60வது பிறந்தநாளில் 60,000 கோடி நன்கொடை; அறக்கட்டளைக்கு அள்ளிக்கொடுத்த அதானி!

தனது 60ஆவது பிறந்தநாளுக்கு 60,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்படும் என தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
0 CLAPS
0

தனது 60ஆவது பிறந்தநாளுக்கு 60,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்படும் என தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

அதானி குமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான கெளதம் அதானி, இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நாளில் சமூக பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கவுள்ளதாக கவுதம் அதானி உறுதியளித்துள்ளார்.

மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர், துறைமுகங்கள் என அனைத்து துறைகளிலும் கால் பதித்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி, சமீபத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார்.

இம்மாத தொடக்கத்தில் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, 97.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் கெளதம் அதானி 11வது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டார்.

மேலும், கெளதம் அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், Q4FY22 இல், அதானியின் நிகர மதிப்பு வாரன் பஃபெட்டின் நிகர மதிப்பான 18.7 பில்லியன் டாலரை விட வேகமாக வளர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

60வது பிறந்தநாளில் 60 ஆயிரம் கோடி நன்கொடை:

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானி இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நாளில் சமூக சேவைக்காக 60 ஆயிரம் கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்த ஆண்டு எனது தந்தையின் 100வது பிறந்தநாள், மற்றும் எனது 60வது பிறந்தநாளாகும். எனவே, குடும்பம் 60,000 கோடி ரூபாயை சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான தொண்டு நடவடிக்கைகளுக்கு பங்களிக்க முடிவு செய்தது, குறிப்பாக கிராமங்களுக்கு...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நன்கொடைத் தொகையை ’அதானி ஃபவுண்டேஷன்’ நிர்வகிக்கும் எனவும், மருத்துவம், கல்வி, திறன் பயிற்சி போன்றவற்றுக்கான நன்கொடைத் தொகை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையை மாதிரியாகக் கொண்டு சமூகப் பணிகளை மேற்கொள்ளவும், அதானி அறக்கட்டளை ஒவ்வொரு முன்முயற்சியையும் வழிநடத்த துறைசார் நிபுணர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. குழுமத்தின் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து விளம்பரதாரர்களின் பங்குகளில் ஒரு பகுதி அதானி அறக்கட்டளைக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அறக்கட்டளையின் நிறுவனராக அதானியும், அதன் தலைவராக அவரது மனைவி பிரித்தி அதானியும் இருந்து வருகிறார். அதானி ஏற்கனவே இந்தியாவின் சிறந்த சமூக தொண்டாற்றுபவர்களில் ஒருவராக உள்ளார்.

கடந்த ஆண்டு, அவர் ஹுருன் இந்தியா தொண்டு பட்டியலில், வேதாந்தா என்எஸ்இ குழுமத் தலைவர் அனில் அகர்வாலுடன் ₹130 கோடி நன்கொடையுடன் எட்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த வரிசையில் முன்னணி தொழிலதிபர்களான அசிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார், முகேஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா மற்றும் நந்தன் நிலேகனி ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதானியின் நிகர மதிப்பில் சுமார் 9%

விப்ரோ என்எஸ்இ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி இந்தியாவிலேயே தொண்டு நிறுவன சேவைகளுக்காக அதிக அளவில் நிதி கொடுப்பவராக உள்ளார்.

பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரின் முயற்சியான ’கிவிங் ப்லெட்ஜ்’ அமைப்பில் இவரும் இணைந்துள்ளார். இது செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தில் பாதியை தொண்டுகளுக்காக கொடுப்பதை ஊக்குவிக்கும் அமைப்பு ஆகும்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ₹60,000 கோடி உறுதிமொழி அதானியின் நிகர மதிப்பான ₹7.16 லட்சம் கோடியில் சுமார் 9 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.

கெளதம் அதானியின் இந்த அறிவிப்பு பாராட்டுக்களை குவித்து வருகிறது. கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனர் உதய் கோடக் கூறுகையில்,

"கௌதம் அதானியின் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல்லாக அவர் தனது 60வது பிறந்தநாளில் இப்படியொரு அர்ப்பணிப்புடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவருடைய ஆழ்ந்த குடும்ப மதிப்புகள் மற்றும் இந்தியா செழிப்பைக் காண்பதற்கான அர்ப்பணிப்புக்காக நான் அவரை எப்போதும் போற்றுகிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு - கனிமொழி