பதிப்புகளில்

பிச்சை எடுத்த ஜெயவேல் கேம்பிரிட்ஜ் வரை செல்வதற்கு உதவிய சென்னை தம்பதிகள்!

ஜெயவேல் போல் தெருவில் வாழும் பலரின் வாழ்வை மாற்றியுள்ள உமா மற்றும் முத்துராமன், சுயம் அறக்கட்டளை மூலம் இந்த உதவிகளை செய்கின்றனர்.

YS TEAM TAMIL
12th Sep 2017
Add to
Shares
48
Comments
Share This
Add to
Shares
48
Comments
Share

அருணாச்சலம் விமான பராமரிப்பு கோர்ஸ்காக ஃபிலிஃபைன்ஸ் சென்றார். குழந்தைப் பருவ விதவையான மரியா என்பவர் அப்போலோ மருத்துவமனையின் ரெசிடென்ஸியில் ஈடுபட்டுள்ளார். உமா மற்றும் முத்துராமன் தம்பதிகளின் முயற்சிகளால் இப்படிப்பட்ட இரண்டு லட்சம் வெற்றிக்கதைகள் உருவாகியுள்ளன.

வறட்சி காரணமாக தங்களது விளைநிலமும் வாழ்க்கையும் வீணானதால் நெல்லூரைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகனான ஜெயவேல் தனது குடும்பத்துடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

ஆனால் சென்னையிலும் அவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் வீடின்றி தெருக்களில் திரிந்து பிச்சை எடுத்தனர். நிலைமை மேலும் மோசமாகும் விதத்தில் அவரது அப்பா இறந்துபோனார். அவரது அம்மா மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.

அப்போது கல்வியறிவும் வழிகாட்டுதலுமின்றி இருந்த ஜெயவேல் வேறு வழியின்றி பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது அம்மாவின் புதிய கெட்டபழக்கத்தில் அவரையும் ஈடுபடுமாறு வலியுறுத்தினார் அவரது அம்மா. இல்லையெனில் தன்னை துன்புறுத்திக்கொள்வதாக ஜெயவேலின் அம்மா மிரட்டினார். வார இறுதிநாட்களிலும் வேலை செய்தும் பிச்சையெடுத்தும் பணம் திரட்டி அவரது அம்மாவிற்கு மது வாங்கிக்கொடுப்பார். அவ்வாறு செய்து அம்மாவை திருப்திபடுத்தியதால் வார நாட்களில் தனது லட்சியத்தில் கவனம் செலுத்தவும் பணி தேடவும் முடிந்தது.

உமா மற்றும் முத்துராமன்

உமா மற்றும் முத்துராமன்


உமா வெங்கடாசலம் மற்றும் முத்துராம் நாராயணசாமி இருவரும் இணைந்து அரசு சாரா நிறுவனமான 'சுயம் அறக்கட்டளை'யை நடத்துகின்றனர். இவர்கள் ஜெயவேலுக்கு அறிமுகமாகும்போது இப்படிப்பட்ட சமூகத்தினரை அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்றும் அவர்களது நேரத்தையும் முயற்சியையும் வீணாக்கி நம்பவைத்து ஏமாற்றிவிடுவார்கள் என்றும் குற்றம்சாட்டினர். வீட்டிற்குள்ளேயே அனுமதிக்கவில்லை. இருந்தும் இந்த தம்பதி முயற்சியிலிருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு சென்று தங்களது நோக்கம் என்ன என்பதை எடுத்துரைத்து ஜெயவேலை சம்மதிக்கவைக்க முயன்றனர். 

இறுதியில் ஜெயவேல் குறித்த ஒரு திரைப்படத்தை ’பேவ்மெண்ட் ஃப்ளவர்’ என்கிற பெயரில் உருவாக்கினர். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால் ஜெயவேல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் பொறியியல் பிரிவில் படிப்பதற்குத் தேவையான நிதியை உயர்த்த உதவியது.

உமா மற்றும் முத்துராம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் வறுமையிலிருந்தும் கல்வியறிவில்லாத நிலையிலிருந்தும் விடுபட தங்களது தரமான அரசு சாரா நிறுவனம் வாயிலாக உதவினர். இருவரும் சேர்ந்து பயனாளிகள் ஒவ்வொருவரையும் சிறப்பாக உணரவைத்தனர்.

இளம் வயதிலேயே சேவை புரியத்துவங்கினார்

உமா முத்துராமிற்கு பத்து வயதிருக்கையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் கற்றுக்கொடுத்தார். ஏனெனில் அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது அம்மா அறுபது ஆண்டுகளாக தேவையிருப்போருக்கு உதவியளித்து வந்தவர். 

