G20 மாநாடு - முதல் நாள் நடந்தவை என்ன? தீர்மானங்கள், சுவாரஸ்யங்கள் மற்றும் சர்ச்சைகள்!

முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டின் முதல்நாளான இன்று, பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு, ரஷ்யா-உக்ரைன் போர், சர்வதேச பயோ எரிபொருள் கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

G20 மாநாடு - முதல் நாள் நடந்தவை என்ன? தீர்மானங்கள், சுவாரஸ்யங்கள் மற்றும் சர்ச்சைகள்!

Saturday September 09, 2023,

6 min Read

உலகளாவிய பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் 20 நாடுகள் இணைந்து ஜி20 என்ற பெயரில் கூட்டமைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டமைப்பின் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டிற்கான மாநாடு இந்தியாவின் தலைமையில் இன்றும், நாளையும் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

g20

இந்த மாநாட்டின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான முன்னேற்பாடுகளை, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியா செய்து வருகிறது. டெல்லியில் பலத்த பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும், இந்நாடுகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ள நிகழ்வு என்பதால், உலக நாடுகளின் கவனம் முழுவதும் இந்த மாநாட்டின் மீதே உள்ளது.

முதல்நாளான இன்று ஜி20 மாநாட்டில் நடந்த முக்கிய மற்றும் சுவாரஸ்ய நிகழ்வுகள் என்னென்ன என்பதை சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்..

8:08 AM: இந்தியாவிற்கு வந்துள்ள உலகத் தலைவர்களை வானமே பூத்தூவி வரவேற்பது போல்,  ஜி20 மாநாடு நடைபெறும் டெல்லியின் சில பகுதிகளில் இன்று காலை ஆங்காங்கே லேசான மழை சாரலாகப் பொழிந்தது.

 9:27 AM: இந்தியப் பிரதமர் மோடி ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு வந்தடைந்தார். மாநாட்டில் பங்கேற்க வந்த உலகத் தலைவர்களை, ஒடிசாவின் கோனார்க் சக்கரத்தின் முன்பு நின்று பிரதமர் மோடி வரவேற்றார்.

modi in g20

10:47 AM: ஜி20 மாநாட்டு அரங்கிற்கு வந்த உலகத் தலைவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது

10:52 AM: ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியன் இணைந்தது. இதன்மூலம் ஜி20 அமைப்பு இனி ஜி21 அமைப்பாக மாறுகிறது.

 

11:29 AM: மாநாட்டிற்கு வந்துள்ள பிற நாட்டுத் தலைவர்களை வரவேற்கும் விதமாக, பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார். அவரது உரையில் கீழ்க்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

- ஜி20 உச்சிமாநாட்டை நாம் தொடங்குவதற்கு முன் மொராக்கோ நாட்டில் நடந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மொராக்கோவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.

- கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்த ஜி20 மாநாட்டில் இணைந்துள்ளனர். இந்த மாநாட்டிற்காக நாட்டின் 60+ நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

modi

- வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால் தான் ஆப்ரிக்க யூனியனுக்கு ஜி20யில் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க இந்தியா முன்மொழிந்தது.

- 21ம் நூற்றாண்டில் உலகிற்கு புதிய திசையை காட்டுவதற்கான முக்கிய நேரம் இது. பழைய பிரச்சனைகளுக்கு புதிய தீர்வை தேடி பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது. கோவிட் 19யை தோற்கடிக்க முடிகிறது என்றால் போர் பிரச்சனைக்கு நடுவேயும் வெற்றி பெற முடியும்’ என்றார்.

12:53 PM : ஜி20 மாநாட்டின் முதல் நாளான இன்று பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இந்திய பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

 4:14 PM: உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணியை அறிவித்தார் பிரதமர் மோடி. அதனைத் தொடர்ந்து மாநாட்டில், மாநாட்டின் கருப்பொருளான "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" குறித்து விளக்கம் அளித்தார்.

- எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதம் வரை அதிகரிக்க, உலக அளவில் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்பதே எங்கள் முன்மொழிவு.

இதற்காக உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி அமைக்கப்படும். இந்த முயற்சியில் ஜி20 நாடுகள் சேரவேண்டும். மேலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்.

4:41 PM டெல்லி பிரகடனம் தொடர்பாக ஜி20 உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. இதையடுத்து, டெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்காக கடினமாக உழைத்த நமது அமைச்சர்கள், ஷெர்பாக்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

G20

6:13 PM: உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் உடனிருந்தனர்.

முக்கியத் தீர்மானங்கள்:

- சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு ஜி20 உறுப்பு நாடுகள் வாழ்த்து தெரிவித்தன.

