Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ஃப்யூஸான ட்யூப்லைட்டுகளை ஒளிர வைக்கும் எஞ்சினியர்!

பல கிராம பஞ்சாயத்துகளுடன் இணைந்து, நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட காலாவதியான ட்யூப்லைட்டுகளுக்கு ஒளியூட்டியிருக்கிறார் இவர்.

ஃப்யூஸான ட்யூப்லைட்டுகளை ஒளிர வைக்கும் எஞ்சினியர்!

Wednesday April 01, 2020 , 4 min Read

நரசிம்மா சாரி தனது சிறு வயதில் ஹாட் வீல்ஸ் பொன்ற விளையாட்டுப் பொருள்களை விட பிளாஸ்டிக், சிலிகான் மற்றும் லித்தியம் போன்றவற்றுடன்தான் அதிக நேரம் செலவிடுவார். தனது சகாக்கள் கண்ணாமூச்சி, கோ-கோவும் விளையாடிக்கொண்டிருக்க, இவரோ தனது அங்கிளின் பழுதுபார்க்கும் கடையில் மோட்டார்களை வைத்துக்கொண்டு சோதனை முயற்சிகளில் ஈடுபடுவதும், மின்சாரத்தில் பொம்மை ரயில்களை உருவாக்குவதிலும் பிஸியாக இருப்பார்.


அதே நரசிம்மா இப்போது தனது 39வது வயதில், ஃப்யூஸாகிப்போன ட்யூப்லைட்டுகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்து ஒளிரவைத்து உலகுக்கு வெளிச்சமூட்டி வருகிறார்.

நரசிம்மா

டெமோ காட்டும் வெளிச்ச நாயகன் நரசிம்மா

சோக், ஸ்டார்ட்டர் பயன்படுத்தாமல், ஃப்யூஸ் போன ட்யூப்லைட்டுகளை மீண்டும் ஒளிரவைக்கத்தக்க 'இன்டகிரேட்டடு சர்க்யூட்' ஒன்றை 2000ல் கண்டுபிடித்தபோதுதான் இவரது இந்த மகத்தான பயணம் தொடங்கியது. எனினும், இந்தப் பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. இந்த உயரத்தை எட்டுவதற்கு ஏழு ஆண்டு கால நெடும்பயணமும் கடின உழைப்பும் தேவைப்பட்டன. இது குறித்து நரசிம்மா விவரிக்கும்போது,

"என் முன்முயற்சி வெற்றி பெற்றால், நாடு முழுவதும் இருளைப் போக்கும் மின்வசதிக்கு துணைபுரிய முடியும் என்பது எனக்குத் தெரியும். எனவேதான், பல மணி நேரங்கள் நூலகத்தில் வாசிப்பதும், வீட்டில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதுமாகவே இருந்தேன்," என்கிறார்.

பல்வேறு பஞ்சாயத்துகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைந்து இந்தியா முழுவதும் இதுவரை 10 லட்சம் ட்யூப்லைட்டுகளை மீண்டும் ஒளிரவைத்திருக்கிறார் நரசிம்மா. மேலும், தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த மின்சார்ந்த பணிகளை தொடர்கிறார்.


குக்கிராமங்களைச் சேர்ந்த ஏழை மக்களுக்குப் பயன்பெறும் வகையில் புத்தாக்கக் கண்டுபிடிப்பில் ஈடுபட்டதைப் பாராட்டும் வகையில், இவருக்கு 'கிரேட் மைண்ட்ஸ், லாங் மைல்ஸ் - குவெஸ்ட் ஃபார் ஆன்ஸ்வர்ஸ்' விருதை வழங்கி கெளரவித்தது சீமென்ஸ். இந்த 29 வயது நாயகன் குறித்த ஆவணப் படமும் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

ஆரம்பகால பயணம்

தெலங்கானாவின் நிஜாமாபாத்திலுள்ள நவிபேட்டில் பிறந்து வளர்ந்த நரசிம்மாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இரும்பு, பாத்திரங்களைப் பழுதுபார்க்கும் பட்டறையை நடத்தி வந்த நரசிம்மாவின் தந்தை தனது குடும்பத்துக்காக இரவு பகலாக உழைத்தார். சிறுவயதிலிருந்தே அறிவியல் மீது ஆர்வம் கொண்ட நரசிம்மா, அதையொட்டிய தேடலில் ஈடுபட்டு வந்தார். நிறைய கேள்விகளுக்கு பதில் தேடுவார். புதுப்புது சோதனை முயற்சிகளில் ஈடுபடுவார். தோல்விகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்வார்.


மூன்றாவது படிக்கும்போதே மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் தனது ஆக்கத்துக்காக முதல் பரிசை வென்றார். 1991ல் தான் ட்யூப்லைட்டுகளுக்கும் இவருக்குமான பிணைப்பு ஏற்பட்டது. அப்போது, சுற்றித் திரியும் சிறுவனாக, நேவிபேட் மின்வாரியம் பகுதியில் வலம்வந்தபோது பழுதான - ஃப்யூஸ்போன ட்யூப்லைட்டுகளைக் கண்டுகொள்ளத் தொடங்கினார்.

"பல இடங்களில் நூற்றுக்கணக்கான ட்யூப்லைட்டுகள் கிடப்பதைக் கண்டேன். அவற்றை மீண்டும் எப்படிப் பயன்படுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்த ட்யூப்லைட்டுகள் மூலம் மீண்டும் வெளிச்சம் பாய்ச்சுவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அப்போது நான் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். என் பள்ளி நேரம் முடிந்த கையோடு மத்திய நூலகத்துக்குச் சென்று எலக்ட்ரானிக் சம்பந்தமாக வெவ்வேறு புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். துரதிர்ஷ்டவசமாக, அப்போதெல்லாம் கூகுள் இல்லை," என்கிறார் நரசிம்மா.

நரசிம்மா

நரசிம்மா

அடுத்த ஏழு ஆண்டுகளில் எலக்ட்ரானிக் சம்பந்தமான பொருள்கள்தான் நரசிம்மாவின் உலகம் ஆகின. பள்ளிப் படிப்புக்குப் பின் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஒன்றில் இளங்கலை எலக்ட்ரானிக்ஸ் பயின்றார். அதன்மூலம் ஆய்வுப் பணிகளுக்கு அதிக நேரம் செலவிட முடிந்தது.

வெளிச்ச நாயகன் நரசிம்மா!

விடாமுயற்சியில் தொடர்ச்சியான சோதனை முயற்சிகளுக்குப் பிறகு, 2000ல் இன்டகிரேட்டடு சர்க்யூட் ஒன்றை மேம்படுத்திய இவர், ஃப்யூஸ் போன ட்யூப்லைட்டுகளை மீண்டும் ஒளிர்விக்கும் முறையை உருவாக்கினார்.

"அதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்," என்று மகிழ்ச்சிப் பொங்கச் சொல்கிறார் வெளிச்ச நாயகன் நரசிம்மா.

"ட்யூப்லைட்டுகளில் ஃபிலமென்ட்டுகள் திறந்தவுடன் ஒளிர முடியாமல் போகின்றன. எரிவதற்கு உரிய வோல்டேஜை தயாரிக்க முடியாமல் போகும்போதும் அவை ஆற்றலை இழந்துவிடுகின்றன. ஆகவேதான் ரெசிஸ்டர்ஸ், கெப்பாசிட்டர்ஸ், நிக்ரோம் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ஒரு சர்க்யூட்டை உருவாக்கினேன்.

இதன்மூலம் பயன்படுத்தப்படாத ஐந்து மில்லிகிராம் மெர்குரியைக் கொண்டு மின்சாரத்தைத் தயாரிக்க முடிந்தது. இப்படியான முறைகளில் காலாவதியான ட்யூப்லைட்டுகளை ஒளிரவைக்கத் தொடங்கினேன். இதற்கு 'சாரி ஃபார்முலா' என்று பெயரிடப்பட்டிருக்கிறது," என்றார் பெருமிதத்துடன்.
நரசிம்மா

விருது பெறும் வெளிச்ச நாயகன்

நரசிம்மாவின் மகத்தான பணிகள் குறித்து முதலில் ஈநாடு எனும் தெலுங்கு பத்திரிகையில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, அவரது கண்டுபிடிப்பு குறித்து பல ஊடகங்களிலும் கட்டுரைகள் வெளியாகின. இதனிடையே, விஜய் ஊரக பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிய அவருக்கு அழைப்பும் வந்தது.