“உயர் வகுப்புகளுக்கு நியமிக்கப்படும்போது அவர் என்னிடம்தான் கணிதம் கற்றுக்கொள்வார். வயது, பொருளாதார பின்னணி, சாதி போன்றவற்றைக் கடந்து அனைவரிடமிருந்தும் எவ்வாறு கற்றுக்கொள்வது என்பதை அவர்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்,” என்றார் உமா.

குடிசைப் பகுதியில் இருந்த பள்ளியில் அவரது அம்மா பணியாற்றியதால் தொடர்ந்து அங்கிருந்த மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் அனுபவமும் உமாவிற்கு கிடைத்தது. ”இது நான் ட்யூஷன் எடுப்பதற்கு உந்துதலாக அமைந்தது. வீதிகளில் இருந்த மக்களுக்காக அவர்களது பல்வேறு தேவைகளுக்காக பணியாற்றத் துவங்கினேன். கல்வி உதவி துவங்கி ரத்த தானம் ஏற்பாடு செய்தல், கண் பரிசோதனை முகாம் அமைத்தல் என மருத்துவமனைகளுக்கு தன்னார்வலராக பணியாற்றுதல் உள்ளிட்ட பணிகளில் வார இறுதி நாட்களில் ஈடுபட்டார் உமா.

மற்றவர்களின் சேவைக்காக தனது வாழ்க்கையே அர்ப்பணித்தவர்களின் வரிசையில் உமாவும் செயல்பட்டார். “அருகிலிருப்பவர்கள், உடன் படித்தவர்கள் ராமகிருஷ்ணா மிஷனில் பணியாற்றிய ஆசிரியர்கள் என பல தரப்பிலிருந்தும் எனக்கு ஆதரவு கிடைத்தது.” என்று நினைவுகூர்ந்தார்.

உமா படிப்பில் முதலிடம் வகித்தார். பிஎஸ்சி கணிதம், எம்எஸ்சி கணிதம், எம்பிஏ, எம்எஸ்இஎம், பிஜிடிசிஏ, ஹிந்தியில் சாஹித்ய ரத்னா, ஹிந்தியில் பிஎட், சமஸ்கிருதம், ஒரு பிஎச்டி என கணிதம், அறிவியல், கல்வி மற்றும் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் 10 பட்டங்களும் சான்றிதழ்களும் பெற்றார். அதே சமயம் தனது தன்னார்வல பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

முத்துராம் ஐந்து வயது முதலே உமாவை நன்கறிவார். இளம் வயதிலேயே உமா சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கையில் முத்துராம் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். இருவரும் தங்களது மற்றொரு நண்பருடன் இணைந்து சிறியளவில் நிதியை சேகரிக்கத் துவங்கினர். அதாவது தங்களது பாக்கெட் மணியிலிருந்து ஒவ்வொரு மாதமும் பத்து ரூபாய் ஒதுக்கி நலிந்த மக்களுக்கு உதவினர்.

முத்துராம் பிகாம், எம்காம், எம்எஸ் ஆகியவை படித்தார். நிதி மற்றும் அக்கவுண்டிங் பிரிவில் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். 2016-ம் ஆண்டு முழுநேரமாக சுயம் மேற்கொண்ட பணிகளில் இணைந்தார். உமாவை திருமணம் செய்துகொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தன்னுடைய பணியை ராஜினாமா செய்தார். தனக்கு சமூகப் பணிகளிலேயே நாட்டம் இருப்பதாக அவரது மேலதிகாரியிடம் தெரிவித்தார்.

திருப்புமுனை

1997-ல் உமா எம்எஸ்சி கணிதம் படித்துக்கொண்டிருந்தபோது திருநெல்வேலியின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் நிலை குறித்து அறிந்தார். தனது குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அவர் வெண்கல விளக்கு தயாரிக்கும் ஒரு யூனிட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விபத்து காரணமாக அவரது உணவுக் குழாயும் மூச்சுக்குழாயும் உருகிய வெண்கலத்தால் சேதமடைந்தது. திருநெல்வேலியிலுள்ள அரசு மருத்துவமனை முறையான சிகிச்சையளிக்காமல் அவரது தொண்டைக்குக் கீழ் பொருத்தப்பட்ட உணவுக் குழாயுடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

சற்றும் சிந்திக்காமல் உமா அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க சம்மதிக்கும் மருத்துவரை தீவிரமாக தேடினார். இறுதியாக கீழ்ப்பாக்கதிலுள்ள ரிஜிட் மருத்துவமனையின் மருத்துவரான டாக்டர் ஜெ எஸ் ராஜ்குமார் 13 அறுவைசிகிச்சை தேவைப்பட்ட சிகிச்சையை அவருக்கு வழங்க ஒப்புக்கொண்டார். சிகிச்சை முடியும்வரை உமா அவர் அருகிலேயே இருந்தார். தனது வீட்டிலேயே தங்கவைத்து பராமரித்தார். அங்கிருந்தே அவர் 12-ம் வகுப்பு தேர்வெழுதவும் உதவினார்.

ஐந்து வயது சிறுவன் ஒருவனை அவரது தந்தை விற்றுவிடும் முயற்சியில் இருந்தார். உமா அவரைக் காப்பாற்றினார். குடிசைப்பகுதியில் இப்படிப்பட்ட பயங்கரமான சம்பவங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்தார். அவர்களது துயரங்களை நீக்குவதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டும் என்று தீர்மானித்தார். கல்விதான் இதற்கு சரியான தீர்வாக அவருக்கு தோன்றியது. இதுதான் அவர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என நினைத்தார். மேலும் இப்படிப்பட்ட அனைவருடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தால் அவர்களது வளர்ச்சியை கண்காணிக்க முடியும் என நினைத்தார் உமா. இவ்வாறுதான் சுயம் அறக்கட்டளையை 1999-ம் ஆண்டு உருவானது. இதன்கீழ் ஆவடியில் சிறகு மாண்டசரி பள்ளியும் வியாசர்பாடியில் பாரதமாதா நர்சரி மற்றும் ப்ரைமரி பள்ளியும் துவங்கினார்.

வழக்கமான தொண்டு பள்ளிகள் போலல்லாத செயல்பாடு

இரண்டு பள்ளிகளும் கான்செப்ட் சார்ந்த கற்றலில் கவனம் செலுத்தியது. அதாவது விண்டோ சார்ந்த ஊடாடும் அறிவியல் கான்செப்டுகள், ரூஃப் டாப் அறிவியல் கான்செப்டுகள் மற்றும் கழிவுகளற்ற வாழ்க்கைமுறையை கற்றுக்கொடுத்து ஊக்குவிக்கும் முறை போன்றவற்றை பின்பற்றினர். 

image


“என்னுடைய மாணவர்கள்தான் என்னுடைய புதுமையான செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றனர். அவர்கள் எப்படி ஓடவேண்டும், பறக்கவேண்டும் என்று விரும்புகிறார்களோ அதைக் கூர்ந்து கவனித்தே வேறுபட்ட மதிப்பீடு மற்றும் வழிமுறை அமைப்புகளை துவங்கினோம்,” என்றார் முத்துராமன்.

கல்வியில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜெ ராபின்சன்னை இணைத்துக்கொண்டு அவரது பெரும்பாலான புரட்சிகரமான கற்றல் உத்திகளை பயன்படுத்திய முதல் பள்ளியாக மாறியது. அதாவது சுருள் சுருளாக, செங்குத்தாக, ஏற்ற இறக்கமாக என வெவ்வேறு வடிவங்களில் எழுத உதவும் எட்டு-பேட்டர்ன் நோட்புக்குகளை அறிமுகப்படுத்தினர். இது மனதைத் தூண்டி ஆர்வமாக கற்க உதவும். அவரது அடுத்த புதுமை icono-write உத்தி. இதில் வார்த்தைகளும் படங்களும் இணைக்கப்பட்டு கலை உருவாக்கப்படும். இதுவும் இப்பள்ளியில் முதல்முறையாக பாடதிட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

”அனாதை குழந்தைகள், பெற்றோர்கள் இருவரில் ஒருவரிடம் வசிக்கும் குழந்தைகள், நாடோடி பழங்குடியினர், பிச்சைக்காரர்கள், குடிசைப்பகுதி குழந்தைகள், முதல் தலைமுறை கல்வி கற்போர், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினருக்காக பணியாற்றுகிறோம். அனைத்தும் ஒருவர் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதன் மூலமே செயல்படுகிறது. அதிர்ஷ்டவசமாக எங்களது மாணவர்களும் அவர்களது பெற்றோரும் அவர்களது நண்பர்கள் மற்றும் சமூகத்தினர் எங்களுடன் இணைய உதவுகின்றனர். ஆனால் இது எளிதாக நடக்காவில்லை. 

பயனர்களின் பெற்றோர்களில் பலருக்கு கல்வியின் மதிப்பு தெரியவில்லை. அவர்களை சம்மதிக்க வைத்து ஆலோசனை வழங்கினோம். 20 வருடங்களில் பல வகையான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை பார்த்திருக்கிறோம். எங்களது கேமிராக்களை உடைப்பார்கள். குடித்து விட்டு வீட்டுக்குள் நுழையவோ அவர்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசவோ அனுமதிக்கமாட்டார்கள்,” என்று குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த பராமரிப்பு

நாடோடி பழங்குடியினருடன் தொடர்ந்து பணியாற்றியதன் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதிலும் அங்கீகரிக்கப்படுவதிலும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தெரிந்துகொண்டார். 500 குடும்பங்கள் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அட்டைகள், வசிக்க வீடுகள் மற்றும் நொமாடிக் ட்ரைப் அல்லது NT என்கிற தகுதி மற்றும் அரசாங்க ஒதுக்கீடு ஆகியவற்றை அளிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

”அவர்கள் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர். அங்கீகாரமற்ற சமூகத்தில் வசிக்கின்றனர். எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்குப் பிறகு என்டி என பட்டியலிடப்படுவதால் இந்த ஓரங்கட்டப்பட்ட சமூகத்தினரை முன்னிலைப்படுத்தமுடியும்,” என்றார். 

அவர்களில் இரு குழந்தைகள் எஸ்சி சான்றிதழ் பெற்றுள்ளனர். 60 மாணவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர் பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளனர்.

சுயம் அனைத்து நிலைகளிலும் பணிபுரிகிறது. சிறகு மாண்டிசரி பள்ளி இதுவரை 1,500 குழந்தைகளுக்கு கல்வி அளித்துள்ளது. பாரதமாதா மூலம் 2000 பேர் பலனடைந்துள்ளனர். தேவை இருப்போருக்காக சிறகு ஹோம் உள்ளது. இதில் 1,50,000 பேருக்கு உணவளிக்கப்படுகிறது. 500 மாணவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேற்படிப்பை மேற்கொள்ள வாழ்க்கைகான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், நிதி ஆகியவற்றின் மூலம் இவர்கள் உதவியுள்ளனர். மெர்க் பார்மசிட்டிகல்ஸ் ‘ட்ரூ ஹீரோ’ என உமாவை பாராட்டியுள்ளது.

”நோபல் பரிசு பெறுபவர்களை உருவாக்க விரும்புகிறோம். நான் என்னுடைய மொத்த வாழ்க்கையையும் இதற்காக அர்ப்பணித்துள்ளேன். வேறு எந்த பணியிலும் எனக்கு நாட்டமில்லை. நான் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் அறக்கட்டளைக்காகவே அர்ப்பணிக்கிறேன்,” என்றார் உமா.

நிதி திரட்டுவதும் தங்களது பணியின் மீது உறுதியான உணர்வு கொண்ட தன்னார்வலர்களை கண்டறிவதும் இந்த தம்பதிக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. ”நாங்கள் நிதிக்காக இங்கும் அங்கும் சென்றுகொண்டே இருக்கிறோம். நல்ல மனம் படைத்த எண்ணற்ற மக்கள் இந்தியாவில் உள்ளனர். சிறு துளியே பெரு வெள்ளமாகிறது. இந்த அமைப்பில் ICSE பாடதிட்டத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை கண்டறிவதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அடிமட்ட அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற வலுவான எண்ணத்துடன் எங்களுடன் தங்கி பணிபுரியக்கூடியவர்களை எதிர்நோக்கியுள்ளோம்,” என்று விவரித்தார் உமா.

”அறக்கட்டளையின் நிதிகளை நான் கவனித்து வருகிறேன். உமா அன்றாட பணிகளை கவனித்து வருகிறார். தினசரி நன்கொடைகளில் நாங்கள் இயங்கி வருகிறோம். மேற்படிப்பிற்கு குறிப்பாக வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு அதிக செலவாகும். இதனால் தற்போது அதிக நிதியுதவி எங்களுக்கு தேவைப்படுகிறது,” என்றார் முத்துராம்.

இப்படிப்பட்ட போராட்டங்களின் மதிப்பை ஜெயவேல் போன்றோரின் வெற்றிக்கதைகள் உணர்த்துகிறது. அருணாச்சலம் என்கிற மற்றொரு மாணவர் விமான பராமரிப்பு கோர்ஸ்காக ஃபிலிஃபைன்ஸ் சென்றுள்ளார். கலா உடலியல் பயின்று வருகிறார். முன்பு குழந்தைப் பருவ விதவையான மரியா என்பவர் அப்போலோ மருத்துவமனையின் ரெசிடென்ஸியில் ஈடுபட்டுள்ளார்.

”எங்கள் மாணவர்கள் அனைவரும் சிறப்பாக உள்ளனர். ட்ரஸ்டீக்களாக எங்களுடன் இயங்க விரும்புகின்றனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார் உமா.

இவர்களது சமூகப் பணியில் நீங்களும் பங்களிக்க விரும்பினால் uma@suyam.org என்கிற இ-மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பலாம். அல்லது 8148151987 / 914442826303 என்கிற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை கீழ்கண்ட கணக்கிற்கு மாற்றலாம்.

Suyam charitable trust, ICICI Bank Savings account, 603101272985, Sowcarpet Branch, IFSC CODE: ICIC0006031

Add to
Shares
48
Comments
Share This
Add to
Shares
48
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக