பதிப்புகளில்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மிகச்சிறந்த அணியா?

YS TEAM TAMIL
25th Dec 2016
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் மேட்சில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றதை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? இதுவரை விளையாடிய இந்திய அணிகளில் விராட் கோலியின் தலைமையிலான அணி மிகச்சிறந்ததா? இந்திய கிரிக்கெட் அணியின் பொன்னான காலம் தொடங்கிய நேரம் இதுதானா? 70 களிலும் 80களிலும் இருந்த மேற்கிந்தியர்களைப்போல் இந்தியாவும் உலக கிரிக்கெட்டை ஆட்டி வைக்குமா? 

image


கடந்த ஒரு வார காலமாக நான் இந்த கேள்விகளை எனக்குள் கேட்டுக்கொண்டேன். இதுதான் இந்தியாவின் மிகச்சிறந்த அணி என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. 1983-ல் கபில் தேவின் தலைமையில் விளையாடி உலகக் கோப்பையை வென்ற அணியை விட இந்த அணி சிறந்தது. தோனி தலைமையில் இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற அணியை விட இது பெரியது. சச்சின், ட்ராவிட், லஷ்மண், கும்பிளே, பாஜி போன்றோர் அடங்கிய சவுரவின் அணியை விட மிகவும் உயர்ந்தது. விமர்சகர்கள் என்னுடைய கருத்துக்களை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். நான் சுயநினைவை இழந்தும் கோலியின் அணியை அளவுக்கதிகமாக மதிப்பிட்டும் சொல்கிறேன் என்று கூறுவார்கள். ஆனால் உண்மை இதுதான்.

நான் சொல்வதற்குக் காரணம் உள்ளது. சிறு வயதிலிருந்தே நான் கிரிக்கெட் பார்த்து வருகிறேன். அப்போது இந்திய அணி தோல்வியை தவிர்க்க விளையாடுவார்கள். எப்போதாவது வெற்றி பெறுவார்கள். டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் நடைபெறும். வண்ணமயமான ஆடைகளுடன் காணப்படும் சூழ்நிலை ஒரு நாள் கிரிக்கெட்டில் அப்போது இல்லை. டி-20 என்பதை அப்போது நினைத்துக்கூட பார்க்கமுடியாது. இந்தத் துறையில் தனிப்பட்ட திறமைசாலிகள் பலர் இருந்தபோதும் கிரிக்கெட் வீரர்கள் போற்றப்படவில்லை. இன்று இருப்பது போல அழகாக வடிவமைக்கப்பட்ட தலைக்கவசங்கள் இல்லை. நேரடி ஒளிபரப்புகள் இல்லை. வானொலி மூலமாக சுஷில் தோஷி, நரோட்டம் ப்யூரி போன்றோரின் பொன்னான குரல்களில் வர்ணனைகளை கேட்டுத் தெரிந்துகொள்வதுதான் ஒரே வழியாக இருந்தது.

70-களில் இந்திய அணி சுழல் பந்து வீச்சிற்கு பிரபலமாக இருந்தது. சந்திரசேகர், பேடி, ப்ரசன்னா, வெங்கடராகவன் போன்றோர் பெயர்களைக் கேட்டாலே எதிரணியினர் பயப்படுவர். உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் இவர்களுக்கு எதிராக இந்திய பிட்ச்களில் விளையாட பயப்படுவார்கள். சுனில் கவாஸ்கர் மற்றும் குண்டப்பா விஷ்வநாத் ஆகிய இரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருந்தனர். வெளி நாடுகளுக்கு சென்று விளையாடுகையில் தோல்வியைத் தழுவினோம். நம் நாட்டில் விளையாடும்போது வெற்றிக்காக அதிகம் போராடினோம். வெற்றி பெறுவதற்காக நாம் விளையாடியதே இல்லை. தோல்வியை சந்திக்காமல் இருப்பது, டிராவில் முடிவது, இந்த இரண்டையும் குறிக்கோளாகக்கொண்டே இந்திய அணி போராடியது.

கபில் தேவ் வந்த பிறகு சுழல் பந்து வீச்சாளர்களின் சகாப்தம் முடிந்தது. ஒவ்வொரு இளைஞனும் கபில் தேவை பின்பற்றி அவரைப் போலவே இருக்க விரும்பினர். சுழல் பந்து வீச்சு குறைந்தாலும் வேகப்பந்து வீச்சாக மாறவில்லை. மேற்கிந்திய அணியைப் போன்றோ ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த லில்லி மற்றும் தாம்சன் போன்றோ வேகப் பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் இல்லை. மொஹமத் நிசார் வேகப் பந்து வீச்சாளராக இருந்தார். ஆனால் அது இந்தியா சுதந்திரம் அடைவதற்கும் முந்தைய காலம்.

கவாஸ்கருக்குப் பின் சச்சின் வந்தாலும் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக போட்டியை எதிர்கொள்ள சவுரவ் கங்குலி தேவைப்பட்டார். சவுரவ் நேர்த்தியாக விளையாடுபவர். சிறந்த அணித்தலைவர். கவாஸ்கர், கபில்தேவ் போலல்லாமல் வெற்றிக்காக விளையாடினார். அதிர்ஷ்டவசமாக சிறப்பாக விளையாடும் குழு அவருக்கு அமைந்தது. ஷேவாக் தொடக்க ஆட்டக்காரராக இருக்கும்போது மூன்றாம் இடத்தில் ராகுல் டிராவிட்டும், அதற்குப் பின் சச்சின் மற்றும் லஷ்மனும் விளையாடினர். அனில் கும்பிளே, ஹர்பஜன் இருவரும் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள். ஜவஹல் ஸ்ரீநாத்தின் துணையிருந்தாலோ அல்லது பின்னர் இணைந்த ஜாஹீர் கானின் துணையிருந்தாலோ எந்த போட்டியிலும் வெற்றி பெரும் திறனுடையவர்களாக இருந்தனர்.

இந்த குழுவை மிரட்டுவது கடினமாக இருந்தது. உலக கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் போன்றோரின் அணிக்கு சவால் விடும் வகையில் இருந்தனர். ஆனால் அணியை சமன்படுத்தும் விதத்தில் பல்வேறு திறன்கொண்ட வேறு எவரும் சவுரவின் அணியில் இல்லை. மஹேந்திர சிங் தோனி அணியை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றார். அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சற்று சரிவடையத் தொடங்கியிருந்தது. இருப்பினும் வல்லமைமிக்க அணியாகவே இருந்தது. தோனி மிகுந்த நம்பிக்கையுள்ள அணித் தலைவராக செயல்பட்டு அணியை வழிநடத்தினார். கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்டார்.

டி-20, ஐபில் இரண்டும் இருந்தது. இந்திய அணி விளையாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்து விளங்கியது. முதலில் டி-20 உலகக் கோப்பையையும் பின்னர் ஒரு நாள் உலகக் கோப்பையையும் வென்றார். ஆனால் அப்போதும் பந்து வீச்சில் இந்திய அணி சிறந்து விளங்கவில்லை எனும் கருத்தை பதிவு செய்ய வருந்துகிறேன். தரமான பல்வேறு திறன்கொண்ட வீரர் எவரும் அணியில் இல்லை. அதேபோல் ஒரு நபரின் இடத்தை நிரப்புவதற்குத் தகுந்த தரமான மாற்று நபர்களும் இல்லை.

தோனியைப் போலவே விராட்டும் தன்னம்பிக்கையுடன் அணியை முன்னின்று வழிநடத்தினார். எந்த சவாலையும் விரும்பி எதிர்கொண்டார். சவுரவ் கங்குலியைப் போலவே இவரும் வெளிப்படையானவர். எதிரணியுடன் துணிந்து போட்டியிடுபவர். பேட்டிங்தான் இவரது வலிமை. சவுரவ் மற்றும் தோனியை விட சிறந்த பேட்ஸ்மேன். இவர்தான் ஒரு வருடத்தில் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே இந்திய அணித்தலைவர். சச்சினைப் போலல்லாமல் வெற்றிக்கான இலக்கை நோக்கி செல்வதில் தீவிரமாக இருந்தார். சச்சினை விட சிறப்பாக செயல்பட்டார். இவர் அணியின் தலைமைப் பொறுப்பை அதிக ஈடுபாட்டுடன் ஏற்று செயல்பட்டார். சச்சினுக்கு இது பலவீனமாக இருந்தது.

சவுரவின் அணியிலிருந்த ஒவ்வொரு சிறந்த ஆட்டக்காரருக்கும் விராட்டின் அணியில் மாற்று நபர் இருந்தனர். விராட்டை சச்சினுடன் ஒப்பிட்டால், புஜாரா ராகுலுடன் கடும் உழைப்பாளியாகவும் அதிக ரன்களை குவிக்கும் வேட்கையுள்ளவராகவும் போட்டியிட்டார். லக்ஷ்மண் வெளியேறியதால் உருவான வெற்றிடத்தை ரஹானே நிரப்பினார். தொடக்க ஆட்டக்காரர்களான ஷேவாஹ் மற்றும் கௌதம் கம்பீரின் பலத்திற்கு விஜய், ஷிக்கர் தவான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் எளிதாக பொருந்தினர். பந்து வீச்சைப் பொருத்தவரை கும்பிளே மற்றும் ஹர்பஜனைவிட அஷ்வின் மற்றும் ஜடேஜா அதிக மேட்ச்களை வென்றனர். வேகப் பந்தை பொருத்தமட்டில் முன்பு விளையாடியவர்களைப் போலல்லாமல் உமேஷ் யாதவ், ஷாமி, இஷாந்த் ஷர்மா, பம்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் 140 Km/hr என்ற வேகத்தில் பந்து வீசினார்கள்.

சவுரவ் மற்றும் தோனியின் அணியைவிட இவர்கள் மூன்று பகுதிகளில் சிறந்து விளங்கினார்கள். இன்று வரை விராட்டின் அணிதான் இந்தியாவின் சிறந்த அணியாக உள்ளது. எனக்குத் தெரிந்து இந்தியாவில் ஃபீல்டிங் செய்வதில் இந்த அணியைவிட சிறந்த அணி எதுவுமில்லை. ஃபீல்டிங் செய்வதற்கு தேவையான தகுதியுடைய சுறுசுறுப்புடையவர்கள் இல்லாததால் முந்தைய இரண்டு இந்திய அணிகளும் இந்தப் பகுதியில் அதிகம் சிரமப்பட்டனர்.

பல்வேறு திறன் கொண்டவர்களாக அஷ்வின், ஜடேஜா இருவரும் விராட்டுக்கு கிடைத்தனர். பந்து வீச்சிலும் இருவரும் சிறந்தவர்கள். ஜயந்த் யாதவ் புதிய பந்து வீச்சாளராக இருந்தாலும் சதம் அடிக்கும் திறமை கொண்டவராக இருந்தார். இந்திய அணியின் பேட்டிங்கிற்கு இது ஸ்திரதன்மையை அளித்தது. தற்போது சதம் அடிக்கும் திறமையான 9 பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள் என்று இந்தியா பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மற்ற எந்த இந்திய அணிக்கும் இந்தப் பெருமை கிட்டவில்லை.

உலகக் கிரிக்கெட்டிலேயே இது மிகவும் அரிதாகும். மாற்று நபர்கள் இவர்களுக்கு மிகப் பெரிய பலம். ஒவ்வொரு இடத்திற்கும் இரண்டிலிருந்து மூன்று பேர் மாற்று நபர்களாக இருக்கிறார்கள். ஷிகர் தவானுக்கு காயமேற்பட்டால் கே எல் ராகுலும் பார்திவ் படேலும் இருக்கிறார்கள். ரஹானேவிற்கு உடல் நிலை சரியில்லையெனில் அவர் இல்லையென்பதை யாரும் உணராதபடி கருண் நாயர் அந்த இடத்தை நிரப்பினார். மிகவும் எளிதாக மூன்று சதம் அடித்துள்ளார். சிறந்த ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவே இந்த அணியில் விளையாடும் வாய்ப்பு பெற சிரமப்படுகிறார். விருந்தமான் சாஹாவிற்கு உடல் நிலை சரியில்லையெனில் கையுறையுடன் பேட் ஏந்தி பார்திவ் படீல் எப்போதும் தயார் நிலையில் இருப்பார். சமமான திறமையுடனும் வேகத்துடனும் குறைந்தது ஐந்து பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அஷ்வின் மற்றும் ஜடேஜாவுடன் ஜயந்த் யாதவ் மற்றும் அமித் மிஷ்ரா இருக்கிறார்கள். அஷ்வின் மற்றும் ஜடேஜா உலக பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். 

எனது கருத்துக்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது எனக்குத் தெரியும். விமர்சகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் எந்த இந்திய அணி இதுவரை இங்கிலாந்து அணியை 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. தற்போதைய இங்கிலாந்து அணியைச் சேர்ந்தவர்களும் முன்பைவிட சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். இருப்பினும் விராட்டின் அணி அவர்களை வென்றது. மேலும் காயமேற்பட்டதால் விராட்டின் அணி முழுவீச்சில் முழு பலத்துடன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது என்பதையும் நாம் நினைவில் நிறுத்தவேண்டும். புதிய வீரர்களை கொண்டு போட்டியை சந்திக்க முயன்றபோதும் அவர்கள் அனுபவமிக்க வீரர்களைவிட சிறப்பாக விளையாடினர். இந்த அணியின் பலம் அத்தகையது. ஆகவே விராட்டின் அணியினரை மதிப்போம். அவர்கள் என்றென்றும் வெற்றியடையட்டும்.

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக