பதிப்புகளில்

ஒரு வைரல் புகைப்படம் உருவாக்கிய நவீன புரட்சியாளன்...

posted on 29th October 2018
Add to
Shares
47
Comments
Share This
Add to
Shares
47
Comments
Share

ஒரு புகைப்படம் வைரலாக பரவுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வரலாற்றின் இழையை காண முடிவது ஒரு காரணமாக இருக்கும் போது, வைரலாகும் புகைப்படம் அழுத்தமாக செய்தி சொல்வதாகவும் மாறிவிடுகிறது. 

அண்மையில் வரைலான புகைப்படம் ஒன்று அதன் பாத்திரமான பாலஸ்தீன இளைஞனை நவீன புரட்சியாளனாக பேச வைத்து, பாலஸ்தீன பிரச்சனை குறித்தும் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இணையத்தை கவர்ந்த நவீன புரட்சியாளர் 

இணையத்தை கவர்ந்த நவீன புரட்சியாளர் 


இந்த புகைப்படம் வைரலான கதையை பார்க்கும் முன், அதற்கான பின்னணி பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம்.

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை நிரந்தர தீர்வு இல்லாமல் அந்த பகுதியை பிரச்சனை பூமியாக தொடர வைத்திருக்கிறது. தலைப்புச்செய்தியில் இடம்பிடிக்கும் போது மட்டுமே இந்த பிரச்சனையை உலகம் கவனத்தில் கொள்கிறது. ஆனால், சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக பாலஸ்தீனர்களுக்கு இது இடைவிடாத போராட்டமாக இருக்கிறது.

இஸ்ரேல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில், பாலஸ்தீனர்கள் காஸா பகுதியில் தங்கள் உரிமையை நிலைநாட்ட போராடி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல், காஸா பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிரத்து சராசரி பாலஸ்தீனர்கள் போராடி வருகின்றனர். வார்ந்தோறும் தொடரும் போராட்டமாக இது நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கற்களை வீசி எறியும் போராட்டமாக இது நடைபெற்று வருகிறது.

கடந்த வாரமும் இதே போல போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான், இணையத்தில் வைரல் சூறாவளியாக உலா வந்து உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. 

இளைஞன் ஒருவர் மேல் சட்டை இல்லாமல் ஒரு கையில் பாலஸ்தீன கொடியை ஏந்தியபடி, இன்னொரு கையால் கல்லை வீசி ஏறியும் காட்சி அந்த புகைப்படத்தில் பதிவாகி இருந்தது. பார்த்தவுடனே கவனத்தை ஈரக்கக் கூடிய துடிப்பான காட்சி தான் என்பதால் இந்த புகைப்படம் பகிர்வுக்கு ஏற்றதாக அமைந்தது. அதற்கேற்ப பலரும் இந்த புகைப்படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் இது வெறும் புகைப்படம் அல்லவே. எதிர்ப்பை வெளிப்படுத்தி உரிமைக்கு குரல் கொடுக்கும் புகைப்படம் அல்லவா? அதன் காரணமாக, இந்த படம் போராட்ட களத்துடனும், அதன் பின்னே உள்ள வரலாற்றுடனும் தொடர்புப் படுத்தப்பட்டது. பலரும், இந்த காட்சியை பைபிள் கதையான கோலியத் மற்றும் டேவிட்டிற்கு இடையிலான மோதலுடன் தொடர்பு படுத்தியிருந்தனர்.

பாலஸ்தீன போராட்ட ஆதரவாளரான டிவிட்டர் பயனாளி யூசுப் முனயேர் என்பவர்,

’காமிராவை கையில் வைத்திருக்கும் மைக்கேலேஞ்சலோ, கோலியத்தை எதிர்கொள்ளும் டேவிட்டின் செயலை காட்சிப்படுத்தியிருக்கிறது’ என டிவிட்டரில் இது பற்றி குறிப்பிட்டிருந்தார். 

பெரும் சக்தி படைத்த கோலியத்தை, சாதாரண வீரனான டேவிட், கவண் கல்லை வைத்துக்கொண்டு வென்ற கதையை அறிந்தவர்களுக்கு இந்த ஒப்பீடு கச்சிதமாக பொருந்துவுதாக தோன்றியது. மேலும் பலர் இதே முறையில் கருத்து தெரிவித்து இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டனர்.

