வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு எலுமிச்சை விவசாயம் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டும் பாபு!

எலுமிச்சை விவசாயம் மூலம் லட்சக்கணக்கில் வருமானம்!
341 CLAPS
0

14 மரங்கள் மூலம் ஆயிரம் கிலோ எலுமிச்சை பழங்களை அறுவடை செய்யும் பாபு லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார்.

பஹ்ரைன், போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் என பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நிறுவனங்களில் தொழிலாளராகப் பணியாற்றிய பாபு, 2010 ஆம் ஆண்டில், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தார். வெளிநாட்டில் தனது 15 ஆண்டுகால வாழ்க்கையை முடித்துகொண்டு சொந்த ஊர் திரும்பினார்.

”சந்தையில் எலுமிச்சை பழத்துக்கான டிமாண்ட் இருப்பதை அறிந்த பின்புதான், எனக்கு எலுமிச்சையை பயிரிடலாம் என்ற யோசனை உதித்தது. சமையலறை பயன்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், எலுமிச்சம்பழம் பொட்டாசியம், ஃபோலேட், மாலிப்டினம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதையும், பல நன்மைகளையும் கொண்டுள்ளது என்பதையும் அப்போது தான் உணர்ந்தேன்,” என்று பாபு தி பெட்டர் இந்தியா-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாபுவால் தனது தோட்டத்தில் குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே அதற்கு உண்டான காய்கறிகளை பெற முடிந்தது. ஆனால் அதுவே எலுமிச்சை என்று வரும்போது, அது மிகவும் எளிதாகக் கிடைக்கிறது. வழக்கமாக, எலுமிச்சை மூன்று பருவங்களில் பழங்களைத் தரும், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, பாபுவின் தோட்டத்தில், எலுமிச்சை ஆண்டு முழுவதும் ஏராளமாக கிடைக்கிறது.

“முதல் கட்டமாக, எனது மூதாதையர் வீட்டிலிருந்து 14 மரக்கன்றுகளைச் சேகரித்து எனது 7 சென்ட் நிலத்தில் நட்டேன். வெறும் நான்கு ஆண்டுகளில், நான் சுமார் 1,000 கிலோகிராம் எலுமிச்சை அறுவடை செய்து ஒரு கிலோவுக்கு 100ரூபாய் என விற்றேன். நான் அறுவடை செய்யும் எலுமிச்சைகளை முக்கியமாக கடைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் பிரிவுகளில் விற்கிறேன்.”

ஒரு மரத்திலிருந்து கிட்டத்தட்ட 80-100 கிலோகிராம் எலுமிச்சம் பழங்கள் எனக்குக் கிடைக்கிறது. சந்தை விலையின்படி, எலுமிச்சை விலை அதிகரிக்கிறது மற்றும் குறைகிறது.

ஆனால் எலுமிச்சையிலிருந்து கிடைக்கும் வருவாயைப் புரிந்துகொண்டதால், நான் பயிரிட்ட நிலத்தை விரிவுப்படுத்தினேன், என்கிறார் பாபு. பின்னர் அவர் தனது தோட்டத்திலிருந்து ரப்பர் மரங்களை வெட்டியதன் மூலம் தனது 2 ஏக்கர் நிலத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டார். தற்போது, அவருக்கு கிட்டத்தட்ட 250 எலுமிச்சை மரங்கள் உள்ளன.

ஆரம்ப காலக்கட்டத்தில் மரங்கள் சரியாக வளரவில்லை. பல்வேறு அளவுகளில் மண்ணின் தன்மையை சோதித்து பார்த்தபோது, அதில் குறிப்பிட்டத்தக்க கூறுகள் இல்லை என்பது தெரிய வந்தது. இதுதான் மரத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார். பின்பு, அந்த மண்ணில் எருவை சேர்த்ததும் தாவரங்கள் நன்றாக வளர ஆரம்பித்தன.

எலுமிச்சை பயிரிடுவது பாதுகாப்பானது. ஏனென்றால் மரங்களில் கூர்மையான முட்கள் இருப்பதால் குரங்குகள், எலிகள், வெளவ்வால்கள் போன்ற விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். மேலும், அதன் புளிப்பு சுவை விலங்குகள் அதனை தீண்டாது என்று அறிவுறுத்துகிறார் பாபு.

மரங்களுக்கு சரியான அளவு சூரிய ஒளி, நீர், உரம் மற்றும் பராமரிப்பு ஆகியவை தேவை என்கிறார் பாபு.

“கடின உழைப்பால் மட்டுமே நல்ல பலன்களைப் பெற முடியும். முதல் நாள் தொடங்கி, நான் என் தாவரங்களுக்கு நல்ல அக்கறையையும் அன்பையும் கொடுத்தேன், அதனால் அவை அதிக பலனைத் தருகின்றன,”என்று நெகிழ்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மரக்கன்றுகளை விற்பனை செய்வதற்காக எலுமிச்சை புல்வெளிகள் என்ற பெயரில் நர்சரியையும் வைத்திருக்கிறார்.

தகவல் மற்றும் படங்கள் தொகுப்பு- thebetterindia | தமிழில்: மலையரசு

Latest

Updates from around the world