- ஜி20 உச்சி மாநாட்டில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், உக்ரைன் போர் குறித்து ரஷியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று மிரட்டுவதையோ ஏற்க முடியாது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- உக்ரைனில் நீடித்த அமைதி மீண்டும் திரும்ப, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பிராந்தியங்களை கையகப்படுத்துவதற்காக அச்சுறுத்தல் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

- கடந்தாண்டு இந்தோனேசியாவில் நடந்த உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஐ.நா. தீர்மானத்தை மேற்கோள் காட்டி ரஷியாவை வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், இன்று ரஷியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. சபை எடுத்த நிலைப்பாட்டை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உக்ரைனில் அமைதி நீடித்தால் ஐ.நா. சபையில் அனைத்து நோக்கங்கள், கொள்கைகள் நிலைநிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ள நிலையில், ஜி20 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

- ஜி20 உறுப்பு நாடுகள் இடையே வணிகம் செய்வதை எளிதாக்கவும், செலவை குறைப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வணிகம் செய்வதை எளிதாக்க தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

- புவிசார் அரசியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தளமாக ஜி20 அமைப்பு இல்லை.

modi

- அனைத்து வகையான பயங்கரவாதத்துக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சர்வேத அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறத்தலாக உள்ளது என அதில் கூறப்பட்டிருந்தது.

 - பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதலை 2030-க்குள் 40 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த தீர்மானம். போன்ற தீர்மானங்கள் ஜி 20 உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இரவு விருந்து:

ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு பாரத் மண்டபத்தில் ஒன்று இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநாட்டுக்கு அழைப்பு விடப்பட்ட மற்ற தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்திய ஜனாதிபதி முர்மு மற்றும் சில மாநிலங்களின் முதல்வர்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று அவர்  டெல்லி சென்றடைந்தார்.

சுவாரஸ்யங்கள்:

- ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பெயரில் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. புதுமையான இந்த முயற்சி உலகத்தலைவர்கள் ரசிக்கும்படியாய் அமைந்துள்ளது. இந்த உணவு வகைகளின் பெயர்கள் அடங்கிய மெனுகார்டு புகைப்படம் இணையத்தில் வைரலானது.

- ஜி20 மாநாட்டு மைதானத்தில் இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. உலக நாடுகள் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும் கண்காட்சியில் தமிழகத்தின் மாமல்லபுர சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

statue

- மண்டபத்தில் நுழைவு வாயில் பகுதியில் ரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்ட 28 அடி உயர சோழர்கால நடராஜர் சிலை பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் பிரமாண்டமாக நிறுத்தப்பட்டுள்ளது.

- இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப திட்டங்களை வெளிநாட்டினர் அறியும் வகையில் டிஜிட்டல் இந்தியாவின் அனுபவ மண்டலம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

- ‘கலாசார வழித்தடம்-ஜி20 டிஜிட்டல் அருங்காட்சியகம்’ என்ற ஒரு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஜி-20 நாடுகளின் பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

- ‘கைவினை பொருள் பஜார்’ என்ற கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ என்ற தலைப்பில் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த கைவினை பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

- ஜி20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதி மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

உலகத் தலைவர்களின் கருத்து :

ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியத் தலைவர்கள் மாநாட்டில் மற்றும் அதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

* அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்பதே இந்த ஜி-20 உச்சி மாநாட்டின் மைய விசயம். மற்றும் பல வழிகளில், இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் நட்புறவுக்கான மையமும் கூட. நீடித்த, உறுதியான உள்கட்டமைப்பு, தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை உருவாக்குவது மற்றும் ஒரு சிறந்த எதிர்காலம் உருவாக்குவது ஆகியவற்றை கட்டமைக்க வேண்டும்.

* பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்: 15 ஆண்டுகளுக்கு முன்பு, நிதி நெருக்கடியில் இருந்து உலக வளர்ச்சியை மீட்டெடுக்க ஜி20 தலைவர்கள் முதன்முறையாக ஒன்று சேர்ந்தனர்.

”அதன்பின்னர், பல்வேறு சவால்கள் நிறைந்த இந்த சமயத்தில் நாம் சந்தித்திருக்கிறோம். இந்த ஜி20 மாநாட்டை உலகமே எதிர்நோக்குகிறது. அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
modi

* நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்: இறுதியான ஒரு முடிவுக்கு நாங்கள் வந்து விட்டோம் என்பதே மிக நல்லது என நான் நினைக்கிறேன். ரஷியா-உக்ரைன் போர் விசயத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கிய விசயங்கள் ஆனது, அனைவராலும் நிர்வகிக்க கூடியது மற்றும் ஏற்று கொள்ள கூடியது ஆகும்.

* ஸ்பெயின் துணை அதிபர் நாடியா: பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூடுதல் ஆற்றல் தேவை

சர்ச்சைகள்

- ஜி20 மாநாட்டில் நாட்டின் பெயர்களை குறிக்கும் பெயர் பலகையில் பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள பலகையில் ’பாரத்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது குறித்து சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், இந்த பெயர்ப்பலகை சமூகவலைதளங்களில் விவாதங்களுக்கு ஆளானது.