பதிப்புகளில்

உங்களை இனி நேர்காணல் செய்து வேலைக்கு அமர்த்த வந்துள்ள ரோபோ...

2nd Apr 2018
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

வருங்காலத்தில் மனிதர்கள் ரோபோக்களிடம் வேலை கேட்டு கை கட்டி நிற்கும் வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது? பல துறைகளில் மனிதர்களின் வேலை வாய்ப்பை ரோபோக்கள் பறித்துக்கொள்ளும் என எச்சரிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இந்த கேள்வி அவசியமானது தான்.

image


இது வெறும் அறிவியல் புனைகதை சங்கதி அல்ல: ஒவ்வொரு துறையிலும் ரோபோக்களின் ஆதிக்கம் பெருகி கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இவ்வளவு ஏன், எந்த துறையில் ரோபோக்களின் ஆதிக்கத்தால் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என சுட்டிக்காட்டும் இணையதளம் ஒன்று கூட உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் ரோபோக்களால் ஏற்படக்கூடிய வேலை இழப்பு பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது தான். ஆனால், ரோபோக்களின் தாக்கம் பலரும் அஞ்சும் வகையில் எதிர்மறையாக தான் இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. நல்லவிதமாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு ஆபத்தான வேலைகள் மற்றும் திரும்ப திரும்ப ஒரே விதமான செயல்களை கொண்ட அலுப்பூட்டும் வேலைகளை எல்லாம் ரோபோக்கள் எடுத்துக்கொள்ளலாம் என கருதப்படுகிறது. இதில் மனிதகுலத்திற்கு அதிக பிரச்சனை இல்லை.

இதனால் மனிதர்கள் செயல்திறன் மிக்க, கிரியேட்டிவான பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தலாம். அது மட்டும் அல்ல, குறிப்பிட்ட சில வேலைகளை ரோபோக்களால் செய்ய முடியாது என்றும் கருதப்படுகிறது. உதாரணத்திற்கு முகங்களை பகுத்துணரும் பணி. தற்போது பேஸியல் ரிகக்னைஷன் என சொல்லப்படும் முக உணர்வு மென்பொருள்கள் உருவாக்கப்பட்டாலும், முகங்களை உணர்வதில் மனிதர்களுக்கு இருக்கும் இயல்பான ஆற்றல் ரோபோக்களுக்கு ஒருநாளும் கைவராது என சொல்லப்படுகிறது.

இந்த கேள்விகள், கவலைகளுக்கு, மனிதர்களுக்கு போட்டியாக புதிய ரோபோ ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. ஆனால், இந்த ரோபோ ஒரு வேலையை பறித்திக்கொண்டாலும் ஓராயிரம் வேலையை அளிக்கக் கூடியதாக இருப்பது தான் கவனிக்க வேண்டிய அம்சம். ஆம், ரஷ்யாவைச்சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்டாபோரியால் (Stafory) உருவாக்கப்பட்டுள்ள வேரா (Robot Vera) எனும் அந்த ரோபோ வேலைவாய்ப்புக்கான நேர்காணலை நடத்தக்கூடியதாக இருக்கிறது. அதாவது மனிதவள மேம்பாட்டு அதிகாரிக்கு பதிலாக வேராவே நபர்களை தேர்வு செய்து, நேர்காணலுக்கு அழைத்து, கேள்விகள் கேட்டு, மதிப்பெண் வழங்கி, வேலைக்கு பொருத்தமான நபர்களை தேர்வு செய்யக்கூடியதாக இருக்கிறது. ஏற்கனவே பெப்ஸி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சோதனை முறையில் வேரா ரோபோ நேர்காணல் சேவையை பயன்படுத்தி வருவதாக அறிய முடிகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவியல் ஆகியவற்றின் கலைவையாக உருவாகி இருக்கும் வேரா நேர்காணல் கலையில் மேலும் தேர்ச்சி பெற்றால் மனிதவள மேம்பாட்டுத்துறையில் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அப்போது, வேலை வாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்கள், வணக்கம் ரோபோ எனக்கு இந்த வேலை கிடைக்குமா என பணிவுடன் கேட்கும் நிலையும் உண்டாகலாம்.

மனிதவள மேம்பாட்டுத்துறையினருக்கு வேரா ரோபோ போட்டியாக வந்திருந்தாலும் அவர்களும் இந்த ரோபோவை வரவேற்கவே செய்வார்கள் என நினைக்கத்தோன்றுகிறது. ஏனெனில் வேரா வேலைவாய்ப்பு நேர்காணல் நடைமுறையை எளிதாக்கு தரக்கூடியதாக இருக்கிறது.

image


வேரா ரோபோ தொடர்பான புளும்பர்க் செய்தி மற்றும் வேரா இணையதள தகவல்களை எல்லாம் படித்துப்பார்த்தால் இந்த ரோபோ எப்படி செயல்படுகிறது என புரிந்து கொள்ளலாம். 

ஆர்டிபிஷயல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட வேரா, வேலைவாய்ப்பு நியமனம் தொடர்பான அனைத்து பணிகளையும் தனியே செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. முதல் கட்டமாக, வேரா, வேலைவாய்ப்பு இணையதளங்களை அலசிப்பார்த்து அவற்றில் இருந்து குறிப்பிட்ட பணிக்கு பொருத்தமான ரெஸ்யூம்களை அள்ளி எடுக்கும் திறன் பெற்றுள்ளது. அதன் பிறகு வேராவே ரெஸ்ம்களில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து, வேலை விவரத்தை கூறி, அவர்களுக்கு அந்த வேலையில் விருப்பம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்கிறது.

வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் சொல்லும் பதில்களை புரிந்து கொள்ளக்கூடிய திறன் கொண்ட வேரா, நேர்காணலுக்கு தயார் என சொல்பவர்களிடம் வரிசையாக கேள்விகள் கேட்டு நேர்காணலும் செய்கிறது. இப்படி ஒரே நேரத்தில் பலரிடம் அதனால் பேச முடியும். அவர்கள் சொல்லும் பதில்களுக்கு ஏற்ப பொருத்தமான நபர்களை தேர்வு செய்து சமர்பிக்கிறது.

மனிதர்கள் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் எனில் பல நாட்கள் ஆகலாம். ஆனால் வேரா குறைந்த நேரத்தில் முடித்து தருகிறது. இப்போதைக்கு வேராவின் திறன் பொருத்தமான பத்து நபர்களை தேர்வு செய்யக்கூடியதாக இருக்கிறது. அதன் பிறகு கடைசி கட்ட வடிகட்டலை மனிதவள அதிகாரி மேற்கொள்ளலாம்.

வேரா ரோபோ, கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் ரஷ்யாவின் யாண்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பேச்சை உணரும் ஆற்றலின் கூட்டுத்திறனை உள்ளடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியா, டிவி பேச்சு மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் ஆகியவற்றில் இடம்பெறும் லட்சக்கணக்கான பதங்களை கற்று தேர்ச்சி பெற்றிருக்கிறது. வரும் காலத்தில் இதன் எந்திர கற்றல் இன்னும் மேம்படும் வாய்ப்பிருப்பதாக, வேராவை உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர்களான விலாதிமீர் வெஷ்னிகோ மற்றும் அலெக்சாண்டர் உராக்சின் நம்பிக்கையோடு சொல்கின்றனர்.

2016 ம் ஆண்டு தங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கான நபர்களை தேர்வு செய்ய முயற்சி செய்த போது நூற்றுக்கணக்கானோரை தொடர்பு கொண்டு பேசியும் சரியான நபர்களை தேடிக்கண்டு பிடிக்க முடியாமல் தவித்த போது, இந்த பணியை செய்ய ஒரு ரோபோவை உருவாக்கினால் என்ன எனும் எண்ணம் ஏற்பட்டு அதன் பயனாக வேராவை உருவாக்கியுள்ளனர்.

image


ஆக, நீங்கள் வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருப்பவர் என்றால் வேராவிடம் இருந்து அழைப்பு வரும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் வேரா எப்படி செயல்படுகிறது எனத்தெரிந்து கொள்ள விரும்பினால், அதன் இணையதளத்திற்கு (https://ai.robotvera.com/static/newrobot_en/index.html ) சென்று பார்த்தால் வேரா ரோபோ கம்பீரமாக எப்படி கேள்வி கேட்கிறது எனும் வீடியோவை பார்த்து ரசிக்கலாம்.

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக