‘கலாம்’ வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விளங்குகிறார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இளைஞர்களின் எழுச்சி நாயகனாக கருதப்படும் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, ’ஏ.பி.ஜி.அப்துல் கலாம்: மிஸைல் மேன்’ (APJ Abdul Kalam: Missile Man) எனும் பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படம், தெலுங்கு திரையுலகம் மற்றும் ஹாலிவுட்டின் கூட்டு முயற்சியாக உருவாகிறது.
கலாம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
இது தொடர்பான தகவலை அமைச்சர் ஜவடேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். தில்லியில், அப்துல் கலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் மதுர் பண்டேர்கர், தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜானி மார்ட்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படம், சாதாரண பின்னணி கொண்ட ஒருவர் சாதனை மனிதராக உருவாகிய பயணத்தை விவரிப்பதாக அமைந்துள்ளது எனத்தெரிகிறது. தெலுங்கில் தயாராகும் இந்தப்படம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அப்துல் கலாம் வேடத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர், அலி பாஷா நடிக்கிறார்.
இப்படத்தை ஜகதீஷ் தானேட்டி, சுவர்ணா பப்பு மற்றும் மார்டினி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜானி மார்டின் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
தொகுப்பு: சைபர்சிம்மன்