அந்த அழைப்பையும் பின்னர் ஏற்றுக்கொண்டார். 2004-05 மாநில இளைஞர் கண்காட்சி, 2007-08 பொது மின்சார புத்தாக்க கண்டுபிடிப்புப் போட்டி ஆகியவற்றில் 'சிறந்த செயல்திட்டம்' விருதுகளையும் வென்றிருக்கிறார் நரசிம்மா.

ஏழைகளின் ஒளிவிளக்கு!

நரசிம்மாவின் தனித்துவப் பண்புகளில் ஒன்று அவரவது விடாமுயற்சி. ஆம், அவர் தமது கண்டுபிடிப்புக்காக பல தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்தார். ஆனால், ஒருமுறை கூட சோர்ந்துவிடவில்லை. ஒருபோதும் தனது தொடர் முயற்சியில் இருந்து பின்வாங்கியதே இல்லை.

நரசிம்மா

விருது பெறும் வெளிச்ச நாயகன்

நரசிம்மா தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தினர் தன்னால் பலனடைய வேண்டும் என்ற ஒற்றை விருப்பத்தையே கொண்டிருக்கிறார். தான் திறட்டி வைத்திருந்த ஃப்யூஸ் போன ட்யூப்லைட்டுகளில் ஒன்றை எடுத்து, அதை தனது 'சாரி ஃபார்முலா' மூலம் நம் கண்முன்னே மீண்டும் ஒளிர்வித்துக் காட்டி அசத்தினார்.


இப்படி மீண்டும் ஒளியூட்டப்படும் ட்யூப் லைட்டுகள் மூன்று ஆண்டுகளுக்கு வெளிச்சம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ட்யூப்லைட்டை மீண்டும் ஒளியூட்டும் முறையில் பயன்படுத்தப்படும் நரசம்மா கண்டுபிடித்த சர்க்யூட்டுக்கான செலவு வெறும் 50 ரூபாய் மட்டுமே. வழக்கமாக இதுபோன்ற சர்க்யூட்களின் விலை குறைந்தது ரூ.500 இருக்கலாம்.


"ஒவ்வொர் ஆண்டும் பல்லாயிரம் கோடிகளை மின்சாரத்துக்காக அரசு செலவு செய்கிறது. எனினும், இந்தியாவில் 100% மின்வசதி என்பது எட்டமுடியாமலேயே போகிறது. மக்கள் எளிதில் பயன்படுத்தத்தக்க வகையில் அதிக செலவின்றி மின்சாரத்தை வழங்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். இதன் ஒருபகுதியாகவே, நிஜாமாபாத் மாநகராட்சிக் கழகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து காலாவதியான ட்யூப்லைட்டுகளை ஒளிரவைக்கிறேன்.”

“இதன்மூலம் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்களின் தெருக்களில் வெளிச்சம் கிடைக்கிறது. இதன்மூலம் அரசால் 12.5 லட்சம் வரை மிச்சப்படுத்த முடியும்," என்கிறார் நரசிம்மா.

தனது கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை வைத்துள்ள நரசிம்மா, தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நாடு தழுவிய அளவில் பல்வேறு மின்னியல் சார்ந்த திட்டங்களில் பணிபுரிந்துவருகிறார். இதன்மூலம் நாடு முழுவதும் தனது சேவையை விரிவாக்கம் செய்கிறார்.


வாழ்க்கையின் தாம் கற்ற மிகப் பெரிய பாடம் குறித்து கேட்டதற்கு நரசிம்மா அளித்த பதில்...

"ஆர்வமும் கடின உழைப்பும் இருந்தால் எதுவும் சாத்தியமே!"

ஆங்கிலத்தில்: ரோஷினி பாலாஜி | தமிழில்: ப்ரியன்