இன்னும் சிலர் பிரெஞ்சு புரட்சியின் போது தீட்டப்பட்ட சுதந்திரத்தின் சின்னமாக திகழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ஓவியத்துடன் இந்த காட்சியை ஒப்பிட்டிருந்தனர். 

”மக்களை வழிநடத்தும் சுதந்திரம்’ எனும் தலைப்பிட்ட அந்த ஓவியத்தில் மேலாடை இல்லாத வீர பெண்மணி ஒருவர் தேசியக்கொடியை ஒரு கையில் ஏந்தியபடி இன்னொரு கையால் துப்பாக்கி ஏந்தியபடி போராட்டத்தை வழி நடத்துவார். இந்த ஒப்பீடு மற்றும் இரண்டு காட்சிக்கும் இடையே இருந்த கருத்தொற்றுமை புகைப்படத்தின் தீவிரத்தை மேலும் அதிகமாக்கியது.

இதனையடுத்து மேலும் பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். இதனிடையே மத்திய கிழக்கு பேராசிரியர் லாலே கலிலி (Laleh Khalili) போன்றவர்களும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டனர். 

இவரது பதிவு மட்டும் 80 ஆயிரம் முறை லைக் செய்யப்பட்டு, 30 ஆயிரம் முறைக்கு மேல் பகிரப்பட்டதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது. யூசுப் பகிர்ந்து கொண்ட பதிவும், 20 ஆயிரம் முறைக்கு மேல் ரிடீவிட் செய்யப்பட்டது.

புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியம் 

புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியம் 


இதன் விளைவாக இந்த புகைப்படம் வைரலாக பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஒரு தரப்பினர் எதிர்ப்பின் அடையாளமாக இந்த புகைப்படத்தை வர்ணித்தனர். அதில் இடம்பெறும் இளைஞனை நவீன புரட்சியாளராகவும் சித்தரித்தனர். ஆனால், எதிர் தரப்பு கருத்துக்களும் பதிவாயின என்றாலும் தொடர்ந்து இந்த வைரல் படம் கவனத்தை ஈர்த்தது.

இதனிடையே இந்த புகைப்படத்தை எடுத்தது கெட்டி இமேஜஸ் புகைப்பட ஏஜென்சியை சேர்ந்த முஸ்தபா ஹோஸ்னா எனும் புகைப்படக் கலைஞர் என்ற விவரம் தெரிய வந்தது. அல்ஜஸிரா தொலைக்காட்சி, புகைப்படத்தில் இருந்த இளைஞரை தேடி கண்டுபிடித்து அவரைப்பற்றிய தகவலையும் வெளியிட்டது.

காஸா பகுதியில் வசிக்கும் அபு அம்ரோ எனும் அந்த இளைஞர், வாரந்தோறும் போராட்டத்தில் கலந்து கொள்வது தனது வழக்கம் என்றும், எப்போதும் ஒரு கையில் கொடியை பிடித்தபடி இருப்பேன் என்றும் கூறியிருந்தார். கொடியை பிடிக்காமல் இருந்தால், கல்லை எளிதாக எறியலாம் என நண்பர்கள் கிண்டல் செய்தாலும் தான் எப்போதும் கொடியை வைத்திருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். ஒருவேளை போராட்டத்தில் கொல்லப்பட்டால், அந்த கொடியையே தனது உடல் மீது போர்த்த வேண்டும் என்றும் அவர் உணர்வு பொங்க கூறியிருந்தார்.

வைரலாக பரவிய புகைப்படத்தின் நாயகனாகி, நவீன புரட்சியாளராக கருதப்பட்டாலும், அம்ரோவுக்கு சமூக ஊடக கணக்கு எதுவும் இல்லை,. இந்த படம் வைரலாக பரவியதை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டதாக கூறும் அம்ரோ, அந்த இடத்தில் புகைப்படக் கலைஞர் இருந்தது கூட தனக்கு தெரியாது, வழக்கம் போலவே போராட்டத்தில் ஈடுபட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த படம் சொல்லும் செய்தியை புரிந்து கொள்ள பாலஸ்தீன பிரச்சனையில் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றில்லை. ஆனால் இந்த படத்தையும் விரைவில் உலகம் மறந்துவிடும் என்பது தான் வேதனையான விஷயம்.

Add to
Shares
47
Comments
Share This
Add to
Shares
47
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக