பதிப்புகளில்

உள்நாட்டு மாட்டின பாலின் பலன்களை அனுபவிக்கும் கர்நாடக விவசாயிகள்!

YS TEAM TAMIL
3rd Sep 2018
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

விவசாயத்திற்கு அறிவியலும் தொழில்நுட்பமும் அவசியம். எனினும் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்து மட்டுமின்றி கிராமப்புற சமூகத்தின் நலனுக்காகவும் சில கிராமப்புற அம்சங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, கிராமப்புற இளைஞர்கள் நகரத்தை நோக்கி புலம்பெயர்வதை குறைப்பது, மண், தண்ணீர் மற்றும் பிற வளங்களை மேம்படுத்துவது போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தி பல்வேறு சமூக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
image


அப்படிப்பட்ட ஒட்டுமொத்த வளர்ச்சியில் பங்களிக்கும் நோக்கத்தோடு 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனம்தான் பெங்களூருவைச் சேர்ந்த டீம் தேசி மில்க் (TDM). இது உள்நாட்டு கால்நடைகளை விவசாயிகளிடையே ஊக்குவிக்கிறது. அத்துடன் நகர்புற நுகர்வோருக்கு உள்நாட்டு பால் விற்பனையையும் ஊக்குவிக்கிறது. இந்த நடவடிக்கைகளை கிராமப்புற-நகர்புற கூட்டுறவு இயக்கம் வாயிலாக மேற்கொள்கிறது.

விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு

சேவா ட்ரஸ்டின் ஒரு பிரிவான டிடிஎம், கிராமப்புற பொருளாதாரத்தில் நிலையான நகர்புற பங்களிப்பை ஊக்குவிக்கும் மாதிரியாகும். கால்நடை பராமரிப்பு மற்றும் சாகுபடி முறைகளை மீண்டும் ஒருங்கிணைத்து ஆர்கானிக் விவசாய முறைகளை ஊக்குவிப்பதில் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

”ஆர்கானிக் விவசாயத்தையும் மேம்படுத்தப்பட்ட விலங்குகள் பராமரிப்பையும் ஊக்குவிப்பது சமூக பரமாரிப்பின் ஒரு அங்கமாகும். இது இயற்கையை பாதுகாப்பதற்கான அடிப்படைகளில் முக்கியமான ஒன்றாகும்,” என்று சேவா ட்ரஸ்டின் டைடஸ் செக்வேரா VillageSquare.in-க்கு தெரிவித்தார்.

பாரம்பரியமாகவே விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஒன்றோடொன்று சார்புடையதாகும். இந்த நடைமுறையை மீட்டெடுத்தால் விவசாயிகள் சுயசார்புடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழமுடியும். உள்நாட்டு கால்நடைகளை இணைத்துக்கொள்வதும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

நகர்புற மற்றும் கிராமப்புற பொருளாதாரங்களை இணைத்தும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சரியான விகிதத்தில் பயன்படுத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்தியும் கிராமம் மற்றும் நகரங்களில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்,” 

என்று டிடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த மாதவா ஹெப்பர் VillageSquare.in-க்கு தெரிவித்தார்.

நாட்டு இனங்களால் கிடைக்கும் நன்மைகள்

பான் இண்டிகஸ் (Bos Indicus) எனும் நாட்டினத்தின் பால் Beta Casein என்கிற புரோட்டீனைக் கொண்டுள்ள A2 வகையாகும். இதில் 22 கரையக்கூடிய கனிமங்கள் உள்ளது. அறிமுப்படுத்தப்பட்ட இனமான (Bos Taurus) A1 வகை பால் ஆறு கனிமங்களை மட்டுமே கொண்டுள்ளது.

A2 வகை பால் ஒவ்வாமை பிரச்சனை இல்லாதது. A1 வகை பால் பல குழந்தைகளுக்கு ஒவ்வாமை, செரிமான கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். A1 வகை பால் மூன்று மணி நேரங்களில் கெட்டுவிடும். A2 வகை பால் ஏழு மணி நேரங்கள் வரை கெடாமல் இருக்கும். A2 வகை பாலில் உள்ள கொழுப்பு செரிமானம் ஆகிவிடும் என்பதால் ஆடை நீக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் A1 வகை பாலில் ஆடை நீக்கப்படவேண்டும். 

image


இவை அனைத்தும் உள்நாட்டு மாட்டு பாலின் நேரடி பலன்கள் என்றாலும் அவற்றை வளர்ப்பதில் மற்ற பலன்களும் உண்டு. உள்நாட்டு மாட்டினங்கள் ஆரோக்கியமானது, குறைவான பராமரிப்பு தேவைப்படும், நோய் எதிர்பு சக்தி அதிகம், இயற்கையாக இனப்பெருக்கம் செய்யப்படவையாகும். கலப்பினங்கள் செயற்கை கருவூட்டல் முறையில் மருந்துகள் மற்றும் ஹார்மோன்கள் செலுத்தப்பட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டதாகும். இவை உள்ளூர் பருவநிலைக்கு ஏற்றதல்ல. அத்துடன் அதிக பராமரிப்பும் தேவைப்படும்.

உள்நாட்டு மாட்டினங்களுக்கு மாறுதல்

உள்நாட்டு மாட்டினங்களின் பொருளாதார மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நலன்களை கருத்தில் கொண்டு பல விவசாயிகள் உள்நாட்டு மாட்டின வளர்ப்பிற்கு மாறியுள்ளனர். கடுஷிவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சிவராஜு தனது ஏழு ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு, சோளம், மல்பெரி சாகுபடி செய்கிறார்.

”இதற்கு முன்பு நான் ஜெர்சி மாடுகள் வைத்திருந்தேன். அதற்கு அதிக முதலீடும் பராமரிப்பும் தேவைப்படும். அவை நோய் தாக்கத்தினால் இறந்தபோது ஐந்து உள்நாட்டு மாட்டினங்களை வாங்கினார். நமது சூழலுக்கு இவை மிகச்சிறந்தது என நம்புகிறேன்,” என்றார்.

’ஹல்லிகர்’ என்கிற உள்நாட்டு மாட்டினம் கனகபுரா மற்றும் ராமநகரா மாவட்டங்களில் வழக்கமாக வளர்க்கப்படும் வகையாகும். இங்கு டிடிஎம் தீவிரமாக செயல்படுறது. சிலர் கர்நாடகாவின் மலைநாடு பகுதியைச் சேர்ந்த மாட்டினமான மல்நாட் ஹிடா வளர்க்கின்றனர். சில விவசாயிகள் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தவும் குறிப்பிட்ட பருவங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தவும் காளை மாடுகளையும் வளர்க்கின்றனர்.

உள்நாட்டு மாட்டினங்களை வளர்ப்பது தொடர்பான பொருளாதார பார்வை

கலப்பின வகைகளைக் காட்டிலும் உள்நாட்டு மாட்டினங்கள் வாயிலாக கிடைக்கப்படும் லாபம் குறைவுதான். ஆனால் அவற்றின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. இவை சுதந்திரமாக மேய்ந்து வருவதால் விவசாயிகளுக்கு தீவனச் செலவு குறைகிறது. உள்நாட்டு மாட்டினங்களுக்கு சாதாரண உள்ளூர் தீவனத்தை வழங்கினாலே போதுமானது. ஆனால் மற்ற வகைகளுக்கு பிரத்யேகமாக தீவனங்கள் அவசியம்.

உள்ளூர் மாடுகள் பல ஆண்டுகள் தொடர்ந்து நல்ல பாலை கொடுக்கும். இந்த மாட்டின் சானம் மற்றும் கோமியத்தில் பலனளிக்கக்கூடிய நுண்ணியிர்கள் அதிகம் இருப்பதால் இவை ஆர்கானிக் விவசாயத்திற்கு உரமாக பயனப்படுத்த உகந்ததாகும். மண்புழுக்கள் செழிக்க இது உதவும். இதனால் விவசாயிகள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுக்கு செலவிடும் தொகை குறைகிறது.

”நான் இவைகளை பராமரிக்கவோ, தீவனத்திற்கோ, என்னுடைய நிலங்களுக்கான உரங்களுக்கோ அதிகம் செலவிடுவதில்லை. என்னுடைய குடும்பத்தில் ஐந்து பேர் உள்ளனர். என்னுடைய குழந்தைகளை சிறப்பாக படிக்கவைக்க முடிகிறது. சௌகரியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்,” 

என்று VillageSquare.in-க்கு தெரிவித்தார். கல்லூரி மாணவரான கடுஷிவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த கிரிஷ் ஐந்து மாடுகளையும் ஒரு காளையையும் வளர்த்து வருகிறார். இவர் 

“பல விவசாயிகள் என்னுடைய காளைமாட்டை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் எனக்கு காளை மாட்டின் மூலம் 10,000 ரூபாய் வரை உபரி வருமானம் கிடைக்கிறது,” என்று தெரிவித்தார்.

விவசாயிகள் கூட்டுறவு

கனகபுரா, சாத்தனூரு, சங்கமா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 கிராமங்கள் முழுவதும் சேர்த்து 24 கூட்டுறவுகள் உள்ளன. இதில் 430 குடும்பங்களைச் சேர்ந்த 4800 உறுப்பினர்கள் உள்ளனர். கர்நாடகாவில் இந்தப் பகுதிகளில்தான் அதிககளவிலான உள்நாட்டு மாட்டினங்கள் (சுமார் 3.2 லட்சம்) உள்ளன.

விவசாயிகளிடம் இருந்து டிடிஎம் பாலை சேகரித்து சூடாக்கும். அதன் பிறகு மேலும் பதப்படுத்தாமல் பெங்களூருவில் அருகாமையில் உள்ள நகரங்களில் விற்பனை செய்யும். இதுவே சமீபத்திய காலம் வரை பின்பற்றப்பட்ட செயல்முறையாகும். தற்போது தப்பகுளி பசவேஸ்வரா ஸ்வாமி விவசாய உற்பத்தி கம்பெனி லிமிடெட் பாலை விநியோகித்து வருகிறது.

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) செயல்பாட்டு மூலதனத்தை வழங்குகையில் விவசாயிகள் ஒவ்வொருவரும் 1,000 ரூபாய் செலுத்தி உற்பத்தி நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள்.

விநியோகம்

”ஒவ்வொரு நாள் காலையும் நாங்கள் 26 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து பாலை சேகரிப்போம். பிஜாஹள்ளி பகுதியில் உள்ள பால் பதப்படுத்தும் மையத்தில் சூடாக்கப்படும். பிறகு குளிரூட்டப்பட்டு அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பாக்கெட்டுகளாக பேக் செய்யப்படும்,” 

என்று VillageSquare.in-க்கு தெரிவித்தார் பால் சேகரிப்பு மையத்தில் பணியாற்றும் மகேஷ்.

பிஜாஹள்ளியில் இருந்து பேக் செய்யப்பட்ட பால் ஒன்றரை மணி நேர தொலைவில் இருக்கும் பெங்களூருவில் உள்ள டிடிஎம் அலுவலகத்தை வந்தடையும். தன்னார்வலர்கள் மற்றும் டிடிஎம் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளிலும் சில பேக்கட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.

லாக்டோமீட்டர்கள், கிருமிகளில்லாத கேன் ஆகிய குறைந்த விலையிலான டூல்களைக் கொண்டு விவசாயிகள் பாலின் தரத்தை உறுதி செய்கின்றனர்.

பலன்கள்

டிடிஎம் ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வழங்குவதால் விவசாயிகள் A2 வகை பாலில் அதிக வருவாய் ஈட்டுகின்றனர். அரசு பால்பண்ணைகள் லிட்டருக்கு 24 ரூபாய் மட்டுமே கொடுக்கிறது. A2 வகை பால் விற்பனையைத் துவங்கிய பிறகு வீட்டிற்குத் தேவையான பல பொருட்களை வாங்க முடிந்ததாக தெரிவிக்கிறார் விவசாயியான சிவராஜு.

”மூன்று ஹல்லிகர் மாடுகள் வாயிலாக ஈட்டப்பட்ட வருவாயைக் கொண்டு என்னால் மேலும் இரண்டு மாடுகள் வாங்கமுடிந்தது. எங்கள் குடும்பத்தின் நிதிநிலை மேம்பட்டுள்ளது,” என்று VillageSquare.in-க்கு தெரிவித்தார் கடுஷிவனஹல்லி பகுதியைச் சேர்ந்த பேபி.

பண்டேடோடி பகுதியைச் சேர்ந்த திவ்யா முனிராஜ் மூன்று ஹல்லிகர் மாடுகளை வளர்க்கிறார். இதன் வாயிலான மாத உபரி வருமானத் தொகை 12,000 ரூபாய் அவரது பட்டுப்பூச்சி வளர்ப்பை நிர்வகிக்கவும் அவரது மூன்று மகள்களின் பள்ளிப்படிப்பிற்கும் உதவுகிறது.

லிட்டருக்கு 80 ரூபாய் என்கிற வீதத்தில் சில்லறை வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் ஆரோக்கிய பலன்களைக் கருத்தில் கொண்டு வழக்கமான சில்லறை வர்த்தக விலையைக் காட்டிலும் இருமடங்கு செலுத்தவும் நுகர்வோர் தயாராக இருப்பதாக தெரிவித்தார் டிடிஎம்-ஐ சேர்ந்த சித்தராஜு.

விவசாய குடும்பங்களும் A2 வகை பாலைப் பயன்படுத்தி பலனடைகின்றனர். ”உள்நாட்டு மாட்டினங்களின் பாலை பருகத் துவங்கியதும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை, வயிறு உபாதைகள் போன்ற உடல்நலம் பாதிப்புகள் குறைந்துள்ளது,” என்று தெரிவித்தார் சித்தராஜு.

வருங்கால திட்டம்

விவசாயிகளை கூட்டுறவு பாணியில் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் பதப்படுத்தப்பட்ட பிறகு நேரடியாக சேகரிக்கப்படும் 5,000 லிட்டர் பாலை விற்பனை செய்யலாம். இதனால் அதிகபட்ச லாபத்தை ஈட்டலாம். அத்துடன் விற்பனை மற்றும் மார்கெட்டிங் உத்திகளையும் தெரிந்துகொள்ளலாம்.

அதிக விவசாயிகள் உள்நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதாலும் நுகர்வோர் உள்நாட்டு மாட்டினங்களின் இயறகையான புரோபயாடிக் பாலின் நன்மைகளை உணர்வதாலும் ஆர்கானிக் பாலின் விலை குறைக்கப்படலாம் என ப்ரொமோட்டர்கள் கருதுகின்றனர்.

ஆங்கில கட்டுரையாளர் : சுதா நரசிம்மாசார் | தமிழில் : ஸ்ரீவித்யா

பொறுப்புதுறப்பு : இந்த கட்டுரை முதலில் VillageSquare.in-ல் வெளியானது. இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளாகும். எந்த விதத்திலும் யுவர்ஸ்டோரியின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை.

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக