20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் மருந்து நிறுவனம் நிறுவிய அப்பா-மகன்!

By YS TEAM TAMIL|25th Aug 2020
அருண் நரங் நிறுவிய Rowan Bioceuticals கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக மருந்துத் துறையில் செயல்பட்டு இன்று இலங்கை, துருக்கி, அரபு நாடுகள் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்கள் சருமம் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்தப் பிரச்சனைகளுக்கு மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் முக்கியக் காரணங்களாக அமைகின்றன.


சருமப் பிரச்சனைகள் அதிகரிப்பதாலும் இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாலும் இந்தியாவில் சரும நோய் பிரிவு வளர்ச்சியடைந்து வருகிறது. 2017ம் ஆண்டில் 1.6 பில்லியன் டாலராக இருந்த இந்திய சருமப் பராமரிப்பு சந்தை 9 சதவீத ஆண்டு வளர்ச்சியுடன் 2023-ம் ஆண்டில் 2.7 பில்லியன் டாலரை எட்டும் என மதிப்பிடப்படுவதாக ‘ரிசர்ச் அண்ட் மார்கெட்ஸ்’ ஆய்வு குறிப்பிடுகிறது.


இந்தியாவில் தற்சமயம் Sun Pharma, Abott, Adroit Biomed போன்ற பல்வேறு பிரபல பிராண்டுகள் மருந்து மற்றும் காஸ்மெடிக்ஸ் பிரிவில் செயல்பட்டு வருகின்றன.

போட்டி அதிகம் இருப்பினும் டெல்லியைச் சேர்ந்த Rowan Bioceuticals Private Limited நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச சந்தைகளிலும் தனித்துவமாக செயல்பட்டு வருகிறது.


2005-ம் ஆண்டு அருண் நாரங் (56) அவர்களால் நிறுவப்பட்ட இந்த மருந்து நிறுவனம் சரும பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்புத் தயாரிப்புகளை வழங்குகிறது.

இந்நிறுவனம் ஆண்டிற்கு 20 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. தற்போது துருக்கி, இலங்கை, அரபு நாடுகள் போன்ற பகுதிகளுக்கு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
1

பயணம்

அருண் 1989ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியில் விற்பனை பிரதிநிதியாக மருந்துத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். ரேன்பேக்சி, மேக்மில்லன், அலெம்பிக் போன்ற முன்னணி மருந்து நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். மற்ற நிறுவனங்களில் அனுபவம் பெற்ற பின்னர் 2004ம் ஆண்டு ரேன்பேக்சியில் இருந்த தனது பங்குகளை விற்பனை செய்தார். ரோவன் பயோசெடிக்கல்ஸ் நிறுவனத்தை 4 லட்ச ரூபாய் முதலீட்டுடன் தொடங்கினார்.

ஆரம்பத்தில் இந்தத் துறை குறித்த சிறப்பான புரிதலைப் பெற சர்வதேச பத்திரிக்கைகளையும் கட்டுரைகளையும் படித்தார். ஆரம்பத்தில் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளைப் பெற்றார். அந்த சமயத்தில் இந்த சந்தையில் வாய்ப்பு அதிகம் இருப்பதை உணர்ந்தார். சருமப் பிரச்சனைகளுக்கான தயாரிப்புகள் சிறப்பாக விற்பனையாகத் தொடங்கிய காலகட்டம் அது.

40 வயதைக் கடந்த நிலையில் நிறுவனத்தைத் தொடங்கிய அவரது முயற்சி எளிதாக இருந்துவிடவில்லை என்கிறார் அவரது மகன் ஆயுஷ் நரங். 29 வயதான ஆயுஷ் தற்போது நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுப் பிரிவின் தலைவராக செயல்படுகிறார்.


அருண் எப்போதும் பயணங்கள் மேற்கொள்வது வழக்கம். பேக்கிங், நிர்வாகம் என அனைத்து பொறுப்புகளையும் ஏற்று கடினமாக உழைத்தார். இதைக் கண்ட ஆயுஷ், ஆரம்பத்தில் நிறுவன செயல்பாடுகளில் பங்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும் அந்த நாட்களில் வணிக நடவடிக்கைகளுக்கான மூலதனமும் குறைவாகவே கிடைக்கும் என்கிறார் ஆயுஷ்.

2

வணிகத்தின் மீது ஆர்வம்

ஆயுஷ் ஆரம்பகட்டத்தில் அப்பாவுடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் வேறு பணியில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கிறார். பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் மிஸ்ட்ரி ஆடிட்டர் பற்றிய கட்டுரை ஒன்றை படித்தார். இந்த ஆடிட்டர்கள் மூலம் பெரிய பிராண்டுகள் தங்களது ஸ்டோர்களையும் செயல்பாடுகளையும் கண்காணிக்கும். இந்த முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பிரபலமாக இருப்பதால் இதில் செயல்பட விரும்பினார் ஆயுஷ்.

“அவ்வாறு நிறுவனங்களின் ஸ்டோர்களைப் பார்வையிடவும் நிலையான இயக்க நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் ஓரிரு முக்கிய மிஸ்ட்ரி ஆடிட் நிறுவனங்கள் ஃப்ரீலான்சர்களை பணியமர்த்துவார்கள். ஆனால் இந்த இந்திய நிறுவனங்கள் ஆடை பிராண்டுகள், டெலிகாம் ஸ்டோர்கள் போன்ற சில்லறை வர்த்தக பிரிவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தன,” என்றார் ஆயூஷ்.

இருப்பினும் இவர் முறையாகப் பதிவு செய்து பிஎம்டபிள்யூ, தாஜ், ஐடிசி உள்ளிட்ட 67 பிராண்டுகளுக்கு ஆடிட் செய்ததாக தெரிவிக்கிறார். இவ்வாறு வணிகம் மற்றும் பிராண்ட் உருவாக்குவதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.


ஆயூஷ் படிப்பை முடித்த பிறகு அப்பாவின் வணிகத்தில் சேரத் தீர்மானித்தார். தனது அப்பா, உலகளவில் சென்றடையக்கூடிய பிரபல பிராண்டாக உருவாக்கும் நோக்கத்துடன் இந்த வணிகத்தைத் தொடங்கியதாக ஆயூஷ் தெரிவிக்கிறார்.

ஆயுஷ் பெரியளவில் செயல்பட விரும்பினார். இருவரும் ஒன்றிணைந்து பிராண்டை உருவாக்கினார்கள். தற்போது இந்த பிராண்ட் உள்நாட்டு சந்தையில் 10.8 கோடி ரூபாயும் சர்வதேச சந்தைகளில் 9 கோடி ரூபாயும் விற்றுமுதல் ஈட்டியுள்ளது.

விரிவாக்கம்

ரோவன் பயோசெடிக்கல்ஸ் 70-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தயாரிப்புகளை வழங்குகிறது. இதில் 12 பிரிவுகள் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. மற்ற 58 பிரிவுகள் கர்நாடகா, உத்தர்காண்ட், இமாச்சலப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலப்பொருட்கள் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பெறப்படுகின்றன.


சன்ஸ்கிரீன் தயாரிப்பான Tanscreen, முடி கொட்டுவதைக் குறைக்க உதவும் KLOSH-F, பல்வேறு நன்மைகள் கொண்ட ஆண்டிஆக்சிடண்ட் Glosutix Plus, மங்கு உள்ளிட்ட சருமப் பிரச்சனைகளுக்கு உதவும் Dewmelan போன்றவை இந்நிறுவனத்தின் சில முக்கிய தயாரிப்புகள் ஆகும்.


மார்பகம் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கான பிரத்யேக கிரீம் இவர்களது தனித்துவமான தயாரிப்புகளாகக் கருதப்படுகிறது. Glosutix Plus உட்பட இந்நிறுவனத்தின் இரண்டு தயாரிப்புகள் USFDA அங்கீகாரம் பெற்றுள்ளது.


ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலமாகவும் அதன் வலைதளம் மூலமாகவும் ரோவன் பயோசெடிக்கல்ஸ் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் FIEO பட்டியலிலும் இடம்பெற்று உலகம் முழுவதும் உள்ள ஆர்டர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.


ரோவன் பயோசெடிக்கல்ஸ் ஆரம்பத்தில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியதாகவும் பின்னர் இஸ்தான்புல் போன்ற இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும் ஆயுஷ் தெரிவிக்கிறார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அரபு நாடுகள் சந்தையில் சிறப்பாக செயல்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். இங்கு ஏற்கெனவே ஒரு அலுவலகம் இயங்கி வரும் நிலையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் திட்டமும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.


உள்நாட்டு சந்தைக்கும் சர்வதேச சந்தைக்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசத்தை ஆயூஷ் சுட்டிக்காட்டும்போது,

“புவியியல் ரீதியாக இந்தியா மிகப்பெரிய சந்தையாக கருதப்படுகிறது. இதனால் பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறியளவில் செயல்படும் நிறுவனங்கள் என போட்டியும் அதிகமாக உள்ளது. சர்வதேச சந்தைகளில் மக்கள்தொகை குறைவாக இருப்பதால் ஒப்பீட்டளவில் குறிப்பிட்ட சந்தைத் தேவைகளே நிலவுகிறது,” என்றார்.

லாஜிஸ்டிக்ஸ் தவிர தற்சமயம் கோவிட்-19 காரணமாக வேறு எந்தவித பாதிப்பையும் சந்திக்கவில்லை என்கிறார் ஆயூஷ். மூலப்பொருட்களுக்கான இருப்பு குறைந்து வருவதால் வரும் மாதங்கள் சவால் நிறைந்ததாக இருக்கக்கூடும் என்கிறார்.


மக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே இருப்பதால் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புப் பொருட்களுக்கான தேவை கடந்த மூன்று மாதங்களில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் Doctrac என்கிற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளார் ஆயுஷ்.


கோவிட்-19 பாதிப்புகள் குறைந்த பின்னர் மருத்துவர்களையும் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளையும் இணைப்பதே இந்தச் செயலியின் நோக்கம்.


ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.