புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் முதல் கூட்டம் - முக்கிய மசோதா தாக்கல் மற்றும் நடந்தவை என்ன?
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முதல் நாள் சிறப்பு கூட்டத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் தினம் இன்று என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது வட்ட வடிவில் அமைந்திருக்கும் கட்டிடம். பல வரலாற்று நிகழ்வுகளைத் தாங்கி இருந்த அந்தக் கட்டிடத்தின் நினைவுகள் புதிய கட்டிடத்தினால் மாற்றப்படுகிறது.
சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. 1250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் 1280 உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று முக்கிய வாயில்களோடு விஐபிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கென தனித்தனி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளன. யானை, கருடன், சிங்கம், குதிரை, அன்னம் என்று இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் புராணத்தில் நம் நாட்டின் பலம், வளத்தை பிரதிபலிக்கும் விலங்குகளின் உருவங்கள் ஒவ்வொரு வாயிலிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, பயோ மெட்ரிக் பதிவு, முக அடையாளம் என எண்ணற்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி உறுப்பினர்களுக்கு அவையில் சிறப்பான ஆடியோ, வீடியோ, எல்இடி திரை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான ஆயுட்காலம் 150 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டு அதன் பின்னர் பிரதமர் தலைமையில் உறுப்பினர்கள் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பேரணியாக வந்தனர். பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு ’சம்விதான் சதன்’ என்ற பெயரை பிரதமர் பரிந்துரைத்தன் பேரில் அதற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய கட்டிடத்தில் பிரதமர் பேச்சு
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முதல் நாள் மக்களவைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றிய பிரதமர் மோடி,
“புதிய பாராளுமன்றத்தின் முதல் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க தினம் இது. சிறப்பு மிக்க இந்த நாளில் இங்கே இருக்கும் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் நாள் புதிய கட்டிடத்தில் பேச அழைக்கப்பட்டுள்ளதற்கு நன்றி. இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கிறேன்,” என்றார்.
அறிவியல் உலகில் சந்திரயானின் விண்ணை முட்டும் வெற்றி, பாரதத்தின் தலைமையில் ஜி 20ன் வெற்றி, உலகில் ஒரு முடிவான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. நவீன பாரதம் நம்முடைய பழங்கால ஜனநாயகத்தின் அடையாளம், இன்று நல்ல தொடக்கத்தை பெற்றிருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கான நல்ல நாள் இன்று. சித்தி, விவேகம், தியானம், வெற்றிக்கான சிறப்பான நாள் இன்று. நம்முடைய இலக்குகளை அடைய புதிய பயணத்தை தொடங்குவதற்கான நேரம் இது. இதுவரை நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து செயல்படுவோம், என்றார் பிரதமர்.
மகளிர் முன்னேற்றம்
கொள்கைகள் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் நம்முடைய இலக்கு மக்களுக்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும். அரசின் மசோதாக்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். மகளிர் மேம்பாடு என்று பேசிக்கொண்டிருப்பதைவிட அதனை செயல்படுத்த வேண்டியது அவசியம்.
விண்வெளி, விளையாட்டு, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் சிறப்பான பங்களிப்பாற்றுகின்றனர். ஜி20 தலைமையின் போது பெண்களின் முன்னேற்றம் பற்றிய விவாதமும் நடந்தது, அதனை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. பெண்களின் வளர்ச்சியில் நாம் சக்தி சேர்க்க வேண்டும் என்கிற இந்தியாவின் வாதத்தை மற்ற நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
மகளிருக்காக ஜன்தன் கணக்குகளை தொடங்கி இருக்கிறோம், 50 கோடி கணக்கு வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். நாடு பெருமைபடக்கூடிய மற்றொரு திட்டம் முத்ரா யோஜனா, எந்தவித உத்தரவாதமும் இன்றி ரூ.10 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது, இதன் பயனை பெரும்பாலான பெண் தொழில்முனைவர்கள் அடைந்திருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, புதிய மக்களவை
வரலாற்றில் மைல்கல் தினம்
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திலும் பெண்களின் பெயரில் வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியிலும் ஒரு முக்கியமான மைல்கல் வரும், இன்றைய தினம் ஒரு மைல்கல்லை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த நாடாளுமன்ற அவையில் முதல் கூட்டத்தின் முதல் உரையில் நம்பிக்கையோடும் பெருமையோடும் சொல்கிறேன், இன்றைய தினம் வரலாற்றில் பெயர் பெறக் கூடிய தினம். நாம் அனைவரும் பெருமைபடக்கூடிய தினம். பல ஆண்டுகளாக பெண்கள் இடஒதுக்கீடு பற்றி பேசப்பட்டு வருகிறது, பல்வேறு விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன.
பெண்கள் இடஒதுக்கீடு 1996ல் அடல் பிஹாரி வாஜ்பாய் காலகட்டத்தில் பலமுறை இந்த மசோதாவானது சமர்பிக்கப்பட்டது. இருப்பினும், அதனை நிறைவேற்றுவதற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை. பெண்களுக்கு அதிகாரம், பலம் சேர்க்கும் அந்த முக்கியமான செயலை எனக்காக விட்டு வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மீண்டும் ஒருமுறை எங்களின் அரசு இந்தத் திசையில் ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 19 செப்டம்பர் 19 வரலாற்றில் சிறப்பு மிக்க தினமாக மாற இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வரும் நிலையில் முதல் கூட்டத்தில் இந்நாட்டின் புதிய மாற்றத்தை நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். நாட்டின் பெண்கள் சக்திக்காக அனைத்து உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து புதிய வாயிலை திறக்கின்ற செயலை செய்ய உள்ளனர்.
“இன்று எங்கள் அரசு பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க இது வழிவகை செய்யும். அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு ஒருமனதாக இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இரு அவைகளின் உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்,” என்று பிரதமர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். பெரும்பாலான கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தற்போது கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவையின் மூன்று பதவிக்காலங்களுக்குப் பொருந்தும் என்று மத்திய அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா மீதான விவாதம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, மாநிலங்களவையில் வியாழக்கிழமை இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
எப்போது அமலாகும்?
நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் மட்டுமின்றி, 50 சதவிகித சட்டமன்றங்களும் மசோதாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும். மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே மகளிருக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வரும். தொகுதி மறுவரையானது 2026க்கும் பின் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் எஸ்சி, எஸ்டி தொகுதி ஒதுக்கீடு மகளிர் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது. இந்த மசோதாவானது 15 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலோ அல்லது 5 மாநிலத் தேர்தலிலோ இடஒதுக்கீடு மசோதா செயல்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை.

Women's Reservation Bill - மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்; கடந்து வந்த பாதை முதல் முக்கிய தகவல்கள் வரை!