Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

‘சூப்பர்மேனை விட, ஃபேமிலி மேனாக இருப்பதே கடினம்’ - ஸ்டான்ட் அப் காமெடியன் பிரவீன் குமார்!

உலகளவில் 1400 நிகழ்ச்சிகளுக்கும் மேலாக நடத்தியுள்ள காமெடியன் பிரவீன் குமார், எளிமையான நகைச்சுவையால் ரசிகர்களைக் கவலை மறந்து சிரிக்க வைப்பார்.

‘சூப்பர்மேனை விட, ஃபேமிலி மேனாக இருப்பதே கடினம்’ - ஸ்டான்ட் அப் காமெடியன் பிரவீன் குமார்!

Thursday July 30, 2020 , 6 min Read

இவர் தான் 39 வயது பிரவீன் குமார்; பிட்ஸ் பிலானி பட்டதாரி, தற்போது ஸ்டான்ட்-அப் காமெடியன்.


ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்’ல் பலமுறை நமக்கு வரும் ஜோக் வீடியோக்களில் நிச்சயம் பிரவீன் குமாரின் ஸ்டான்ட்-அப் காமெடியும் இருக்கும். பிரவீன், 2009 முதல் காமெடி பிரிவில் செயல்பட்டு வருகிறார்.


உலகளவில் 1400 நிகழ்ச்சிகளுக்கும் மேலாக நடத்தியுள்ளார். தன்னுடைய அனுபவங்களையும் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் இவர் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் விவரிக்கும் விதம் ரசிகர்களைக் கவலை மறந்து சிரிக்க வைக்கிறது.

1

வீட்டில் ஒரு எலி உங்களைக் கடந்து சென்றால் எப்படி ரியாக்ட் பண்ணுவீர்கள்? இந்தி தெரியாமல் பெயிண்டர், எலக்ட்ரீஷியனுடன் எப்படிப் பேசுவீர்கள்? உப்புமா செய்யவேண்டுமா அல்லது பிரியாணி செய்ய வேண்டுமா என்று எப்படித் தீர்மானிப்பது? இதுபோன்ற அனுபவங்களை தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடும் அமேசான் பிரைமின் ‘மிஸ்டர் ஃபேமிலி மேன்’ ஷூட்டிங் என பல்வேறு விஷயங்களைப் யுவர்ஸ்டோரி இடம் நினைவுகூறுகிறார் பிரவீன் குமார்.


அவருடனான நேர்காணலின் தொகுப்பு இதோ:


யுவர்ஸ்டோரி: காமெடி பிரிவில் எப்படி செயல்படத் தொடங்கினீர்கள்?


பிரவீன் குமார்: கல்லூரி நாட்களிலேயே நான் மைம் நிகழ்ச்சி செய்யத் தொடங்கினேன். சக மாணவர்களை சிரிக்க வைப்பது மகிழ்ச்சியாக இருக்கும். 1,000-2,000 பேர் மத்தியில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன்.

பட்டப்படிப்பு முடிந்ததும் அனைவரும் அவரவர் வழியில் சென்று விட்டோம். வாழ்க்கையில் ஒரு வெறுமையை உணர்ந்தேன். காமெடி சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒன்றைச் செய்ய விரும்பினேன். அதனால் திருமணம் செய்து கொண்டேன்.

2008ம் ஆண்டு ஸ்டான்ட் அப் காமெடி குறித்த ஒரு கட்டுரையைப் படித்தேன். மற்றவர்களைச் சார்ந்திராமல் நான் தனியாக செயல்படக்கூடிய பிரிவு இதுதான் என்பதை உணர்ந்தேன். அதை முயற்சிக்க விரும்பினேன். முன்னாள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்தபோது ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்சியை நடத்தினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போதிருந்து முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து இந்த நிலையை எட்டியுள்ளேன்.


யுவர்ஸ்டோரி உங்களிடம் இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு உள்ளதா? உங்களது குடும்பத்தினரும் நண்பர்களும் இதில் முழுநேரமாக ஈடுபடுவது பற்றி கூறுவது என்ன?


பிரவீன் குமார்: நான் எப்போதும் கலகலப்பாக இருப்பேன். சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைப்பேன். விளையாட்டுகள் ஏற்பாடு செய்வேன். கல்சுரல் கமிட்டியில் என்னுடைய பங்களிப்பு இருக்கும். அந்த சமயத்தில் ஸ்டான்ட் அப் காமெடி குறித்து எனக்குத் தெரியாது. டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த கட்டுரையைப் படித்த பிறகே அனைத்தும் மாறியது.


யுவர்ஸ்டோரி: கோவிட்-19 காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்தச் சூழலைக் கையாளும் உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


பிரவீன் குமார்: முதல் இரண்டு வாரங்கள் நான் நிலைமையை சமாளிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். திரைப்படங்களையும் வெப் சீரிஸையும் பார்த்து நேரம் செலவிட்டேன்.

வருங்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாமல் மனதளவில் பதட்டமாகவே இருந்தது. எனினும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 2-3 வாரங்கள் கடந்த பிறகு அடுத்த சில மாதங்கள் அல்லது ஓராண்டு வரைகூட இந்தச் சூழல் நிலவலாம் என்பதையும் அமைதியுடன் இந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதையும் உணர்ந்தேன்.

ஆன்லைன் ஷோ செய்ய ஆரம்பித்தேன். ஏதாவது ஒரு அதிசயம் நடைபெறும் என்று காத்திருக்காமல் வேறு வழியில் செயல்படத் தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது.


குறைவான வளங்களை அதிகபட்சமாக பயன்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இந்த ஊரடங்கு சமயத்தில் நான் தெரிந்துகொண்ட முக்கியப் படிப்பினை.

2

யுவர்ஸ்டோரி: நீங்கள் உலகம் முழுவதும் 1,400க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளீர்கள். உங்களால மறக்க முடியாத நிகழ்ச்சிகள் குறித்தும் சொல்லுங்கள்?


பிரவீன் குமார்: மறக்கமுடியாத பல அனுபவங்கள் இருக்கின்றன. 2009ம் ஆண்டு நடந்த ஒரு ஒப்பந்த நிகழ்ச்சி நினைவில் உள்ளது. அதில் யாரும் கைதட்டவில்லை. 2017ம் ஆண்டு அதே நிறுவனத்திற்காக மீண்டும் நிகழ்ச்சி நடத்தினேன். பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். இது என்னால் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி. ஏனெனில் அதே இடத்தில் முன்பு நான் தோல்வியை சந்தித்தேன்.

அப்போதுதான் நான் சரியான முயற்சியில் ஈடுபட்டிருக்கேன் என்பது எனக்குத் தெளிவானது.

அதேபோல் கடந்த ஆண்டு சென்னையில் ‘மிஸ்டர் ஃபேமிலி மேன்’ அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அதுவும் என்னால் மறக்கமுடியாத மற்றொரு நிகழ்ச்சி.


யுவர்ஸ்டோரி: உங்களது காமெடிக்கான ஐடியாக்கங்களை எப்படி உருவாக்குகிறீர்கள்? எப்படி யோசிக்கிறீர்கள்?


பிரவீன் குமார்: நான் என் வாழ்க்கையை வாழ்கிறேன். வீட்டின் ஒரு அறையில் இதற்கென தனியாக உட்கார்ந்து ஜோக்ஸ் பற்றி யோசிப்பதில்லை. வாழ்க்கையில் ஏதாவது வித்தியாசமாக நடந்துகொண்டே இருக்கும். நாம் அதை குறித்துக் கொள்ளவேண்டும். அதில் விரிவாக பணியாற்றவேண்டும்.

‘மிஸ்டர் பேமிலி மேன்’ நிகழ்ச்சியை பார்த்தீர்களானால் வீட்டில் எலி நுழைவது, பெயிண்ட் செய்பவர்களுடன் இந்தியில் பேச போராடுவது, என் மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் பங்கேற்பது போன்றவையே இடம்பெற்றிருக்கும்.

என் நகைச்சுவை நிஜ வாழ்க்கையில் நடப்பதை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கும். அவ்வப்போது சில மசாலாக்களை சேர்த்துக்கொள்வேன் என்பதையும் மறுப்பதற்கில்லை.

உங்கள் வாழ்க்கையை வாழுங்கள், உங்களுக்கு நகைச்சுவை தானாகவே வரும்.

யுவர்ஸ்டோரி: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு யார் உந்துதலளித்துள்ளனர்?


பிரவீன் குமார்: சிறுவயது முதல் இன்றளவும் என்னுள் இருக்கும் நகைச்சுவை உணர்விற்கு இரண்டு பேர் உந்துதலாக இருக்கின்றனர்.

முதலில் பிரபல திரைப்பட நடிகர் கவுண்டமணி. அடுத்தது பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் நடிகர் கிரேசி மோகன்.
3

யுவர்ஸ்டோரி: அமேசான் பிரைமில் சமீபத்தில் ‘மிஸ்டர் ஃபேமிலி மேன்’ என்கிற காமெடி ஸ்பெஷல் நிகழ்ச்சி வெளியாகியுள்ளது. அந்த அனுபவம் எப்படி இருந்தது? பார்வையாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


பிரவீன் குமார்: அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. கனவு நனவானது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்கு முன்பு என்னுடைய ‘36 வயதினிலே’ நிகழ்ச்சியை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. அதை யூட்யூப் வாயிலாக வெளியிட்டேன். தற்போது 3.7 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.


அதுவே ‘மிஸ்டர் ஃபேமிலி மேன்’ ஒளிபரப்ப நம்பிக்கையளித்தது. அந்த நிகழ்ச்சியில் இயக்குநர், கேமராமேன் தவிர 80 பேர் இரண்டு நாட்கள் பணியாற்றினர். அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.


தொடர்ந்து கடினமாக முயற்சி செய்யுங்கள். ஏதோ ஒரு விஷயத்தில் தோல்வியடைந்தாலும் வரும் நாட்களில் மேலும் சிறப்பான விஷயங்கள் உங்களுக்காக நிச்சயம் காத்திருக்கிறது என்றே அர்த்தம். இதையே என் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தோல்வியை வெற்றிப்படிகளாக மாற்றுங்கள். பழைமையான வாக்கியமாக தோன்றலாம். ஆனால் இதை நான் அனுபவப்பூர்வமாக சொல்கிறேன்.

யுவர்ஸ்டோரி: நீங்கள் ‘சூப்பர் மேனாக இருப்பது எளிது. ஆனால் ஃபேமிலி மேனாக இருப்பது மிகவும் கடினம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். எதற்காக இப்படிக் குறிப்பிட்டுள்ளீர்கள்?


பிரவீன் குமார்: இந்தியக் குடும்பங்களில் உள்ள ஆண்களின் நிலையை கருத்தில் கொண்டே இப்படி சொல்லியிருந்தேன். ஏனெனில் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைப்பதில்லை. பெண்கள் அதிகம் பணிபுரிகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் ஆண்களும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களது உழைப்பும் அங்கீகரிக்கப்படவேண்டும்.

குடும்பத்தில் உள்ள ஆண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் அதிக மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள். அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டியுள்ளது. அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய முறையான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதுவே அமேசான் பிரைம் நிகழ்ச்சியின் ஐடியா.

யுவர்ஸ்டோரி: உங்கள் மனைவியும் மகளும் மிகப்பெரிய விமர்சகர்கள் என்று பலமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்கள் எத்தகைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள்?


பிரவீன் குமார்: நான் ஒவ்வொரு முறை ஜோக் எழுதும்போதும் என் மனைவி மற்றும் மகள் முன்பு ஒத்திகை பார்ப்பது வழக்கம். சிரிப்பு வந்தாலும் அவர்கள் விமர்சகர்கள் என்பதால் சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள். நிறைய ஆலோசனைகளை வழங்குவார்கள்.

என்னுடைய நிகழ்ச்சி ஒன்றில் Soch ஆடைகள் ஷாப்பிங் குறித்த மொத்த பகுதியும் என் மனைவியின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. ட்ரையல் ரூமில் பெரிய வரிசையாக நிற்பது குறித்தும் கடையில் ஆண்களும் விற்பனையாளார்களும் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் அவர்தான் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

கதையை உருவாக்கும்போது இது பெரியளவில் உதவியாக இருந்தது. இந்த குறிப்பிட்ட பகுதி தற்போது யூட்யூபில் ட்ரெண்டிங் ஆக உள்ளது

4

யுவர்ஸ்டோரி: நகைச்சுவையைப் பொறுத்தவரை உலகம் எத்தகைய கண்ணோட்டத்தில் அதை பார்க்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


பிரவீன் குமார்: நகைச்சுவைக்கு எல்லையே இல்லை. இதுவே அதன் சிறப்பம்சம். நகைச்சுவை என்பது தனிநபர் விருப்பத்தைப் பொறுத்தது. எனக்கு ஒரு வகையான நகைச்சுவை பிடிக்கும். நீங்கள் வேறொரு வகை நகைச்சுவையை விரும்பலாம். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகை நகைச்சுவை பிடிக்கவில்லை என்றால் அது மோசமான நகைச்சுவை என்பது பொருள் அல்ல.


ஒவ்வொருவரும் கடினமாக முயற்சி செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல் உண்டு.

எனக்கு ஒருவரின் ஸ்டைல் பிடிக்காமல் போகலாம். அவர் மோசமான காமெடியன் என்பது பொருளல்ல. யூட்யூப் கமெண்ட்ஸ் பிரிவில் வெறுக்கத்தக்க, எதிர்மறையான பதிவுகளை எழுதுவதைக் காட்டிலும் மக்கள் திறந்த மனதுடன் இருக்கவேண்டும். பார்வையாளர்களிடையே இந்த மாற்றத்தைப் பார்க்கவே விரும்புகிறேன்.

யுவர்ஸ்டோரி: காமெடி பிரிவில் ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் வழங்க விரும்பும் அறிவுரை என்ன?


பிரவீன் குமார்: நீங்கள் உங்களது வழக்கமான பணியுடன் உங்களுக்கு ஆர்வமான பகுதியில் செயல்படுங்கள். அவசரப்பட்டு வழக்கமான பணியை விட்டுவிடக்கூடாது என்பதே என்னுடைய கருத்து.

உங்கள் வருவாய் என்ன என்பதை மதிப்பிடுங்கள். உங்கள் வழக்கமான பணியில் கிடைப்பதில் மூன்றில் இரண்டு பங்கு கிடைக்குமெனில் நீங்கள் தொடரலாம்

இது கடினம்தான். பொறுமை அவசியம். இரண்டு பணிகளில் மாறி மாறி ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கும். முதல் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டால் வெற்றியடையலாம்.


யுவர்ஸ்டோரி: இந்தத் துறையில் உள்ள மற்ற காமெடியன்களுடன் இணைந்து செயல்படும் திட்டம் உள்ளதா?


பிரவீன் குமார்: தற்போதைக்கு மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது சவாலாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான ஸ்டைல் இருக்கும். வெப் சிரீஸ் போன்றவற்றிற்கு மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து திட்டமிட வாய்ப்புண்டு. ஆனால் இதுவரை அப்படி ஏதும் திட்டமிடவில்லை.


யுவர்ஸ்டோரி: உங்களது வருங்காலத் திட்டங்கள் என்ன? சுவாரஸ்யமான பிராஜெக்ட்ஸ் ஏதேனும் தயாராகி வருகிறதா?


பிரவீன் குமார்: ஆம். என்னுடைய அடுத்த ஸ்பெஷல் நிகழ்ச்சியைத் தயாரித்து வருகிறேன். வழக்கமாக என்னுடைய நிகழ்ச்சியில் பல்வேறு சிறுகதைகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போது தயாரித்து வரும் நிகழ்ச்சியில் ஒரே நீண்ட கதையை உருவாக்கி வருகிறேன்.


இது சற்று சவாலாக இருக்கும். இருப்பினும் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க விரும்புவதால் அதை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.


யுவர்ஸ்டோரி: வார இறுதியில் நீங்கள் விரும்பி ஈடுபடும் விஷயங்கள் என்னென்ன?


பிரவீன் குமார்: என் மனைவியுடன் டிவி பார்ப்பேன். நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமான வெப் சீரிஸ் பார்த்துள்ளோம். தொடர்ந்து பார்ப்போம். வார இறுதியில் குடும்பத்துடன் திரைப்படங்களுக்கு செல்வோம். ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டதும் மீண்டும் தொடர்ந்து பார்ப்போம்.


ஆங்கில கட்டுரையாளர்: ஊர்வி ஜேக்கப் | தமிழில்: ஸ்ரீவித்யா