100 கோடி டர்ன்ஓவர் எட்டிய குடும்ப வணிகம்: பர்ஃப்யூம் விற்பனையில் கோலோச்சும் 'ராம்சன்ஸ்'

1984-ம் ஆண்டு மும்பையில் சிறியளவில் தொடங்கப்பட்ட ராம்சன்ஸ் பர்ஃப்யூம் 2021 நிதியாண்டில் 100 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்ட நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.
0 CLAPS
0

இந்தியாவைப் பொறுத்தவரை பர்ஃப்யூம் என்றாலே ஆடம்பரமானதாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் வெளிநாட்டு பிராண்டுகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

இன்று இந்த நிலை மாறியுள்ளது. மேட் இன் இந்தியா பிராண்டுகள் அதிகரித்து வருகின்றன. தரமான தயாரிப்புகளைக் குறைந்த விலையில் வழங்கி வருகின்றன. அதேசமயம் தனிநபர் வருவாயும் அதிகரித்து வருகிறது.

இந்திய பர்ஃப்யூம் சந்தை 15 சதவீத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. என்றாலும் இந்தியாவைப் பொருத்தவரை பர்ஃப்யூம் சந்தை இன்னும் ஆரம்பநிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கிறார் இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோரும் மும்பையைச் சேர்ந்த ராம்சன்ஸ் பர்ஃயூம்ஸ் இயக்குநனரும் ஆன சஞ்சீவ் பாண்டே.

சஞ்சீவ் பாண்டேவின் அப்பா ரமேஷ் பாண்டே 1984ம் ஆண்டு மும்பையில் சிறியளவில் பர்ஃப்யூம் வணிகத்தைத் தொடங்கினார். தரமான பர்ஃப்யூம்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

“என் அப்பா பிர்லா குரூப்பில் வேலை செய்துகொண்டிருந்தார். அந்த சமயத்தில் பர்ஃயூம்களுக்கான சந்தை தேவை இருந்தது. ஆனால் வெகு சிலர் மட்டுமே இதில் செயல்பட்டு வந்தார்கள். பர்ஃப்யூம் பிரீமியம் பொருளாகவே மக்களால் கருதப்பட்டு வந்தது. பயன்படுத்திய வெகு சிலரும் வெளிநாட்டு பிராண்டுகளையே வாங்கி வந்தனர். இந்தப் பிரிவில் இருந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த என் அப்பா அவரது சகோதரர்களுடன் சேர்ந்து ராம்சன்ஸ் பர்ஃப்யூம்ஸ் ஆரம்பித்தார்,” என்கிறார் சஞ்சீவ்.

ஆடம்பரம் என்று கருதப்பட்ட பர்ஃப்யூம் நடுத்தர வர்க்க மக்களையும் சென்றடையவேண்டும் என்பதே இவரது நோக்கமாக இருந்தது.

ஆரம்பகட்டம்

ஆரம்பத்தில் ராம்சன்ஸ் நிறுவனம் உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் பர்ஃப்யூம் வாங்கி மறுவிற்பனை செய்தது. 90-களில் ராம்சன்ஸ் நிறுவனர் சொந்தமாக தொழிற்சாலை தொடங்கினார்.

38 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று ராம்சன்ஸ் பர்ஃப்யூம் 100 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டுள்ளது.

90-கள் வரை ராம்சன்ஸ் பர்ஃப்யூம்ஸ் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தது.

சஞ்சீவின் அப்பா மற்ற மாநிலங்களிலும் விரிவடைய முயற்சி மேற்கொண்டு வந்தார். இரண்டாம் தலைமுறை தொழில்முனைவரான சஞ்சீவ் வணிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகுதான் விரிவாக்கப் பணிகள் சூடு பிடித்துள்ளன.

“என் உறவினர்கள் உட்பட நாங்கள் மொத்தம் ஏழு சகோதரர்கள். எல்லோரும் சேர்ந்து வணிக நடவடிக்கைகளை கவனித்துக்கொள்கிறோம். எங்களில் மூத்தவர் விரிஜேஷ் பாண்டே. அவர் தலைமையில் நாங்கள் அனைவரும் வெவ்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ராம்சன்ஸ் பர்ஃப்யூம் நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சியடையச் செய்கிறோம்,” என்கிறார்.

சஞ்சீவ் 2009-ம் ஆண்டு இந்த வணிகத்தில் சேர்ந்திருக்கிறார். அப்போது ராம்சன்ஸ் நிறுவனத்தின் டர்ன்ஓவர் 1 கோடி ரூபாய். அப்போதிருந்து ஆண்டுதோறும் 30-40 சதவீதம் வளர்ச்சி இருந்து வருகிறது. 2021ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் டர்ன்ஓவர் இருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

ஆஃப்லைனில் ஜெனரல் ட்ரேட் மூலமாகவும் அமேசான், நைகா, பிக்பாஸ்கெட் போன்ற மின்வணிக தளங்கள் மூலம் ஆன்லைனிலும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நைகாவில் ராம்சன்ஸ் பர்ஃப்யூம் முன்னணி பிராண்டாக இருப்பதையும் சஞ்சீவ் சுட்டிக்காட்டினார்.

“இந்த வணிகத்தைப் பொருத்தவரை தயாரிப்பு, பேக்கேஜிங் ஆகிய இரண்டிற்கும் அதிகம் செலவாகும். இந்த இரண்டு முக்கியப் பணிகள் தொடர்பான விநியோகச் சங்கிலியில் பணத்தை சேமித்தோம். இது எங்கள் வளர்ச்சிக்கு உதவியது. அத்துடன் மக்களின் செலவிடும் திறனும் மேம்பட்டுள்ளது. இவை எங்களுக்கு சாதகமான அம்சங்கள்,” என்கிறார் சஞ்சீவ்.

ராம்சன் பர்ஃப்யூம் மூலப்பொருட்கள் பெரும்பாலும் உள்நாட்டிலேயே வாங்கப்படுகின்றன. ஒரு சில பொருட்கள் மட்டும் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த பிராண்ட் ஏர் ஃப்ரெஷ்னர், சானிடைசர் என சுமார் 120 எஸ்கேயூ-க்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்திய பர்ஃப்யூம் சந்தை

சமீப காலங்களில் பர்ஃப்யூம், டியோட்ரண்ட் போன்ற நறுமண தயாரிப்புகள் அதிக கவனம் பெற்றுள்ளன.

இந்தியாவில் 2024-ம் ஆண்டில் நறுமண பொருட்களின் சந்தை 139.44 பில்லியனை எட்டும் என சந்தை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2019ம் ஆண்டில் இந்த மதிப்பு 66.58 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ராம்சன்ஸ் பர்ஃப்யூம் சந்தை பங்களிப்பு 10 சதவீதம். Fogg, Titan Skinn போன்றவை இந்த பிராண்டின் போட்டியாளர்கள்.

ராம்சன்ஸ் பர்ஃப்யூம் விலை 175 ரூபாயில் தொடங்கி 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. 1,500 ரூபாய் விலையில் ப்ரீமியம் தயாரிப்பு ஒன்றை இந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

ரசாயனங்களும் செயற்கைப் பொருட்களும் கலக்கப்பட்ட தயாரிப்புகள் இன்று சந்தையில் அதிகரித்துள்ளன. அதேசமயம் இயற்கை நறுமணங்களின் பக்கம் மக்கள் கவனம் திரும்பியுள்ளது.

டியோட்ரண்ட்களில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே நறுமணம் உள்ளது. அத்தர் வகைகளில் 25 முதல் 100 சதவீதம் நறுமணம் இருக்கும் என்பதால் அவை விலையுயர்ந்தவை. இதுபோன்ற சூழலில் குறைந்த விலையில் பர்ஃப்யூம்களை வழங்கி வாடிக்கையாளர் வட்டத்தை அதிகரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருவதாக சஞ்சீவ் தெரிவிக்கிறார்.

சவால்களும் வருங்காலத் திட்டங்களும்

இந்திய பர்ஃப்யூம் துறையில் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக இருப்பதாக சஞ்சீவ் தெரிவிக்கிறார். தற்போது தேவை அதிகரித்து வருவதால் இந்த நிலை மாறும் என நம்பிக்கையும் தெரிவிக்கிறார்.

ராம்சன்ஸ் பர்ஃப்யூம் மார்க்கெட்டிங் செலவுகளுக்கு அதிகம் செலவிடுவதில்லை. கிரிக்கெட் வீரர் ஷிக்கர் தவான் இந்த பிராண்ட் விளம்பரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்த பிராண்ட் பெண்களுக்கான நறுமணப் பொருட்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. நடிகை யாமி கௌதம் தர் இந்த விளம்பரத்தில் இணைய திட்டமிடப்பட்டுள்ளது.

தற்சமயம் ராம்சன்ஸ் பர்ஃப்யூம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பீஸ் தயாரிக்கும் திறன் கொண்டு இயங்கி வருகிறது.

சமீபத்தில் ஆம்பர்நாத் பகுதியில் புதிய தொழிற்சாலை அமைத்துள்ள இந்நிறுவனம் அடுத்த இரண்டாண்டுகளில் மேலும் சிறப்பாக வளர்ச்சியடைவதில் மும்முரம் காட்டி வருகிறது.

“அடுத்த ஆண்டு 200 கோடி ரூபாய் டர்ன்ஓவர் எட்ட திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார் சஞ்சீவ்.

ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world