இந்தியாவின் முதல் McLaren GT காரை பெற்ற நடிகர்: ரூ.4.7 கோடி விலையுள்ள இந்த காரில் அப்படி என்ன இருக்கு?
இந்திய சாலைகளில் முதன் முதலில் வலம் வரவிருக்கும் இரண்டு இருக்கைகள் கொண்ட ஸ்டைலான, ஆடம்பரமான மற்றும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரான McLaren GT-யில் அப்படியென்ன ஸ்பெஷல்! நம்ம அஜித் இந்த காருடன் எடுத்துக்கொண்ட போட்டோவும் வைரல் ஆனது...
கொரோனா தொற்று சூழலில் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில், தியேட்டர்களின் திறப்பால் Back To Normal ஜாலிலோ ஜிம்கானா லைஃப்புக்குள் மக்கள் திரும்பியுள்ளனர். அதற்கு ஏற்றாற் போன்று சூப்பர் டூப்பர் படங்களும் ரீலிசாகி, மக்களை கலகலப்பு ஆக்குவதுடன், கல்லாக் கட்டி படத்தயாரிப்பாளர்களையும் குஷிப் படுத்துகிறது.
அதன் விளைவாய், இயக்குனருக்கு நடிகர் கிப்ட் கொடுப்பதும், உடனடித்த நடிகருக்கு கிப்ட் கொடுப்பது என பரிசு மழையை பொழிந்து கொள்கின்றனர். கோலிவுட்டில் விக்ரம் பட வெற்றியால் நடிகர் கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு சொகுசு கார் ஒன்றை பரிசு அளித்தது போல, பாலிவுட்டிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனும் (Kartik Aaryan) சமீபத்தில் ஒரு ஆடம்பரமான பரிசை பெற்றுள்ளார். லேட்டஸ்ட்டாக வெளியாகிய அவரது சூப்பர்நேச்சுரல் ஹாரர் நகைச்சுவை படமான 'Bhool Bhulaiyaa 2' 'பூல் புலாயா 2' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஜூன் 19 அன்று ஒடிடி பிளாட்ஃபார்மில் பிரீமியர் செய்யப்பட்டதில் இருந்து, 'Bhool Bhulaiyaa 2' திரைப்படம் 4.12 மில்லியன் மணிநேரங்களுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளதாக மிட் டே நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர் பூஷண் குமார் ரூ.4.7 கோடி விலையுள்ள McLaren GT காரை நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்தியாவில் தரையிறங்கிய முதல் மெக்லாரன் ஜிடி இதுவாகும்.
இதற்கு முன், இந்திய சாலைகளில் McLaren 720S மற்றும் 570S மட்டுமே காணப்பட்டன. ஆரஞ்சு வித் கருப்பு நிறத்தில் பார்க்கவே செம ஸ்டைலிஷாக இருக்கும் காரின் முன்பு கார்த்திக் போஸ் கொடுக்கும் போட்டோவை பதிவிட்டு இன்ஸ்டாகிராமில்,
"சீன உணவை சாப்பிட புதிய மேஜை ஒன்றை நான் பரிசாக பெற்றுள்ளேன். உழைப்பின் கனி இனிக்கும் எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், அது இவ்வளவு பெரியது என எனக்கு தெரியாது. இந்தியாவின் முதல் McLaren GT கார். அடுத்த பரிசு ஒரு தனியார் ஜெட் விமானமாக கூட இருக்கும் சார். நன்றி...!" என்று பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாவில் இந்த காரின் போட்டோ ஒரு பக்கம் பரவலாக பரவ, 'இது அதுல்ல' என்பது போல் இருந்தது நடிகர் அஜித் சமீபத்தில் ஐரோப்பா பயணத்தில் எடுத்துக் கொண்ட போட்டோ.
யெஸ், தல அஜித்தும் (Ajith kumar) மெக்லரான் கார் முன்பு நின்று எடுத்த புகைப்படங்கள் வெளியாகியது. சுற்றுப்பயணத்தின் போது McLaren கார் ஷோரூம் சென்ற போது கிளிக்கிய போட்டோக்களே அவை...
அப்படியென்ன இந்த காரில் ஸ்பெஷல்?
McLaren GT என்பது பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் McLaren Automotive -ஆல் வடிவமைக்கப்பட்டு மற்றும் தயாரிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இதுவே அந்நிறுவனத்தின் முதல் பிரத்யேக கிராண்ட் டூரர் ஆகும்.
ஜிடி முதன் முதலில் 2019ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மெக்லாரன் கார்கள் பிரபலமடைந்த பிறகு, மெக்லாரன் கார்கள் அதிகாரப்பூர்வமாக கடந்த ஆண்டு இந்திய சந்தையில் நுழைந்தது. மெக்லாரன் ஜிடியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.72 கோடி. எந்தவொரு தனிப்பயனாக்குதல் விருப்பமும் இல்லாமல் காரின் அடிப்படை விலை இதுவாகும்.
McLaren GT ஆனது V8 இன்ஜினைக் கொண்டுள்ளது. இரட்டை டர்போ சார்ஜர்களுடன் கூடிய 4.0-லிட்டர் V8 எஞ்சினிலிருந்து ஆற்றலைப் பெற்றுள்ளது. இது ஏழு வேக இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷனைக் கொண்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 611 பிஎச்பி பவரையும், 630 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
மெக்லாரன் ஜிடி ஆனது 0-100 km/h வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்ச மணிக்கு 326 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது.
இதிலுள்ள எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் அமைப்பானது சவாலான வானிலை நிலைகளில் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.
நான்கு ஏர்பேக்குகள், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், லெதர் சீட் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மியூசிக் சிஸ்டம், ஏழு அங்குல தொடுத்திரை, நல்ல கிராபிக்ஸ் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சுற்றுப்புற விளக்குகள், இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு, செயற்கைக்கோள் வழிசெலுத்தல், ஏர் கண்டிஷனிங் மற்றும் மீடியா ஸ்ட்ரீமிங் ஆகியவை காரின் சிறப்பு அம்சங்களின் நீண்ட பட்டியலில் சில...
ஒரு பட்டனில் கட்டுப்படுத்தக்கூடிய ஐந்து நிழல் நிலைகளைக் கொண்ட எலக்ட்ரோக்ரோமிக் பனோரமிக் கூரை உள்ளது. 2021 McLaren GT ஆனது 14.8 கன அடி பெரிய பின்புற லக்கேஜ் பகுதியையும், முன் ட்ரங்கில் கூடுதலாக 5.3 கன அடி சேமிப்பு பகுதியையும் கொண்டுள்ளது.
இந்தியாவில், McLaren GT ஆனது Porsche 911 Turbo S, Lamborghini Huracan EVO RWD Coupe, Ferrari Roma மற்றும் Aston Martin Vantage போன்ற கார்களின் போட்டியாளராக உள்ளது. இதில் Lamborghini, BMW மற்றும் Porsche ஆகியவை ஏற்கனவே கார்த்திக் ஆரியனின் லக்சரி கார் கலெக்ஷனில் இடம்பிடித்துவிட்டன.
தகவல் உதவி: GQIndia & Autoexpress