பதிப்புகளில்

இணையத்தில் உங்களுக்கான புதிய பகர்வு மேடை!

10th Apr 2018
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

இணையத்தில் புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகமாகியிருக்கிறது. செயலி வடிவிலும் பயன்படுத்தக்கூடியதாக இது அமைந்துள்ளது.

image


புதிதாக சமூக வலைப்பின்னல் சேவையோ, செயலியோ அறிமுகமாவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை தான். அதிலும், நம்பர் ஒன் சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக், தகவல்கள் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டு கடும் விமர்சனத்திற்கு இலக்காகி இருக்கும் நிலையில், சமூக வலைப்பின்னல் பரப்பில் புதிய வரவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ஆனால், ’மிஸ்டர் அவுல்’ (https://www.mrowl.com/) எனும் விநோதமான பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை ஃபேஸ்புக்கிற்கு போட்டியானது இல்லை. அதற்கு மாற்று என்றும் சொல்வதற்கில்லை. அதைவிட முக்கியமாக, ஃபேஸ்புக் சர்ச்சைக்கு மத்தியில் முளைத்துள்ள சேவையும் அல்ல.

புதுமையான வலைப்பின்னல் சேவை என்று சொல்லக்கூடிய மிஸ்டர் அவுல் கடந்த ஆண்டே அறிமுகமாகிவிட்டது. பெரிய அளவில் பரபரப்பையோ, ஆர்பாட்டத்தையோ ஏற்படுத்தாமல் இன்னமும், வளர்ச்சி நிலை தளமாகவே இருக்கும் இந்த சேவை பற்றி அறிமுகம் செய்து கொள்வோம்.

இந்த தளத்தின் பெயர் மட்டும் விநோதமாக இல்லை; ’சமூக ஆர்வ இயந்திரம்’ எனும் இதன் வர்ணனையும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கண்டறிதல் இயந்திரம் (டிஸ்கவரி இஞ்சின்) என்று சொல்லப்படும் இணைய சேவைகள் வரிசையில் இந்த தளத்தை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது இந்த தளம் வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவை கிடையாது. மாறாக இணையத்தில் நீங்கள் ஆர்வம் கொண்டுள்ள துறைகளில் புதிய விஷயங்களை கண்டறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சேவை. இதற்கு ஆதாரமாக பகிர்வு வசதியை பயன்படுத்திக்கொள்கிறது. இதையே, இணையத்தில் உங்களுக்கு பிடித்தமான தலைப்புகளின் பிளேலிஸ்ட்டை, கண்டறியுங்கள், உருவாக்குங்கள், இணைந்து செயல்படுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள் என தனது சேவைக்கான கோஷமாக இந்த தளம் குறிப்பிடுகிறது.

ஆக, அடிப்படையில் பார்த்தால் இணையத்தில் உலாவும் போது உங்களுக்கு ஆர்வம் அளிக்க கூடிய விஷயங்களை கண்டறிந்து அவற்றை ஓரிடத்தில் சேமித்து வைப்பதற்கான சேவை இது. உங்கள் ஆர்வம், சேமிப்பு அடிப்படையில் நீங்கள் மற்றவர்களுடனும் தொடர்பு கொள்ளலாம் என்பதும், இந்த தொடர்பு மூலம் கூட்டாக புதிய விஷயங்களை கண்டறியலாம் என்பதும் இது அளிக்கும் கூடுதல் வசதி.

ஒரு விதத்தில் பார்த்தால், ஃபேஸ்புக் சேவை ஏற்படுத்தியிருக்கும் நிலைத்தகவல் பகிர்வு பழக்கத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இந்த சேவையில் பயனாளிகள் தங்கள் செயல்களையோ, கருத்துக்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. அதற்கு பதிலாக இணையத்தில் கண்டறியும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். முதலில் இதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் அல்லது கூகுள் முகவரி மூலமே உறுப்பினர் பதிவு வசதி அளிக்கப்படுகிறது. இதனால் தகவல்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

உறுப்பினராக உள்ளே நுழந்ததும், இந்த தளத்தின் அம்சங்கள் மற்றும் அவற்றுக்கான பதங்கள் மீண்டும் குழப்பத்தை அளிக்கலாம். ஃபேஸ்புக் போன்ற டைம்லைன் வசதி எல்லாம் இதில் கிடையாது. சொல்லப்போனால் இதில் என்ன செய்வது என்ற குழப்பமும் கூட ஏற்படாலம். ஆனால் பொறுமையாக கவனித்தால் இந்த சேவையின் ஆதார அம்சங்கள் பிடிபடும்.

image


முதல் அம்சம், இந்த தளத்தில் நீங்கள் உங்களுக்கான கிளையை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது. கிளை என்பது இணையத்தில் உங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயம் தொடர்பான தகவல்களை சேகரித்து வைத்தற்கான இடமாகும். கிளையை உருவாக்கவும் (கிரியேட் பிரான்ச்) எனும் கட்டத்தை கிளிக் செய்ததும், உங்களுக்கு விருப்பமான தலைப்பின் பெயரை கொடுத்து, அதற்கான விளக்கததையும் அளித்து அதை சேமிக்கலாம். உதாரணத்திற்கு, திரைப்படங்கள் எனும் தலைப்பில், உங்களை கவர்ந்த திரைப்பட இணைப்புகளை எல்லாம் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு கிளையை உருவாக்கி கொள்ளலாம்.

இந்த கிளையை, உங்கள் பார்வைக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம். (பிரைவட்). அல்லது பொதுவிலும் பகிரலாம். ( பப்ளிக்). இதன் பிறகு இந்த தலைப்பின் கீழ் துணைத்தலைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். ஹாலிவுட் படங்கள், கிளாசிக் படங்கள், ரஜினி ஹிட்ஸ் என இந்த வகைகள் அமையலாம். அடுத்த கட்டமாக, ஒவ்வொரு தலைப்பு தொடர்பான இணைய இணைப்புகளை அவற்றுக்கான குறிப்புகளுடன் சேமித்து வைக்கலாம். கிளாசிக் படங்கள் தொடர்பான இணைப்புகளை வரிசையாக சேமிக்கலாம். மற்ற பொருத்தமான இணைப்புகளையும் சேமிக்கலாம்.

இப்படியே சேமித்துக்கொண்டு சென்றால், உங்களுக்கான கிளையை வளர்ச்செய்யலாம். இந்த கிளையில் புகைப்படங்களை சேர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆக, இணையத்தில் நீங்கள் கண்டறியும் உங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயங்களை இந்த பக்கத்தில் தொகுத்துக்கொண்டிருக்கலாம். இந்த பக்கத்தில் எத்தனை தலைப்புகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த தொகுப்பு வசதி தான் இந்த சேவையின் பிரதான அம்சம். ஒருவிதத்தில் இதை விரும்பிய தளங்களை குறித்து வைக்கும் புக்மார்கிங் வசதி போல கருதலாம். அல்லது உருவப்படங்களாக தகவல்களை சேமிக்க உதவும் காட்சிப்பலகை சேவையான பிண்டிரெஸ்ட் போலவும் இதை கருதலாம்.

இப்படி உங்களுக்கான கிளையை உருவாக்கிக் கொண்டு பிறகு அடுத்ததாக பகிர்வு வசதிக்கு முன்னேறலாம். பகிர்வு வேண்டாம், என் பக்கத்தை எனக்கு மட்டும் வைத்துக்கொள்கிறேன் என்றால் உங்கள் பக்கத்தை தனிப்பட்டதாகவே வைத்துக்கொள்ளலாம். நீங்கள் மட்டும் இதை பயன்படுத்தலாம். இதில் என்ன சிறப்பு என்றால் நீங்கள் சேமித்த தகவல்களை எளிதாக தேடும் வசதி இருக்கிறது. எனவே இந்த தளம் உங்களுக்கான கூகுள் போலவும் செயல்படும்.

image


பகிர்வு வசதியை விரும்பினால், நீங்கள் இந்த தளத்தில் மற்றவர்கள் உருவாக்கியுள்ள கிளை பக்கங்களை பார்க்கத்துவங்கலாம். ஒவ்வொருவரும் தங்கள் கிளைகளில் எந்த வகையான இணைப்புகளை சேமித்துள்ளார்கள் என பார்க்கலாம். உங்களுக்கு ஆர்வம் உள்ள கிளைகளை பார்ப்பதன் மூலம், புதிய இணையப்புகளை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

புதிய இணைப்புகள் பிடித்திருந்தால் அதற்கு விருப்பம் தெரிவிக்கலாம். ஹார்ட் செய்வதாக இது அமைகிறது. அந்த இணைப்பை நீங்களும் உங்கள் பக்கத்தில் சேமிக்கலாம். (கிராப் செய்வது). இந்த பக்கத்தை சமூக ஊடகத்திலும் பகிரலாம்.

இதே போலவே உங்கள் பக்கம் பொதுபார்வைக்கானதாக இருந்தால் மற்றவர்களும் உங்கள் இணைப்புகளை பார்வையிட்டு, விரும்பலாம், தங்கள் பக்கத்தில் சேமிக்கலாம். இணைப்புகள் குறித்து பரஸ்பரம் கருத்து தெரிவிக்கலாம். மற்றவர்களை பின் தொடரலாம். இந்த வசதிகள் தான் இந்த தளத்தை சமூக வலைப்பின்னல் சேவை தன்மை பெற வைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயங்கள் தொடர்பான இணைய உரையாடலில் ஈடுபடலாம்.

ஃபேஸ்புக் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் வெட்டி அரட்டைகள் இல்லாமல் ஆர்வம் உள்ள விஷயங்கள் சார்ந்த பகிர்வுகள் மூலம் இணைய கண்டறிதலில் ஈடுபடலாம். இந்த தளத்தில் தனிப்பட்ட பக்கங்களை உருவாக்குவது தவிர, மற்றவர்களுடன் இணைந்து சமூக கிளைகளை உருவாக்கலாம். அதாவது குறிப்பிட்ட தலைப்புகளில் கூட்டாக இணைய இணைப்புகளை உருவாக்கலாம். அந்த வகையில் இந்த தளம் விக்கிபீடியாவின் தன்மையும் பெற்றுள்ளது. தளத்தின் முகப்பு பக்கத்திலேயே இத்தகைய கூட்டு பக்கங்களை காணலாம். எல்லா கிளைகளிலும் விக்கிபீடியா தகவல்களையும் பார்க்கலாம்.

இந்த சேவையின் அம்சங்கள் எல்லாமே புதியவை என்று சொல்ல முடியாது. ஏற்கனவே பல சமூக வலைப்பின்னல் சேவைகளில் உள்ள அமசங்களை அழகாக தொகுத்து, புதிய பூச்சுடன் அளித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

ஃபேஸ்புக் பாணி மிகைப்பகிர்வுகளால் வெறுத்து போயிருப்பவர்களுக்கு இந்த சேவை ஈர்ப்புடையதாக இருக்கும். ஆனால் வெகுஜன சேவையாக உருவாகும் அளவுக்கு போதுமான பயனாளிகளை இந்த தளம் ஈர்க்குமா என பொருந்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால் அதற்கு முன் நீங்கள் முயன்று பார்க்கலாம்; https://www.mrowl.com/

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags