முதல் மக்கள் பயணம் மேற்கொள்ளும் ‘ஸ்பேஸ் எக்ஸ்' - இன்ஸ்பிரேஷன் 4 பயணிகள் யார்?

பயணத்தின் அம்சங்கள் என்ன?!
21 CLAPS
0

உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க், கடந்த 2002ல் அமெரிக்காவை தளமாகக் கொண்டு 'ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி நிறுவனத்தை தொடங்கினார். மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் பொருட்டு இந்த நிறுவனத்தை தொடங்கினார். பின்பு, நாசாவுடன் இணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

'ஸ்பேஸ் எக்ஸ்' நாளை தனது முதல் ‘குடிமக்கள்' பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறது. இன்ஸ்பிரேஷன் 4 விண்கலம் மூலம் முதல் முறையாக 4 பேர் இந்த பயணம் மூலம் விண்வெளி சுற்றுலா செல்கின்றனர்.

ஷிப்ட் 4 பேமன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் என்ற கோடீஸ்வரனின் தலைமையில் 4 பேர் குழு நாளை விண்ணில் பறக்கவிருக்கிறது. அமெரிக்காவின் கென்னடி விண்தளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் இன்ஸ்பிரேஷன் 4 விண்கலம் ஏவப்பட்ட இருக்கிறது.

மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இன்ஸ்பிரேஷன் 4 விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும். பின்னர் 3 நாட்களுக்கு அடுத்து அட்லாண்டிக் கடலில் பயணம் நிறைவடையும் என்று 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் நால்வர் யார்?

1. ஜாரிட் ஐசக் மேன் : ஷிப்ட் 4 பேமன்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவரும், கோடீஸ்வரரான இவர், திறமையான ஜெட் பைலட்டும்கூட. ஐசக் மேன் தனது 16 வயதில் இருக்கும் போது ஷிப்ட் 4 பேமன்ட்ஸ் என்ற ஆன்லைன் பேமெண்ட் தீர்வு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் கட்டண செயலாக்க தீர்வுகளில் மற்ற நிறுவனங்களை விட முன்னிலை வகிக்கிறது.

தற்போது 38 வயதாகும் இவர், தான் இன்ஸ்பிரேஷன் 4 விண்கல பயணத்தின் தலைமையாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட விமான நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்ட ஐசக் 2011 ஆம் ஆண்டில், ஐசக்மேன் டிராகன் இன்டர்நேஷனல் என்ற உலகின் மிகப்பெரிய தனியார் விமானப் படையை நிறுவினார், இது அமெரிக்காவின் ஆயுதப் படைகளுக்கு விமானிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.

இன்ஸ்பிரேஷன் 4 பயணம் குறித்து பேசியுள்ள ஐசக் மேன்,

“இது எனது தனிப்பட்ட மற்றும் வாழ்நாள் கனவு. இந்த பயணத்தில் எனக்கு கிடைத்த கட்டளையிடும் பொறுப்பை நான் அங்கீகரிக்கிறேன். உத்வேகம் நம்மை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லும் என்பதை இது வலுப்படுத்தும் என்று நம்புகிறேன், மேலும், அசாதாரண சாதனைகள் பூமியில் நிகழ இதுபோன்ற உத்வேகங்கள் வழிவகுக்கிறது," என்றுள்ளார்.

2. ஹேய்லி ஆர்சீனாக்ஸ்: 10 வயதில், எலும்பு புற்றுநோயின் ஒரு வகையான ஆஸ்டியோசர்கோமா இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையால் மறுவாழ்வு பெற்றவர் தான் இந்த ஹேய்லி ஆர்சீனாக்ஸ். 2014ல் ஸ்பானிஷ் மொழியில் இளங்கலை பட்டம் பெற்ற ஆர்சீனாக்ஸ் 2016ல், தனது மருத்துவர் உதவியாளர் (PA) பட்டத்தை முடித்தார்.

இவரும் தற்போது செயின்ட் ஜூட் குழந்தைகள் மருத்துவமனையில் லுகேமியா மற்றும் லிம்போமா நோயாளிகளுக்கு மருத்துவர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இன்ஸ்பிரேஷன் 4 பயணத்தில் இடம்பெற்றுள்ளார். செயின்ட் ஜூட் மருத்துவமனை நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

3. கிறிஸ் செம்ப்ரோஸ்கி: அமெரிக்க விமானப்படையின் முன்னாள் உறுப்பினரான இவர், விண்வெளி மீது தீராத ஆர்வத்தை கொண்டிருப்பவர். இதன் காரணமாக கல்லூரி நாட்களில், புரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் தன்னார்வலராக பணியாற்றினார். 2007 தனது பணியில் ஒருந்து ஓய்வு பெற்ற பிறகு, செம்ப்ரோஸ்கி தொழில்முறை ஏரோநாட்டிக்ஸில் இளங்கலை அறிவியல் (பிஎஸ்) பட்டம் பெற்றார். பின்பு இந்த பயணத்தின் ஒருபகுதியாக இணைந்துள்ளார்.

இன்ஸ்பிரேஷன் 4 பயணம் பற்றி,

“கனவு நனவாகப் போகிறது. இந்த பயணம் நிச்சயம் குழந்தைகளுக்கு ஊக்கமாக அமையும்," என்றுள்ளார்.

4. டாக்டர் சியான் ப்ரோக்டர்: அமெரிக்காவின் ஒருங்கிணைக்கப்படாத பிரதேசமான குவாமில் பிறந்த இவரின் தந்தை நாசாவில் பணிபுரிந்தவர். ​​டாக்டர் புரோக்டர் ஒரு புவியியலாளர், ஆய்வாளர் மற்றும் அறிவியல் தொடர்பு நிபுணர் என்று பன்முகம் கொண்டவர். நான்கு அனலாக் பயணங்களை முடித்துள்ள புரோக்டர், 2009 ஆம் ஆண்டில் நாசாவின் விண்வெளி வீரர் திட்டத்தில் இறுதிப் போட்டியாளராக தேர்வாகி இருந்தார். பைலட் உரிமம் வைத்துள்ள புரோக்டர் புவி மீதான ஆர்வத்தால் இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

”விண்வெளிக்குச் செல்வது எப்போதுமே எனக்கு ஒரு கனவாக இருந்தது, மேலும் உலகத்தை ஊக்குவிப்பது எனக்கு இன்னும் சிறப்பானது," என்று டாக்டர் ப்ரோக்டர் இன்ஸ்பிரேஷன் 4 பயணம் பற்றி கூறி இருக்கிறார்.

கட்டுரை தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world