இரண்டே ஆண்டுகளில் எனது வாழ்க்கையை மாற்றிய தொழில் முனைவு!

  26th Nov 2015
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது முதல் தொழிலைத் தொடங்கிய கையோடு, பணக்காரன் ஆவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அரை குறைப் பொருட்களோடு நல்ல வாடிக்கையாளர்களைத் தேடிக் கொண்டிருந்தோம். அந்தத் தொழில் சரியாகப் போகவில்லை. அடுத்த தொழிலுக்குத் தாவினேன்.

  image


  தொழில் நடத்துவது தொடர்பான ஒரு புதிய உலகம் எனக்காக கதவைத் திறந்தது. எனது சக நிறுவனர்கள் மற்றும் வழிகாட்டிகளிடமிருந்து மகத்தான விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். எங்கள் புதிய தொழிலுக்கு வெளியில் இருந்து எந்த முதலீடும் பெறக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதிகப் பணம் சேகரிக்க, ஒரு பகுதி நேர விற்பனையாளராக நிறையத் தொழில்களைப் பார்த்தேன்.

  தொழில் முனைவு எனது வாழ்க்கை பணியிலும் சிந்தனை முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.

  தோல்வி வாழ்க்கையின் ஒரு அங்கம் (ஆரம்பத் தோல்வி எனது தோல்வி அல்ல)

  தோல்வியில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். உங்களை மேம்படுத்திக் கொள்கிறீர்கள். எனவே தோல்வி அடைவதில் ஒன்றும் தவறில்லை. முதன் முதலாகத் தொழிலைத் தொடங்கிய போது எனது பணத்தையும் நேரத்தையும் இழந்த பிறகும் தொழில் முனைவை நான் விட்டு விடவில்லை.

  மற்றொரு தொழிலில் ஒரு சக நிறுவனராக இணைந்தேன். பொருள் தயார், மார்க்கெட்டிங் உரிமையாளர் நான்தான். முதலீட்டாளர்கள் பார்க்க விரும்பும் இலக்குகளை அடைந்தோம். முதலீடுகளுக்குத் தயாரானோம்.

  நாங்கள் அற்புதமான வழிகாட்டிகளையும் முதலீட்டாளர் தொடர்பையும் பெற்றிருந்தோம். எங்கள் தயாரிப்பு, தொழிலை நிர்வகிக்கும் திறன் மற்றும் எங்கள் குழு முதலீட்டாளர்களைக் கவர்ந்தது. ஆனாலும் எங்களால் பணம் திரட்ட முடியவில்லை. ஏன்? ஏனென்றால் முதலீட்டாளர்கள் விரும்புமாறு எங்கள் பொருட்களை மாற்ற நாங்கள் விரும்பவில்லை.

  முதலீட்டளார்களைப் பொருத்தவரையில் அது சரிதான். பணம் அவர்களுடையதாயிற்றே. எங்கள் முடிவும் சரிதான். பொருள் எங்களுடையதல்லவா? இந்த இழுபறியில் ஒப்பந்தம் ஏற்பட வழியில்லாமல் போனது.

  அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் எங்கள் நோக்கம் மிக உயரியது. எங்களைப் பொருத்தவரையில், எங்கள் தொழில் வெற்றிகரமாகத்தான் இருந்தது. உலகத்தைப் பொருத்தவரையில் அது தோல்வி. கல்வியில் நாங்கள் செய்ய விரும்பிய மாற்றத்தை அளவிட முடியாது என்பதை உணர்ந்தோம். மாணவர்களுக்கு மதிப்பெண்களையும் ரேங்க்குகளையும் விற்பனை செய்யும் மற்றொரு நிறுவனமாக நாங்கள் விரும்பவில்லை. அடுத்த கட்டத்திற்குச் சென்றோம்.

  தொழில் முனைவும் பணமும்

  தொழில் முனைவு என்பது ஒரு வாழ்க்கை வழி. நீங்கள் ஒரு தொழில் முனைவோராகலாம் அல்லது பணியாளராகலாம். ஒன்று நீங்கள் உங்களது விதியை நீங்களே உருவாக்க வேண்டும் அல்லது உங்கள் முதலாளி சொல்படி நடக்க வேண்டும்,

  நீங்கள் ஒரு ஆரம்ப நிறுவனமாக இருந்து, உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்கள் நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை நிர்ணயித்தால், பிறகு நீங்கள் உங்கள் தொழில்முனைவின் ஆன்மாவை இழந்து விடுவீர்கள்.

  உங்கள் கனவு நிறுவனத்தை தொடங்குவதைக் காட்டிலும் பணம்தான் முக்கியம் என்றால், நீங்கள் இன்னும் வழக்கமான போட்டி உலகில்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கார்ப்பரேட் பணியில் அந்தப் போட்டி பதவி உயர்வு, வருடாந்திர சம்பள உயர்வு என்று இருக்கும். தொழிலில் பணம் தேடும் போட்டியும் அப்படித்தான். வாழும் முறையில் என்ன மாற்றம் இருக்கிறது?

  வாழ்க்கை மற்றும் வர்த்தகத்தின் அத்தியாவசியமான பங்கு பணம். ஆனால் நீங்கள் அந்தப் போட்டியில் இருந்து வெளியே வர வேண்டியிருக்கிறது. முதலில் வந்தால் என்ன? பந்தயத்தில் கலந்து கொள்ளும் எலி எலிதானே.

  இந்தப் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருந்தேன். ஆரம்பத் தொழில்களோடுதான் இன்னும் நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையை நன்கு அனுபவிக்கிறேன்.

  கொடுக்கும் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்

  “எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த உலகிற்குக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருங்கள். பிரபஞ்சம் உங்களைக் கவனித்துக் கொள்ளும்.” எனது வழிகாட்டிகளிடமிருந்து நான் கற்றுக் கொண்டது இதுதான்.

  எதிர்பார்ப்பில்லாமல் செய்யும் சேவையின் ஆற்றலை நிகழ்த்திக் காட்டும் அரவிந்த் ஐ கேர் மற்றும் சர்வீஸ் ஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் வெற்றிகரமான நிறுவனங்கள்தானே.

  இந்த விஷயத்தில் நான் குழந்தைதான். இப்போதுதான் தத்திதத்தி நடக்கிறேன். கொடுக்கும் கலாச்சாரத்தை பழகிக் கொண்டிருக்கிறேன். அன்கர்மா.இன் புராஜக்ட்டில் பங்களிக்கிறேன். உலகை சிறந்த வசிப்பிடமாய் மாற்ற முயற்சிக்கும் அனைத்து விதமான புராஜக்டுகளுக்கும், உன்கர்மா.இன் மூலம் நாங்கள் கருத்துரு எழுதும் பணியை மேற்கொள்கிறோம். விலை அட்டையைத் தொங்க விடுவதை விட்டு பரிசுப் பொருளாதாரத்தின் அடிப்படையில் கருத்துருக்களை எழுதுவது என்று முடிவு செய்தோம். 

  இந்த வீடியோவைப் பாருங்கள் (பெருந்தன்மை பற்றியது - ஆக்கம் நிபுன் மேத்தா)

  https://youtu.be/kpyc84kamhw

  ஆரோக்கியமான உணவு, தூக்கம் மற்றும் தியானம்

  என் வாழ்க்கையில் உணவு பற்றியும் தூக்கம் பற்றியும் நான் கவலைப்பட்டதே இல்லை. நான் ஒரு உணவுப் பிரியன். நீண்ட தூக்கத்தை நேசிக்கிறவன். எப்போதாவது தியானம் செய்வேன்.

  இப்போதும் அதையேதான் செய்கிறேன். ஆனால் இப்போது விழிப்புணர்வோடு செய்கிறேன். தங்களது உணவு மற்றும் வாழ்க்கைப் பாணி குறித்து மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கும் மனிதர்கள் மத்தியில் வசித்துக் கொண்டிருக்கிறேன். பாஸ்ட் புட், சர்க்கரை மற்றும் பாக்கெட்டில் அடைத்த உணவுப் பொருட்கள் உட்கொள்வதை இப்போதெல்லாம் மக்கள் விரும்புவதில்லை. இயற்கை உணவை நோக்கி பெரும்பாலானோர் திரும்பி வருகின்றனர். வெல்லம், தேன் என்ற இயற்கை இனிப்புக்கும் புத்துணர்ச்சி மிக்க உணவுக்கும் அவர்கள் மாறி வருகின்றனர்.

  அதிகாலையில் எழுந்து கொள்ளும் பழக்கம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் தொழிலில் இறங்கியதற்குப் பிறகு அது எனது வாழ்க்கைப் பாணியையே மாற்றி விட்டது. இப்போது, இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுத்து காலையில் விரைவாக எழுந்து கொள்கிறேன் (இரவில் சீக்கிரம் படுப்பதற்குக் காரணம் அப்போதுதான் ஒரு எட்டுமணி நேரமாவது தூங்க முடியும்). தியானத்தைப் பொருத்தவரையில் இப்போதும் முறையாக செய்வதில்லை. ஆனால் முடிந்த வரையில் அதை முறைப்படுத்த முயற்சிக்கிறேன். சரிவிகித உணவு, தூக்கம் மற்றும் தியானம் இவை மூன்றும் இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் உயிர்த்துடிப்புடனும் இருக்கலாம்.

  மகனுக்கு மாற்றுக் கல்வி

  வழக்கமான பள்ளிக் கூடங்களுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்கள் சிலரைப் பார்த்த பிறகு, கல்வி குறித்த புதிய பார்வை எனக்குள் விரிந்தது. குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் பரிட்சை போன்ற சுமைகள் இல்லாத இயங்கு முறை பற்றி கனவுதான் கண்டு கொண்டிருந்தேன்.

  எங்கள் வட இந்தியர்களைக் காட்டிலும் தென்னிந்தியர்களும் வெளிநாட்டவர்களும் இந்த பள்ளி இல்லா கல்வி குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றிருக்கின்றனர்.

  கற்றலுக்கு முதன்மையானது கற்பவர் தேர்வு அடிப்படையிலான கல்வி என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் ஒரு கல்வி முறைதான் பள்ளி இல்லாக் கல்வி முறை – விக்கிபீடியா.

  பள்ளியில் இருந்து எனது மகனை நிறுத்தி விடத் தீர்மானித்தேன். சண்டிகரில் உள்ள கோவேதா (coVeda) என்ற ஒரு பள்ளி பற்றி எனக்குத் தெரியவந்தது. இது பள்ளி இல்லாத மற்றும் ஒருங்கிணைந்த கல்வி அடிப்படையிலான பள்ளி. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாகச் சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

  40 % நேரம் பணம் சம்பாதிக்க! 60% நேரம் சுய தேடலுக்கு!

  எனது தொழில்களில் நான் தோற்றுப் போகாமல், இந்த கருத்தை நான் கற்றுக் கொண்டிருக்கவே முடியாது. என்னை மேம்படுத்திக் கொள்ள அதிக நேரத்தைச் செலவு செய்ய வேண்டும் என்றும் பணத்திற்காக அலையும் (தேவைக்கு அதிகமாகத் தேடுதல்) நேரத்தை ஒரு எல்லைக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் எனது வழிகாட்டி எனக்கு ஆலோசனை சொன்னார்.

  image


  நான் எனக்காக வேலை செய்தேன். எனது வேலை நேரத்தில் 40 சதவீதத்தில் முடியக் கூடிய வேலைகளைத் தேர்ந்தெடுத்து செய்தேன். வாழ்வதற்கு ஏற்ற பணத்தை சம்பாதிக்கிறோமா என்பதை மட்டும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது அவ்வளவுதான். மற்ற நேரம் முழுவதும் படிப்பு, கற்றுக் கொள்வது, எனக்கு மன நிறைவைத் தரும் எழுத்து (சில நேரங்களில் அதற்கும் பணம் கிடைக்கிறது) என்று செலவு செய்கிறேன்.

  சிறு ஓய்வு

  வாழ்நாள் முழுவதற்கும் பணத்தைச் சேர்த்து வைத்து விட்டு ஒரு பணக்காரனாகச் சாக வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்வதில்லை. உங்கள் பொருளாதார வாழ்க்கையை திட்டமிட வேண்டும்தான். உங்கள் சம்பாத்தியம் நின்று போனதற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான பணத்தை சேமித்து வைக்க வேண்டும்தான். ஆனால் அதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒரு எந்திரம் போல இருக்க வேண்டும் என அர்த்தமில்லை. காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை… சாரி.. காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வேலை பார்க்கிறீர்கள். ஆனால் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை.

  “நிகழ்காலத்தில் துன்பப்பட்டு எதிர்காலத்திற்கு சேமித்து வைப்பது வயோதிக காலத்தில் அனுபவிக்க காமத்தை சேமித்து வைப்பதைப் போன்றது”

  இதற்கு மாற்றாக நமது மொத்த வாழ்க்கையிலும் அவ்வப்போது சிறு ஓய்வு எடுக்க வேண்டும். முதலில் இது சாத்தியமில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் அது சாத்தியம்தான். நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுவதற்கான சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் பத்துக்கும் குறைவாக இருக்குமானால், உங்கள் வாழ்க்கையின் நோக்கம் பற்றி நீங்கள் மறு பரிசீலனை செய்தாக வேண்டும்.

  ஆண்டுக்கொருமுறை சிறு ஒய்வு எடுப்பது பற்றித் திட்டமிடுங்கள். ஓய்வு என்றால் நீங்கள் வேலை செய்யாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. நீங்கள் விரும்பும் போது வேலை பார்க்கலாம் என்று அர்த்தம்.

  எனது முதல் சிறு ஓய்வு கோவாவில் கழிந்தது. ஒரு மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு கோவாவில் கழித்தேன். நேரம் கிடைத்த போது வேலை பார்த்தேன். முழுமையாக அனுபவித்தேன்.

  விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கை

  இதன் மூலம் நாம் அறிய வேண்டிய பாடம் என்னவெனில் விழிப்புணர்வுடன் வாழுங்கள் என்பதுதான். ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் பொறுப்புணர்வோடு செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள், குப்பைகளை போடாதீர்கள், உங்கள் சுற்றுப் புறத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று யாரும் உங்களுக்கு அறிவுரை சொல்லத் தேவை இல்லை. சிறிய அளவு விழிப்புணர்வு இருந்தால் போதும். அதுவே உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வர்த்தக உலகிலும் நேர்மையை கொண்டு வந்து சேர்க்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களை நேசிப்பீர்கள். பதிலுக்கு அவர்கள் உங்களை நேசிப்பார்கள்.

  ஆக்கம்: Pardeep Goyal தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

  Our Partner Events

  Hustle across India