ஃபோர்டு ஆலை மூடல்: ‘மறைமலைநகர் ஆலையின் 3,300 ஊழியர்களின் எதிர்காலம் என்ன?

எதிர்பார்ப்பில் ஊழியர்கள்!
45 CLAPS
0

அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம், 1990'களில் இந்தியாவில் தனது செயல்பாட்டைத் துவங்கியது. சென்னை மறைமலைநகர் மற்றும் குஜராத்தின் சனாந்த் ஆகிய இடங்களில் கார் உற்பத்தி ஆலையை நிறுவனம் அமைத்தது. இந்தியாவில் கார் தயாரிப்பை துவக்கிய ஆரம்ப கால வெளிநாட்டு நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது இந்த ஃபோர்டு நிறுவனம்.

இதனிடையே, அதிகரிக்கும் நஷ்டம் காரணமாக, இந்தியாவில் செயல்பாடுகளை குறைத்துக்கொள்ள இருப்பதாகவும், சென்னை உள்ளிட்ட இந்திய ஆலைகளில் கார் உற்பத்தியை நிறுத்துக்கொள்ள இருப்பதாகவும் ஃபோர்டு சில தினங்கள் முன் அறிவித்தது. ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவு காரணமாக சென்னை மறைமலைநகர் ஆலையில் பணிபுரியும் 3,300 ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஊழியர்கள் நிலை தொடர்பாக,

"ஏற்கனவே சிப் பற்றாக்குறை காரணம் காட்டி இந்த வாரம் ஆலை பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போது, ​​திடீரென, 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆலையை மூடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை செய்யப் போகிறார்கள் என்பது ஊழியர்களுக்குத் தெரியும். என்றாலும் போராட்டம் நடத்தவில்லை. ஏனென்றால், இந்த முறை ஒப்பந்தம் ஒரு வருடம் மட்டுமே. எங்களுக்கு வழக்கமாக மூன்று வருட ஒப்பந்தம் கிடைப்பதால் ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது.

"ஆலையை விற்க இருக்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால், அவர்கள் செயல்பாடுகளை நிறுத்துவார்கள் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஊழியர்களுடன் கலந்தாலோசிக்காமல் எப்படி அவர்கள் அத்தகைய முடிவை அறிவிக்க முடியும் என்பது தெரியவில்லை," என்று மறைமலைநகர் ஆலையில் பணிபுரியும் மெட்டீரியல் பிரிவின் அசோசியேட் அதிகாரி செல்வா என்பவர் பேசியிருக்கிறார்.

தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர்,

"ஃபோர்டு ஆலையின் பல்வேறு துறைகளில் சுமார் 2,700 தொழிலாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்கள் என 600-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிகின்றனர். இதனிடையே, எந்தவொரு திட்டமிடப்பட்ட தீர்வுகள் அல்லது செயல்படுத்தப்பட இருக்கும் நடைமுறைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேசுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. என்றாலும், இந்த நேரத்தில் எங்கள் ஒட்டுமொத்த தொழிற்சங்கத்தின் ஒரே வேண்டுகோள், இந்த 3,300 ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்சங்க வட்டாரங்களின்படி, ஆலை மூடல் என்ற முடிவு 30,000-40,000 குடும்பங்களை நேரடியாக பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஃபோர்டு நிறுவனம் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.