Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

1 லட்சத்தில் தொடங்கி ரூ.8 கோடி டர்ன்ஓவர் நிறுவனம் உருவாக்கிய பத்திரிக்கையாளர்!

பத்திரிக்கையாளராக இருந்த நிக்கி குப்தா தனது கணவருடன் தொழில் முனைவில் இறங்கி இன்று வெற்றிப் பெண்மணியாக வலம் வருகிறார்.

1 லட்சத்தில் தொடங்கி ரூ.8 கோடி டர்ன்ஓவர் நிறுவனம் உருவாக்கிய பத்திரிக்கையாளர்!

Thursday July 09, 2020 , 4 min Read

நிக்கி குப்தா ஒரு தொழில்முனைவர். தகவல் தொழில்நுட்ப மூலோபாயவாதி. சுகாதார ஆர்வலர். இவருக்கு 36 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் டீம்வொர்க் கம்யூனிகேஷன்ஸ் குரூப் என்கிற மக்கள் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு நிறுவனம், ஹெல்த் அண்ட் வெல்னெஸ் குரூப் ஆகிய இரு நிறுவனங்களின் இணை நிறுவனர்.


இந்த தொழில்முனைவர் கான்பூரில் பிறந்து வளர்ந்தவர். இவரது குடும்பத்தில் உள்ள பெண்கள் வீட்டை பராமரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.

“புதிய வாய்ப்புகளை ஆராய்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். இளம் வயதிலேயே தொழில்முனைவு, வணிக செயல்பாடுகள், வணிகத்தை விரிவுபடுத்தும் விதம் போன்றவற்றை என் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்,” என்கிறார் நிக்கி.
1

முழுமையான தகவல் தொடர்பு நிறுவனம்

மக்கள் தொடர்பியல் துறையில் உயர்கல்வி முடித்த பிறகு முன்னணி ஊடக நிறுவனம் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றினார். அதன் பிறகே மக்கள் தொடர்பு பிரிவில் ஆர்வம் ஏற்பட்டது. தகவல் தொடர்பு நிறுவனங்கள் சிலவற்றில் பணியாற்றிய பிறகு தொழில்முனைவில் ஈடுபடும் எண்ணம் ஏற்பட்டது. அவரது கணவர் கமல் நாராயணனும் பத்திரிக்கையாளர். எனவே 2010-ம் ஆண்டு கணவருடன் இணைந்து டீம்வொர்க் கம்யூனிகேஷன்ஸ் குரூப் என்கிற தகவல் தொடர்பு நிறுவனத்தை நிறுவினார்.


இவர்கள் நிறுவனத்தைத் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே முதல் வாடிக்கையாளர் இணைந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

“இன்று துறையில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வரும் அழகு சாதனப் பொருட்கள் நிபுணர் தனது பிராண்டை சிறப்பாக நிலைநிறுத்த எங்களை நியமித்தார். அது ஆறு மாத கால பிராஜெக்ட். எங்களது செயல்பாடுகள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. 15 நாட்களிலேயே ஐந்து நிறுவனங்களுக்கு எங்களை பரிந்துரை செய்தார். மூன்றாவது மாதத்தில் முதல் பன்னாட்டு வாடிக்கையாளர் எங்களுடன் இணைந்தார்,” என்று நினைவுகூர்ந்தார்.

அப்போதிருந்து அரசுத் துறைகள், மருத்துவமனைகள், பன்னாட்டு மருந்து ஏஜென்சிக்கள் என பல்வேறு பார்ட்னர்களுக்கு நாடு தழுவிய பிரச்சாங்களை டீம்வொர்க் கம்யூனிகேஷன்ஸ் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டபோது வரி சீர்திருத்தத்தின் டிஜிட்டல் முதுகெலும்பான GSTN-க்கு மீடியா பார்ட்னராக டீம்வொர்க் கம்யூனிகேஷன்ஸ் தேர்வு செய்யப்பட்டது.

“GSTN உடன் சிறப்பாக இணைந்து செயல்பட்டு அதன் மீடியா அவுட்ரீச் மற்றும் தகவல் தொடர்பு உத்திகள் வகுக்கப்படுவதில் நாங்கள் முக்கியப் பங்கு வகித்தோம். கேரளா அரசாங்கம், ஜார்கண்ட் அரசாங்கம், டெல்லி அரசாங்கத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் மொழித் துறை ஆகியவற்றிற்காக பல்வேறு பிரச்சாரங்களை என் குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக ஏற்பாடு செய்தோம். டெல்லி அரசாங்கத்தின் பிரபலமான ‘Delhi Celebrates’ திட்டத்திற்கு பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்தோம்,” என்றார் நிக்கி.

விருதுகள் வென்ற பிரச்சாரங்கள்

கடந்த சில ஆண்டுகளில் டீம்வொர்க் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை Fortis Healthcare, Paras Healthcare, Columbia Asia Hospitals, Cipla, Dr Reddy’s Laboraties, Mylan Pharmaceuticals, Medtronic India, Abbott India, Bard India, Essilor போன்ற நிறுவனங்களுக்காக மேற்கொண்டுள்ளது. இந்த பிரச்சாரங்கள் விருதுகள் வென்றுள்ளன.


இந்நிறுவனம் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், ஹெபட்டைடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ். மன நலம், ஹெச்ஐவி-எய்ட்ஸ் போன்ற நோய்கள் குறித்த தகவல்களையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நாடு முழுவதும் மேற்கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவர்களின் பங்களிப்புடன் பல நகரங்களில் இந்தப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.


இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறை விரைவாக வளர்ச்சியடைந்துள்ளதாக நிக்கி தெரிவிக்கிறார்.


“ஆரம்பத்தில் மக்கள் தொடர்பு தேவையற்ற செலவாகவே கருதப்பட்டது. ஆனால் இன்று நிறுவனங்கள் மற்றும் அவர்கள் சேவையளிக்கும் வாடிக்கையாளர்களிடையே தகவல் தொடர்பிற்கான முக்கியப் புள்ளியாக PR உருவாகியுள்ளது. இது மார்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பின் முக்கிய அம்சமாக இன்று கருதப்படுகிறது,” என்றார்.

நிறுவனர்கள் முதலீடு செய்வதற்காக தங்கள் உறவினர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி நிறுவனம் தொடங்கினார்கள். இந்நிறுவனத்தின் தற்போதைய விற்றுமுதல் 8 கோடி ரூபாய்.

கோவிட்-19 காலகட்டம்

இன்றைய கோவிட்-19 பரவல் காலத்தில் சிறப்பான தகவல் தொடர்பு என்பது முக்கியத் தேவையாக உள்ளது. சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மக்கள் தொடர்பு துறை முக்கிய பங்கு வகிப்பதாக நிக்கி நம்புகிறார்.

“எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் தகவல்களை முறையாக, திறம்பட கொண்டு சேர்ப்பது முக்கியம். ஒரு நிபுணரும் தலைவரும் தங்களது கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்துகொள்ளும் விதம் முக்கியமானது. அவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை மக்கள் நம்புகின்றனர். அதை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்கள் எடுக்கின்றனர். அந்தத் தகவல் தொடர்பு சிறப்பாக இருந்தால் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அச்சங்களையும் முறையாக எதிர்கொள்ள முடியும். ஒருவேளை தகவல் தொடர்பு மோசமாக இருக்கும் பட்சத்தில் நிறுவனங்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும்,” என்றார்.

இன்றைய நெருக்கடியான சூழலால் துறையும் வருவாயும் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பது உண்மை என்றாலும் புதிய வாய்ப்புகள் உருவாகியிருப்பதை மறுப்பதற்கில்லை என்கிறார் நிக்கி.


“இன்று சுகாதாரம் மற்றும் இதர துறைகளில் செயல்படும் எண்ணற்ற நிறுவனங்கள் கோவிட்-19 தொடர்புடைய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுவதற்கான தேவை நிலவுகிறது. எங்கள் பிராஜெக்டுகளை அதற்கேற்றவாறு விரிவுபடுத்தி நெருக்கடியைக் கையாள்கிறோம்,” என்றார்.


கோவிட்-19 தொற்றிற்கு பிறகு மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும் இந்தத் தொழில்முனைவர் சுட்டிக்காட்டினார்.

நாம் வாழும் விதம், தொழில்புரியும் விதம் என அனைத்தையுமே கொரோனா வைரஸ் மாற்றியுள்ளது. இந்தச் சூழலில் மெய்நிகர் முறையில் வாடிக்கையாளர்களை அணுகுதல், மெய்நிகர் சந்திப்புகள், தொலைதூரத்தில் இருந்து பணிபுரிவது போன்றவற்றிகான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மறைந்தாலும்கூட இத்தகைய அணுகுமுறைகள் தொடரும் என்கிறார் நிக்கி.

மக்கள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவார்கள். மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் இணைந்திருப்பது வசதியாகவே இருக்கும் என்கிறார்.

பெண் தொழில்முனைவோர்கள்

நிறுவனம் தொடங்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே முதல் வாடிக்கையாளர்கள் இணைந்தபோதும் நிதி ஆதரவு ஏதுமின்றி ஆரம்பகட்ட செயல்பாடுகளைத் தொடங்குவதும் கட்டமைப்புகள் அமைப்பதும் சவாலாக இருந்தது என்கிறார் நிக்கி.


அப்போதிருந்து வணிகம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது. பெண்கள் தொழில்முனைவர்களாக சாதனை படைப்பது மகிழ்சியளிப்பதாக நிக்கி தெரிவிக்கிறார்.

“ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் மாறுபட்ட விதங்களில் பணிபுரிவார்கள். பிரச்சனைகளுக்கு மாறுபட்ட வகையில் தீர்வு கண்டறிவார்கள். சர்ச்சைக்குரிய சிக்கல்களை மாறுபட்ட கோணங்களில் அணுகுவார்கள். ஆண்களை மையப்படுத்தும் சமூகத்தில் இது ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. பெண்கள் பலவீனமான தலைவர்களாகவே கருதப்படுகின்றனர்,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறும்போது,

“இன்றைய நிலை மாறி வருகிறது. இந்த கண்ணோட்டம் மாறுகிறது. பெண் தொழில்முனைவோர்கள் பலர் சாதனை படைத்து வருகின்றனர். பெண்களின் தலைமைத்துவப் பண்பு பற்றிய புரிதல் ஏற்பட்டுள்ளது. தன்னம்பிக்கை, மக்களை வென்றெடுக்கும் ஆற்றல் ஆகியவையே தலைமைத்துவத்திற்கு முக்கியம் என்பதை என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து தெரிந்துகொண்டுள்ளேன்,” என்றார்.


டீம்வொர்க் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை மற்ற மாநிலங்களிலும் விரிவடையச் செய்து உலகளாவிய சந்தைகளில் விரிவடையவேண்டும் என்பதே நிக்கியின் வருங்கால திட்டம்.


ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா