பதிப்புகளில்

'படைப்புத்திறன் மூளை சார்ந்தது, ஹார்மோன்களோடு தொடர்பு உடையது அல்ல'- கலை இயக்குனர் ஜெயஸ்ரீ!

sneha belcin
7th Mar 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

‘சார்லி’ எனும் மலையாள படத்தில் முண்ணனி பாத்திரமான சார்லியை நமக்கு அறிமுகப்படுத்துவது ஓர் அறை. அறையில் இருக்கும் பொருட்களின் மீது உருவாகும் மையல் காரணமாய், அங்கு முன் தங்கியிருந்த ‘சார்லி’ யை தேடிச் செல்கிறாள் டெசா. பல வண்ண பாட்டில்கள், சிறு பட்டாம்பூச்சி உருவங்கள், உலோகக் குதிரை, அலங்காரப் படிக்கட்டுகள், காகித ஓவியங்கள் - ஒரு கதாபாத்திரத்தை விவரிக்க கலை இயக்கம் இப்படிக் கை கொடுக்கும் என நம்மில் பலரால் யூகித்திருக்கவே முடியாது !    

பல வகைகளில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ‘சார்லி’ படக் குழுவிற்கு கூடுதல் உற்சாகம், கலை இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் ‘கேரள மாநில விருது’. விருதைப் பெற்றிருப்பவர் முழுக்க முழுக்கச் சென்னையை சுவாசித்து யாசிக்கும் ஜெயஸ்ரீ லஷ்மி நாராயணன் என்பது, நாம் கொண்டாடும் பெண்மையை மெச்சிக் கொள்ள மேலும் ஓர் காரணம்!

image


யுவர்ஸ்டோரி தமிழ் சார்பாய் ஜெயஸ்ரீயோடு பேசக் கிடைத்த நேரம் முற்றிலும் அவர் கலை வண்ணம் நிறைந்ததாகவே இருந்தது! 

பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.பள்ளிப்படிப்பு கேந்திர வித்யாலயாவில்.நான் ரொம்ப துறுதுறுப்பான குழந்தையாகத் தான் வளர்ந்தேன். பள்ளி புத்தகங்களில் மட்டுமே ஆர்வம் இருந்திருக்கவில்லை. விளையாட்டுக்கள் ரொம்ப இஷ்டமாய் இருந்தன.

பிறகு,எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி படித்தேன்.சின்ன வயதிலிருந்தே ஆர்ட் டைரக்டர் ஆக வேண்டும் என்பது கனவாய் இருந்ததில்லை. எனக்கு கமல் ஹாசன் படங்கள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். படங்களை எல்லாம் பார்க்கும் போது, அதன் பின் இருக்கும் நுட்பங்களை நினைத்து வியந்துக் கொள்வேன்.ஒருக் கட்டத்தில் விஸ்காம் படிக்க நினைத்தேன், ஃப்லிம் ஸ்கூலில் சேர நினைத்தேன் ஆனாலும் சில காரணங்களால் அது எதுவும் நடக்கவில்லை.முறையான வழி காட்டுதல் இல்லை. அப்போது நண்பர் ஒருவர் வழியே, ப்ராட்காஸ்டிங் அண்ட் கம்யூனிகேஷனில் படிப்பு அறிமுகம் ஆனது.அப்படித்தான் அதில் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன்.அப்போதும் கூட நான் திரைதுறையில் இருப்பேன் என நினைத்ததில்லை. 

அங்கு சேர்ந்த பிறகு,சினிமாவிலும், ஊடகத்திலும் நண்பர்கள் கிடைத்தார்கள்,தேடித் தேடி நிறைய படங்கள் பார்க்கத் தொடங்கினேன்.நான் பார்த்து பிரமித்துப் போன படங்கள் ஒன்றிரண்டு இல்லை! ஷாஷாங்க் ரிடம்ப்ஷன், ஷிண்ட்லர்ஸ் லிஸ்டு, குணா, குருதிப்புனல், தில்லுமுல்லு . இன்று வணிக படங்கள் என்று நாம் இடும் பட்டியலில் வருகிற வகையில் எனக்கு தில்லுமுல்லு, சர்வர் சுந்தரம் படங்கள் எல்லாம் மிக விருப்பமானவை. இப்படி, மேநிலைக் கல்வி முடித்தப் பிறகு ராஜீவன் நம்பியாரிடம் உதவியாளராய் சேர்ந்தேன்.

அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்தீர்களா..?

இல்லை. அசிஸ்டெண்ட் ஆர்ட் டைரக்டராக சேர்ந்தேன். பொதுவாகவே எல்லோருக்கும் இருக்கும் பிம்பம் இது தான்.ராஜீவன் சாரே என்னிடம் ‘உன் முடிவில் உறுதியாகத் தான் இருக்கிறாயா..?’ எனக் கேட்டார். அந்த சமயத்தில் ஆர்ட் டைரக்‌ஷன் துறையில் பெண்கள் அதிகம் இருந்திருக்கவில்லை.நேரத்திற்கு செட்டிற்கு வந்தாக வேண்டும்,பல நேரங்களில் உறக்கம் கெடும்,பொருளாதாரமும் நிலையாக இருக்காது - இதனால் பெண்கள் பாதியிலேயே விட்டுவிட்டு போய் விடுவார்கள் என யாருக்குமே பெண்களின் மேல் நம்பிக்கை இருந்திருக்கவில்லை. 

ராஜீவன் சாரிடம் நான் சேர்ந்தது ‘ஏழாம் அறிவு’ படத்தில்.அதைத் தவிர இரண்டு மூன்று படங்களில் சில காட்சிகளில் வேலை செய்திருக்கிறேன்.சில காலம் அடிப்படையாக எல்லாம் கற்றுக் கொண்ட பிறகு, நான் மும்பைக்கு போனேன்.மேலும் அதிகம் கற்றுக் கொள்ள சாபு சிரில் சாரிடம் உதவியாலராய் சேர்ந்தேன். ‘சன் ஆஃப் சர்தார்’ மற்றும் சில படங்களில் அவரோடு வேலை செய்தேன். பின் எனக்கு ஒரு பெண் கலை இயக்குனர் எப்படி இயங்குவார் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டியிருந்ததால், ப்ரியா சுஹாஸிடம் சேர்ந்தேன்.

‘தி டர்ட்டி பிக்சர்’ படத்திற்காக விருது வென்றவர் ப்ரியா சுஹாஸ். ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை : தொபாரா’ படம் உட்பட , இரண்டு மூன்று படங்கள் அவரோடு இருந்து பல விஷயங்கள் கற்றுக் கொண்ட பிறகு, 2013ல் நான் தனியாக இயங்க ஆரம்பித்தேன். முதலில் விளம்பரப் படங்களில் வேலை செய்யத் தொடங்கினேன்.மொத்தமாக ஐந்தாறு விளம்பரப் படங்களில் வேலை செய்த பிறகு, கலை இயக்குனராய் களம் இறங்கிய முதல் படம் ‘பிசாசு’.

அப்படித் தொடங்கியப் பயணத்திம் மேலும் ஓர் மைல் கல்லாய் அமைந்திருக்கிறது, ‘சார்லி’.

’சார்லி’ படத்திற்கு பெற்ற கேரள மாநில விருதிற்காக வாழ்த்துக்கள். எப்படி உணர்கிறீர்கள்...?

“என்கிட்ட சொன்னாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. பிளாங்கா இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா என்ன பண்றதுன்னே தெரியல”

இந்தியாவில் மிக முக்கியமான விருதுகளில் ஒன்று ‘கேரள மாநில விருது’. சாபு சார், மற்ற முக்கியமான கலை இயக்குனர்கள் எல்லாம் வளரும் பருவத்தில் அரசின் அங்கீகாரமாய் பெற்ற விருது ‘கேரள மாநில விருதாய்’ தான் இருந்தது.‘சார்லி’யில் வேலை செய்த போது, கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் ஆங்கிலம் என சமாளித்தாகிவிட்டது. ஆனால்.. பாதி நேரம் புரியாமலே தான் வேலை பார்த்திருக்கேன் என்பது உண்மை!

இதுவரை வெற்றியோடு சென்றுக் கொண்டிருக்கும் இந்தப் பயணத்தில் சவால்களாய் இருந்தவை எவை..?

என்னால் இவற்றையெல்லாம் செய்ய முடியும் என மக்களை சமரசப்படுத்துவது தான் மிகப் பெரிய சவாலாய் இருந்தது. பிறகு, உங்களை கலை இயக்குனராக பார்ப்பதற்கு முன்னர், ஆணாகவும் பெண்ணாகவும் பார்ப்பார்கள். அது மாறி, என்னை கலை இயக்குனராக மட்டுமே அவர்கள் பார்க்க வேண்டுமென நான் நினைத்தேன்.ஒரு பெண் இவ்வளவு பயணிப்பதும், இப்படி ஒரு துறையில் வேலை செய்வதும் புதிதாக இருக்கிறது இவர்களுக்கு எனவே ஏகப்பட்ட கேள்விகள், சந்தேகங்களை நீங்கள் திரும்ப திரும்ப கடந்து செல்ல வேண்டியதாயிருக்கும்.

image


இவற்றையெல்லாம் கடந்து படைப்புத் திறன் சார்பாகவும் பல சிக்கல்கள் வரலாம். கலை இயக்குனர்கள் எல்லாமே நாற்பது வயதிற்கும் மேற்பட்டவர்களாய் இருப்பார்கள் என பொதுவான கருத்து இருக்கும் சபையில் எனக்கு இருபத்தெட்டு வயது என்றால் ‘சின்னப் பொண்ணு’ என்பார்கள்.

உங்களை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கும். பின்னர், தொடக்கத்தில் சம்பளம் ஒழுங்காக கிடைக்காது....அதை எல்லாம் விட இது நேரமும், அதிர்ஷ்டமும் சார்ந்து இயங்கும் துறை. நீங்கள் என்ன தான் செய்தாலுமே சரியான நேரத்தில், சரியான இடத்தில் எல்லாம் அமைய வேண்டும்.கடவுளின் கருணையால் எனக்கது நடந்திருக்கிறது! இந்த வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொண்டு, இனி தமிழ் படங்களிலும் ஹிந்தி படங்களிலும் தடம் பதிக்க வேண்டும்.

பெண்கள் கலை வழியே அவர்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என நினைக்கிறீர்கள்..?

நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அது தான் உங்கள் வேலையிலும் பிரதிபலிக்கும்.... மிக உறுதியாய் இதைச் சொல்கிறேன்.கலை என்று வரும் போது அங்கே என்னை வெளிப்படுத்திக் கொள்ள எனக்கு பரந்த இடம் இருக்கிறது. அங்கு என்னை யாரும் கேள்விக் கேட்கப் போவதில்லை. ஒரு திரைப்படத்தின் சிறப்பம்சமாக நான் நினைப்பது அதைத் தான். 

 “என் கனவுகளை நான் என் படைப்பின் வழியே வாழ முடியும். ஆனால் பலருக்கு அது சாத்தியமில்லாமல் இருக்கும்.”

‘பிசாசு’ படம் திகில் பட வகையில் இருந்தாலுமே, அதில் ஒரு மென்மை இருந்தது. ‘சார்லி’ படத்தில் ஒருபெண் தன்மை இருப்பதாய் தோன்றியது...ஆணித்தரமாக உங்கள் கருத்தை முன் வைக்காமல் நீங்கள் நினைத்த தாக்கத்தை எப்படிக் கொண்டு வருகிறீர்கள்..?

இப்படி ஒரு கேள்வி வருவது முதல் முறை.ஒரு பெண்ணின் படைப்பு எனத் தெரிந்த பின் நாம் அதை பார்க்கும் கண்ணோட்டம் கண்டிப்பாய் வித்தியாசமானதாய் இருக்கும்.ஆனால் எல்லோரிடமும் ஒரு பெண் தன்மை இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.நம்மை அறியாமல் நம் கலை வழியே வெளிப்படவும் வாய்ப்புண்டு. ஆண்கள் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு அறைக்கும் பெண்கள் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு அறைக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். ஆண்கள் பார்க்கும், கவனிக்கும் காரியங்கள் வித்தியாசனமாவையாக இருக்கும். 

image


உளவியல் ரீதியாக நாம் மாறுபட்டவர்கள் தான்.இது நமக்கு புரிந்தாலுமே, பார்வையாளர்களுக்கு தெரியக் கூடாது. இது பெண்ணின் படைப்பு என்றோ, இதை படைத்தவர் ஓர் ஆணாகத் தான் இருக்க வேண்டும் என்றோ அவர்கள் யோசிக்கக் கூடாது. திரைக்கதையின் யதார்த்தத்தை உணர்ந்து, கதாபாத்திரங்களை முழுமையாக படித்து பணி புரியும் போது தான் அது சாத்தியப்படும். அப்போது தான் அவர்கள் கதாபத்திரத்தை உணர முடியும். 

‘பிசாசு’ படத்தில் பிசாசு எனும் கதாபாத்திரம் முன்னிலைப்படுத்தப்பட வீட்டை வெறுமையாக்கிக் காட்டியிருப்போம்.சார்லி- பார்வதியின் காதாபத்திரப்படி,அவள் யாராக இருக்கவேண்டுமென நினைக்கிறாளோ அப்படியிருக்கும் ஒருத்தன் மீது காதல் வயப்படுவாள்.அதனால், அப்படி ஒரு அறையை அமைக்க வேண்டியிருந்தது.

 “பாட்டு ஷூட் பண்ண செட் போடுறது மட்டுமே கலை இயக்கம்னு சொல்ல முடியாது.துரதிர்ஷ்டவசமாய் கடந்த சில காலமாய், கலை இயக்கம் அதுவாகத்தான் இருந்திருக்கிறது”

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையில் வேலை செய்கிறீர்கள்.கடினமான நேரங்களில், மீண்டு, எழுந்து நிற்க எங்கிருந்து நம்பிக்கை கிடைக்கிறது..?

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறை என்று சொல்கிறீர்கள் அல்லவா..? அது தான் மிகப் பெரிய நம்பிக்கை காரணி!! கீழிழுக்கும் காரியமாய் இருப்பதும் அது தான் என்பதும் உண்மை தான். கலைத் துறையில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிப்படை காரணங்களாய், கழிப்பறை வசதி இல்லாதது போன்ற நடைமுறை சிக்கல்கள் காரணமாய் இருக்கலாம்.

ஆனால், திரைத்துறையில் மீது ஆர்வமும், பலப் பல கனவுகளும் இருக்கும் போது, சில நடைமுறை சிக்கல்களுக்கு பயந்து ஆசையை விட்டுக் கொடுப்பதென்பது மிகத் தவறு அப்போது, ‘அவளால் அதை எல்லாம் செய்ய முடியாது’ என உங்களை திறமையை நம்பாதவர்களின் வார்த்தைகளை நீங்களே உண்மை செய்வது போலாகிவிடும்.

பெண்கள், ‘என்னால் இதை செய்ய முடியாது’ என தம்மை தாமே சமரசப்படுத்திக் கொள்ளக் கூடாது.ஒருக் காலத்தில் போருக்குப் போக வேண்டிய கட்டாயத்தில், உடல் வலிமை இருந்ததால் ஆண்கள் சென்றார்கள். ஆனால் இன்று போர் என்று வரும் போது எத்தனை ஆண்கள் தயாராக இருப்பார்கள் எனத் தெரியவில்லை! இன்று எல்லாமும் மூளை சார்ந்தது தான். ஆண்களும் பெண்களும் ஒருவரில் இருந்து ஒருவர் மாறுபட காரணமாய் ஹார்மோன்கள் தானே இருக்கிறது? உண்மையில், மூளைக்கும், படைப்புத்திறனுக்கும் - ஹார்மோனோடு எந்தத் தொடர்பும் இல்லை. எல்லோரும் சமம் தான்.

image


திரைத்துறையில் பணிபுரிய வேண்டுமென நினைக்கும் பெண்களுக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்?

நினைத்தீர்கள் என்றால், தாராளமாய் வாருங்கள்.இப்படி நடக்கும், அப்படி நடக்கும் என எந்த முன் யோசனைகளும் தயக்கங்களும் தேவையில்லை.

‘பாய் ஃப்ரெண்டு கூட கிடைத்திருக்காது.. ஆனால் குழந்தை பிறந்தால் என்ன பண்ணுவோம்’ எனக் கவலைப்படுவது போல தான் இது இருக்கிறது! 

எனக்கு இதுவரை ஏற்பட்டவை எல்லாம் நல்ல அனுபவங்கள் தான்.சவால்கள் என பல இருந்த போதிலுமே, என்னைச் சுற்றி இருந்த ஆண்கள் எல்லாரும் எனக்கு ஆதரவாகவும், என்னை நினைத்துப் பெருமை கொண்டவர்களும் தான்!நான் தொடங்கிய போது, இந்தப் புள்ளியில் வந்து நிற்பேன் என நான் யூகித்தது கூட இல்லை. சினிமா- ஒரு அற்புதமான துறை. கிடைக்கும் ஒரு வாய்ப்பை இழந்து விட்டால், பின்னர் நிச்சயம் அதை நினைத்து வருந்துவீர்கள்.

’சார்லி’யைக் காணத் தவறியவர்கள்,ஏப்ரல் மாதம் திரையரங்குகளில், ‘ஜேக்கபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம்’ என்னும் நிவின் பாலி நடிக்கும் மலையாளப் படத்தின் வழியே ஜெயஸ்ரீயின் கலை வண்ணத்தை ரசித்துத் தரிசிக்க வாய்ப்புண்டு! மேலும் வெகு விரைவில், தமிழ் இயக்குனர்களுடன் கை கோர்த்து, தமிழ் திரையுலகையும் இயல்பாய் அழகாக்குவார் ஜெயஸ்ரீ! 

சிறப்பு கட்டுரைகள்:

'ஃபேஸ்புக்கில் ஆண்களைப் போல் பெண்களும் சுதந்திரமாக புகைப்படத்தோடு பதிவிடும் நாள் வர வேண்டும்'- கிர்த்திகா தரண் 

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக