பதிப்புகளில்

பிட்காயின்-ல் முதலீடு செய்யலாமா?

தகவல் திங்கள்; இணைய நாணயமான பிட்காயினின் அடிப்படைகளை புரிந்து கொள்வது முதலில் முக்கியமானது...  

cyber simman
8th Sep 2017
Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share

பிட்காயின் என்றால் என்ன? எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கி இருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இருக்கிறது. (அதிகப்படியான ஆர்வம் என்றும் சொல்லலாம். அதை பின்னர் பார்ப்போம்). இந்த ஆர்வம் தான் முக்கியம். ஏனெனில் இதற்கு முன்னர் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், கேட்பவரிடம் பிட்காயின் பற்றிய அறியாமையே இருக்கும். பெரும்பாலானவர்கள் பிட்காயின் எனும் ஒரு வஸ்து இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே எங்காவது பிட்காயின் பற்றி கேள்விப்படும் போது, பிட்காயின் என்றால் என்ன? என்று ஒருவித அலட்சியத்துடம் அது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் கேட்கும் நிலை இருந்தது.

image


சுருக்கமாக சொன்னால், பிட்காயின் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை, அது பற்றி கவலைப்படவும் இல்லை. எதிர்கால நாணயம், மறை பணம், டிஜிட்டல் நாணயம் என்றெல்லாம் பலவிதமாக வர்ணிக்கப்பட்ட பிட்காயினின் அருமையையும், மகிமையும் உணர்ந்த தொழில்நுட்ப பித்தர்களும், நவீன அபிமானிகளும் இருந்தாலும் அவர்கள் தனித்தீவு போலவே இருந்தனர். பிட்காயின் தொடர்பான இணையதளங்களும், விவாத குழுக்களும் அநேகம் இருந்தாலும், அவற்றை தொழில்நுட்ப சமூகத்திற்கு வெளியே யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது பிட்காயினுக்கு மவுஸ் அதிகரித்திருக்கிறது. அதன் விளைவு தான் பலரும் பிட்காயின் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த ஆர்வத்திற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பிட்காயின், இணைய மிரட்டலுக்கான பணமாக அறியப்படுவது. மற்றொன்று பிட்காயின் புதிய தங்கம் என சொல்லப்படுவது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய உலகை ரான்சம்வேர் வைரஸ் உலுக்கியது நினைவில் இருக்கிறதா? எங்கோ இருக்கும் ஹேக்கர்கள் பயனாளிகளின் கம்ப்யூட்டருக்கு டிஜிட்டல் பூட்டு போட்டு அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மற்ற வைரஸ்களைவிட இந்த வைரஸ் நெட்டிசன்களையும், சிட்டிசன்களையும் கொஞ்சம் கூடுதலாகவே கவர்ந்தது. அது மட்டும் அல்ல, இந்த ஹேக்கர்கள் தாங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பினைத்தொகையை ரூபாயாகவோ, டாலாரகாவோ கேட்காமல் பிட்காயினாக கேட்டது நெட்டிசன்களை பிட்காயின் பற்றி யோசிக்க வைத்தது. ஹேக்கர்கள் ஏன் பிட்காயினை கேட்டனர் எனும் கேள்விக்கு இது புதுவகையான பணம், இதை எந்த மத்திய வங்கிகளும் வெளியிடுவதில்லை, இதன் பரிவர்த்தனை பிளாக்செயின் மூலம் நிகழ்கிறது என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் மக்கள் மத்தியில் பதிந்த விஷயம் பிட்காயின் அனாமதேய பணம் என்பதும், அதில் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டால் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாது என்பது தான். எனவே டிஜிட்டல் நாணயமான பிட்காயினை இணைய நிழல் உலகிற்கான பணம் என எளிதாக புரிந்து கொண்டனர்.

அதே நேரத்தில், பிட்காயினின் மதிப்பு எங்கே போய்க்கொண்டிருப்பதும், ஒரு சில பிட்காயின்கள் வைத்திருந்தால் கூட இன்று அதன் மதிப்பு லட்சக்கணக்கில் என்று சொல்லப்படுவதும், பிட்காயின் மீது தனி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. பிட்காயினை பரிவர்த்தனை செய்யலாம் என்கின்றனர். அதை டாலராகவோ வேறு நாணயமாகவோ மாற்றிக்கொள்ளலாம். இன்றைய தேதி கணக்குப்படி ஒரு பிட்காயினின் மதிப்பு இந்திய நாணயப்படி கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய். ஆக, சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் போல பிட்காயினை வாங்கிப்போட்டிருந்தால் (வாங்க முடியாது, இணையத்தில் கம்ப்யூட்டர் கொண்டு மைன் செய்ய வேண்டும் என்பது வேறு விஷயம்) இன்று லட்சாதிபதி என்று சொல்லப்படுவதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தானே செய்கிறது.

பிட்காயின் தொடர்பான மற்ற விஷயங்களும், விளக்கங்களும் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதை எப்படி பரிவர்த்தனை செய்வது, எப்படி பயன்படுத்துவது போன்றவை இன்னும் சிக்கலாக தோன்றினாலும், பிட்காயின் மதிப்பு ஏறிக்கொண்டிருக்கிறது (இறங்கவும் செய்கிறது) என்பது, பிட்காயின் மீது தனி ஈடுபாட்டை ஏற்படுத்தியிருகிறது. அதோடு தொழில்நுட்ப கில்லாடிகள் பலரும் பிட்காயினில் முதலீடு செய்து வருவதும் இதை மிகச்சிறந்த முதலீடு என பேச வைத்திருக்கிறது. எப்படி ஒரு காலத்தில் காலி மனைகள் வாங்கிப்போட்டால், எதிர்காலத்தில் அதை விற்று பணமாக்கலாம் என கருதப்பட்டதோ அதே போல, இப்போது பிட்காயின் ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை கட்டுரைகளும் பிட்காயினை புதிய தங்கம் என வர்ணிக்கும் போது கேட்கவா வேண்டும்!

பொதுமக்கள் மத்தியில் பிட்காயினை வாங்கும் பழக்கம் வந்துவிடவில்லை என்றாலும், இந்த புரியாத நாணயத்தில் பணத்தை போட்டால் அது பலன் தரும் முதலீடாக இருக்கும் எனும் எண்ணம் வலுப்பெறத்துவங்கியிருக்கிறது. பங்குச்சந்தை முதலீடு போல வருங்காலத்தில் பலரும் பிட்காயினில் முதலீட்டில் ஆர்வம் காட்டலாம். இப்போதே கூட, புத்திசாலிகள் சிலர் பிட்காயினை வாங்கிப்போடுவோம் என நினைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம்.

எல்லாம் சரி, பிட்காயினில் முதலீடு செய்யலாமா? இந்த முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா? பிட்காயினை கண்டுகொள்ளாமல் இருப்பது அருமையான வாய்ப்பை தவறவிடுவதாகுமா?

இது போன்ற கேள்விகளுக்கு எளிய பதில்கள் இல்லை. எல்லா முதலீடுகள் போலவே பிட்காயின் முதலீடும் ரிஸ்கானவை, அவை அள்ளித்தரலாம். அல்லது மதிப்பு சரிந்து காலையும் வாரலாம். ஆனால் விஷயம் அதுவல்ல, பிட்காயினை முதலீடு நோக்கில் மட்டும் அணுகுவது சரியாக இருக்காது.

முதலில் பிட்காயினை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை பிட்காயினை வாலெட்டில் வைத்திருப்பவர்கள் (அதற்கென டிஜிட்டல் பர்ஸ் இருக்கிறது) அடிப்படையில் பிட்காயினின் மைய கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். அதன் பயனாக அவர்கள் பிட்காயினில் பரிவர்த்தனை செய்ய விரும்பினர். அது அவர்களுக்கு முதலீடாகவும் பலன் அளிக்கிறது. இதில் யூக பேரங்கள் நுழைந்துவிட்டன என்றாலும், பிட்காயினில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் அதை முழுமையாக புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.

பிட்காயினின் அடிப்படை கருத்தாக்கத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிட்காயினை அதன் அபிமானிகள் விரும்புவதற்கான முக்கியக் காரணம், அது அனாமதேய பணமாக இருக்கிறது என்பது மட்டும் அல்ல, அது மையமாக கட்டுப்படுத்தப்படாத பணமாகவும் இருப்பதனால் தான். கோட்பாடு அளவில் பார்த்தால், பிட்காயின் எந்த ஒரு அரசாங்கம் அல்லது மத்திய வங்கியால் வெளியிடப்படாமல் அதன் பயனாளிகளால் நிர்வகிகப்படும் பணம். பிட்காயினை இஷ்டம் போல அச்சிட முடியாது என்பதும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நாணயங்கள் மட்டுமே மொத்தமாக உருவாக்கப்பட முடியும் என்பது போன்ற பல அமசங்கள் அதில் இருக்கின்றன. மேலும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்ணுக்குத்தெரியாத டிஜிட்டல் லெட்ஜரில் பதிவாகி வருகின்றன. பிளாக்செயின் என சொல்லப்படும் இந்த நுட்பத்தை தான் வங்கிகளும் நிதி உலகுமும் உன்னிபாக கவனித்து வருகின்றன.

ஆக, கொள்கை அளவிலும், தொழில்நுட்ப நோக்கிலும் அறிந்து கொள்ள பிட்காயினில் அநேக விஷயங்கள் இருக்கின்றன. அதன் பிறகே பிட்காயின் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். அது மட்டும் அல்ல பிட்காயினின் சட்டப்பூர்வ அந்தஸ்தும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தியாவில் பிட்காயின் பயன்பாடு பற்றி ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நாணயத்தை முறைப்படுத்துவது பற்றியும் பேச்சு இருக்கிறது.

எனவே பிட்காயினை தொடர்ந்து கவனியுங்கள், அது நல்ல விஷயம்.

இந்த கதை எல்லாம் வேண்டாம், பிட்காயினில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என தொடர்ந்து பிடிவாதமாக கேட்டால், பொருளாதார பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் பிட்காயின் பற்றி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறிய கருத்துக்களை தான் சுட்டிக்காட்ட வேண்டும். ஷில்லர் ஒன்றும் சாதாரண பேராசிரியர் அல்ல. மனிதர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அதைவிட முக்கியமான விஷயம், 2008 ல் அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடியால் உலக அளவில் பெரும் தேக்க நிலை உண்டானது அல்லவா? அது பற்றி 2003-ம் ஆண்டே கணித்து எச்சரித்தவர் ஷில்லர்.

அமெரிக்காவில் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக உயர்வது கண்டு, இது செயற்கையானது, இந்த குமிழ் வெடிக்கும் என அவர் எச்சரித்தார். சில ஆண்டுகள் கழித்து சப் பிரைம் கிரைசிஸ் வடிவில் அந்த குழு வெடித்தது. இப்படி வரலாறுதோறும் ஏற்படும் குமிழ்கள் மற்றும் அவற்றிக்கு காரணமாக மிகை ஆர்வம் பற்றியும் ஷில்லர் விரிவாக ஆய்வு செய்து எழுதியும் பேசியும் வருகிறார்.

அப்படிப்பட்ட ஷில்லர் தான்,

தற்போதைய சூழலில் மிகை ஆர்வத்திற்கு அழகான உதாரணம் பிட்காயின் என கூறியிருக்கிறார். பிட்காயின் கதைக்கு உள்ள ஊக்கம் தரும் தன்மையும், அதன் பின்னே உள்ள மர்ம நிறுவனர் கதையும் சேர்த்து இதன் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது என்கிறார் ஷில்லர். 

பிட்காயினை என்னால் புரிந்து கொள்ள முடியும், அதில் யூகம் செய்து பணம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு இருப்பதாகவும் ஷில்லர் கூறியிருக்கிறார்.

ஆக, பிட்காயின் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியை நீங்கள் ஷில்லரின் பேட்டியில் இருந்து கூட துவக்கலாம்: https://qz.com/1067557/robert-shiller-wrote-the-book-on-bubbles-he-says-the-best-example-right-now-is-bitcoin/

இனி திங்கள் தோறும் சந்திப்போம்...

கட்டுரையாளர் சைபர்சிம்மன் – பத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர், இணையம் தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர். தகவல் திங்கள் சிறப்புக் கட்டுரை இனி ஒவ்வொரு திங்கள் கிழமையும் தமிழ் யுவர்ஸ்டோரி-ல் இடம் பெறும். இது தொழில்நுட்பம், இணையம் மற்றும் புதிய அம்சங்கள் பற்றி அலசும் கட்டுரையாகும்.

Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share
Report an issue
Authors

Related Tags