'ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது' - வெற்றி ரகசியம் பகிர்ந்த நீட் தேர்வில் முதல் முறை வென்ற தோடா மாணவி!
கடின உழைப்பால் நீட் தேர்வில் வெற்றி பெற்று மலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பழங்குடியின தோடரின மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடின உழைப்பால் நீட் தேர்வில் வெற்றி பெற்று மலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பழங்குடியின தோடரின மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உதகை அருகே உள்ள அருவங்காடு பகுதியில் வசிக்கும் நார் சோர் குட்டன், நித்யா தம்பதியரின் மகள் நீத்து சென். இவருக்கு சின்ன வயதில் இருந்தே மருத்துவராகி படிப்பறிவும், வசதியும் இல்லாமல் கஷ்டப்படும் தனது சமூகத்திற்கு மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது.
தனது கனவை அடையும் எண்ணத்துடன் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வையும் எழுதியுள்ளார். அதன் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
நீத்து சென் வெற்றி பெற்று தோடர் பழங்குடியின மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். அந்த மாணவிக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆசி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவி நீத்து சென் கூறுகையில்,
“ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தது. தேர்வில் வெற்றி பெறுவதையே இலக்காகக் கொண்டு முயற்சித்தேன். எனது கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. எனக்கு உடன் பலமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் எனது தாய் தந்தைக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்,” எனக்கூறினார்.
மேலும், தங்களது சமூகத்தில் இருந்து ஒவ்வொருவரும் படித்து நினைத்த பதவியை அடைய வேண்டும் என உற்சாகப்படுத்தியுள்ள நீத்து சென், வசதியற்ற தனது சமூக மக்களுக்கு மருத்துவராகி சேவையாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்ச்சி பெற்ற முதல் தோடர் இன மாணவி மட்டுமின்றி, மருத்துவம் படிக்கப் போகும் முதல் மாணவி என்ற பெருமைக்குரியவராகவும் மாறியுள்ள நீத்து சென்னுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
‘நீட் தேர்வு அவ்வளவு கடினமானது அல்ல’ - நீட்டில் 720/720 பெற்ற தமிழக மாணவர் பிரபஞ்சன் சொல்லும் சக்சஸ் சீக்ரெட்!