பதிப்புகளில்

தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

YS TEAM TAMIL
7th Jul 2018
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

எந்த ஓர் அணிக்கும் கேப்டன்தான் துடுப்பு. அந்த வகையில், தோனிதான் இந்திய அணியின் சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ். இன்று 37 வயது கொண்டாடும் போதும், 20 வயதுக்கான அதே எனர்ஜி, அதே துள்ளல்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பான் சிங் – தேவகி தம்பதியினருக்கு 1981-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி பிறந்தார் மகேந்திர சிங் தோனி. இவரை தல தோனி என்று ரசிகர்கள் அழைத்தாலும் நெருங்கிய வட்டாரத்திற்கு அவர் என்றுமே மாஹி தான். ஜவஹர் வித்யாலயாவில் தனது பள்ளிப் படிப்பை தொடங்கிய அவருக்கு கவனமெல்லாம் விளையாட்டின் மீதுதான் இருந்தது. பள்ளி அணியில் பேட்மிண்டன் மற்றும் கால்பந்து வீரராக இணைந்த தோனி, நல்ல கோல் கீப்பராகவும் இருந்தார்.

படிப்பில் சுமாரான தோனிக்கு பீகார் அணியில் வாய்ப்பு கிடைத்ததால் 2001-ம் ஆண்டு அரசாங்க வேலை தேடி வந்தது. குடும்பத்தின் கஷ்டம் தீரப் போகிறது, மகனது எதிர்காலம் பிரகாசமாகும் என பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நண்பர்கள் ஆனந்தக் கூத்தாடினார். ஆனால் விக்கெட் கீப்பராக கேட்ச் பிடிக்க வேண்டியவனை இப்படி ரயிலில் டிக்கெட் இல்லாமல் வருபவர்களை பிடிக்க வைத்துவிட்டார்களே என்று விதியை நொந்துகொண்டிருந்தார் தோனி.

பட உதவி: டிஎன்ஏ

பட உதவி: டிஎன்ஏ


பீகார் அணியில் இடம்பெற்றிருந்த போது தனது ரோல் மாடலான சச்சினுக்கு எதிராக களமிறங்க தோனிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மண்டல அளவிலான போட்டியில் கலந்துகொள்ள மறுநாளே அவர் அகர்தலா செல்ல வேண்டியிருந்தது. ராஞ்சியில் இருந்து கொல்கத்தாவிற்கு ஒரே இரவில் எப்படி செல்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்த தோனிக்கு நண்பர்கள் உதவ அவசர அவசரமாக பயணித்தும் விமானத்தை கோட்டைவிட்டார். அப்போது கூட தோனி களங்கவில்லை. வாழ்க்கை இத்துடன் முடிந்துபோகப் போவதில்லை என்று உறுதியுடன் இருந்தார். ஆனால் வேலைக்கு சென்றுவிட்டால் கிரிக்கெட்டை தொலைக்க வேண்டி வரும் என்ற பயம் அவரை தூங்கவிடவில்லை.

விரக்தியில் இருந்த தோனிக்கு கரக்பூரில் அறிமுகமானது டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர். அதில் கவனம் செலுத்த தொடங்கிய தோனி வழக்கம் போல சிக்சர்களை பறக்கவிட அவரை தங்கள் வசமாக்க பல்வேறு கிளப்புகள் போட்டி போட்டன. ஒரே ஒரு போட்டிக்காக இரண்டாயிரம் ரூபாய் வரை அவருக்கு தர காத்திருந்தனர். தோனியின் இன்றைய 20-20 வெற்றிக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளே.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பணியில் இருந்த தோனி பயணி ஒருவரிடம் அடிக்கடி ஸ்கோர் கேட்டு தொந்தரவு செய்ய கடுப்பான அந்த நபர், 

’’ஆமா ஸ்கோர் தெரிஞ்சு இவரு இந்தியாவுக்கு உலகக்கோப்பைய வாங்கித்தர போறாரு,’’ என்று சுருக்கென்று கேட்டார். இந்த வார்த்தைகள் தோனி தனது பாதையில் பயணிக்கவில்லை என்று அவருக்கு உணர்த்தியது. 

கிரிக்கெட் பயிற்சிக்காக விடுப்பெடுக்க ஆரம்பித்தார் தோனி. விளக்கம் கேட்டு ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. விளைவு வேலை பறிபோனது. வீட்டிற்கு வந்த தோனியை பெற்றோர் திட்டித் தீர்க்க, தோனியின் மனதோ கிரிக்கெட்டை நினைத்து பாங்க்ரா நடனம் போட்டது.

எதிர்காலம் குறித்த கேள்விக்குறி ஆச்சர்யக்குறியாக மாற, அதிக காலம் பிடிக்கவில்லை. 2004-ம் ஆண்டு செப்டம்பரில், 'இந்தியாஏ’ அணியின் விக்கெட் கீப்பராக இருந்த தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் அழைப்புவர, தோனிக்கு அங்கே இடம் கிடைத்தது. 'ஜிம்பாப்வே 11’ அணியுடனான முதல் போட்டியிலேயே ஒட்டுமொத்தமாக ஏழுகேட்ச், நான்கு ஸ்டம்ப்பிங் என அசத்திய தோனி, அடுத்ததாக பாகிஸ்தான் 11-க்கு எதிராக பேட்டிங்கில் களக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனம் இந்த துடிப்பான இளைஞன் பக்கம் திரும்பியது.

2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியில் தோனிக்கு இடம் கிடைத்தது. இதற்கு காரணமானவர் வேறு யாருமில்லை, கங்குலிதான். ரஞ்சி கோப்பையில் பெங்காலுக்கு எதிரான போட்டியில் பீகார் சார்பாக களமிறங்கிய தோனி ஹெலிகாப்டர் ஷாட்களை விளாச கடுப்பான பவுலர் பந்தை மோசமாக வீசினார். இதனை கவனித்த கங்குலி அந்த இளைஞனிடம் இருந்து உருப்படியாக எதையாவது கற்றுக்கொள் என தனது அணி வீரருக்கு அறிவுரை வழங்கினார். அப்போதே தோனியின் திறமையால் கங்குலி ஈர்க்கப்பட்டிருந்தார்.

இனி எல்லாம் நன்றாக நடக்கும் என தோனிக்கு நம்பிக்கை பிறந்தது. 2004-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் களமிறங்கினார் தோனி. அவர் எதிர்பார்த்தது போல அன்றைய தினம் எதுவும் சிறப்பாக நடக்கவில்லை. ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

தோனியின் முதல் சர்வதேச போட்டி இப்படித்தான் முடிந்தது. அந்தத் தொடரில் அவர் சராசரியாக விளையாடிய போதும் அடுத்து நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஏப்ரல் 5- 2005 இந்தியா- பாகிஸ்தான் மோதிய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்டார் தோனி. 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார். தோனியின் இந்த ருத்ரதாண்டவ ஆட்டம் ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
image


அதே ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி நடந்தது. இதில் 299 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி சச்சின் – சேவாக் என இரு ஜாம்பவான்களின் விக்கெட்டுகளையும் தொடக்கத்திலேயே இழந்தது. மூன்றாவது வீரராக வந்த தோனி, பவுண்டரி சிக்சர் என விளாசினார் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல். 145 பந்துகளில் 183 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற புது சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். இந்த போட்டிக்கு பின்னர் தோனி கொடுத்த பேட்டியை யாராலும் மறக்கவே முடியாது. BOOST is the secret of my energy என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை milk is the secrect of my energy என சொல்ல வைத்தது இந்த பேட்டிதான்.

அடுத்தடுத்த போட்டிகளிலும் தோனியின் ரன்வேட்டை தொடர 2006-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அவருக்கு முதலிடம் கிடைத்தது.

இதற்கிடையில் 2005-ம் ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் தோனி. பாகிஸ்தானில் நடந்த போட்டி ஒன்றில் அவர் 148 ரன்கள் விளாசினார். தோனியின் ஆட்டத்தை பார்த்து வெகுவாக பாராட்டிய அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப், தோனியின் நீண்ட கூந்தல் தம்மை கவர்ந்ததாக தெரிவித்தார். ஜான் ஆப்ரஹாமின் விசிறி என்பதாலேயே தோனி நீண்ட கூந்தலுடன் இருந்ததும், பின்னர் தமது காதல் மனைவி ஷாக்சிக்காக சிகை அலங்காரத்தை மாற்றியதும் நாம் அனைவரும் அறிந்ததே.

2007-ம் ஆண்டு தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடினார் தோனி. இந்தத் தொடர் தோனிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கு அதிர்ச்சியாக அமைந்தது. வங்கதேசத்திடம் தோல்வி, சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை என அடுக்கடுக்கான சறுக்கல்கள். வேதனையுடன் நாடு திரும்பினார் தோனி. ராஞ்சியில் அவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டை ரசிகர்கள் சேதப்படுத்தினர். இதற்கெல்லாம் கலங்காத தோனி வெற்றியால் மட்டுமே தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதை அறிந்திருந்தார்.

2007-ம் ஆண்டில் முதன்முறையாக இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனியர் வீரர்கள் ஒதுங்க தோனியை கேப்டனாக நியமிக்க சிபாரிசு செய்தார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். 

தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்த போட்டியில் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தது. செப்டம்பர் 24-ல் நடந்த இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.

கபில்தேவிற்கு பிறகு உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் என தோனியை இந்தியா கொண்டாடியது.

2007-ம் ஆண்டு ஒருநாள் கேப்டன் பதவியும், 2008-ல் டெஸ்ட் கேப்டன் பதவியும் தோனியைத் தேடி வந்தது. 2009-ம் ஆண்டு டிசம்பரில் தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதலிடம் பிடித்தது. 2010-ம் ஆண்டில் ஆசியக் கோப்பை இந்தியா வசமானது. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை இந்தியா- இலங்கை – வங்கதேசம் இணைந்து நடத்தியன. இந்த முறையாவது கோப்பையை வசப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணி தட்டுத்தடுமாறி காலிறுதிக்குள் கால் பதித்தது. 2003 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்விக்கு பழி தீர்த்து அரையிறுதியில் பாகிஸ்தானை துவம்சம் செய்தது. மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்த இந்திய அணி கம்பீர், யுவராஜ், தோனியின் நேர்த்தியான ஆட்டத்தால் உலகக் கோப்பையை முத்தமிட்டது. கோப்பையை சச்சினுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்தார் தோனி…

தோனி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன் என்பதைத் தாண்டி தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் உள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. தனது ரோல்மாடலான கில்கிறிஸ்டின் பல்வேறு சாதனைகளை இவர் உடைத்திருக்கிறார். கீப்பிங் கிளவுஸ் உடன் ஸ்டம்புகளுக்கு பின்னால் நிற்கும் தோனியைக் காண்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அலேக்காக இவர் பிடிக்கும் கேட்சுகளும், அசால்டாக செய்யும் ஸ்டம்பிங்கும், துல்லியமான ரன் அவுட்களையும் வர்ணிக்காதவர்களே இருக்க முடியாது.

2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மகுடம் சூடியது. இதன் மூலம் ஐசிசி நடத்தும் 3 விதமான தொடர்களிலும் கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற வரலாற்று சாதனையில் தோனியின் பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டன.

ஒருநாள், டெஸ்ட் மட்டுமல்லாது டி20 போட்டிகளிலும் தோனி வெற்றி நாயகனாகவே திகழ்ந்தார். 2008-ல் தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஒப்பந்தம் ஆன தோனி, 9 சீசன்களில் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தினார். 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் சி.எஸ்.கே. அணி மீண்டும் போட்டியில் களமிறங்கிய போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சீனியர் வீரர்கள் மட்டுமே உள்ளனர், அங்கிள்ஸ் அணி சி.எஸ்.கே. என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

விமர்சனங்களுக்கான ஒரே பதில் வெற்றி என்பதே தோனியின் முடிவு. 3-வது முறையாக சி.எஸ்.கே.வுக்கு கோப்பையை வென்று தந்துவிட்டார். இது அணி டீம் வொர்க் என்று சொன்னாலும், இந்தத் தொடரில் தோனியின் பங்களிப்பு மிக அதிகம். சொல்லப்போனால் இதுவரை இவர் விளையாடிய ஐ.பி.எல். தொடரிலேயே பெஸ்ட் இதுதான். டாஸ் வென்ற போட்டிகளில் எல்லாம் பந்துவீச்சை தேர்வு செய்வதாகட்டும், 4-ம் நபராக களமிறங்கிய அம்பதி ராயுடுவை, தொடக்க வீரராக களமிறக்கிய தைரியம் ஆகட்டும் தோனிக்கு நிகர் தோனி மட்டுமே..

தோனியோ ஜிம்மிற்கு செல்வது என்பது அத்தி பூத்தாற்போல் நடக்கும் ஒன்று. ஆனாலும் அவரது ஃபிட்னஸ் வேற லெவல். அனைவருக்கும் சவால் விடும் வகையில் உள்ளது. சாதாரண ஓட்டப்போட்டி தொடங்கி, வீரர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் யோ யோ டெஸ்ட் வரை தோனியை ஃபிட்னஸில் அடித்துக்கொள்ள ஆள் இல்லை.

image


தோனி, கிரிக்கெட் விளையாடத் தொடங்குவதற்கு முன்பாக, கால்பந்து விளையாட்டுக்கானப் பயிற்சிகளைச் செய்துகொண்டிருந்தார். அதோடு, பாட்மின்டனிலும் தனித்திறமை பெற்றிருந்தார். பாட்மின்டன் கண்களுக்கும், கால்பந்து பாதத்துக்கும் சிறந்த பயிற்சி என்பதால், தோனியின் எக்சர்சைஸ் லிஸ்ட்டில் ஜிம் வொர்க்-அவுட்டுக்கு அடுத்ததாக, இப்போதும் இந்த இரு விளையாட்டுகளும் இருக்கின்றன. இந்த அடிப்படை திறமைகள்தான், இன்றைக்கும் தன்னை ஃபிட்டாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கக் காரணம் என்பது தோனியின் நம்பிக்கை.

உணவில் புரதச்சத்து அதிகமுள்ளவைதான் இவரின் சாய்ஸ். எனவே உணவுப் பட்டியலில், பருப்பு வகைகள், சிக்கன், அரிசி வகைகள் போன்றவை கண்டிப்பாக இருக்கும். எனர்ஜிக்காக புரோட்டீன் டிரிங்க்ஸ் குடித்தாலும், உடனடி ஆற்றலுக்கு பால் மற்றும் தயிர் வகைகள்தான்.

கொழுப்புச்சத்து உடலில் இருக்கவே கூடாது என நினைப்பவர் தோனி. உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தால், அதற்கேற்ப எக்ஸ்ட்ராவாக உடற்பயிற்சி செய்து, அவற்றை வெளியேற்றிவிடுவார்.

வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வரும் தோனி 2010-ம் ஆண்டு ஜுலை 4-ம் தேதி ஷாக்சியை மணமுடித்தார். இந்த தம்பதிக்கு ஷிவா என்ற மகள் உள்ளார். நாட்டுக்காக விளையாடுவதில் எந்த அளவுக்கு தோனிக்கு ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உள்ளதோ அதே அளவு பொறுப்புணர்ச்சி மகள் விஷயத்திலும் அவருக்கு உண்டு. மகளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஒரு சிறந்த தந்தையாக செயல்பட தோனி தவறியதே இல்லை.

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக