‘கால்பந்து விளையாடிய கால்கள்; இன்று சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் நிலை’ - வீராங்கனை பவுலோமியின் கதை!
January 24, 2023, Updated on : Tue Jan 24 2023 11:03:11 GMT+0000

- +0
- +0
பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்த உணவு டெலிவரி செயலிகளின் தேவையால் வேலையிழந்த பலர் டெலிவரி ஏஜென்டுகளாக செயல்படத் தொடங்கினர். இவர்களா இந்த வேலையில் என்று பிரமிக்க வைத்த பலரை இந்தப் பணியில் பார்த்திருக்கிறோம்.
ஒவ்வொருவர் பின்னணியிலும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதை இருக்கிறது. அப்படித் தான் மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதியைச் சேர்ந்த பெஹாலாவில் உணவு ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த சமூக செயற்பாட்டாளருக்கு உணவோடு அதனை கொண்டு வந்த நபர் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறார்.
ஆம் அந்த டெலிவரி ஏஜென்ட் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்தாட்ட வீராங்கனை பவுலோமி அதிகேரி.

உணவு டெலிவரி செய்யும் கால்பந்து வீராங்கனை
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கும் 24 வயதான பவுலோமி அதிகேரி, குடும்பச் சூழ்நிலை மற்றும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கால்பந்தாட்டத்தை தொடர முடியாத நிலையில் உள்ளார்.
சிறு வயதிலேயே தாய் இறந்துவிட்ட நிலையில், தந்தையும் பொருளாதார ரீதியில் பவுலோமிக்கு உதவ முடியாததால் உணவு டெலிவரி செயலியான zomato-வில் ஏஜென்டாக செயல்படத் தொடங்கி இருக்கிறார்.
12 மணி நேரம் தொடர் பணியில் சைக்கிளை பெடலிங் செய்து கொண்டு மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் டெலிவரி செய்து முடித்த பின்னர் நாள் ஒன்றிற்கு சுமார் 2 மணி நேரமாவது கால்பந்தாட்ட பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் இவர்.
“கால்பந்தாட்டம் என்பது என்னுடைய கனவு, அதை ஒரு போதும் என்னால் விட்டு கொடுக்க முடியாது. மீண்டும் இந்திய ஜெர்சியை அணிய வேண்டும் என்பதற்காகவே 2 ஷிப்ட் முறையில் வேலை செய்தாலும் என்னுடைய பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்,” என்கிறார் பவுலோமி.
’16 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான கால்பந்தாட்டத்தில் ஆசிய கோப்பைக்காக விளையாடி இருக்கிறார் இவர். அதுமட்டுமின்றி இந்தியா சார்பாக ஸ்காட்லாந்து, ஜெர்மனி, இலங்கையில் நடந்த சர்வதேசப் போட்டிகளிலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அசத்தலான விளையாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.
2018ம் ஆண்டில் பயிற்சியின் போது ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை இழந்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவருடைய கால்கள் சரியான போதும் வாய்ப்புகள் வராத நிலையில் வேறு வழியில்லாமல் உணவு டெலிவரி ஏஜென்டாக பணியில் சேர்ந்திருக்கிறார்.
“காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை என இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சைக்கிளில் தான் டெலிவரி செய்கிறேன் என்பதால் அருகில் உள்ள இடங்களுக்கே டெலிவரி அனுப்புவார்கள். முதலில் இரவு நேரங்களில் பணியாற்றுவது பயமாக இருந்தது, எனினும் அதிர்ஷ்டவசமாக எனக்கு எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. பணியில் சேர்ந்த தொடக்கத்தில் நாளொன்றிற்கு ரூ.500 வரை சம்பாதித்தேன், ஆனால் இப்போது ஒரு டெலிவரிக்கு ரூ. 20 – 30ரூபாய் கிடைக்கிறது,” என்கிறார் பவுலோமி.

பவுலோமி 2 மாதக் குழந்தையாக இருந்த போதே அவருடைய தாயார் இயற்கை எய்திவிட்டார். அவருடைய உறவினரின் அரவணைப்பில் வளர்ந்த இந்த ஏழை வீராங்கனை தற்போது கல்லூரியில் மூன்றாமாண்டு இளநிலை பட்டம் படித்து வருகிறார். இவரின் தந்தை பகுதி நேர கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார்.
“பவுலோமிக்கு தேவையானவற்றை என்னால் செய்ய முடியவில்லை. அவளுடைய விளையாட்டு கனவிற்காக அவளுக்கு என்னால் ஒரு நல்ல ஷூக்களை கூட வாங்கித் தர முடியவில்லை” என்று கவலைப்படுகிறார் பவுலோமியின் தந்தை கிஷோர் அதிகேரி.
“பவுலோமி மிகவும் திறமையான பெண் என்னிடம் பயிற்சிக்கு வந்த போது அவளுக்கு 14 வயது தான். தேசிய பெண்கள் ஜூனியர் அண்டர் 16 அணியில் ஆசிய கால்பந்தாட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கிறார். 2016ல் கிளாஸ்கோவில் நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடி இருக்கிறார்,” என்கிறார் பவுலோமியின் பயிற்சியாளர் அனிதா.

பவுலோமி உணவு டெலிவரி ஏஜென்டாக பணியாற்றுவது குறித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த வீடியோ பயங்கர வைரலானது. இதனையடுத்து, மேற்குவங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் பவுலோமியை சந்தித்து அவருடைய கனவை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இந்திய கால்பந்து சம்மேளனம் பவுலோமியை தொடர்பு கொண்டு அதிகாரிகளைச் சந்தித்து பேசுவதற்கு நேரம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பணிப்பெண் டூ பளுதுாக்கும் வீராங்கனை’ - பதக்கங்கள் வெல்லும் அம்மாவும்; மகளும்
- +0
- +0