கத்தாருக்கு 1.50 கோடி முட்டைகள் - ஏற்றுமதியில் துருக்கியை பின்னுக்குத் தள்ளிய நாமக்கல்!

கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில், கால்பந்து போட்டியாளர்கள், ரசிகர்கள் கத்தாரை நோக்கி படையெடுத்து வருவதால், தமிழகத்தைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டம் அதிக ஆர்டர்களைப் பெற்று முட்டை ஏற்றுமதியில் நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளது.

கத்தாருக்கு 1.50 கோடி முட்டைகள் - ஏற்றுமதியில் துருக்கியை பின்னுக்குத் தள்ளிய நாமக்கல்!

Thursday November 24, 2022,

3 min Read

கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20ம் தேதி தொடங்கியது. கால்பந்து போட்டியாளர்கள் கத்தாரை நோக்கி படையெடுத்து வருவதால், தமிழகத்தைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டம் நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளது.

கத்தாருக்கு முதன்மையான முட்டை சப்ளையராக துருக்கி இருந்து வந்தாலும், அதன் உற்பத்திச் செலவு அதிகரித்ததால் பெரும்பாலான ஏற்றுமதி வாய்ப்பு நாமக்கல் மாவட்ட ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைத்துள்ளது.

egg

நாமக்கல் முட்டை ஏற்றுமதி:

நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்படி, மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு மாதத்திற்கு 2 கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில், கத்தாருக்கு அதிகளவிலான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது கத்தார் நாட்டில் உலகக் கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. இதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து போட்டியைக் காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவிந்துள்ளனர். இதனால், அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.

இதன்படி, மாதந்தோறும் கத்தாருக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில்,

தற்போது மூன்று மடங்கு அதிகரித்து 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது தெரிய வந்துள்ளது.

துருக்கியை பின்னுக்குத் தள்ளிய நாமக்கல்:

ஃபிஃபா உலகக் கோப்பைக்கான தேவை அதிகரிப்பு, துருக்கி நாட்டு முட்டைகளை விட மலிவு விலை போன்ற காரணங்களால் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதியாகும் முட்டைகளின் எண்ணிக்கை 1.50 கோடியில் இருந்து 2.5 கோடியாக உயரக்கூடிய வாய்ப்பை அளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,100 கோழிப்பண்ணைகள் இயங்கி வருகிறது. இந்தப் பண்ணைகளில் நாள் ஒன்றுக்கு 5.5 கோடி முதல் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவற்றில், 1.50 முதல் 1.75 கோடி முட்டைகள் கேரளாவுக்கும், 45 லட்சம் முட்டைகள் மதிய உணவு திட்டத்துக்கும், 40 லட்சம் முட்டைகள் பெங்களூருவுக்கும், மீதமுள்ளவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

egg

நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவிலான முட்டைகள் ஏற்றுமதியாகி வருகின்றன. குறிப்பாக, கத்தாரின் முதன்மையான முட்டை சப்ளையராக துருக்கி இருந்து வருகிறது. ஆனால், ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு, கத்தாரில் ஏற்பட்டுள்ள டிமாண்டை சரி செய்யும் வாய்ப்பு நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.

கத்தார்; துருக்கி, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து முட்டைகளை கொள்முதல் செய்துவருகிறது. ஆனால், ரஷ்யா - உக்ரைன் இடையே வெடித்த போர் காரணமாக உக்ரைனின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு, துருக்கியின் உற்பத்தி செலவையும் தாறுமாறாக உயர்த்தியுள்ளது. ஆனால்,

மலிவான விலை காரணமாக கத்தாருக்கு வழக்கமாக நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் அளவிற்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

உதாரணம்: கத்தார் ஒரு முட்டை பெட்டியை (360 முட்டைகள் கொண்டவை) துருக்கியில் இருந்து 36 அமெரிக்க டாலருக்கு (ரூ. 2900) வாங்குகிறது, அதே சமயம், நாமக்கல் முட்டைகள் ஒரு முட்டை பெட்டிக்கு 29 அமெரிக்க டாலர் முதல் 30 அமெரிக்க டாலர்கள் (சுமார் 2400) வரை விற்கப்படுகிறது. அதாவது, துருக்கி முட்டை ரூ.8.05 காசுகளாக உள்ள நிலையில், நாமக்கல் முட்டையின் விலை ரூ.6.60 காசுகளாக உள்ளது.

இதனால், ஒரு முட்டைக்கு 1.45 காசுகள் வரை வேறுபாடு இருப்பதால் நாமக்கல்லுக்கு அதிக அளவிலான ஆர்டர்கள் குவிவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் (TNPFA) தலைவர் சிங்கராஜ் கூறுகையில்,

“கடந்த சில மாதங்களாக கத்தாருக்கு பெரிய அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படாத நிலையில், தற்போது அரபு நாடுகளுக்கான ஒட்டுமொத்த முட்டை ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இதுவரை வளைகுடா நாடுகளுக்கு மாதத்திற்கு 2 கோடி முட்டைகள் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது 6 முதல் 8 கோடி முட்டைகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் மாத கணிப்பின் படி, இம்மாத இறுதிக்குள் கத்தாருக்கு மட்டும் 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

லாபம் எவ்வளவு?

கத்தாருக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் சில்லறை முட்டை விற்பனையின் விலையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் கத்தார் ஏற்றுமதி நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபமாக அமைந்துள்ளது.

முட்டை ஏற்றுமதியாளர்களில் ஒருவரான பி.வி. செந்தில் என்பவர் கூறுகையில்,

“கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளால் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு 25 காசுகள் வரை லாபம் கிடைக்க உள்ளது. கத்தாரில் கால்பந்து போட்டிகள் நிறைவு பெறும் வரை தொடர்ந்து ஆர்டர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். முட்டையின் தேவையைப் பொறுத்து ஆர்டர்கள் வாராந்திர அடிப்படையில் வரக்கூடும் என்பதால், அடுத்த வாரம் புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.”

நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் ஏற்றுமதி சந்தையில் இருந்து எந்த தேவையையும் பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளனர், என்றும் செந்தில் கூறினார்.

egg

அதுமட்டுமின்றி, ஐரோப்பாவின் பழுப்பு நிற முட்டை உற்பத்திக்கு ஏற்றார் போல் தங்களது முட்டைகளின் உற்பத்தி திறனையும் மேம்படுத்த நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் முயன்று வருவதால் கத்தார் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளின் முட்டை தேவையையும் சமாளிக்க முடியும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குளிர்காலம் தொடங்குவதால், அடுத்த மூன்று மாதங்களில் முட்டை நுகர்வு அதிகரிக்கும் என்றும், கத்தாரில் ஏற்பட்டுள்ள தேவை முட்டையின் விலையை கணிசமாக உயர்த்தும் என்றும் கோழிப்பண்ணையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

துருக்கியை விட பெட்டிக்கு 6 டாலர்கள் வரை விலை குறைவாக இருப்பதால் நாமக்கல் மாவட்ட முட்டைகளுக்கு டிமாண்ட் அதிகரித்து வருவது கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Edited by Induja Raghunathan