம் செயல்படும்,” என்றார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஜுன்னர் மாவட்டத்தில் அரசாங்கத்தின் உதவியோ அல்லது கார்ப்பரேட்டின் உதவியோ இன்றி 12 ரியாக்டர்கள் வாங்கப்பட்டுள்ளது. 

“ஆரம்பத்தில் ஜுன்னர் பகுதியில் ஒரு ரியாக்டர் வாங்கப்பட்டதும் கிராமத்தினர் டரால்டெக் நிறுவப்பட்ட கை பம்ப்களில் இருந்து வரும் தண்ணீரை மற்ற கை பம்ப்களில் இருந்து வரும் தண்ணீரோடு ஒப்பிட்டு மாற்றத்தை உணரத் துவங்கினர். இதனால் கிராமவாசிகள் அனைவரும் பணத்தை திரட்டி அவர்களது பகுதியில் இருக்கும் அனைத்து கை பம்ப்களுக்கும் டரால்டெக் ரியாக்டர்களை பொறுத்தினர்,” என்றார் அஞ்சன்.

ஐஐடி, ஐஐஎம் மற்றும் தொழில்முனைவு

இரண்டாண்டுகள் பொறியியல் படிப்பு முடித்த பிறகு அஞ்சன் தனக்கு ஆர்வம் இருக்கும் பகுதியில் செயல்பட விரும்பினார். ஐஐடி மும்பையில் தனது படிப்பை நிறுத்திவிட்டு கடல்சார் பொறியியல் படிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஐஐஎம் பெங்களூருவில் எம்பிஏ படித்தார்.

1990 வரை கடல்சார் பொறியாளராக பணியாற்றினார். அதன் பிறகு இயந்திரங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளத் துவங்கினார். திட்டங்கள் மற்றும் ஆய்வுகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளாத நிலையில் அனைத்தையும் மும்முரமாக ஆய்வு செய்து வருவதாகவும் பலவற்றில் தோல்வியை சந்திப்பதாகவும் சிரித்தவாறே குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில் கப்பல் மறுசுழற்சி குறித்து ஒரு புத்தகத்திற்கு இணை ஆசிரியராகவும் இருந்ததாக தெரிவித்தார்.

அஞ்சன் தனது வீட்டையே ஆய்வகமாக மாற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அவரது மனைவி பியூல் தெரிவித்தார். பியூல் ஐஐடி மும்பையில் பிஎச்டி முடித்துள்ளார். அத்துடன் ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பயின்றார். பியூல் Quipper Research Private Ltd என்கிற சந்தை ஆய்வு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

வணிக மதிப்பு

சுயநிதியில் இயங்கும் இந்த ஸ்டார்ட் அப் தற்போது ஓரவிற்கு லாபகரமாக செயல்படுவதாக தெரிவிக்கிறது. இந்நிறுவனம் பரிந்துரைகள் மூலமாகவும் கார்ப்பரேட் பார்ட்னர்ஷிப் வாயிலாகவும் இந்த ஆண்டு சற்று லாபத்தை ஈட்டியுள்ளது.

ரியாக்டருக்கான தேவை அதிகரிக்கும் நிலையில் ரிலையன்ஸ், கோத்ரேஜ், ஜூப்லியண்ட், லூபின், நலந்தா அறக்கட்டளை, வாட்டர் எய்ட், டாடா ட்ரஸ்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் அதன் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்காக டரால்டெக் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

உதாரணத்திற்கு ஜூபிலண்ட் பாரதிய குழுமத்தின் ஜூபிலண்ட் பாரதிய ஃபவுண்டேஷன் என்கிற லாப நோக்கமற்ற பிரிவு உத்திரப்பிரதேசத்தின் கஜ்ரூலா பகுதியில் உள்ள ஜூபிலண்ட் ஆலை அருகில் சோதனை மேற்கொண்டது. ஜூபிலண்ட் டரால்டெக்கின் ரியாக்டர்களை மூன்று கை பம்ப்களில் பொருத்தியது. ரியாக்டரை பொருத்திய பிறகு தண்ணீரை ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது தண்ணீரின் ஒட்டுமொத்த பாக்டீரியா அளவில் 99.36 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்தது. அந்தப் பகுதியில் வசிப்பவர் ஒருவர் கூறுகையில், 

“தண்ணீரில் எந்தவித வாசனையும் வருவதில்லை. இந்த சாதனத்தை பொருத்திய பிறகு நாங்கள் தண்ணீர் எடுக்க மற்ற பம்ப்களுக்கு செல்வதில்லை,” என்றார்.

இந்த ஆண்டு மேலும் 30 டரால்டெக் ரியாக்டர்களை கை பம்ப்களில் பொருத்த ஜூபிலண்ட் பாரதிய ஃபவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது. 200 ரியாக்டர் வரை பொருத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. அடுத்ததாக இந்த திட்டத்தை நிலைப்படுத்த ஃபவுண்டேஷன் உறுப்பினர்கள் கஜ்ரூலாவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்துகளை அணுகி அவர்களது பொறுப்பில் கிராமத்தில் கை பம்புகளில் ரியாக்டர்களை பொருத்த வலியுறுத்தி வருகின்றனர்.

நிதியைப் பொருத்தவரை நிறுவனத்திற்கான மூலதனத்தில் ஒரு பகுதி அஞ்சனுக்கு கிடைத்த பல்வேறு விருதுகள் மற்றும் அங்கீகாரத்தில் இருந்து கிடைத்ததாகும். இந்நிறுவனம் DST, இந்திய அரசாங்கம், Lockheed Martin & Tata Trusts ஏற்பாடு செய்த ’இன்னோவேஷன் க்ரோத் ப்ரோக்ராம் 2.0’ வென்றுள்ளது. மேலும் அஞ்சன் Global Environment Facility (GEF) மற்றும் United Nations Industrial Development Organisation (UNIDO) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான க்ளோபல் க்ளீன்டெக் இன்னோவேஷன் ப்ரோக்ராமில் (GCIP) உலகளாவிய வெற்றியாளர் ஆவார்.

மேலும் செயல்பாட்டு செலவு குறைவாக இருக்கும் வகையில் இருவரும் நிறுவனத்தை அமைத்துள்ளனர். 

“பெரும்பாலான வேலை சப்-கான்ட்ராக்ட் முறையில் மேற்கொள்ளப்பட்டுளது. அல்லது நானும் என் மனைவியும் செய்து முடிக்கிறோம்,” என்றார் அஞ்சன்.

பீஹார், ஜார்கண்ட், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் நூற்றுக்கணக்கான ரியாக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டரால்டெக் தெரிவிக்கிறது. “எனினும் ரியாக்டர் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்தை எட்டவில்லை,” என்றார் அஞ்சன்.

இவ்விருவரும் நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூக நடவடிக்கைகள், கொடையாளர்கள், உயர் நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்கள் போன்றோரின் ஆதரவைப் பெற விரும்புகின்றனர். அதேசமயம் அரசாங்கம் அதன் பொது கொள்கைகளில் ரியாக்டர்களை இணைத்துக் கொண்டு ஆதரவளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.


ஆங்கில கட்டுரையாளர் : ராஷி வர்ஷினி | தமிழில் : ஸ்ரீவித்யா