கர்ப்பிணிகளுக்கு பிரசவ சமயத்தில் உதவும் ‘மேஜிக் பாக்ஸ்’ உருவாக்கிய தோழிகள்!
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட செல்லும் கர்ப்பிணிகளுக்கு உதவும் பொருட்களை ஒன்று திரட்டி தொகுப்பாக வழங்கும் நிறுவனம்.
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட செல்லும் கர்ப்பிணிகளுக்கு உதவும் பொருட்களை ஒன்று திரட்டி தொகுப்பாக வழங்கும் நிறுவனம்.
பிரசவகாலம் என்பது எந்த ஒரு பெண்ணாலும் மறக்கமுடியாத காலகட்டம். மனம் முழுக்க கேள்விகளும் குழப்பங்களும் பதட்டமும் சூழ்ந்திருக்கும். பிரசவ நேரம் நெருங்க நெருங்க இந்த உணர்வுகள் பன்மடங்கு அதிகரித்துவிடும். இந்த சமயத்தில் சாதாரண விஷயங்களைக்கூட சிந்தித்து முடிவெடுக்கமுடியாமல் பெண்கள் திணறுவார்கள்.
இப்படி பிரசவ காலத்தை எதிர்கொண்ட ஒரு பெண், சக கர்ப்பிணிகளுக்கு உதவும் வகையில் தன் தோழியுடன் சேர்ந்து ஒரு தொழில் முயற்சியைத் தொடங்குவோம் என யோசித்துக்கூட பார்க்கவில்லை.
2017-ம் ஆண்டு முதல் குழந்தையைப் பெற்றெடுக்க தயாரானார் கரீமா அகர்வால். அப்போது அவருக்கு 33 வயது. மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய நேரம் வந்தது. அந்த சமயத்தில் மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்கான பைகளை பேக் செய்ய அவரது தோழி தீப்தி குப்தா உதவியிருக்கிறார்.
தீப்திக்கு சில ஆண்டுகள் முன்னர்தான் குழந்தை பிறந்திருந்தது. எனவே, தீப்தி குப்தா தன் அனுபவத்தைக் கொண்டு மருத்துவனைக்குக் கொண்டு செல்லவேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டார். இந்தப் பட்டியல் கரீமா அகர்வாலுக்கு உதவியாக இருந்தது.
அதைத் தொடர்ந்து இந்தத் தோழிகள் இருவரும் அவர்களது நெருங்கிய வட்டத்தில் இருந்த மற்ற கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பட்டியலைப் பகிர்ந்துகொண்டார்கள். இதுதான் The Baby First Box முயற்சியின் ஆரம்பப்புள்ளி.
தோழிகள் டூ தொழில்முனைவோர்
தீப்தி, கரீமா இருவருமே ஹரியானாவின் சிறு நகரைச் சேர்ந்தவர்கள்.
“எந்த வேலையை எடுத்தாலும் நாங்க அதை செஞ்சு முடிக்கணும்னு நினைப்போம். எங்க ரெண்டு பேர்கிட்டயுமே அந்த குணம் இருக்கு. அதேமாதிரிதான் சொந்தமா ஏதாவது செய்யணும்னு ரெண்டு பேருமே நினைச்சோம்,” என்கிறார் தீப்தி குப்தா.
கல்லூரியில் படித்த நாட்கள் வரை ஒன்றாக இருந்த இருவரும் வேலை, திருமணம் என வெவ்வேறு பாதையில் பிரிந்து சென்றுள்ளார்கள். தற்போது தீப்தி புனேவிலும் கரீமா குருகிராமிலும் வசிக்கிறார்கள்.
சக தோழிக்கு உதவும் என சாதாரணமாக எழுதிய பட்டியல் ஒரு தொழில் முயற்சியாக மாறியது. 2019-ம் ஆண்டு இவர்கள் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கினார்கள். அதன் பிறகு, 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வலைதளத்தை உருவாக்கினார்கள்.
”முதல் ஆறு மாசம் நிறைய கர்ப்பிணிப் பெண்கள்கிட்ட போய் பேசினோம். அவங்க கணவர்கிட்ட பேசினோம். பிரசவ தேதி குறிச்சாச்சு. அங்க போறதுக்கு முன்னாடி என்னென்ன எடுத்துப்போகணும்னு தெரியாது. என்ன தேவைப்படும்னு தெரியலை. என் சொந்தக்காரங்க கர்ப்பமா இருக்காங்க, என்ன மாதிரி கிஃப்ட் கொடுத்தா யூஸ்ஃபுல்லா இருக்கும்னு தெரியலை. இப்படி நிறைய பேர் அவங்களோட பிரச்சனைகளை சொன்னாங்க. இந்தப் பிரச்சனைகளுக்கு எது தீர்வா இருக்குமோ அதுதான் எங்க பிசினஸ்னு நாங்க முடிவு பண்ணோம்,” என்கிறார்.
தீப்தி குப்தாவின் தொழில்நுட்ப அறிவும் கரீமா அகர்வாலின் மேனேஜ்மெண்ட் படிப்பும் தொழில் முயற்சிக்குக் கைகொடுத்தது.
மேஜிக் பாக்ஸ்
தோழிகள் இணைந்து உருவாக்கிய இந்தத் தீர்வு கிட்டத்தட்ட இரண்டாயிரம் பயனாளர்களைச் சென்றடைந்தது. கரீமா அகர்வால் வாடிக்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். பெரும்பாலானவர்கள் இதை மேஜிக் பாக்ஸ் என்றார்கள்.
சரி, இந்த மேஜிக் பாக்ஸில் என்னவெல்லாம் இருக்கிறது என பார்க்கலாம். துணி, மறுபயன்பாட்டிற்கு உகந்த துணி டயாப்பர்கள், வைப்ஸ், லோஷன் மற்றும் இதர பொருட்கள் இந்நிறுவனத்தின் பேபி ஹேம்பர்களில் இருக்கும். இதற்காக முன்னணி பிராண்டுகளுடன் இந்நிறுவனம் கைகோர்த்து செயல்படுகிறது.
”நாங்க கொடுக்கற ஹாஸ்பிடல் பேக்ல ஃபீடிங் கிட், பிரெஸ்ட் பேட், அப்பாக்கள் யூஸ் பண்றதுக்கான ஏப்ரான், இந்த மாதிரி பொருட்கள் எல்லாம் இருக்கும்,” என்கிறார் கரீமா அகர்வால்.
ஹாஸ்பிடல் பேக் 3,000 ரூபாய்க்கும் பேபி ஹேம்பர்கள் 3,500 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. இந்நிறுவனத்தின் வலைதளத்தின் மூலமாக ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். அல்லது அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய மின்வணிக தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.
நம்பகமான பிராண்டுகளிடமிருந்து 60 சதவீத தயாரிப்புகள் பெறப்படுகின்றன. 40 சதவீத தயாரிப்புகளை இந்த ஸ்டார்ட் அப் தயாரிக்கிறது.
இந்நிறுவனமே சொந்தமாக தயாரிக்கும் பொருட்கள் நாடு முழுவதும் இருக்கும் கிராமப்புற பெண்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. கிராமப்புறப் பெண்களின் நிலையை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. மூலப்பொருட்களை வாங்கிக் கொள்வது, சம்பளப் பணத்தை வாங்கிக்கொள்வது போன்றவற்றிற்கு இந்தப் பெண்கள் உள்ளூர் சூப்பர்வைசரைத் தொடர்புகொள்கிறார்கள்.
The Baby First Box கார்ப்பரேட் கிளையண்ட்களின் தனித்தேவைக்கு ஏற்ப பேபி ஹேம்பர்களை வழங்கி வருகிறது.
தகர்க்கப்பட்ட தடைகள்
இன்று இந்தியாவில் 10,000-க்கும் மேற்பட்ட பின்கோட்களுக்கு The Baby First Box ஷிப்பிங் செய்கிறது. 20-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் கிளையண்டுகள் இருக்கிறார்கள். அத்தனை எளிதாக இவை சாத்தியப்படவில்லை.
”பிசினஸ் ஒருபக்கம், குடும்பம் ஒருபக்கம். ரெண்டையும் சரியா பேலன்ஸ் பண்றது கஷ்டமான விஷயம்தான். ஒரு அம்மாவா எங்க குழந்தைகளை பார்த்துக்கணும். பிசினஸையும் கவனிக்கவும். சரியா திட்டமிட்டு சமாளிக்கப் பழகிட்டோம்,” என்கிறார் கரீமா அகர்வால்.
வாடிக்கையாளர் வாங்கும் போக்கு எப்படியிருக்கிறது என்பதை அவர் விவரிக்கும்போது,
“இந்தியால பொதுவா குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடி இந்த மாதிரி பொருட்களை வாங்கி வைக்கற பழக்கம் அதிகமில்லை. அதனால் கிஃப்ட் பண்றதுக்காகத்தான் நிறைய வாங்கறாங்க. நாங்க புதுசா யோசிக்கறோம். தோல்வியிலேர்ந்து கத்துக்கறோம். இந்த அணுகுமுறைதான் வளர்ச்சிக்கு உதவுது,” என்கிறார்.
நிதி மற்றும் வருங்காலத் திட்டங்கள்
தோழிகள் இருவரும் சுயநிதியாக 1 லட்ச ரூபாய் முதலீடு செய்து தொழில்முனைவர்களாக மாறினார்கள்.
The Baby First Box வருவாயில் 65% ஆன்லைன் சந்தைப்பகுதிகள் மூலமாகவும் 25% கார்ப்பரேட் மூலமாகவும் 10% வலைதளம் மற்றும் பரிந்துரைகள் மூலமாகவும் இருக்கிறது.
கார்ப்பரேட் பிரிவில் நல்ல வரவேற்பு இருப்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாஸ்பிடல்கள், பார்மசி போன்ற இடங்களுடன் இணைந்து செயல்படவும் திட்டமிட்டிருக்கிறார்கள். நிதி திரட்டும் திட்டமும் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: சிம்ரன் ஷர்மா
6 மாதத்தில் 25,000 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்: ‘மாம்’களுக்கு உதவும் ஆப் உருவாக்கிய பத்மினி ஜானகி!