Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் இலவச நாப்கின் பெட்டி: சென்னை பிரியா ஜெமிமாவின் வித்தியாச சேவை!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ’சானிட்டரி பேங்க்’ என்ற பெயரில் நாப்கின் பெட்டிகளையும், உபயோகப்படுத்திய நாப்கின்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் எரிக்கும் மிஷின்களையும் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவசமாக அளித்து வருகிறார் பிரியா ஜெமிமா.

அரசுப் பள்ளிகளில் இலவச நாப்கின் பெட்டி: சென்னை பிரியா ஜெமிமாவின் வித்தியாச சேவை!

Tuesday May 28, 2019 , 5 min Read

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு கடந்தகாலங்களைக் காட்டிலும் தற்போது அதிகமாகவே உள்ளது. மாதவிடாய் காலத்தில் நாப்கின்களின் பயன், சுகாதாரமாக இருக்க வேண்டிய அவசியம் என பலவற்றைப் பற்றி அரசும் சரி, தனியார் தொண்டு நிறுவனங்களும் சரி மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், படித்தவர்கள் மற்றும் வசதியான பெண்களுக்குக் கிடைக்கும் எல்லா வசதிகளும் பின் தங்கிய கிராமப் பெண்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. அதற்குக் காரணம் அங்கு விழிப்புணர்வு இல்லாதது மட்டுமல்ல, பொருளாதார சூழ்நிலையும் தான். திறந்தவெளி கழிப்பிடங்களைப் போலவே இன்றும் பல ஏழைப் பெண்கள், பின் தங்கிய கிராமப்புற பெண்கள் நாப்கின் வாங்க வசதியில்லாமல், துணியையே பயன்படுத்தும் அவலநிலையே காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பருவமெய்தும் பெண்களுக்கு, ஏற்கனவே மிரட்டியுடன் இருக்கும் சூழ்நிலையில் துணி என்பது ஆரோக்கியமற்றது மட்டுமல்ல, அசௌகரியமானதும் கூட. இப்படிப்பட்டவர்களுக்காக பல அரசு பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளில் இலவச நாப்கின்கள் தரப்படுகின்றன. ஆனால் அவை போதுமானவையாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தான், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச நாப்கின் பெட்டி மற்றும் அவற்றை எரிக்கும் மெஷினையும் இலவசமாக அளித்து சேவை புரிந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த பிரியா ஜெமிமா. ’சானிட்டரி பேங்க்’ 'Sanitary Bank' என்ற தனது அமைப்பு மூலம் இப்பணியை அவர் செய்து வருகிறார்.

Priya jemima

Facebook image

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர் பிரியா. ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி, முழுக்க முழுக்க மற்றவர்களின் உதவித்தொகை மூலமாகவே தன் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். பின்னர் மேற்கொண்டு படிக்க வேலைக்குச் சென்றுள்ளார். பிபிஓ ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே தனது இளங்கலைக் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

“ஆதரவற்றோர் இல்லத்துல ஸ்பான்சர்ஸ்லயே படிச்சதால, எனக்கும் நல்ல வேலைக்கு போய், இதே மாதிரி நிறைய பேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதலே இருந்துச்சு. படிப்பு ஒண்ணு தான் நான் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழின்னு, தீவிரமா படிச்சேன். பார்ட் டைம்மா வேலை பார்த்துக்கிட்டே கல்லூரிப் படிப்பை முடித்தேன். அப்போது நான் பணி புரிந்த கம்பெனிகளில் கிடைத்த அனுபவத்தால் சொந்தமாக ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினேன். நல்ல வருமானம் கிடைத்தது. அப்போது தான் என் பணத்தில் உதவி வேண்டி காத்திருப்பவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்’ என தான் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்க காரணமாய் இருந்த நாட்களை நினைவுகூர்கிறார் பிரியா.

பிரியாவின் கணவர் ஸ்போர்ட்ஸ் கேமராமேன். எனவே, வேலை, தொழில் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சூழ்நிலையில் மேற்கொண்டு எம்.பி.ஏ.வும் படித்துள்ளார் பிரியா. அதன் தொடர்ச்சியாக ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்றைத் துவக்கினார் அவர். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது சமூகசேவைக்கு பயன்படுத்த அவர் திட்டமிட்டார்.

“ஆரம்பத்துல என் பிறந்தநாள், கணவரோட பிறந்தநாள், எங்கள் திருமண நாள் இப்படி விஷேசமான நாட்கள்ல வறுமையில் கல்வியைத் தொடர முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்தோம். பிறகு இதய அறுவைச் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவினோம். அதன் அடுத்தகட்டமாகத் தான், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜியோ இந்தியா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

இதன் மூலம் ஆண்டுதோறும் குறைந்தது 30 குழந்தைகளுக்காவது இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்கிறோம். சுமார் 15 குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுகிறோம். இந்த ஆண்டு மட்டும் சுமார் 50 மாணவர்களின் கல்லூரி படிப்பிற்கு உதவியுள்ளோம்,” என்கிறார் பிரியா.

ஜியோ இந்தியா தொண்டு நிறுவத்தால் கல்லூரியில் சேர்க்கப்படும் மாணவர்களின் மொத்தக் கல்விச் செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். அதுதவிர, அம்மாணவர்களின் திறனை இன்னும் மேம்படுத்துவதற்காக, ஸ்கில் டெவலப்மெண்ட் செண்டர்களையும் பிரியா நடத்தி வருகிறார். இங்கு ஸ்போகன் இங்கிலீஷ், வெப்சைட் டிசைனிங் போன்ற இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

அதோடு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச சுவர் ஓவியங்கள் வரைந்து தருவது, கழிப்பறை அமைத்துத் தருவது, குறுங்காடுகள் உருவாக்குவது போன்ற செயல்பாடுகளிலும் தன்னார்வ ஆர்வலர்கள் உதவியுடன் பிரியா ஈடுபட்டு வருகிறார். சென்னை மட்டுமின்றி கோவை, புதுக்கோட்டை பகுதிகளில் இப்பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

sanitary bank
“ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும் பெண்ணாக, பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்போது தான் நாப்கின்கள் தருவது பற்றிய ஐடியா வந்தது. ஏற்கனவே, பலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தபோதும், அவை முழுமையாக தொண்டு செய்யும் நோக்கத்துடன் மட்டும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. பெரும்பாலான இடங்களில் விளம்பரத்திற்காகவும், பணத்திற்காகவும் மட்டுமே அத்தகைய உதவிகள் செய்யப்படுவது வேதனை அளித்தது. அதனால் நானே இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்,” என்கிறார் பிரியா.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இலவச நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை அங்கு பயிலும் மாணவிகளுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. எனவே, சென்னையில் சுமார் 10 பள்ளிகள் மற்றும் ஆம்பூரில் 24 தொழிற்சாலைகளில் தனது சேனிட்டரி பேங்க் என்ற சேவையை தொடங்கியுள்ளார் பிரியா.

தங்களது அமைப்பின் மூலம் மேற்கூரிய இந்த இடங்களுக்கு மாதந்தோறும் சென்று தேவையான அளவு நாப்கின்களைத் தருகிறார். அதோடு பயன்படுத்திய நாப்கின்களால் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்பட்டு விடாத வகையில், அவற்றை எரிக்கும் புகையில்லா இயந்திரங்களையும் பிரியா அமைத்துக் கொடுத்துள்ளார். அதன் மூலம் 15 நிமிடங்களில், பயன்படுத்தப்பட்ட 100 நாப்கின்களை எரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

“நமக்கு என்ன கிடைக்கலையோ, அதைத் தான் நாம மத்தவங்களுக்கும் கொடுக்கணும்னு ஆசைப்படுவோம். ஆதரவற்றோர் விடுதியில் தங்கி, அரசு உதவி பெறும் பள்ளியில் தான் நான் படித்தேன். எனவே எனக்கு பள்ளிக் காலங்களில் நாப்கின் வாங்கித்தர யாருமில்லை. கல்லூரிக்குச் சென்று நானே சம்பாதித்த பிறகு தான், முதன்முறையாக நாப்கின் உபயோகித்தேன். அப்போது துணி பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரக்கேடு, பல்லி மற்றும் ஓணான்களால் பறி போன உயிர்கள் என பலக்கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன்.

”பள்ளியில் வைத்து மாதவிடாய் வந்து விட்டால், அங்கு துணிகூட கிடைக்காது. பல சமயங்களில் ஆடைகளில் கரையோடு, சக மாணவர்கள் மத்தியில் அவமானத்தோடு விடுதிக்குச் சென்ற சம்பவங்களை நேரில் பார்த்திருக்கிறேன். நானும் அனுபவித்திருக்கிறேன். அதன் தாக்கம் தான், இன்று இத்தகைய சேவையில் என்னை ஈடுபட வைத்திருக்கிறது”என்கிறார் பிரியா.

எப்போது மாதவிடாய் வரும் என்ற விழிப்புணர்வு இல்லாத, நாப்கின்கள் வாங்க காசில்லாத குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பிரியாவின் இந்த நாப்கின் பேங்க் பெரும் வரப்பிரசாதமாகி இருக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, முதன்முறை அங்கு நாப்கின் பாக்கெட்டுகளை பிரியா தருகிறார். அதோடு, ஒரு புத்தகம் மூலம் ஒரு மாதம் அவர்களுக்கு எத்தனை நாப்கின்கள் தேவைப்படுகிறது எனக் கணக்கெடுக்கப்படுகிறது. பின்னர், அந்த கணக்கின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாதந்தோறும் தொடர்ந்து நாப்கின்கள் வழங்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் தான் இந்த சேவையை பிரியா தொடங்கி இருக்கிறார். இடையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு விட்டதால், மீண்டும் ஜூன் மாதம் இத்திட்டத்தை அவர் தொடங்க இருக்கிறார். இந்தாண்டு அவர் மேலும் 18 பள்ளிகளுக்கு இச்சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

factory

பள்ளிகள் மட்டுமின்றி பெண்கள் பணியாற்றும் தொழிற்சாலையிலும் இந்த பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கோவை, பெங்களூர் தவிர புதுக்கோட்டையில் மதுபான ஆலைகளில் வேலை பார்க்கும் 800 பெண்களுக்கும் நாப்கின்களை இலவசமாக கொடுத்து வருகிறார்கள். இதுவரை 10 லட்சம் நாப்கின்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக பெருமையுடன் கூறுகிறார் பிரியா.

தனது சேவைகளுக்கான பணத்தை பெரிய நிறுவனங்களின் உதவியோடும், தனது நிறுவனம் மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் வருமானத்திலும் பிரியா செய்து வருகிறார். இதற்காக அடிக்கடி தனது நிறுவனம் மூலம் ஏதாவது நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை அவர் நடத்துகிறார்.

இந்த சேனிட்டரி பேங்க் திட்டத்தை விரிவு படுத்தும் பணிகளுக்கு இடையே, அடுத்ததாக பெண்களின் உடல்நிலை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளார் பிரியா. முதற்கட்டமாக பெண்களை அதிகளவில் தாக்கும் நோய்களில் ஒன்றான மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அவர் முடிவு செய்துள்ளார்.

இந்தக் கட்டுரையை இன்று வெளியிடுவதிலும் ஒரு சிறப்பு உள்ளது. காரணம் ஆண்டுதோறும் மே மாதம் 28ம் தேதி மாதவிடாய் சுகாதார நாள் (Menstrual hygiene day MHD, MH Day) என உலகம் முழுவதும் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் முகவரி: Geo India Foundation