பதிப்புகளில்

மனநல ஆலோசனை: ஆன்லைனில் முனைப்பு காட்டும் 'யுவர்தோஸ்த்'

29th Nov 2015
Add to
Shares
36
Comments
Share This
Add to
Shares
36
Comments
Share

"நான் ஐ.ஐ.டி. - கவுகாத்தியில் படித்துக் கொண்டிருந்தபோது, என் விடுதி தோழி தற்கொலை செய்துகொண்டார். தனக்கான பணியிடம் குறித்த கவலையிலேயே இருந்தவர். அவருக்கு சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால் அந்தத் துயரத்தை தவிர்த்திருக்க முடியும். இத்தனைக்கும் எங்கள் கல்வி நிறுவன வளாகத்தில் ஆலோசர்களும், உளவியல் நிபுணர்களும் இருந்தனர். மாணவர்கள் எந்த நேரத்திலும் அவர்களை அணுகலாம். அப்படி இருந்தும் அந்தத் துயரம் நிகழ்ந்துவிட்டது" என்று தொடங்கிறார் யுவர்தோஸ்த் (YourDOST) நிறுவனர் ரிச்சா சிங்.

image


இத்தகைய பிரச்சினைகளையொட்டி ரிச்சா தீவிரமாக இயங்கித் தொடங்கிய பிறகு, தன்னைச் சுற்றியுள்ள பலரும் வேலை சார்ந்த நெருக்கடிகளாலும், உறவுச் சிக்கல்களாலும் மன அழத்தங்களுக்கு ஆளாவதைக் கண்டறிந்தார். எனினும், சமூகப் பார்வைக்குப் பயந்து யாருமே தங்களது பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச முன்வருவது இல்லை.

இணைந்த கைகள்

மக்களிடையே தொடர்புகளை எளிதாக்கக் கூடிய தொழில்நுட்ப உலகத்தில், இன்று நம்மில் பலரும் தனிமையில் வாடுவதாகவே ரிச்சா நம்புகிறார். தன் நண்பர்கள் சிலர்களுடன் இணைந்து யுவர்தோஸ்த் என்ற ஓர் உணர்வுபூர்வ பகிர்வுத் தளத்தை உருவாக்கினார். ஒருவர் இங்கே உளவியல் நிபுணர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உளவியல் ஆலோசகர்களின் உறுதுணையை நாடலாம்.

தன் எண்ண ஓட்டத்தை புனீத் மனுஜாவுடன் பகிர்ந்த ரிச்சா, அதை தொழில் யோசனையாக உருவாக்க முயற்சி செய்தார். இருவருக்குமே உளவியல் என்ற துறை புதிது என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் பின்னடைவு இருந்தது. எனவே, உளவியல் நிபுணர்கள் பலரையும் சந்திப்பது என முடிவு செய்தனர். அதன்படி, பலரையும் சந்தித்து தங்கள் முயற்சிகள் குறித்துப் பேசினர். தங்களிடம் உளவியல் ஆலோசகர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களின் அடிப்படையில் இணையத்தில் வலைப்பதிவுகளாக எழுதித் தள்ளினர்.

தளத்துக்கான கோடிங் விஷயத்தில் ரிச்சாவின் நண்பர் சத்யஜீத் உதவினார். எனினும், அவரால் வசிப்பிடம் சார்ந்த சில காரணங்களால் தொடர முடியவில்லை. எனவே, சி.டி.ஓ.வாக சேர்ந்த பிரகார் வர்மாவை ரிச்சா சந்தித்தார். "எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, கோஸ்தா காஃபி நிலையத்தில் நாங்கள் சந்தித்தோம்; ஒரு நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் எங்கள் திட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவர் சம்மதித்தார்" என்று சிலாகிக்கிறார் ரிச்சா.

நிபுணர்கள் மூலம் உதவக் கூடிய முக்கிய அம்சங்கள்

1. ஆரோக்கியமான தனிப்பட்ட உறவுகளை உருவாக்குதல்.

2. வேலைத் திறனையையும் பணியில் திருப்தியையும் சமநிலைப்படுத்துதல்.

3. உங்கள் இலக்குகளை எட்டுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வழிவகுத்தல்.

4. தன்னம்பிக்கையைக் கூட்டுதல்.

5. தனிப்பட்ட, சமூக மற்றும் நட்பு வட்டாரங்கள் என பலச் சூழல்களில் இருந்தும் வரக்கூடிய மனநெருக்கடிகள் அனைத்தையும் அணுகுவதற்காக திறமையை மேம்படுத்துதல்.

இந்த அனைத்து வகையான ஆலோசனைகளுமே உரிய நிபுணர்களைக் கொண்டே வழங்கப்படுகிறது.

ஓர் ஆன்லைன் தளம் வழியாக, பயனாளர்கள் தங்களது பிரச்சினைகளை உடனடியாக பகிர்வதற்கு யுவர்தோஸ்த் அனுமதிக்கிறது. இவர்களிடம் 75 நிபுணர்கள் கொண்ட குழு இயங்குகிறது. இதில், மிகக் குறிப்பிடத்தக்க அம்சம் என்றால், அது, தங்கள் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு நாட விரும்புவோரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்துமே முழுமையாக காக்கப்படுகிறது. அதாவது, அனானிமசாகவே கருதப்படுவர்.

இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் நம் நாட்டில் மனநல பாதிப்புளுக்காக உதவி நாடுவோரின் கவலைகள் வெகுவாகக் குறைக்கப்படுகிறது. மனநலனுக்காகவும் உணர்வு ரீதியிலும் உதவி தேவைப்படுவோருக்கு உடனடியாக நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கு தொழில்நுட்பம் நல்ல துணையாக இருக்கிறது என்கிறார் ரிச்சா.

தவறான புரிதல்கள்

"எனினும், ஆங்கிலத்தில் 'மென்டல்' (Mental) என்ற பதத்தை பைத்தியம் என்ற சொல்லுடன் பொருத்திப் பார்க்கும் போக்கு என்பது அபத்தமானது. இதனால், மனநல ஆலோசனைப் பெறுவது என்பதே நம் சமூகத்தில் விலக்கப்பட்ட ஒன்றாகிறது. அப்படி, உதவியை நாடுவது என்பதை ஒரு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. இதனால், நம் பிரச்சினைகளை நமக்குள் போட்டுப் புழுங்கிக்கொண்டு ஒடுங்கிப் போகிறோம்" என்று தெறிக்கிறார் ரிச்சா.

சமூக அறியாமைக்கும், அதன் பாதகங்களுக்கும் நம்மை பறிகொடுத்திடாத வகையில், இதுபோன்ற இடைவெளிகளை நிரப்புவதற்கு தொழில்நுட்பம் கைகொடுக்கிறது என்று நம்புகிறார் ரிச்சா.

இந்தியாவில் மிகப் பெரிய களமாக இருக்கிறது மனநலத் துறை. இதற்குள்ளேயே மனநலம் சார்ந்த சவால்களில் ஒன்று இருக்கிறது. அறிவுரைகளைக் கூறுவதும், மருந்துகளை எழுதித் தருவதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகாது. உரிய ஆலோசனைகளை வழங்கி, இறுதி முடிவு எடுப்பதற்கான அதிகாரத்தை உங்களிடமே தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும். "மனநலத் துறை இன்று பிரபலங்கள் முதல் முதலீட்டாளர்கள் வரை பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், மனநலத் துறையை நாங்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம்" என்று அடுக்கிறார் ரிச்சா.

கடந்த டிசம்பர் 2004-ல் இருந்து இதுவரை 70,000 பயனாளர்களால் நாடப்பட்டிருக்கிறது யுவர்தோஸ்த். ஒவ்வொரு மாதமும் 40 சதவீத வளர்ச்சியை எட்டுகிறது. தற்போது உள்ள பதிவு செய்யப்பட்ட பயனாளர்களின் எண்ணிக்கை 10,000. ஒவ்வொரு நாளும் 75 நிபுணர்கள் மூலம் சுமார் 300 பயனர்களுடன் தனித்தனியாக கலந்தாலோசனைகள் நிகழ்த்தப்படுகிறது.

"ஆரம்பக்கட்ட செயல்பாடுகளுக்குப் பிறகு, 4,00,000 டாலர்கள் (ரூ.2.5 கோடி) அளவிலான முதலீட்டைத் திரட்டினோம். இது தனித்துவமான யோசனையை உள்ளடக்கிய முயற்சி என்பதால் பனீந்திர சாமா (ரெட்பஸ் நிறுவனர்), அப்ரமேயா ராதாகிருஷ்ணா (டாக்ஸி ஃபார் ஷ்யூர் நிறுவனர்) அனீஷ் ரெட்டி (கேப்பிலரி நிறுவனர்) எனக் குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்களைக் கவர்ந்திட முடிந்தது. அத்துடன், சஞ்சய் ஆனந்த்ராம் (சீட்ஃபண்ட்), வெங்க் கிருஷ்ணன் (நூவென்ட்ச்சர்) முதலான ஸ்பான்ஸர் முதலீட்டார்களையும் ஈர்த்திட முடிந்தது" என்கிறார் ரிச்சா.

மனநலத் துறை என்பது ஸ்டார்ட்அப்-களுக்கு நல்ல எதிர்காலமும் தேவையும் மிகுந்த ஒன்றாகவே இன்னமும் நீடிக்கிறது. தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் ஆலோசனை வகுப்புகளை எடுக்கக் கூடிய நபர்களின் உதவிக்காக யுவர்தோஸ்த் காத்திருக்கிறது.

இந்தியச் சந்தையை முழுமையாக ஈர்க்க விரும்பும் யுவர்தோஸ்த், மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் - வேலை வாழ்க்கை மற்றும் படிப்பு சார்ந்த வாழ்க்கை அனைத்துக்கும் மனநலன் சார்ந்த தீர்வுக்கான ஒற்றைத் தளமாகத் திகழ்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. "எங்கள் முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் திரட்டிய முதலீடுகள் பெரும் துணையாய் இருக்கின்றன. இந்திய அளவில் முக்கியமான நிபுணர்களை உள்ளட்டக்கிய தளமாக உருவாக்குவதில் தீவிரமாக இயங்கி வருகிறோம்" என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ரிச்சா.

புள்ளிவிவரம் சொல்வது என்ன?

இந்தியா மன அழுத்தம் பாதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கையில் முதன்மை வகிக்கும் நாடுகளில் ஒன்றாகவே இருப்பதாக உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் 2010 ஆய்வின்படி, 15 முதல் 35 வயது வரையிலானவர்களின் மரணங்களுக்கான காரணப் பட்டியலில் 'தற்கொலை' மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவிலான தற்கொலை மரணங்களில் 32 சதவீதத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்தியா.

இந்தப் போக்கை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒயிட் ஸ்வான் ஃபவுண்டேஷன், லிவ் லவ் ஃபவுண்டேஷன் மற்றும் ஹெல்த் எமிண்ட்ஸ் போன்ற பல அமைப்புகளும் நிறுவனங்களும் மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இயங்கி வருகின்றன.

யுவர்தோஸ்த் வலைதளத்தை நாட yourdost.com

ஆக்கம்: சிந்து காஷ்யப் | தமிழில்: கீட்சவன்

Add to
Shares
36
Comments
Share This
Add to
Shares
36
Comments
Share
Report an issue
Authors

Related Tags