‘ஒரு பின்னூட்டத்தில் உருவான எண்ணம்’–Freshworks நிறுவனத்தின் மாபெரும் வெற்றிக் கதை!

அமெரிக்க பங்குச்சந்தையில் அடியெடுத்து வைத்திருப்பதன் மூலம் இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் மாபெரும் வெற்றிக்கதைகளில் ஒன்றாக போற்றப்படும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் உருவான வெற்றிக்கதையை திரும்பி பார்க்கலாம்.
20 CLAPS
0

Freshworks நிறுவனம் அண்மையில் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதை அதன் இணை நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் 'கனவு நினைவானது...' என குறிப்பிட்டிருந்தார். கிரிஷை அறிந்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் எத்தனை உண்மையானது எனத் தெரிந்திருக்கும்.

மென்பொருளை ஒரு சேவையாக வழங்கும் சாஸ் நிறுவனமான ’ஃப்ரெஷ்வொர்க்ஸ்’ பெரிய அளவில் பெற்று இந்த பிரிவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவான நிலையில், பொதுப் பங்குகளை வெளியிடுவதே இதன் அடுத்த இலக்கு என கிரிஷ் உறுதி கொண்டிருந்தார்.

“இந்தியாவில் இருந்து உருவான ஒரு நிறுவனம் அமெரிக்கா சென்று, பொது பங்குகளை வெளியிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்...” என இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுவர்ஸ்டோரியிடம் பேசிய போது கிரிஷ் கண்களில் கனவு மின்ன கூறியிருக்கிறார்.

” ஐபிஓ வெளியீட்டிற்கான காலத்தை என்னால் குறிப்பிட முடியாது. ஆனால் அதற்கான பார்வை இருக்கிறது,” என அப்போதே அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இரண்டே ஆண்டுகளில் இப்போது அதை சாதித்துக்காட்டியிருக்கிறார். இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு தற்போது ஃப்ரெஷ்வொர்க்ஸ் அங்கு பட்டியலிடப்பட்டுள்ளது எனும் போது இது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் தான் நிறுவனம் துவங்கப்பட்டது எனும் போது இந்த சாதனம் இன்னும் வியப்பை அளிக்கலாம். Freshworks இதை எப்படி சாதித்தது? இந்த கேள்விக்கான பதிலில் நிறுவனத்தின் ஊக்கம் தரும் தொழில்முனைவு கதை அமைந்திருக்கிறது.

ஸ்டார்ட் அப் உலகில் ’ஜி’ என அழைக்கப்படும் கிரிஷ் மாத்ருபூதம், ஜோஹோ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். கை நிறைய சம்பளத்துடன் மகிழ்ச்சியாக இருந்தவர் தொழில்முனைவின் பக்கம் திரும்பிய விதம் சுவாரஸ்யமானது.

என்னிடம் மகத்தான குழு இருந்தது, மேனேஜ் இஞ்சின் பிராண்டின் கீழ் பல வெற்றிகரமான பொருட்களை உருவாக்கிய நிறைவும் இருந்தது என தனது பணி அனுபவம் பற்றி அவர் வலைப்பதிவு ஒன்றில் குறிப்பட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் தான் 2010ம் ஆண்டு தொழில்நுட்ப விவாத தளமான 'ஹேக்கர் நியூஸில்' தற்செயலாக ஒரு பின்னூட்டத்தை கிரிஷ் படித்தார். சாஸ் நிறுவனமான Zendesk, தனது கட்டணத்தை 60 முதல் 300 சதவீதம் வரை உயர்த்தியது தொடர்பான வாடிக்கையாளர்கள் அதிருப்தி தொடர்பான கட்டுரையின் கீழ் அந்த பின்னூட்டம் இடம்பெற்றிருந்தது.

கிரிஷ் மாத்ருபூதம்

இது போன்ற கட்டுரைகளைப் படிக்கும் போது, சரியான விலையில் சரியான சேவையை வழங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும் எனத்தோன்றுகிறது என பொருள் படும் வகையில் அமைந்திருந்த அந்த பின்னூட்டத்தை படித்ததுமே, கிரிஷ் மனதில் அந்த எண்ணம் பளிச்சிட்டது.

இணையம் மூலமான வாடிக்கையாளர் சேவை அளிப்பதில் உள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் எனும் அந்த எண்ணத்தை செயல்படுத்த தனது சகாவான ஷான் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து செயல்பட்டார். 2010 அக்டோபரில் இதற்கான முன்னோட்ட வடிவை உண்டாக்கினர்.

எட்டு மாதங்களில் முழுச் சேவை உருவானது. கிளவுட் அடிப்படையில் செயல்பட்ட இந்த சேவை வாடிக்கையாளர் அழைப்பு அல்லது இ-மெயிலை வாடிக்கையாளர் சேவைப் பிரிவு பதில் அளிக்கக்கூடிய டிக்கெட்டாக மாற்றியது.

சென்னையில் ‘Freshdesk' 'ஃபிரெஷ்டெஸ்க்' எனும் பெயரில் இந்த சேவையை வழங்கத் துவங்கியது. இப்படி வாடிக்கையாளர் சேவைக்கான சின்ன பொறியால் உருவான நிறுவனம் பின்னர் ’Freshworks’ என பெயர் மாற்றப்பட்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இரண்டாயிரத்துக்கும் மேலான ஊழியர்கள் மற்றும் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களைக் கொண்டு நூற்றுக்கும் மேலான நாடுகளில் தனது செயல்பாட்டை விரிவாக்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் முறையீடுகளுக்கு சிறிய நிறுவனங்கள் சிறந்த முறையில் பதில் அளிப்பதை உறுதி செய்ய வழி செய்வதன் மூலம் நிறுவனம் சீரான வளர்ச்சி அடைந்தது. சிறிய நிறுவனங்களுக்கு இத்தகைய சேவை செலவு மிக்கதாக இருந்த காலத்தில் ஃப்ரெஷ்வொர்க்ஸ் இதை சாத்தியமாக்கியது அதன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

கிரீஷ மாத்ருபூதம் மற்றும் ஷான் கிருஷ்ணசாமி

துவக்கத்தில் வாடிக்கையாளர் சேவை சார்ந்த ஒற்றை சேவையில் கவனம் செலுத்தி நிறுவனம் வளர்ந்தது. சர்வதேச அளவிலும் வளர்ந்தது. 2011 முதல் 2015 வரையான நான்கு ஆண்டுகளில் நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சேவைகளில் கவனம் செலுத்தியது. அதன் எளிமையான சேவையால் ஈர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாடிக்கையாளராக இவர்களுடன் சேர்ந்தன.

“ஒன்று அல்லது இரண்டு சேவைகளை வாங்கக் கூடிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அளித்த வாய்ப்பை பின் தொடர்ந்து சென்றோம். சென்னையில் இருந்து செயல்பட்ட எங்கள் விற்பனைக்குழு மாதம் 25 வர்த்தக ஒப்பந்தங்களைவாவது பெறும்,” என்று யுவர்ஸ்டோரி பேட்டியில் கிரிஷ் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த வந்த நான்கு ஆண்டுகளில் நிறுவனம் பல நூறு கோடி டாலர்கள் சந்தை மதிப்பீட்டை பெற்றதோடு, பொது பங்கு வெளியீட்டிற்கும் திட்டமிடத்துவங்கியது.

சிக்கல் இல்லாத சேவை, எளிய பயன்பாடு மற்றும் புதுமையான அம்சம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிறுவனம் செயல்படுவதாகவும் கிரிஷ் கூறியிருந்தார்.

இதனிடையே, முன்னணி வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களின் ஆதரவை பெற்ற நிறுவனம், வர்த்தக நிறுவனங்களுக்கான டிஜிட்டல் மாற்றத்திற்கு தேவையான 360 கோணத்திலான சேவைகளை வழங்கும் வகையில் விரிவடைந்துள்ளது. வாடிக்கையாளர் சேவை, ஐடி சேவை நிர்வாகம்,. சிஆர்.எம், கால்செண்டர் மென்பொருள், மார்க்கெட்டிங் தானியங்கியமயம் உள்ளிட்ட சேவைகளை நிறுவனம் வழங்கி வருகிறது.

ஆட்டோமொபைல், இ-காமர்ஸ், விருந்தோம்பல், ஆலோசனை, ஐடி உள்ளிட்ட துறைகளில் இந்நிறுவனம் சேவை வழங்கி வருகிறது.

நிறுவனத்தின் பயணம் சவால்களைக் கொண்டதாகவும் இருந்திருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்துவதை மலையேறுவதுடன் கிரிஷ் ஒப்பிடுகிறார்.

“ஸ்டார்ட் அப் சி.இ.ஓவாக இருப்பது எளிதல்ல. பதில் கருத்து இல்லை. நிர்வாகக் குழு இல்லை. நிதி அல்லது மனிதவள பிரிவு கிடையாது. எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டும். எல்லாவற்றையும் நீங்களே கவனித்து நிறுவன சேவையையும் உருவாக்க வேண்டும்,” என யுவர்ஸ்டோரிக்கான பழைய பேட்டியில் கிரிஷ் கூறியிருக்கிறார்.

இந்த விடாமுயற்சியின் காரணமாகவே இன்று அவரது ஐபிஓ கனவு நினைவாகி இருக்கிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகரான கிரிஷ், ஐபிஓ ஆவணத்திலுல் தனது அபிமான தலைவர் பெயரை குறிப்பிட்டு மகிழ்ந்தவர் இன்று தனது நிறுவன ஊழியர்கள் பலரை கோடீஸ்வரராக மாற்றியதோடு இந்திய ஸ்டார்ட் அப் சூழலுக்கும் உற்சாகத்தை அளித்திருக்கிறார்.

Latest

Updates from around the world