'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்!

0 CLAPS
0

ஈரோட்டில் ரூ.50,000 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த 7 வயது சிறுவன் முகமது யாசின், குடும்பத்தினருடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்தார்.

ஈரோடு அருகே உள்ள கனிராவுத்தர்குளம் நந்தவன தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாட்ஷா. ஜவுளி வியாபாரியான இவரது மனைவி அப்ருத் பேகம். இவர்களுடைய மூத்த மகன் முகமது முஜமில் 8-ம் வகுப்பும், இளைய மகன் முகமது யாசின் 2-ம் வகுப்பும் சின்னசேமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், 11ந் தேதி வழக்கம்போல், இருவரும் பள்ளிக்கூடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, முகமது யாசின் கண்ணில் ஒரு பை தென்பட்டது. சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த அந்த பையை எடுத்து பார்த்தை சிறுவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பை முழுவதும் கட்டு கட்டாக பணம். அவன் வயது பக்குவத்திற்கு அதை எண்ணிப் பார்க்கவும் தெரியவில்லை. 

யாரோ பணத்தை தவற விட்டுச் சென்றதாக நினைத்த முகமது யாசின், வறுமையைக் கூட மனதில் நினைக்காமல் தன் கடமையைச் செய்தான். மொத்த பணத்தையும் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க, அவர் சிறுவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினார். பணத்தைப் பார்த்து சிறுவனுக்கு வராத ஆசையைக் கண்டு வியந்த போலீசார், அவன் நேர்மைக்கு ஒரு சல்யூட் அடித்தனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் யாசினின் நேர்மையைப் பாராட்டி வாழ்த்துகளும் கூறினார்.


ரஜினிகாந்த் உடன் யாசின் மற்றும் அவன் குடும்பத்தினர்

ஃபேஸ்புக், ட்வீட்டர் என சமூக வலைதளங்களில் முகமது யாசினியை பாராட்டி வாழ்த்துகள் குவிந்தன. வறுமையில் வாடும், முகமது யாசினுக்கு குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்ய பலரும் முன்வந்தனர். ஆனால் யாசினின் பெற்றோர்கள் அதனை மறுத்துவிட்டனர். இந்த நிலையில் ஈரோடு ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் யாசின் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். அப்போது யாசினுக்கு ஏதேனும் உதவிகள் தேவையென்றால் அதனைச் செய்ய தயாராக உள்ளதாகக் கூறினார்கள். முகமது யாசினின் நேர்மை பாராட்டிய ரஜினி ரசிகர் மன்றத்தினர், நல்ல மனிதனாக வருவான் என வாழ்த்தினர்.

பதிலுக்கு அவர்களுக்கு நன்றி கூறிய யாசின், தான் ரஜினியை தீவிர ரசிகன் எனவும், உதவிகள் வேண்டாம் அங்கிளை பார்க்கணும் எனவும் ஆசையை தெரிவித்தான். நேர்மையாக வாழ நினைக்கும் இந்தச் சிறுவனின் ஆசையை விரைவில் பூர்த்தி செய்வோம், ரஜினிகாந்தை சந்திக்க ஏற்பாடுகள் செய்வோம் என்று மக்கள் மன்றத்தினர் உறுதி அளித்திருந்தனர். 

அதனால் யாசினின் ஆசையை ரஜினியிடம் அவரது ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தனர். உடனடியாக யாசினை பார்க்க விரும்பிய ரஜினி, யாசினையும் அவரது குடும்பத்தினரையும் தனது போயஸ் இல்லத்துக்கு அழைத்து வரச்சொன்னார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில், யாசினின் குடும்பத்தை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, யாசினுக்கு ரஜினி தங்கச் செயின் பரிசளித்தார்.

“பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் இந்த காலக்கட்டத்தில், இவ்வளவு நேர்மையுடன் இந்த சிறுவன் நடந்து கொண்டது சாதாரண விஷயமல்ல. இந்த பணம் நான் சம்பாதித்தது அல்ல என்று நினைத்து அவன் அதனை திருப்பிக் கொடுத்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நல்ல ஒழுக்கத்தை சொல்லி வளர்த்த பெற்றோருக்கு எனது வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.”

“யாசினை என் மகன் போல் நினைத்து, அவன் வாழ்வில் என்ன படிக்க நினைத்தாலும் நான் படிக்க வைக்க தயாராக இருக்கிறேன். அவனது படிப்புச் செலவு முழுவதையும் நானே ஏற்கிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் ரஜினிகாந்த் கூறினார்.

வருகிற 19-ந் தேதி முகமது யாசினுக்கு பாராட்டு விழா நடத்தி, பாராட்டு சான்றிதழ் வழக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் நேர்மையாக நடக்கிறவர்களுக்கு, அந்த வானமும் வசப்படும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் முகமது யாசின் என்றால் அது மிகையல்ல…

கட்டுரை: ஜெசிக்கா

Latest

Updates from around the world